Thursday, June 29, 2023

நவீன முஸ்லிம்கள்....!

 நவீன முஸ்லீம்கள்....!


ஏக இறைவனின் இல்லமான பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு வரும் இளைஞர்கள் இடையே இந்த பழக்கம் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.

அல்லாஹ்வின் இல்லத்திற்கு மன தூய்மையுடன், உடல் தூய்மையுடன், ஆடை தூய்மையுடன் மட்டுமல்லாமல் நல்ல கண்ணியமான ஆடைகளை அணிந்து வருவது சிறப்பான ஒன்று.

அரைகுறை ஆடை:

ஆனால் டி.சர்ட் போன்ற கண்ணியம் இல்லாத அரைகுறை ஆடைகளை அணிந்து கொண்டு இளைஞர்கள் பலர் தொழுகைக்கு வரும் போக்கு தமிழகத்தில் மட்டுமல்ல நாடு முழுவதும் தற்போது அதிகரித்து வருகிறது.

இதுபோன்ற அரைகுறைவான ஆடையை அணிந்துக் தொழுகைக்கு இளைஞர் ஒருவர் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்கு வர, அதை தடுத்து நிறுத்தி பெரியவர் ஒருவர் நியாயம் கேட்க, இருவருக்கும் இடையே பெரிய வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சினை வெடித்தது.

இதுபோன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்ந்த வண்ணமே இருக்கின்றன.

அலுவலகத்திற்கு மரியாதை:

அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு முஸ்லிம் இளைஞர், அங்கு பணிக்குச் செல்லும் போது நல்ல அழகான, கண்ணியமான ஆடையை அணிந்து கொண்டு செல்கிறார். அதன்மூலம் மற்றவர்களால் மதிக்கப்படுகிறார்.

நேர்முக தேர்வுக்கு செல்லும் ஒரு முஸ்லிம் இளைஞர், நல்ல தூய்மையான ஆடையை அணிந்துகொண்டு செல்கிறார்.

டி.சர்ட் அணிந்து கொண்டு அலுவலகத்திற்கோ நேர்முக தேர்வுக்கோ யாரும் செல்வதில்லை.

அப்படி ஒருவர் சென்றால் அவரது நிலைமை என்னவாகும் என்பது சொல்லி புரிய வேண்டியதில்லை.

எண்ணிப் பார்க்க வேண்டும்:

ஆனால், ஏக இறைவனின் வீட்டிற்கு மட்டும் இதுபோன்ற அரைகுறை ஆடைகளை இளைஞர்கள் சிலர் அணிந்து வருவது சரியா என்பதை அவர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை.

தொழுகையை ஒரு கடமையாக மட்டுமே நினைத்துக் செயல்படுவதால் இத்தகைய போக்கு அதிகரித்து வருகிறது என கூறலாம்.

தொழுகையை ஏக இறைவனுக்காக செய்தாலும், அதன் முழு பலன் நமக்கு தான் கிடைக்கிறது.

தொழுகையால் கிடைக்கும் நன்மை, பள்ளிவாசலுக்கு சென்று இறைவனிடம் மனம் விட்டு பேசும்போது கிடைக்கும் ஆனந்தம் இதையெல்லாம் இளைஞர் சமுதாயம் உணர வேண்டும். அப்படி உணர்ந்தால் இதுபோன்ற அரைகுறை ஆடைகளுடன் பள்ளிவாசலுக்கு அவர்கள் நிச்சயம் வர மாட்டார்கள்.

அரைகுறை ஆடைகளுடன் பள்ளிவாசலுக்கு நாம் சென்றால் நிச்சயம் நம்முடைய கவனம் முழுவதும் ஏக இறைவனின் பக்கம் திரும்பாமல் இருக்கும்.சிந்தனைகள் சிதறும்.எண்ணங்கள் ஊசலாடும்.

பள்ளிவாசலில் செல்போன்:

பள்ளிவாசலுக்கு அரைகுறை ஆடை அணிந்து வருவது அதிகரித்து வரும் அதேவேளையில், அங்கு செல்போன் பயன்படுத்துவதும் ஒரு பிரச்சினையாக இருந்து வருகிறது.

வெள்ளிக்கிழமை அன்று ஜூம்மா பயானை இமாம் சாஹிப் தொடங்கியதும்,  இளைஞர்கள் சிலர் அதில் கவனம் செலுத்துவதில்லை. அழகான, அற்புதமான மார்க்க போதனைகளை, குர்ஆன், ஹதீஸ் ஆகியவற்றின் மேற்கோளுடன் இமாம் சாஹிப் கூறுவதை காது கொடுத்து கேட்பதில்லை. மாறாக, பலர் செல்போனை நோண்ட ஆரம்பித்து விடுகிறார்கள்.

ஒரு அரை மணி நேரம் அருமையான கருத்தை கேட்காமல், செல்போனில் பேசுவது, வாட்ஸ் அப் பார்ப்பது என அவர்களின் முழு கவனமும் அதில் தான் இருந்து விடுகிறது.  தொழுகையை ஒரு சடங்காக நினைக்கும் முஸ்லிம் இளைஞர்களின் இந்த செயல் மிகவும் வேதனை அளிக்கிறது.

அத்துடன், தொழுகை நடக்கும் நேரத்தில் சிலர் செல்போனை சுவிட்ச் ஆப் செய்யாமல் இருந்து விடுகின்றனர். இதனால் தொழுகையின் போது மற்றவர்களின் கவனமும் சிதைகிறது என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள்.

அவசியம் கவனம் தேவை:

எனவே, ஏக இறைவனின்  இல்லமான பள்ளிவாசலின் கண்ணியத்தை காக்க நாம் உறுதியாக இருக்க வேண்டும்.

நல்ல ஆடைகளை அணிந்து கொண்டு உண்மையான இறையச்சத்துடன் தொழுகையை நிறைவேற்றி ஏக இறைவனின் அன்பை பெற வேண்டும்.

அத்துடன், பள்ளிவாசலின் உள்ளே செல்போனை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: