Monday, June 30, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்....! (88)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்....! " 

நாள் - 88



குடிபோதையில் வாய்காலில் தவறி விழுந்து ஒருவர் சாவு.

திருவாரூரில் கடந்த 29.06.2014 அன்று குடிபோதையில் வாய்க்காலில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் செம்மாங்குடி இருப்பைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் திருவாரூர் பாலாஜி நகரில் ஒரு ஐஸ்கிரீம் கடையில் ஊழியராகப் பணியாற்றி வந்தார்.

குடிப்பழக்கம் உள்ள இவர் கடந்த 29.06.2/014 அன்று குடிபோதையில் அப்பகுதியில் உள்ள வாய்க்கால் கரையில் நடந்து சென்ற போது தவறி விழுந்துள்ளார்.

இதில் அவர் அதே இடத்தில் உயிரிந்தார். இதுகுறித்து திருவாரூர் நகரக் காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

இப்படிப்பட்ட செய்திகள் தினசரிகளில் நாள்தோறும் நாம் பார்க்கலாம். எனினும் அதை படித்து விட்டு நாம் மறு வேலைக்கு  சென்று விடுகிறாம்.

மதுவுக்கு எதிராக எந்த ஒரு கல்லையும் எடுத்து வைப்பதில்லை. இதன்மூலம், இத்தகைய சம்பவங்கள் தொடர்கதையாகவே இருக்கின்றன.

உடலுக்கு கேடு விளைவிக்கும் மது அருந்திவிட்டு,  மரணத்தை சம்பாதிக்கும் பலர், தங்களது குடும்பத்தின் எதிர்காலம் குறித்து சிறிதும் எண்ணிப் பார்ப்பதில்லை.



இதனால், அவர்களது குழந்தைகள் நல்ல கல்வி பெற முடியாமல் வறுமையில் வாழ வேண்டிய நிலை ஏற்படுகிறது.

மதுவுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்தால்தான், அப்பாவி மக்கள் உயிரிழப்பதையும், அவர்களது குடும்பங்கள் தவிப்பதையும் தடுக்க முடியும்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

Thursday, June 26, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்....! (87)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்....! " 

நாள் - 87

டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு: 

உண்ணாவிரதத்துக்கு முயன்ற பாலபாரதி எம்.எல்.ஏ கைது...!


திண்டுக்கல் மேட்டுப்பட்டி நுழைவு வாயில் கருவூலகம் அருகே அங்கு விலாஸ் இறக்கத்தில் டாஸ்மாக் கடை உள்ளது.

பொது மக்கள் அதிகம் வசிக்கும் இந்த பகுதியில் உள்ள கடையை அகற்ற கோரி பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதுகுறித்து தொகுதி எம்.எல்.ஏவான பாலபாரதியிடம் (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு) அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ உறுதி அளித்தார்.

அதன்படி இன்று  ( 26.06.2014) காலை பாலபாரதி எம்.எல்.ஏ. டாஸ்மாக்க கடைக்கு வந்தார். கடை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் செய்தார்.

தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்தனர். அப்போது போலீசார் எம்.எல்.ஏ.விடம் அனுமதி இன்றி போராட்டம் செய்யகூடாது என்றனர்.

இதனால் போலீசாருக்கும் எம்.எல்.ஏ.வுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே எம்.எல்.ஏ. நான் எனது தொகுதி மக்களுக்காக போராட உள்ளேன் என்று கடை முன்பு உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்படும் என்று கூறி கடை முன்பு அமர்ந்தார். நான் இன்று கடையை திறக்கவிட மாட்டேன் என்று ஆவேசமாக கூறினார்.

தகவல் அறிந்ததும் இந்தியஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த சரத், விஷ்ணு, லெனின், போஸ், அழகு உள்பட 7 பேர் வந்தனர். அவர்களும் எம்.எல்.ஏவுடன் அமர்ந்து போராட்டம் செய்தனர்.

உடனே போலீசார் இந்த பகுதியில் போராட்டம் நடத்த கூடாது என்று எச்சரித்தனர். இதனால் கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

நிலைமை மோசமானதால் போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பான நிலை ஏற்பட்டது.

எனினும் தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க முயன்றதாக பாலபாரதி எம்.எல்.ஏ மற்றும் 7 பேரை கைது செய்தனர்.

கைதான அவர்கள் போலீஸ் வேனில் ஏற்றிசெல்லப்பட்டு குள்ளனம்பட்டியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. பாலபாரதியை நாம் பாராட்டுகிறோம்.

மதுவுக்கு எதிரான அவரது போராட்டம் தொடர வேண்டும். வெல்ல வேண்டும் என வாழ்த்துகிறோம்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
====================

Friday, June 6, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்....! (86)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்....! " 

நாள் - 86


எலைட் மதுக்கடைகள்.....! மக்களை மதுவுக்கு அடிமையாக்க வேண்டாம்.....!

டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.....!

எலைட் மதுக்கடைகளுக்கு எதிராக டாக்டர் ராமதாஸ் இன்று (06./06.2014) வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் இதோ.....

சென்னையைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட மற்றும் வட்டத் தலைநகரங்களில் எலைட் மதுக்கடைகளையும், தனி பீர் கடைகளையும் திறக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பது மிகவும் கவலையளிக்கிறது. மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்துவிட்ட தமிழக அரசு மாநிலம் முழுவதும் புதுப்புது பெயர்களில் மதுக்கடைகளை திறப்பது கண்டிக்கத் தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

மேலும், ஒரு காலத்தில் கலாச்சாரம், கல்வி, மொழிச் செழுமை, நாகரீகம் ஆகியவற்றின் அடையாளமாக திகழ்ந்த தமிழகம் இப்போது மது மற்றும் குடிப்பழக்கத்தின் அடையாளமாக மாறிவிட்டது. மது அருந்துவதற்கு பணம் சேர்ப்பதற்காக பள்ளியில் அமரும் பலகைகளை மாணவர்களே உடைத்து விற்ற அவலம், 9 ஆம் வகுப்பு மாணவன் பீர் பாட்டிலை இடுப்பில் செருகிச் சென்ற போது வெடித்துச் சிதறி உயிரிழந்த சோகம் ஆகியவற்றுக்குப் பிறகும் மதுக்கடைகளை மூடி மாணவர்களைக் காக்க வேண்டும் என்ற சமூக அக்கறை இல்லாத தமிழக அரசு, பள்ளிகளுக்கு அருகிலேயே மதுக்கடைகளை திறந்து மது விற்பனை செய்கிறது.

தமிழ்நாடு முழுவதும் வறுமையும், வறட்சியும், குடிநீர் தட்டுப்பாடும் தலைவிரித்தாடும் நிலையில் அதை  போக்குவதில் அக்கறை காட்டாத அரசு மது விற்பனையை பெருக்குவதில் மட்டுமே ஆர்வம் காட்டுகிறது. தொடக்கத்தில் சென்னையில் சில இடங்களில் மட்டும் எலைட் மதுக்கடைகளை திறந்த தமிழக அரசு, அடுத்தகட்டமாக மாவட்டத் தலைநகரங்கள், வட்டத் தலைநகரங்கள், சிறு நகரங்கள் ஆகியவற்றிலும் எலைட் மதுக்கடைகள், தனி பீர் கடைகள் ஆகியவற்றை திறக்கத் திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமின்றி,  தானியங்கி பீர் வழங்கும் எந்திரங்களை அமைக்கவும் அரசு தீர்மானித்துள்ளது. இவையெல்லாம் போதாது என உணவகங்களின் ஒரு பகுதியில் பீர், ஒயின் ஆகிய மதுவகைகளை பரிமாற அனுமதி வழங்கியுள்ளது.

மது அத்தியாவசிய பொருளும் அல்ல; அதை தட்டுப்பாடின்றி கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற அவசியமும் இல்லை. அவ்வாறு இருக்கும்போது, நியாயவிலைக் கடைகளை திறப்பதில் அலட்சியம் காட்டும் தமிழக அரசு, ஏற்கனவே மதுக்கடைகள் இருக்கும் பகுதிகளிலும் எலைட் மதுக்கடைகள், தனி பீர்கடைகளை திறப்பதற்கு வணிக நோக்கத்தைத் தவிர வேறு எதுவும் காரணமாக இருக்க முடியாது. ஆண்டுக்கு  சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் அரசு, அதில் நான்கில் ஒரு பங்குக்கும் கூடுதலான தொகையை மது விற்பனை மூலம் தான் ஈட்ட வேண்டும் என்ற நிலையில் இருப்பது அவலமா? அற்புதமா? என்பதை ஆட்சியாளர்களின் மனசாட்சியே தீர்மானிக்கட்டும்.

மது விற்பனை தொடர்பான தமிழக அரசின் புதிய திட்டங்கள் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். பீர் விற்னைக்காக தனிக் கடைகளை திறப்பதும், உணவகங்களில் பீர் மற்றும் ஒயினை பரிமாறுவதும் இதுவரை மதுவுக்கு மயங்காதவர்களைக் கூட, குறைந்த போதை தருபவை தானே என்ற எண்ணத்தில், இந்த வகை மதுக்களை சுவைக்கத் தோன்றும்; நாளடைவில் இவற்றை அருந்துபவர்கள்  மற்ற மது வகைகளையும் குடிக்கத் தொடங்கி முழுமையான குடிகாரர்களாக மாறிவிடும் ஆபத்து உள்ளது. ஒருவேளை மது விற்பனை மூலம் வருவாய் ஈட்டுவதில் உச்சத்தை தொடும் நோக்குடன் புதிய குடிகாரர்களை உருவாக்குவதற்கான உத்தியாகத் தான் இந்தக் கடைகளை அரசு திறக்கிறதோ? என்று கூட எண்ணத் தோன்றுகிறது.

மதுவின் தீமைகளையும், அதை ஒழிக்க வேண்டியதன் அவசியத்தையும் அண்மையில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் உலக சுகாதார நிறுவனம் விளக்கியிருக்கிறது. குடியால் சீரழிந்த குடும்பங்கள் அனுபவிக்கும் கொடுமைகளை நாமே நேரில் பார்க்கிறோம். இதன்பிறகும் வருவாயை பெருக்குவதற்காக மக்களை மதுவுக்கும் அடிமையாக்கும் அரசு மக்கள் நலன் விரும்பும் அரசாக இருக்க முடியாது. எனவே, புதிதாக மது மற்றும் பீர் கடைகளை திறக்கும் திட்டத்தை கைவிட்டு, அண்ணல் காந்தியும், தந்தை பெரியாரும் விரும்பிய சமுதாயத்தை உருவாக்குவதற்காக தமிழகத்தில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தொகுப்பு:  எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
=================================

Sunday, June 1, 2014

இருவர்...!

இருவர்............!


என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத, மறக்கக் கூடாத இரண்டு பேர்...!

ஒருவர், என்னுடைய மூத்த சகோதரி....!

மற்றொருவர், என்னுடைய மூத்த சகோதரர்....!!

2014ஆம் ஆண்டின் தொடக்கம் நன்றாக இருககும் என எதிர்பார்ப்புகள், எல்லோரையும் போல எனக்கும் இருந்தது.

காரணம், கடந்த 2013ஆம் ஆண்டில் சந்தித்த தொழில் ரீதியான பிரச்சினைகளால் மனசு மிகவும் பாதிப்பு அடைந்திருந்தது.

அதற்கெல்லாம், 2014ஆம் ஆண்டு நல்ல தீனையை கொடுத்துவிடும் என நம்பினேன்.

ஆனால்,

தொடக்கமே மிகப் பெரிய இடியாக விழுந்தது.

ஆம்,

ஜனவரி மாதத்தின் 11ஆம் நாள் இரவு 10 மணி...

இரவு பணிக்கு முன்பு உணவு அருந்திவிட்டு வரலாம் என அலுவலத்தில் இருந்து வெளியே வந்தபோது, செல்பேசி சிணுங்கியது.

எடுத்து பார்த்தபோது, ஆப்ஜான் (என்னுடைய மூத்த சகோதரியை நாம் அப்படிதான் அழைப்போம்.) பேசினார்.


அஜீஸ், அதிர்ச்சியான தகவல்டா...தம்பி முனாப் காலாமாயிட்டான். ஹாட் அட்டாக்தான் காரணம் என்று பேசினார்...

எனக்கு கை கால்கள் நடுங்க ஆரம்பித்து விட்டன.

வாழ்க்கையில் 50 ஆண்டு காலத்திற்கும் மேலாக என்னுடன் டிராவல் செய்த சகோதரர் முனாப் திடீரென மரணம் அடைந்தது என்னால் நம்பவே முடியவில்லை.

என்னுடைய பள்ளிக்கூட நாட்களில் இருந்து கல்லூரி நாட்கள் வரை, ஏன் கல்லூரி படிப்பு முடிந்த பிறகுகூட, சகோதரர் முனாப் செய்த சின்ன உதவிகள், கடமைகள், என்முன் வந்து நிழலாடின.

இன்று நான் ஒரு நல்ல நிலைக்கு இருப்பதற்கு காரணமே, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், அவர் செய்த உதவிகள் முக்கிய காரணம் எனலாம்....

எங்களுடைய குடும்பம் மிகப் பெரிய குடும்பம்....நிறைய அண்ணன் தம்பிகள், அக்கா தங்கச்சிகள்...

அத்தனை பேரும் என்னுடைய நலனில் அக்கறை கொண்டவர்கள்தான்.....

அப்படி அக்கறை கொண்டவர்களில் சகோதரர் முனாப்பும் ஒருவர். அவர் திடீரென மரணம் அடைந்தது. இன்னும் என்னால் நம்பமுடியவில்லை...

அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் நாள் மீளவேயில்லை......

இப்படி, அதிர்ச்சியில் மீளாமல் தவிர்த்துக் கொண்டிருந்த என் மீது மீண்டும் ஓர் இடி வந்து விழுந்தது.

ஆம்,

சகோதரர் முனாப்பின் மரணம் செய்தியை சொன்ன என் மூத்த சகோதரரி ஆப்ஜான்,  கடந்த வாரம் (27.05.2014) இரவு மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி மீண்டும் அதே இரவு பணியின்போது என்முன் வந்து விழுந்து இடியாய் தாக்கியது...


ஒரு கணம் ஆடி போனேன்.

கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வந்து விழுந்தது.

பணியில் கவனம் செலுத்த முடியவில்லை.

அதிகாலையில் ரயில் பிடித்து ஆற்காட்டிற்கு சென்று சேர்ந்து, சகோதரரின் உயிரற்ற உடலைப் பார்த்தபோது,  துக்கத்தால், தேம்பி தேம்பி அழுதேன்.

எனக்கு தாயாக இருந்தவர்...

நான் சில நேரங்களில் கோபப்பட்டால்கூட, தம்பிதான் கோபப்படுகிறான் என இயல்பாக நினைத்து என் மீது அன்பு பாராட்டியவர்..

சில நாட்கள் நான் போன் பேச மறந்தாலும், செல்பேசியில் என்னை அழைத்து என்னடா எப்படி இருக்கே. உடல்நலம் நன்றாகதானே இருக்கு...என நலம் விசாரிப்பார்.

அவரை பார்க்க வீட்டிற்கு சென்றால், அன்புடன் பேசி உணவு பரிமாறுவார்...

நல்ல சகோதரியாக, தாயாக என்னிடம் பழகியவர்...

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் என்மீது அன்பு செலுத்திய மூதத சகோதரி ஆப்ஜான், திடீரென ஹாட் அட்டாக்கில் உயிரிழந்தது என்னை நிலைத்தடுமாறி செய்து விட்டது.

எல்லாம் இறைவனுடைய நாட்டம்தான்.

ஆனால், நான்கு மாத காலத்திற்குள் இரண்டு நல்ல உள்ளங்கள், என்னைவிட்டு சென்றது எனக்கு மிகப் பெரிய இழப்பு...

அந்த இழப்புகளில் இருந்து நான் இன்னும் மீளவில்லை...

சகோதரர் முனாப், சகோதரி ஆப்ஜான் ஆகிய இரண்டு பேரும் அடிக்கடி என் கண்முன் வந்து வந்து செல்கின்றனர்...

இருவரும் என்னிடம் அடிக்கடி பேசுகிறார்கள்...மனம் அப்படிதான் நினைக்கிறது...

அந்த இரண்டு இழப்புகளை இனி எப்படி தாங்கிக் கொள்ள போகிறேன் என்று எனக்கு புரியவில்லை... தெரியவில்லை...

நல்ல உள்ளங்கள் இருவருக்கும் இறைவன் சொர்க்கத்தில் அழகான இடத்தை அளிக்க பிரார்த்தனை செய்கிறேன்...

அவர்களுடைய குடும்பத்தாருக்கும், ஏன், எனக்கும் ஆறுதலை அமைதியை தர இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

மதுவுக்கு எதிராக ஓர் போர்....! (85)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்....! " 

நாள் - 85


மதுவின் பிடியில் பெண்கள்–சிறுவர்கள்: டாக்டர் ராமதாஸ் வேதனை....!

மதுவுக்கு எதிராக போராடும் தமிழக தலைவர்களின் முதலிடம் பிடிப்பவர் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். போராட்டஙகளையும் அடிக்கடி நடத்தி வருகிறார்.

ஆனால், அரசோ எதுவும் கண்டுக் கொள்வதில்லை.

இந்நிலையில், உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தரும் அறிக்கையை சுட்டிக் காட்டி

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். (01.06.2014)

அந்த அறிக்கை இதோ உங்கள் பார்வைக்கு....

மதுவால் ஏற்படும் தீமைகள் பற்றி உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிப்பவையாக உள்ளன.

மதுக் குடிப்பதால் உலகம் முழுவதும் ஆண்டுக்கு 33 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழக்கிறார்கள் என்பதுதான் அந்த அதிர்ச்சி தரும் செய்தியாகும்.

"ஆல்கஹால் மற்றும் சுகாதார நிலைமை குறித்த உலக அறிக்கை –2014" என்ற தலைப்பில் உலக சுகாதார நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் 2012 ஆம் ஆண்டு நிலவரப்படி, மது குடிப்பதால் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒருவர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மதுவால் ஏற்படும் பாதிப்புகள் கடந்த 2005 ஆம் ஆண்டில் இருந்ததைவிட இப்போது பெருமளவில் அதிகரித்துள்ளது. அப்போது மதுவால் ஆண்டுக்கு 25 லட்சம் பேர் உயிரிழந்த நிலையில் இப்போது அந்த எண்ணிக்கை 33 லட்சமாக உயர்ந்துள்ளது.

மது குடிப்பதால் 60 வகை நோய்கள் தாக்கும் என இதுவரைக் கூறப்பட்ட நிலையில், இப்போது 200 வகை நோய்கள் தாக்கும் என்று சுகாதார நிறுவன அறிக்கை எச்சரித்துள்ளது.


மது அருந்துபவர்களுக்கு கல்லீரல் இழைநார் வளர்ச்சி சிலவகை புற்றுநோய்கள் ஏற்படுவதுடன், நிமோனியா, காசநோய் போன்றவையும் எளிதில் தொற்றுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

2010 ஆம் ஆண்டு நிலவரப்படி 15 வயதுக்குட்பட்ட ஆண்களில் 32.1 விழுக்காட்டினரும், பெண்களில் 10.60 விழுக்காட்டினரும் மதுவின் பிடியில் சிக்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இது சில ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட 32% அதிகமாகும்.

அதுமட்டுமின்றி, மதுப்பழக்கம் உள்ளவர்கள் சராசரியாக ஆண்டுக்கு 41 லிட்டர் மது அருந்துகிறார்கள். பெண்களில் 10.60 விழுக்காட்டினர் மது அருந்துகிறார்கள் என்பதும், 12 வயதிலேயே சிறுவர்கள் மது அருந்தத் தொடங்கி விடுகிறார்கள் என்பதும் கவலையளிக்கிறது.

மேலைநாட்டு கலாச்சாரத்திற்கு உதாரணமாக காட்டப்படும் அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளை விட இந்தியாவில் அதிக விழுக்காடு ஆண்களும், பெண்களும் மது அருந்துகின்றனர் என்பதிலிருந்தே மது அரக்கன் இந்தியர்களை எப்படி வளைத்துப் பிடித்திருகிறான் என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

மதுவின் தீமை அதிகரித்து வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி இந்தியா உள்ளிட்ட நாடுகளை உலக சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டிருக்கிறது.

பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த மருத்துவர் அன்புமணி இராமதாசு மத்திய சுகாதார அமைச்சராக இருந்தபோது, மதுக் கட்டுப்பாட்டை ஏற்படுத்தும் நோக்குடன் தேசிய ஆல்கஹால் கொள்கையை கொண்டு வருவதற்கான அவசியத்தை வலியுறுத்தியதுடன், அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டார்.

ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் அதற்கான எந்த முயற்சியையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. இப்போது அத்தகைய கொள்கையை உருவாக்கும்படி உலக சுகாதார நிறுவனமே வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாட்டிலோ நிலைமை மேலும் மோசமாக உள்ளது. முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை புறந்தள்ளிவிட்டு தெருவுக்குத் தெரு மதுக்கடைகளை திறக்கும் நடவடிக்கைகளில் அ.தி.மு.க. அரசு ஈடுபட்டிருக்கிறது.

எலைட் மதுக்கடைகள் என்ற பெயரில் மதுக்கடைகளை திறந்து வணிக வளாகங்களை மகளிர் நடமாட முடியாத பகுதியாக மாற்றிவரும் அரசு அடுத்த கட்டமாக அனைத்து மாநக ராட்சிகளிலும் பீர் விற்பனைக்கென தனிக் கடைகளை திறந்து வருவது கண்டிக்கத்தக்கதாகும்.

மதுப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் அடித்துள்ள எச்சரிக்கை மணிக்கு பிறகாவது மதுக்கடைகள் மூலம் வருவாய் ஈட்டும் வழக்கத்தைக் கைவிட்டு, மக்கள் நலனில் அக்கறை செலுத்த தமிழக அரசு முயல வேண்டும்.

குடியால் குடும்பங்கள் சீரழிவதையும், உயிர்கள் பறி போவதையும் தடுக்க தமிழகத்தில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற டாக்டர் ராமதாஸின் கோரிக்கை நியாயமான கோரிக்கை.

உலக சுகாதார நிறுவனத்தின் அதிர்ச்சி தரும் அறிக்கையை கவனத்தில் கொண்டாவது அரசு நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================