Sunday, February 24, 2013

டிக்கெட்.........!


டிக்கெட்…..!

S.A.அப்துல் அஜீஸ்

சுலைமானுக்கு இரவெல்லாம் சரியாக தூக்கமே வரவில்லை…

காரணம்,  சென்னையில் நடக்க இருக்கும் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டிதான்.


அந்த போட்டிக்கான டிக்கெட்டுக்கள் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதான வளாகத்தில் விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பு வந்தவுடன், எப்படியும் முன்னதாகவே சென்று டிக்கெட்டை வாங்கி விட வேண்டும் என்ற ஆர்வம் சுலைமானுக்கு மேலோங்கியது.

சேப்பாக்கத்தில் ஒவ்வொரு முறையும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் போது, இப்படிதான், சுலைமானுக்கு ஆர்வம் பொங்கி எழும். இரவெல்லாம் தூக்கம் வராது.

மகன் சுலைமானின் ஆர்வத்திற்கு நன்றாகவே தீனி போட்டார் அவரது தந்தை நசீர்.


சென்னையில் மிகப் பெரிய இரும்பு வியாபாரி என்பதால், நசீரின் வசதிக்கு குறைவு இல்லை. வணிகத்தில் அல்லாஹ் நல்ல செல்வத்தை வாரி வழங்கி இருந்தான்.

எனவே, பணம் எப்போதுமே ஒரு பிரச்சினையாகவே இருக்கவில்லை நசீருக்கு. மகன் சுலைமான், கிரிக்கெட்டில் அதீத ஆர்வம் செலுத்துவதை கண்டு அவர் சிறிதும் கவலை அடையவில்லை.

மகனின் விருப்பத்திற்கு மாறாக எதையும் செய்ய அவரது மனம் விரும்பவில்லை.


எனவேதான், டிக்கெட்டின் விலை 15 ஆயிரம் ரூபாய் என்றாலும் கூட, அதைப் பற்றி கவலைப்படாமல், மகனுக்காக செலவிட தயாராக இருந்தார் நசீர்.

மூத்த மகன் சுலைமானுக்காக மட்டுமல்ல, இளைய மகள் நசீரா, கடைசி மகன் ஷாகுல் ஆகிய மூன்று பேருக்கும் கிரிக்கெட்டில் ஆர்வம் இருந்ததால்,  அவர்களையும் போட்டியை காண ஒவ்வொரு முறையும் கூடவே அழைத்துச் செல்வது நசீரின் வழக்கம்.

அதுபோன்றுதான், இந்த முறையும் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறும் ஒருநாள் போட்டிக்காக ஐந்து டிக்கெட்டுகளை வாங்கி விடும்படி, மகன் சுலைமானுக்கு  அன்பு கட்டளையிட்டார் நசீர்.

தன்னையும் சேர்த்து மொத்தம் ஐந்து டிக்கெட்டுகளுக்காக ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை சுலைமானிடம் கொடுத்தார் நசீர்.


டிக்கெட்டுக்கு 75 ஆயிரம், போக மீதி, பணம் செலவுக்கு என மகனிடம் சொல்லியிருந்தார் நசீர்.

தந்தை நசீர் கொடுத்த பணத்தை கையில் வாங்கியதில் இருந்து சுலைமானுக்கு இருப்பு கொள்ளவில்லை.

அதிகாலை நான்கு மணிக்கே சேப்பாக்கம் சென்றுவிட வேண்டும் என்பதால், காரில் பெட்ரோல் உள்ளதா என்று முன்கூட்டியே சோதனை செய்து பார்த்துக் கொண்டான் சுலைமான்.

குளிர் காலத்தில் மட்டுமல்ல, எப்போதுமே, பஜர் தொழுகைக்கு எழுந்து சொல்லும் வழக்கம் இல்லாத சுலைமானுக்கு, நல்ல குளிர்காலத்திலும், கிரிக்கெட் டிக்கெட் வாங்க காரில் செல்வதில் சிரமம் எதுவும் தெரியவில்லை.


இஸ்லாமிய கல்வி, ஒழுக்கம் ஆகியவற்றை தனது பிள்ளைகளுக்கு நல்ல முறையில் சொல்லி கொடுக்க ஏனோ நசீர் ஆரம்பத்திலேயே ஆர்வம் செலுத்த தவறிவிட்டார்.

எனவே, நேரம் கிடைக்கும்போது மட்டுமே,  இஸ்லாமிய கல்வியை பெற்றனர் நசீரின் குழந்தைகள். இதனால், மார்க்கக் கல்வி குறித்து முழுமையான ஞானம் அவர்களிடம் இருக்கவில்லை.

தொழுகை, நோன்பு ஆகியவற்றை அவ்வப்போது நிறைவேற்றினாலும், முழு மனதுடன் நிறைவேற்றுகிறோமா என்று அவர்கள் நினைத்து பார்க்கவில்லை.


வீண் விளையாட்டுகளில் நேரம் செலவழிப்பதில் அதிக ஆர்வம் இருந்தது நசீரின் குழந்தைகளுக்கு.உலக கல்வி நன்றாக கிடைத்தும், அவர்களுக்கு மார்க்க கல்வி முழுமையாக கிடைக்கவில்லை.

நசீரின் குழந்தைகள் இப்படி என்றால், அவரது தூரத்து உறவினர் கரீமின் குழந்தைகள் சுமையா, அஸ்வியா ஆகியோர் நன்றாகவே கல்வியில் ஆர்வம் செலுத்தி வந்தனர். மார்க்க கல்வி மட்டுமல்ல, உலக கல்வியிலும் இறைவன் அவர்களுக்கு ஆர்வத்தை வாரி வழங்கி இருந்தான்.

எனவே, கரீமின் குழந்தைகள் சுமையா, அஸ்வியா இருவரும் படிப்பில் உயர்ந்த இடத்தை பிடிக்க ஆர்வம் கொண்டனர்.  


ஆனால், சிறிய வியாபாரம் செய்யும் கரீம், பல்வேறு பொருளாதார நெருக்கடிகளால், தனது குழந்தைகளுக்கு உயர்கல்வி அளிக்க முடியாத நிலையில் இருந்தார்.

தன்னுடைய தகுதிக்கு ஏற்ப, மகள்கள், சுமையா, அஸ்வியா ஆகியோரை உயர்கல்வியில் சேர்க்க ஆர்வமும் கொண்டார்.

ஆனால், நாட்டில் கல்வி தற்போது வியாபாரமாக  ஆகிவிட்டதால், அதற்கு கட்டாயம் அதிகளவு பணம் தேவை என்ற நிலை இருந்தது.

எனவே, தூரத்து உறவினர் நசீரிடம் அவ்வப்போது, சிறிது பணம் வாங்குவது கரீமின் வழக்கமாக இருந்தது.


இந்த முறை, சுமையாவின் மேற்படிப்புக்காக மிகப் பெரிய தொகையான 60 ஆயிரம் ரூபாய்  தேவைப்பட்டது.

அதுகுறித்து பலமுறை கேட்டும், அதற்கு, எந்த ஒரு உறுதிமொழியும் கரீமுக்கு அளிக்கவில்லை நசீர்.

கரீம் சொந்த உறவினர் கூட கிடையாது… தூரத்து உறவினர்தான். எனவே அவருக்கு ஏன் பணம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணமே நசீரின் உள்ளத்தில் அடிக்கடி தோன்றியது.

கல்வியில் ஆர்வம் உள்ள ஏழை பெண்களுக்கு, குறிப்பாக பெண்களின் கல்வி வளர்ச்சிக்காக கொடுக்கிறோமே என்ற எண்ணம் நசீருக்கு சிறிதும் ஏற்படவில்லை.

எனவே, கரீம் பணத்தை கேட்கும்போதெல்லாம் தட்டிக் கழித்தே வந்தார்.
ஒருநிலையில், வீட்டிற்கு வந்த கரீமிடம் “இதோ பார் கரீம், என்னிடம் நீ கேட்கும் அளவுக்கு தற்போது அவ்வளவு பணம் இல்லை. வேறு ஏதாவது வழியில் பணத்தை திரட்ட முயற்சி செய்” என்றார் நசீர்.  

கரீம் போசாமல் நின்றுக் கொண்டிருந்தார்.

“வியாபாரத்தில் போட்டி அதிகம் ஆகிவிட்டதால், லாபம் குறைந்துவிட்டது. வங்கிகளில் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டியே  போதும் போதும் என ஆகிவிடுகிறது” என்றார் நசீர்.


கரீமுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. கூடிய விரைவிலேயே கல்லூரியில் பணம் கட்டி ஆக வேண்டும். மகள் சுமையா சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. 60 ஆயிரம் ரூபாய்க்கு எங்கே போவது என அவருக்கு தெரியவில்லை.

இருந்தும், நசீரை மேலும் தொந்தரவு செய்ய மனம் இடம் தராததால், சலாம் கூறிவிட்டு வெறும் கையோடு வீட்டுக்கு திரும்பினார் கரீம்.

ஆனால், நசீர் சொன்னது எல்லாமே, பொய். இறைவன் அவருக்கு வியாபாரத்தில் நல்ல இலாபம் கொடுத்து கொண்டே இருந்ததால், செல்வம் பெருகி கொண்டே இருந்தது. 

இருந்தும், தனக்கே கல்வியில் ஆர்வம் இல்லாததால், பிறரின் கல்வி வளர்ச்சிக்கு அவருக்கு உதவி செய்யும் எண்ணம் பிறக்கவில்லை.

தன்னுடைய குழந்தைகளின் அற்ப சுகங்களுக்காக அதிகம் செலவழிக்க விரும்பினாறே தவிர, இஸ்லாமிய ஏழை குழந்தைகளின், ஏன் தூரத்து உறவினர்களின் குழந்தைகளுக்கு உதவிகரம் நீட்ட நசீர் முன்வரவில்லை.

இப்படிப்பட்ட நேரத்தில்தான் சேப்பாக்கத்தில் நடக்கும் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை காண ஒரு லட்சம் ரூபாய் வரை செலவழிக்க அவர் தயங்கவில்லை.


அதிகாலை நேரத்தில் விழிக்கும் பழக்கமே இல்லாத நசீர், போட்டிக்கான டிக்கெட்டுகளுக்காக அதிகாலை 4 மணிக்கே படுக்கையை விட்டு எழுந்து, மகன் சுலைமானுடன் சேர்ந்து காரில் சேப்பாக்கம் சென்றார்.

எதிர்பார்த்தது போன்று, அங்கு நீண்ட வரிசையில் கிரிக்கெட் ரசிகர்கள் நின்றுக் கொண்டிருந்தனர்.

காரை சாலையின் அருகே நிறுத்திவிட்டு, மகனை சுலைமானை டிக்கெட் வாங்க அனுப்பி வைத்தார் நசீர்.

அரை மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு, ஐந்து டிக்கெட்டுக்களுடன் வந்தான் மகன் சுலைமான். முகத்தில் மிகப் பெரிய வெற்றி பெற்றதற்கான அறிகுறி.


மகனை வாரி அணைத்துக் கொண்டு காரில் புறப்பட்டார் நசீர்.

நாளை நடக்கும் கிரிக்கெட் போட்டிக்கு முன்கூட்டியே வந்துவிட வேண்டும் என்றும், கடைக்கு ஒருநாள் விடுமுறை விட்டுவிட வேண்டும் என்றும் இருவரும் காரில் பேசிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தனர்.

மறுநாள் சேப்பாக்கம் மைதானம் கிரிக்கெட் ரசிகர்களின் கூட்டத்தால் திண்டாடியது.

இரு அணி வீரர்களும் சிக்ஸ், போர் என ரன்களை விளாச, ரசிகர்கள் துள்ளி குதித்தனர்.

நசீர் தன்னுடைய குழந்தைகளுடன் சேர்ந்து மகிழ்ச்சியில் திளைத்தார். இசைக்கருவிகளை இசைத்து துள்ளி மகிழ்ந்தார்.

தூரத்து உறவினர் கரீமின் குழந்தைகள் சுமையா, அஸ்வியா ஆகியோரிடன் கல்விச் செலவுக்கு பணம் கொடுக்க மனம் இல்லாமல் சாக்குபோக்கு சொன்ன நசீர், நான்கு மணி நேரம் கிடைக்கும் அற்ப சுகாத்திற்காக ஒரு லட்சம் ரூபாய் வரை செலவழித்தார்.

அங்கே, கரீமின் குழந்தைகள், சுமையா, அஸ்வியா ஆகியோர் மக்ரீப் தொழுகையை நிறைவேற்றி இறைவனிடம் மனம் உருகி துஆ கேட்டனர்.
இறைவா…. எங்களுடைய கல்வி ஞானத்தை அதிகப்படுத்தி வைப்பாயாக…
எங்கள் கல்விக்காக வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவாயாக…


எங்கள் கல்விக்காக உதவி செய்யும் மக்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை அளிப்பாயாக…அவர்களின் செல்வத்தை மேலும் அதிகப்படுத்துவாயாக..

கல்வியில் ஆர்வம் உள்ள எங்களுக்கு உதவி செய்ய எங்கள் உறவினர்கள் மற்றும் நன்மக்களின் உள்ளங்களில் ஆர்வத்தை ஏற்படுத்துவாயாக…

நாங்கள் பெறும்  கல்வி மூலம் பிறருக்கும் நலம் கிடைக்கும்படி செய்வாயாக…

மனம் உருகி, கண்ணீர் சிந்தி கரீமின் குழந்தைகள் கேட்ட பிரார்த்தனை நிறைவேற நாமும் துஆ செய்வோம்.....

________________________________________________________________

நல்ல கருத்துள்ள படைப்பு.... படியுங்கள்.... சிந்தியுங்கள்.... செயல்படுங்கள்....

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Friday, February 8, 2013

கொடுக்கும் விலை..........


கொடுக்கும் விலை

கொஞ்சம் அதிகம்…!!

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

நவீன விஞ்ஞான காலத்திற்கு ஏற்ப, உலகம் முழுவதும் ஏற்பட்டு வரும் வேகமான வளர்ச்சி.

போட்டி போட்டுக் கொண்டு ஒவ்வொரு நாட்டிலும் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள்..

நான்கு வழிச்சாலை…. ஆறு வழிச்சாலை…. என இந்தியாவிலும் ஏராளமான திட்டங்கள்  நடைமுறையில் இருந்து வருகின்றன….

டெல்லியை தொடர்ந்து பெங்களூரு, சென்னை, கொல்கத்தா, மும்பை என அனைத்து முக்கிய நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகம்…

நாட்டின் அனைத்து நகரங்களிலும் கட்டப்பட்டு வரும் ஏராளமான மேம்பாலங்கள்….


இவையெல்லாம், மக்களின் நலன்களுக்காகவே செய்வதாக மத்திய, மாநில அரசுகள் சொல்லிக் கொள்கின்றன. உலகம் முழுவதும் இப்படிதான் சொல்லப்படுகிறது. அது முற்றிலும் மறுக்க முடியாத உண்மைதான்.

ஆனால், இந்த திட்டங்களுக்காக மிகப் பெரிய விலையை மனித சமுதாயம் தந்துக் கொண்டிருக்கிறது.

ஆம். வளர்ச்சி பணிகளுக்காக இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் பசுமை வளம் மெல்ல மெல்ல அழிக்கப்பட்டு வருகிறது. அடர்த்தியாக இருந்த வனவளம் தற்போது மெலிந்து வருகிறது.

மெல்ல மெல்ல அழிவை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கும் வனவளத்தை குறித்து ஆஸ்திரேலிய மற்றும் அமெரிக்க பல்கலைக்கழங்ககளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். உலகின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று இந்த ஆராய்ச்சியாளர்கள், வனவளம் குறித்து துள்ளியமாக ஆய்வு செய்தனர். அதில் கிடைத்த பல தகவல்கள், ஆராய்ச்சியாளர்களை அதிர்ச்சி அடையச் செய்தது.


இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வரும் சாலை மேம்பாட்டு பணிகளுக்காக, மக்களின் நன்மைக்காக பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நட்டு, பசுமையாக வளர்ந்து ஆண்டாண்டு காலமாக பலன் அளித்து வந்த நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டிச்  சாய்க்கப்பட்டன.

நான்கு வழிச்சாலை…. ஆறு வழிச்சாலை…. என பல சாலைகள் வந்தது என்னவோ உண்மைதான்…. வாகனங்கள் அதிவேகத்தில் சென்று, குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே இலக்கை அடைவது மக்களுக்கு நல்ல வசதியாகதான் இருக்கிறது.

ஆனால், அதற்கு மனிதன் கொடுக்கும் விலை…. ஆஸ்திரேலிய மற்றும் அமெரிக்க பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தரும் அதிர்ச்சியூட்டும் பட்டியலை பார்ப்போமா….

உலகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக, ஆயிரக்கணக்கான மிகப் பெரிய ராட்சத மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன.

இந்த அற்புதமான அதிசய மரங்களின் வயசு என்ன தெரியுமா… 100 முதல் 300 ஆண்டுகள்…



300 ஆண்டு காலமாக மக்களுக்கு நிழலாக, இருந்து,  இயற்கையை தூய்மைப்படுத்தி வந்த ஆயிரக்கணக்கான நல்ல மரங்கள் அழிக்கப்பட்டு விட்டன.

இந்தியாவில் மட்டும் இந்த நிலை இல்லை… ஐரோப்பிய நாடுகள்… வடக்கு அமெரிக்கா, தெற்கு அமெரிக்கா, ஆப்பிரிக்கா, லத்தின் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மற்றும் ஆசிய நாடுகள் என உலகின் அனைத்து நாடுகளிலும் வனவளம் அழிக்கப்பட்டு வருகிறது என பட்டியலிடுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்…

வனவளம் திடீரென ஏற்படும் காட்டுத் தீயால்  மட்டும் அழிக்கப்படுவதில்லை.

மனிதன் சுயநலத்திற்காக திட்டமிட்டு வனவளத்தை அழித்து வருகின்றான் என்பது ஆராய்ச்சியாளர்களின் குற்றச்சாட்டு.


வனவளம் குறித்து சுவிடன் நாட்டில் கடந்த 1890ஆம் ஆண்டு பல ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன..

இந்த ஆவணங்களில் உலகம் முழுவதும் இருந்த, இருக்கும் வனவளம்… இயற்கை வளம். மிகப் பெரிய மரங்கள்… நூறு வயதை கடந்த மரங்கள் ஆகியவை குறித்து பல அரிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

சுவீடன் நாட்டின் இந்த ஆவணங்களில் உள்ள மரங்கள் தற்போது உலகில் உள்ளதா என்றால்… நிச்சயம் இல்லை என்ற பதிலே வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நவீன விஞ்ஞான காலத்திற்கு ஏற்ப, மெல்ல மெல்ல பசுமையான மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டதால், சுவீடன் ஆவணங்களில் இந்த அரிய மரங்கள் குறித்து தற்போது உள்ள தகவல்களும் அழிக்கப்பட்டு வருகின்றன.  


இது ஆஸ்திரேலிய, அமெரிக்க பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

காட்டுத் தீயால் மட்டும் அல்லாமல், மனிதன் செயல்படுத்தும் திட்டங்களால், 10 மடங்கு வனவளம் அழிக்கப்பட்டு வருகிறது.

இப்படி தொடர்ந்து அழிக்கப்பட்டு வரும் வனவளத்தால், பசுமை வளத்தால், பூமியின் வெப்பத்தன்மை அதிகரித்து வருகிறது. இதனால், நீர்வளம் குறைந்து வேளாண்மை பாதிப்பு அடைவதாக ஆராய்ச்சியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இது மிகவும் ஆபத்தான போக்கு என எச்சரிக்கிறார் ஜேம்ஸ் குக் பல்கலைக்கழக பேராசிரியர் பில் லாரன்ஸ்.(Bill Laurance. James University)
வனவளங்கள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், மேலும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவை, வனவளங்கள் அழிக்கப்படுவதால், பறவை இனங்களும் அழிந்து வருவது என்பதுதான்.  உலகம் முழுவதும் பல்லாயிரணக்கான ஆண்டுகளாக சுதந்திரமாக சுற்றி திரிந்த அரிய வகை பறவை இனங்கள் பல, தற்போது, அழிக்கப்பட்டு வரும் பசுமை வளத்தால், அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தெரிவிக்கின்றனர்.
பெரிய மரங்கள், வனவளம்,  பறவை இனங்களுக்கு நிழலாக மட்டுமல்லாமல், தங்குவதற்கு இடம் வழங்கி, நல்ல உணவை அளித்து வந்தன.


ஆனால், வளர்ச்சி என்ற பேரில் வனவளம் அழிக்கப்பட்டு வருவதால், பறவை இனத்திற்கு தங்க இடம் கிடைக்காத நிலை… உணவு பற்றாக்குறை… இப்படி பல காரணங்களால் அரிய வகை பறவை இனங்கள் தற்போது, மனித சமுதாயம் காண முடியாத நிலை. இதனால் 30 சதவீத பறவை இனங்கள் அழிக்கப்பட்டு விட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பறவை இனம் மட்டுமல்ல, விலங்கு இனங்களும் அழிக்கப்பட்டு வரும் வனவளத்தால் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன.

வனவளம் அழிக்கப்படுவதால், பறவை இனம், விலங்கு இனம் அழிக்கப்படுவதுடன், பூமியின் வெப்பமும் அதிகரித்து வருகிறது.  இதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு, மனிதன் நீருக்காக போராட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அத்தோடு சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது.


எனவே, இந்த விஷயத்தில் உலக நாடுகள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்கின்றனர் ஆஸ்திரேலிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். அழிந்து வரும் வனவளத்தை தடுத்து நிறுத்த வேண்டும். பசுமை வளத்தை அதிகரிக்க புதிய திட்டங்களை உருவாக்க வேண்டும். நவீன விஞ்ஞான திட்டங்களை நிறைவேற்றும்போது, வனவளம் நிச்சயம் பாதிப்பு அடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இவையெல்லாம், ஆஸ்திரேலிய மற்றும் அமெரிக்க பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தரும் ஆலோசனைகள்….

வனவளம் குறித்து இனி வரும் நாட்களில் கவனக்குறைவாக இருந்தால், உலகம் இப்போது சந்தித்து வரும் ஆபத்தைவிட  மிகப் பெரிய ஆபத்தை விலை கொடுத்து வாங்க வேண்டியது கட்டாயம்  என்பது ஆராய்ச்சியாளர்களின் எச்சரிக்கை…

முதியோர்களை எப்படி மதித்து போற்றுகிறோமோ, அப்படிதான், மிகவும் வயதான மரங்களையும் மனித சமுதாயம் பாதுகாக்க வேண்டும் என்பது ஆராய்ச்சியாளர்களின் வேண்டுகோள்.


உலகம் முழுவதும் அதிகரித்து வரும் முதியோர் இல்லங்களை பார்க்கும்போது, நாம் எங்கே முதியோரை போற்றி மதிக்கிறோம் என்று நீங்கள் வினா எழுப்புவது எனக்கு கேட்கிறது..

இனி, முதியோரையும் மதித்து போற்றி பாதுகாப்போம்…. முதிய மரங்களை, வனவளங்களை அழிவில் இருந்து மீட்போம். 

____________________________________________________________

இயற்கை வளம் பாதுகாப்பது குறித்த கட்டுரை இது. படியுங்கள்.... இயற்கை வளத்தை பாதுகாக்க முயற்சி செய்யுங்கள்...

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


Saturday, February 2, 2013

அழைப்பு பணியில் ……..!


அழைப்பு பணியில் ஏ.ஆர்.ரஹ்மான்……..!

S.A.அப்துல் அஜீஸ்



என் குழந்தைகள்

குர்ஆன் ஓதுவதைப்

பார்க்கும்போது

மகிழ்ச்சியாக இருக்கிறது

- ஏ.ஆர்.ரஹ்மான்

ன்னது…. இஸ்லாமிய அழைப்பு பணியில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானா…!

ஆச்சரியத்துடன் உங்களது புருவங்களை நீங்கள் உயர்த்துவது நன்றாகவே தெரிகிறது.

அண்மைக் காலமாக செய்தி ஊடகங்களுக்கும், தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும், ஏ.ஆர்.ரஹ்மான் அளித்து வரும் பேட்டிகளை நீங்கள் கவனத்துடன் படித்து இருந்தால், அல்லது பார்த்து இருந்தால், நான் சொல்வது எவ்வளவு உண்மை என்பது தெளிவாக புரிய வரும்.

இஸ்லாம் குறித்தும், திருக்குர்ஆன் குறித்தும், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களிடம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்தும் வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்பது குறித்தும் தன்னுடைய பேட்டிகளின்போது, ஏ.ஆர்.ரஹ்மான் பல நல்ல கருத்துக்களை சொல்லாமல் இருப்பது இல்லை.

ஜெயா தொலைக்காட்சியாக இருக்கட்டும், சன் டி.வியாக இருக்கட்டும், வெளிநாடுகளின் அல்–ஜஜீரா அல்லது பி.பி.சி., தொலைக்காட்சிகளாக இருக்கட்டும், இதேபோன்று, பிற செய்தி நிறுவனங்கள் எடுக்கும் நேர்காணல் எதுவாக இருந்தாலும், அதில், தாம் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பிறகு, தம்முடைய வாழ்வில்  ஏற்பட்ட மாற்றங்கள், வளர்ச்சிகள்., மன அமைதி, குறித்த பல தகவல்களை  நிச்சயம் எடுத்துக்கூற ஏ.ஆர்.ரஹ்மான் சிறிதும் தயங்குவதில்லை.

இப்படிதான், அண்மையில், தீபாவளி திருநாளையொட்டி, ஜெயா டி.வி.யில் ஏ.ஆர்.ரஹ்மானின் பேட்டி ஒளிப்பரப்பப்பட்டது. அந்த பேட்டியை எடுத்த  பாடகி சின்மயி, ஏ.ஆர்.ரஹ்மானிடம் பல சுவையான கேள்விகளை கேட்டார். இசைத்துறை பற்றிய கேள்விகள் மட்டுமல்லாமல், வாழ்க்கையின் உயரத்திற்கு சென்ற பிறகு, எப்படி, அமைதியாக, தலைக்கனம் இல்லாமல் உங்களால் இருக்க முடிகிறது என ரஹ்மானிடம் வினா எழுப்பப்பட்டது.

இதேபோன்று, அவரது குடும்பம் குறித்தும் சில கேள்விகளை பாடகி சின்மயி கேட்டபோது, ரஹ்மான், மிகவும் அமைதியாக, சாந்தமாக பதில் அளித்தார்.

வாழ்க்கையில் உயரத்திற்கு செல்லும்போதுதான், பொறுப்புகள் அதிகம் என கூறிய ரஹ்மான், எல்லாமே, இறைவனின் விருப்பப்படி நடைபெறுகிறது என தாம் நினைப்பதாகவும் எனவே, தனக்கு கிடைக்கும் புகழ், இறைவனால் கிடைப்பதால், அதுகுறித்து கர்வமோ, தலைக்கனமோ தனக்கு ஏற்படுவதில்லை என்றார்.

குடும்பத்தில் தன் தாய்க்கு நல்ல மகனாக, குழந்தைகளுக்கு நல்ல தந்தையாக, சகோதரிகளுக்கு நல்ல சகோதரனாக, மனைவிக்கு நல்ல கணவனாக, உறவினர்களுக்கு நல்ல உறவினராக தாம் இருக்க தொடர்ந்து முயற்சி செய்வதாக ரஹ்மான் தெரிவித்தார்.

குடும்பத் தலைவனாக மற்றவர்களுக்கு நல்ல முன்மாதிரியாக இருந்தால் மட்டுமே,  தனது பிள்ளைகளும் நல்ல ஒழுக்கத்துடன், தன்னை கேள்விகள் எதுவும் கேட்காமல் வளர்வார்கள் என்றும், தாமே, முன்மாதிரியாக இல்லாமல் இருந்தால், குழந்தைகளை எப்படி, முன்மாதிரியாக வளர்க்க முடியும் என்றும் வினா எழுப்பினார் ரஹ்மான்.


தம்முடைய குழந்தைகள் திருக்குர்ஆனை மிக நன்றாக, அழகாக படிக்கும்போது, தம்மால் அதுபோன்று, வாசிக்க முடியவில்லையே என்று தாம் பல நேரங்களில் வருத்தம் அடைந்ததாகவும், தாம் 30 வயதில் திருக்குர்ஆனை படிக்க ஆரம்பித்ததாகவும், ஆனால் தம்முடைய குழந்தைகள் இளம் பருவத்திலேயே மிக துள்ளியமாக குர்ஆனின் வசனங்களை வாசித்து, அதன்படி நடக்க முயலுவதை பார்க்கும்போது, தமக்கு ஒருவிதத்தில் பொறாமையாக இருக்கிறது என்றும் சிரித்தார் ரஹ்மான்.

மற்றவர்களிடம் பேசும்போது அழகிய வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதில் தம்முடைய குழந்தைகள் குர்ஆனின் வசனங்களை மேற்கோள் காட்டி, கூறுவதை கேட்கும்போது, உண்மையிலேயே மகிழ்ச்சி ஏற்படுகிறது என்று தெரிவித்தார் ரஹ்மான்.

இதேபோன்று, நிகழ்ச்சிக்கு வந்த இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா, ரஹ்மான் குறித்து பேசும்போது, அவரது எளிமை, மற்றவர்கள் மீது அன்பு பாராட்டுவது என பல குணங்களை எடுத்துக்கூறி,  திரைப்படத்துறையில், புறம்பேசுவது வழக்கமாக இருக்கும் நடைமுறை  என்றும், பிறரின் வெற்றி, தோல்விகள் குறித்து, பலர் பேசி மகிழ்வார்கள் என்றும் தெரிவித்தார். இது திரைப்படத்துறையில் மட்டுமல்லாமல் பிற துறைகளிலும் இருப்பது வழக்கமான ஒன்று என்றும் கூறிய இயக்குநர் சூர்யா, ஆனால், ஏ.ஆர்.ரஹ்மான், மற்றவர்கள் குறித்து புறம்பேசுவதை ஒருபோதும் விரும்புவதில்லை என்றார்.

அப்படிப்பட்ட நேரங்களில், பேச்சின் திசையை மாற்றிவிட்டு, உடனே வேலையில் கவனம் செலுத்துவதுதான் ரஹ்மானின் பழக்கம் என்றும் பாராட்டு தெரிவித்தார் சூர்யா.

அப்போது குறுக்கிட்ட ரஹ்மான்,  புறம்பேசுவது இஸ்லாத்தில் அனுமதிக்கப்படாத ஒன்று என்றார். புறம்பேசுவது எந்தளவுக்கு இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை மிக ஆழமாக அறிந்து வைத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான், அதனை வாழ்க்கையில் கடைப்பிடித்து, மற்றவர்களுக்கும் குறிப்பாக திரைப்படத்துறையைச் சேர்ந்த சிலருக்கு மறைமுகமாக எடுத்து கூறி வருவது எவ்வளவு நல்ல விஷயம் அல்லவா….

நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர்கள் வசந்த், கதிர் உள்ளிட்டோரும் ரஹ்மானிடம் இருந்து கற்றுக் கொள்ள நல்ல விஷயங்கள் ஏராளமாக உள்ளன என்று பாராட்டு தெரிவித்தனர்.

திரைப்படத்துறையில் மது பழக்கம் இல்லாதவர்கள் இல்லை என்ற நிலையே தற்போது இருந்து வருகிறது.

ஆனால், ஏ.ஆர்.ரஹ்மான் இதற்கு முற்றிலும் விதிவிலக்கு…

மது அருந்தினால்தான் நல்ல இசை வரும் என் மூட நம்பிக்கை பலருக்கு இன்னும் இருக்கிறது.



போதை தலைக்கு ஏறினால், இசை காற்றில் பறக்கும் என்ற நம்பிக்கையில் நம்வூர் இசையமைப்பாளர்கள் மட்டுமல்லாமல், உலகத்தில் புகழ் பெற்ற இசையமைப்பாளர்கள் சிலரும் இருந்து வருகின்றனர்.

இதுகுறித்து சன் டி.வி.யில் ஒளிப்பரப்பான பேட்டியின்போது, சிரிப்பு நடிகர் விவேக்,  ரஹ்மானிடம் கேள்வி எழுப்பினார்.

ரஹ்மான் மிக அழகாக பதில் அளித்தார். மதுவுக்கும் இசைக்கும் சிறிதும் சம்பந்தம் இல்லை.

இசை…. இறைவன் கொடுத்த வரம்… திறமை… சிலர் நினைப்பதுபோன்று, மதுவால் நல்ல இசையை உருவாக்கவே முடியாது என்று அடித்து கூறினார்  ரஹ்மான்.

மதுவின் தீமைகள் குறித்து இஸ்லாம் சொல்லும் பாடங்கள் ஏராளம். அவற்றையெல்லாம், தனது உள்மனதில் வாங்கிக் கொண்டதால், இன்றுவரை, அந்த தீமையில் சிக்கவில்லை ரஹ்மான்.

மற்றவர்களுக்கும் மதுவின் தீமை குறித்தும் பாதிப்பு குறித்தும் எடுத்துக்கூறும் ரஹ்மான், மதுவினால் சில குடும்பங்கள் சிரழிந்து போனதை தாம் நேரில் பார்த்து இருப்பதாகவும்  தம்முடைய பேட்டிகளின்போது சொல்லாமல் இருப்பதில்லை.


இரண்டு ஆஸ்கர் விருதுகள் பெற்றபோது, எப்படி உங்களால் அமைதியாக எல்லாப் புகழும் இறைவனுக்கே என அழகிய தமிழில் சொல்ல முடிந்தது என ரஹ்மானிடம் கேட்கப்பட்டது.

10 பேர் இருக்கும் இடத்தில் என்னை நினைத்துக் கொண்டால், நூறு பேர் இருக்கும் இடத்தில் உன்னை நான் உயர்த்துவேன்… 100 பேர் இருக்கும் இடத்தில் என்னை நினைத்துக் கொண்டால் ஆயிரம் பேர் இருக்கும் இடத்தில் உன்னை உயர்த்துவேன் என்கிறான் இறைவன்…

அந்த எண்ணம் என் உள்மனதில் ஆழமாக இருந்து வருகிறது. அதுமட்டுமல்ல, திறமைசாலியாக என்னை இறைவன் படைத்தது என்னுடைய அதிர்ஷ்டம்… எனவேதான், எல்லாப் புகழும் இறைவனுக்கே என என்னால் சொல்ல முடிகிறது. அதன்மூலம், என் தலைகனத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க முடிகிறது என்றார் ரஹ்மான்.

பல நாடுகளுக்கு சென்று பணிபுரியும் வாய்ப்பு கிட்டும்போது, அங்குள்ள பள்ளிவாசல்களுக்கு சென்று தொழுவது அதனால் கிடைக்கும் சுகம், அமைதி ஆகியவற்றை குறித்தும் ரஹ்மான் தன்னுடைய பேட்டியின்போது, அழகாக வெளியிட்டார்.


உலகில் அமைதி நிலவ வேண்டும்.. உலக அமைதிக்காக தன்னுடைய பணிகள் இருக்கும் என்றும், அமைதியை வலியுறுத்தி இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றும் ரஹ்மான் கூறியபோது, உண்மையிலேயே மகிழ்ச்சி ஏற்பட்டது.

ஏன், இஸ்லாம் அமைதியை விரும்பும் மார்க்கம் அல்லவா… இதனை ரஹ்மான் ஆழமாக உணர்ந்து இருப்பதால்தான், உலக அமைதிக்காக தன்னுடைய பணிகள் இருக்கும் என்றும், அனைத்து மக்களும் சகோதரத்துவ எண்ணத்துடன், கலாச்சார, பராம்பரிய வேற்றுமைகள் இருந்தாலும், ஓர் இறைவன் ஓர் குலம் என்ற உயர்ந்த கருத்தை உள்வாங்கி அமைதியாக வாழ வேண்டும் என்றும் ரஹ்மான் கருத்தை வெளியிட்டு, அதன்மூலம், பிறருக்கு, நல்ல ஒரு மெஜேசை தெரிவித்துள்ளார்.

இப்படி, பல பேட்டிகளில் ரஹ்மான், தரும் விளக்கங்கள், தகவல்கள்… மூலம், இஸ்லாம் எந்தளவுக்கு அவரது வாழ்க்கையில் மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

ரஹ்மானின் நடவடிக்கைகளை கவனிக்கும் திரைப்படத்துறையினர், அவரை போன்று ஏன் நாமும் மாறக்கூடாது என்று மனதில் நினைக்கவே செய்கின்றனர்.


இப்படி, மறைமுகமாக, மற்றவர்களுக்கு இஸ்லாமிய அழைப்பு பணி விடுத்து வருகிறார் ரஹ்மான்.

அதில் ஒருசிலர் உண்மையிலேயே மாற்றங்களை காணலாம்… அல்லது காணாமல் போகலாம்…

அது அல்லாஹ்வின் விருப்பம்…

ஆனால், வாழ்க்கையில் வசதி வாய்ப்புகள் வந்தபோதும்,  உயரத்திற்கு சென்ற பிறகும், இஸ்லாமிய வாழ்க்கை நெறியில் இருந்து பிறழாமல், நல்ல ஒழுக்கத்துடன் வாழ்ந்து மற்றவர்களுக்கு நல்ல முன்மாதிரியாக ரஹ்மான் இருந்து வருவது ஒரு நல்ல அழைப்பு பணி என்றே கூறலாம்…
இது மற்றவர்களின் வாழ்க்கையில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும்…

திருக்குர்ஆனின் கருத்துக்கள், நபிமொழியின் கருத்துக்கள், இஸ்லாமிய நெறிகள்   ஆகியவற்றை மற்றவர்களும் அறிய அல்லது  படிக்க தூண்டுவதும், ஓர் ஆர்வத்தை ஏற்படுத்துவதும்  நல்ல அழைப்பு பணி அல்லவா…

மாற்று மத சகோதரர்களுக்கு இஸ்லாமிய புத்தகங்களை கொடுப்பது மட்டுமே, அழைப்பு பணி அல்ல.


நல்ல இஸ்லாமியனாக வாழ்ந்து, மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்வதும் ஓர் அழைப்பு பணிதான்.

இதைத்தான் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது மறைமுகமாக செய்து வருகிறார்…

நாமும் முடிந்தவரை நல்ல இஸ்லாமியர்களாக வாழ்ந்து, மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து, அழைப்பு பணியில் நம்மையும் ஈடுபடுத்திக் கொள்ளலாம் அல்லவா….

______________________________________________________________

ஜனவரி 16-31 சமரசம் இதழில் வெளிவந்த கட்டுரைதான் மேலே நீங்கள் படித்தது. கட்டுரையை வெளியிட்ட சமரசம் இதழ் நிர்வாகிகள் மற்றும் ஆசிரியருக்கு நன்றி....