Friday, December 19, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்.....! (105)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....!"

நாள் - 105

மதுவிலக்கு என்பது இந்திய அரசின் தேசியக் கொள்கையாக  அறிவிக்கப்பட்டு, அரசு மதுபான கடைகளை உடனடியாக இழுத்து மூட வேண்டும்.....!

தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்......!!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் (19.12.2014) அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே நந்தினி என்ற பள்ளி  சிறுமியும், வேலூர் குடியாத்தம் பகுதியை சேர்ந்த கிருத்திகா என்ற பள்ளி சிறுமியும் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கொடூரம்  நிகழ்ந்துள்ளதை அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் நிகழ்ந்துக் கொண்டிருக்கும் அவலம் என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.

இதை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ள அவர், 20 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மதுபழக்கத்துக்கு அடிமையாவது அதிகரித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும், செல்போனிலும், கணினிகளிலும் பாலுறவு காட்சிகளை கொண்ட இணையதளங்களால்  இளைஞர்கள் பாதை தவறும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

குடியாத்தம் கிருத்திகாவை பாலுறவுக்கு கட்டாயப்படுத்திப் படுகொலை செய்த மாணவன் இணையதளங்களில்  காட்சிகளைப் பார்க்க கூடியவன் என்று கூறப்படுவதாகவும், அவனுக்கு குடிப்பழக்கமும் உண்டு என்று விசாரணையில் தெரிய வந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரபு நாடுகளில் பாலுறவு அடங்கிய இணையதளங்களை 100 சதவீதம் தடை செய்தை சுட்டிக் காட்டியுள்ள தொல்.திருமாவளவன்,  இந்திய அரசும் அத்தகைய இணையதளங்களுக்கு ஏன் தடைவிதிக்க கூடாது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.


மேலும், மதுபான கடைகளை  அரசு உடனடியாக மூட வேண்டும் என்றும், பாலுறவு இணையதளங்களை தடை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மதுவிலக்கு என்பது இந்திய அரசின் தேசியக் கொள்கையாக அறிவிக்கப்பட்டு அரசு மதுபான கடைகளை உடனடியாக இழுத்து மூட வேண்டும் என்றும் அதற்கான சட்டத்தையும் இந்திய அரசு இயற்ற வேண்டும் என்றும் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொல்.திருமாவளவனின் இந்த கோரிக்கைகள் அனைத்தும் நியாயமானவை.

இளைஞர் சமுதாயம், இனிய சமுதாயமாக, நல்ல சமுதாயமாக, நாட்டின் வளர்ச்சியில், வீட்டின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட சமுதாயமாக மலர வேண்டும் என்றால், இந்த கோரிக்கைகள் அனைத்தும் கண்டிப்பாக நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

இதுதான் எமது விருப்பம்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

Thursday, December 18, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்...! (104)

மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்...! 

 நாள் - 104


தமிழகத்திலிருந்து மதுவை ஒழிக்கும் வரை மதிமுகவின் போராட்டம் ஓயாது....!

வைகோ அறிவிப்பு.....!!

தமிழகத்தில் ஆறாக ஓடும் மதுக்கடைகளை இழுத்து மூட தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

தமிழக பெண்களின் கண்ணீரை துடைக்க தமிழகத்திலிருந்து மதுவை ஒழிக்கும் வரை தங்களது போராட்டம் ஓயாது என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் தெருக்கு தெரு அதிகரித்து வரும் டாஸ்மாக் மது கடைகளால் குடிப்பழக்கத்துக்கு மாணவர்கள் அடிமையாகிறார்கள் என்றும் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

இதனால் கற்பழிப்பு, விபத்து போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது என்றும், எனவே மதுக்கடைகளை மூட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழகத்தில், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பயந்து நடக்கும் சூழ்நிலை உள்ளது என்றும்,  பெற்றோர்களிடம் மாணவர்கள் தங்களது ஆசிரியர்களை பற்றி தவறாக கூறி பெற்றோர் அடியாட்களை ஏவி ஆசிரியர்களை தாக்கும் சூழ்நிலை உள்ளது என்றும் வைகோ தெரிவித்துள்ளார். .

வேலூர் பள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் வேதனை அளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

சரி.....


இவையெல்லாம் வைகோ எங்கே கூறினார் என்று நீங்கள் வினா எழுப்புவது புரிகிறது.

காவிரியின் குறுக்கே கர்நாடகா அரசு தடுப்பணை கட்டும் செயலை கண்டித்தும் டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை தடுத்திட வேண்டியும் தமிழகத்திலிருந்து மதுவை ஒழிக்க வேண்டியும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, அய்யம்பேட்டை மதகடி பஜாரில் கடந்த 18.12.2014 அன்று  மக்களோடு கலந்துரையாடினார்.

அப்போது பேசியபோதுதான் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மதுவுக்கு எதிராக வைகோவின் போராட்டத்திற்கு நமது ஆதரவு எப்போதும் உண்டு.

மதுவுக்கு எதிரான அவரது பணி தொடரட்டும்.

தமிழகத்தில் இருந்து மது ஒழியட்டும்....

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
=====================

Wednesday, December 3, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்....! (103)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்....!"  நாள் - 103

தமிழகத்தில் ஏன் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கூடாது? 

சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி......!

தமிழகத்தில் பெருகியுள்ள டாஸ்மாக் கடைகளால், மதுப்பிரியர்கள் அதிகரித்து வருகின்றனர்.

தமிழகத்தின் இளம் சமுதாயம் மதுவுக்கு அடிமையாகி வருகிறது.

இதனால், சமூகம் சீரழிந்து வருகிறது.

சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.

இளம் பெண்கள் விதவைகளாகும் நிலை உருவாகி வருகிறது.

குடும்பங்கள் வறுமையில் தவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றன.

எல்லாவற்றிற்கும் மூலக்காரணம் மதுதான்.

இந்நிலையில்,  2011ல் நிகழ்ந்த விபத்துக்கான இழப்பீடு குறித்து மணிவிழி மற்றும் பாலு என்பவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தனர்.

இந்த வழக்கை கடந்த (03.12.2014) அன்று விசாரித்து உயர்நீதிமன்றம், மதுவால் அதிக விபத்துகள் ஏற்படுவதால் தமிழகத்தில் ஏன் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கூடாது என்று கேள்வி எழுப்பியுள்ளது.


மேலும், மோட்டார் வாகன மேல்முறையீட்டு வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இந்த கேள்விக்கு பதில் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், தமிழகத்தில் குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதால் அதிக அளவில் விபத்து ஏற்படுகிறது.

டஸ்மாக் கடை மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி வருமானம்  கிடைகிறது.

தமிழக அரசு, வேறு வழிகளில் வருவாயை பெருக்க ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது? என்றும் நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார்.

இது குறித்து விரிவான பதிலை டிசம்பர் 12ம் தேதிக்குள்  தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் அதிகளவில் விபத்துக்கள் ஏற்படுகின்றன.


டாஸ்மாக் கடைகள் மூலம் கிடைக்கும் வருமானத்தைவிட, வேறு வழிகளில் வருவாயை பெருக்க ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது.

இதுதான் சென்னை உயர்நீதிமன்றத்தின் கேள்வி.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு திறந்த மனதுடன் ஆய்வு செய்து மக்களின் நலனுக்காக மதுக்கடைகளை மூட உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கேரள அரசின் வழியில், தமிழகத்தில் படிப்படியாக மதுக்கடைகளை மூடி, பிறகு நிரந்தரமாக மது கடைகளுக்கு மூடுவிழா நடத்த வேண்டும்.

இதுதான், பெண்களின் எதிர்பார்ப்பு....

சமூகத்தில் அக்கறை உள்ளவர்களின் வேண்டுகோள்..விருப்பம்....

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================