Sunday, January 26, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்.....! (54)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....!"

நாள் - 54

இரவில் வீட்டுக்குள் புகும் குடிமகன்கள்: அச்சத்தில் மக்கள்......!

குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை இருப்பதால் இரவு நேரங்களில் பலர் போதையில் அத்துமீறி வீடுகளுக்குள் நுழைவதாகவும்,  இதனால் அச்சத்துடனே வசிப்பதாகவும்  சென்னை புஷ்பா நகர் பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகரில் சுமார் 4 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். குடியிருப்பு, கோயில், பள்ளிகள் உள்ள இடத்தில் மதுபானக் கடை அமைக்கக் கூடாது என்று அரசு விதிமுறை உள்ளது.

ஆனால், புஷ்பா நகரின் எதிரில் குளக்கரை சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது.

அங்கிருந்து 100 மீட்டர் தொலைவில் கருமாரியம்மன் கோயில் மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளன.


இந்த டாஸ்மாக் கடை குறித்து  புஷ்பா நகரைச் சேர்ந்த சூர்யா கூறுகையில், ‘‘சாலையிலேயே குடித்துவிட்டு சண்டை போடுகின்றனர். இதனால், வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை. அருகில் இருக்கும் கடைகளுக்குக் கூட போக முடிவதில்லை. பெண்கள் மீது வேண்டுமென்றே விழுகிறார்கள்’’ என்று வேதனை தெரிவித்தார்.

இதேபோன்று, ‘‘தினமும் எங்கள் வீட்டு அருகில் அமர்ந்து மது அருந்துகிறார்கள். பலமுறை அவர்களுடன் சண்டை போட்டும் எந்தப் பயனும் இல்லை. இரவு நேரத்தில் சிலர் அத்துமீறி வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றனர். வீட்டு வாசலில் வாந்தி எடுப்பது, சிறுநீர் கழிப்பது போன்ற அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபடுகின்றனர்’’ என்று கோடீஸ்வரி என்பவர் தனது குமறலை வெளிப்படுத்தியுள்ளார்.


18 வயதுக்கு கீழ் உள்ளவர் களுக்கு மது வழங்கக்கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்தக் கடையில் வயது வித்தியாசம் இல்லாமல் மாணவர்களுக்கும் மது விற்கப்படுகிறது. சில மாணவர்கள், சீருடையிலேயே வந்து மது வாங்கிச் செல்வதாக அருண்குமார் என்பவர் தெரிவித்தார்.

‘‘மக்களுக்கு இடையூறாக இருக்கும் குளக்கரை டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் எனு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தோம். வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வரும் கடையை லீஸ் முடிந்தவுடன் அகற்றுவதாகத் தெரிவித்தனர். ஆனால், தற்போது லீஸை நீட்டித்து கடையை தொடர்ந்து நடத்துகின்றனர்’’ என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட நிர்வாகி மணி குற்றம் சாட்டியுள்ளார்.


இந்நிலையில் பெண்களுக்கும் மாணவர்களுக்கும் இடையூறாக இருக்கும் இந்த டாஸ்மாக் கடையை அகற்றாவிட்டால், போராட்டத்தில் ஈடுபடுவோம் என சென்னை புஷ்பா நகர் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை புஷ்பா நகரில் மட்டுமல்ல, மாநிலத்தின் பல பகுதிகளில் இருக்கும் டாஸ்மாக் கடைகள், சரியான விதிகளின்படி அமைக்கப்படவில்லை.

இதனால், பெண்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் நாள்தோறும் இன்னல்களை விலைக்கு வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

மதுவுக்கு எதிராக ஓர் போர்......! (53)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்......!"

 நாள் -  53

தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தும் வரை ம.தி.மு.க. போராடும்...!

வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் வைகோ பேச்சு......!!

காஞ்சீபுரம் மாவட்ட ம.தி.மு.க. மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் காஞ்சீபுரம் வணிகர் வீதியில் நடந்தது.

 கூட்டத்தில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசியதாவது:–

கடந்த 2010–ம் ஆண்டில் அண்ணா நூற்றாண்டு விழாவினை காஞ்சீபுரத்தில் நடத்தினோம். தற்போது மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்த வந்துள்ளேன்.

தற்போது மதுவினால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்வு பாதுகாக்கப்பட மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும்.


குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. ஆனால் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அதேபோன்று மதுவிலக்கு அமல்படுத்தும் வரை ம.தி.மு.க. போராடும்.

இவ்வாறு வைகோ பேசினார்.


மதுவிற்கு எதிராக போராடும் ஒருசில கட்சிகளில் ம.தி.மு.க.வும் அடங்கும்.

மதுவிற்கு எதிராக மாநிலம் முழுவதும் பாதை யாத்திரை சென்றவர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தும் வரை மதிமுக போராடும் எனறு வைகோ மீண்டும்  அறிவித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரது போராட்டம் வெல்லட்டும்.தமிழகம் மது இல்லாத மாநிலமாக மாறட்டும்....

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
=====================

Saturday, January 25, 2014

அன்பு பரிசு.......!

ஊடக பண்பாளருக்கு அன்பு பரிசு.......!


சென்னை திருவல்லிக்கேணியில் இருந்து மேற்கு மாம்பலத்திற்கு வீடு மாறி சென்ற ஊடக பண்பாளர் செந்தில் ராஜ்குமார் சிவலிங்கத்திற்கு என் வாழ்த்துக்கள்....

மாம்பலத்தில் உள்ள புதிய வீட்டில் எஸ்.ஆர்.கே. , அமைதி, மகிழ்ச்சி மற்றும் குதுகலத்துடன் வாழ வாழ்த்தியபோது எடுத்தப் புகைப்படங்கள் இவை....இந்த இனிய நேரத்தில் சக பத்திரிகையாளர் முருகேசன் அவர்களும் உடன் இருந்து எஸ்.ஆர்.கே. அவர்களை வாழ்த்தினார்.எஸ்.ஆர்.கே.யை வாழ்த்தியதுடன், தனிப்பட்ட முறையில் அன்பு பரிசாக திருக்குர்ஆனின் தமிழாக்கம் மற்றும் வேலூர் மாலை முரசு முன்னாள் ஆசிரியர் முஹம்மது மசூத் அவர்கள் எழுதிய சத்திய முழக்கம் ஆகிய நூல்களையும் வழங்கி மகிழ்ந்தேன்....
மற்றொரு புகைப்படம்....


முருகேசனுடன் சேர்ந்து மற்றொரு புகைப்படம்...


மீண்டும்  ஒரு புகைப்படம்....


ஊடக பண்பாளருக்கு அன்பு பரிசு வழங்கியது மகிழ்ச்சியை அளித்தது.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

Thursday, January 23, 2014

ஓர் இனிய நாள்......!


ஜி தொலைக்காட்சியில் (G Tv SPV) சம்பள பிரச்சினை வந்தபோது, முதலில் செய்தி பிரிவைச் சேர்ந்த ஆசிரியர் குழுவினர்தான் களம் இறங்கி போராடினர்.

இந்த போராட்டத்திற்கு பக்க பலமாக இருந்தது Madras Union of Journalist.

50 ஆண்டுகளாக இயங்கி வரும் சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின்  தற்போதைய செயலாளர் நண்பர் திரு.மோகன் அவர்கள் ஜி டி.வி. ஊழியர்களுக்கு ஆதரவாக பல்வேறு முயற்சிகளை, நடவடிக்கைகளை எடுத்ததன் மூலம், ஜி தொலைக்காட்சி நிர்வாகம் பணிந்தது.

ஊழியர்களுக்கு உடனடியாக மூன்று மாத சம்பளத்தை அளித்தது.

அதன்பிறகு, செய்தி பிரிவைச் சேர்ந்தவர்கள்,  ஜி தொலைக்காட்சியின் (G Tv SPV) போக்கு பிடிக்காமல் வெவ்வெறு நிறுவனங்களில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டனர்.

அவர்களில் இன்னும் நிறைய பேருக்கு ஜி தொலைக்காட்சி நிர்வாகம் சம்பள பாக்கி வைத்துள்ளது.

அது ஒருபுறம் இருக்க.. ஜி தொலைக்காட்சியின் சம்பள பிரச்சினை வந்தபோது, முதலில் ஊழியர்களுக்கு ஆதரவாக போராடிய திரு.மோகன் அவர்களுடன், மற்றும் சென்னை பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகளுடன்,  ஜி தொலைக்காட்சியின் முன்னாள் ஊழியர்கள் பலரும் புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆர்வம் கொண்டனர்.

திரு.மோகனுக்கு நாங்கள் ஏற்கனவே நன்றியை தெரிவித்துக் கொண்டாலும், சில சமயங்களில் வரலாறு முக்கியம் என்பதால், புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம், கட்டாயம் ஏற்பட்டது.

நீங்கள் இப்போது பார்ப்பது, அந்த புகைப்படங்கள்தான் இவை....மற்றொரு புகைப்படம்....


மற்றொரு புகைப்படம்....


நான்,  தனிப்பட்ட முறையில், திரு.மோகன் அவர்களுக்கு திருக்குர்ஆனின் தமிழ் மொழியாக்கம் மற்றும் மாலைமுரசு முன்னாள் ஆசிரியர் மசூத் அகமது எழுதிய சத்திய முழக்கம் ஆகிய நூல்களை வழங்கி மகிழ்ச்சி அடைந்தேன்.

அப்போது எடுத்த புகைப்படங்கள் இவை....


மற்றொரு புகைப்படம்....எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

Wednesday, January 22, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்....! ( 52)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்....!"

நாள் - 52மதுவுக்கு எதிராக பல எழுத்தாளர்கள், நல்ல கருத்துக்களை அவ்வப்போது எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

வேலூர் மாலை முரசு நாளிதழில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற சகோதரர் முஹம்மது மசூது அவர்கள், சத்திய முழக்கம் என்ற தனது நூலில் மதுவால் ஏற்படும் பாதிப்பு குறித்து மிக அழகாக உதாரணத்துடன் கட்டுரை எழுதி இருந்தார்.

2003ஆம் ஆண்டு வெளிவந்த அவரது சத்திய முழக்கம் என்ற நூலில் இருந்த அந்த கட்டுரையை உங்கள் முன் வைக்க ஆசைப்படுகிறேன்.

"குடி"  குடியை கெடுக்கும்....!
=========================

"நபியே ! மது மற்றும் சூதாட்டம் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறுவீராக: அவ்விரண்டிலும் பெருங்கேடு இருக்கிறது. அவற்றில் மக்களுக்கு சிறுபயன் இருக்கலாம். ஆனால் அவற்றினால் ஏற்படும் பாவம் பயனைவிட அதிகமானது.
                                              (திருக்குர்ஆன் 2:219)

மது மற்றும் சூதாட்டத்தின் வாயிலாக உங்களுக்கு இடையில் பகையையும் வெறுப்பையும் ஏற்படுத்தி இறைவனை நினைவு கூர்வதில் இருந்தும், தொழுகையில் இருந்தும் உங்களை தடுத்துவிடவே சைத்தான் விரும்புகிறான். இதற்கு பிறகாவது நீங்கள் இவற்றை தவிர்த்து கொள்வீராக.
                                             (திருக்குர்ஆன் 5:91)

அன்றைக்கு அரேபியர்கள் மது போதையில் மூழ்கி இருந்தார்கள். பெண்களும், சிறுவர்களும் கூட மது குடிப்பதில் ஆனந்தம் கண்டனர். போதை உச்சிக்கு ஏறினால், கவிதை கூட, அருவி கொட்டுவது போல சரளமாக வரும். அதில் தனி சுகமே கண்டு வந்தார்கள். ஆனால், இதன் பாதிப்பை உணர்ந்த நல்ல இதயம் படைத்த தோழர்கள், மது பழக்கம் பற்றி எங்களுக்கு விளக்கம் தேவை என்று நபிகள் நாயகத்திடம் கேட்டபடி இருந்தார்கள். அப்போதுதான், மதுவை, போதை பொருளை பன்படுத்த தடை விதித்து திருக்குர்ஆனில் அருள் வசனம் அருளப்பட்டது.


உடனே, மது பானம் தடை செய்யப்பட்டு விட்டது என்ற நற்செய்தியை மதினத்து வீதிகளில் நபி தோழர் ஒருவர் அறிவித்துக் கொண்டே சென்றார். அதைக் கேட்டதும் மது குடிப்பதில் ஈடுபட்ட அரேபியர்கள், அப்படியே நிறுத்திவிட்டனர். மது கிண்ணங்களையும் கலசங்களையும் தூக்கிப் போட்டு உடைத்தனர். இதனால் மதினா நகர வீதிகள் மது வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.

இறைகட்டளையை அந்த அளவு போற்றினார்கள்.

நபிகள் நாயகம் கட்டளையிட்டார்கள்.

"எந்த பொருளை அதிகளவு உட்கொண்டால் போதை உண்டாகுமோ, அதே பொருளை குறைந்த அளவில் உட்கொள்வதும் தடை செய்யப்படுகிறது."

மிகுந்த தீர்க்கத்தரிசனமான வாக்கு.

ஏனென்றால் முதலில் குடிப்பவர்கள் ஒரு அவுன்ஸ், 2 அவுன்ஸ் என்றுதான் குடிப்பார்கள். நாளா வட்டத்தில் பெருங்குடி மன்னர்களாக மாறிவிடுவார்கள். அதன்மூலம், அவனது குடும்பமே சீரழிந்து வறுமைக்கும் வேதனைக்கும் தள்ளப்பட்டுவிடும்.


இதற்கு,  உதாரணமாக உண்மையிலேயே நடந்த நிகழ்வு ஒன்றை நினைப்படுத்துகிறேன்.

கண்ணியமிக்க ஒரு குடும்பத்தின் தலைவருக்கு குடிப்பழக்கம் உண்டு. ஆனால், குறைந்த அளவுதான் குடிப்பார். சிறுவனாக இருந்த அவரது மகனுக்கு அடிக்கடி அவர் குடிக்கும் காட்சியை பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டது.

அவனுக்கும் உள்ளத்தில் ஒரு ஆசை துளிர்விட்டது. தகப்பனார் மீதி வைத்துவிட்டு செல்லும் மது பாட்டிலை எடுத்து லேசாக ருசி பார்த்தான். விளையாட்டாக கூட இருக்கலாம்.

இது தகப்பனார் கவனத்துக்கு செல்லவில்லை. ஆனால், அவன் வாலிபனாக வளர்ந்தபோது, குடி பழக்கமும் கூடவே வளர்ந்து பெருங்குடி மகனாக பிரபலமாகி விட்டான். இதை அறிந்து அதிர்ந்து போன தகப்பனார் குடி பழக்கதை அடியோடு விட்டு விட்டார். ஆனால், மகனால் முடியவில்லை. விளைவு...

ஒருநாள் குடிபோதையில் வீதியிலே மயங்கி விழுந்து கிடந்த அவரை 3 பேர் தூக்கி வீட்டில் கொண்டு வந்து சேர்த்தனர். போதை மயக்கம் தெளிந்ததும்தான் அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.


அவர் அணிந்து இருந்த தங்க சங்கிலி, மோதிரத்தை காணவில்லை. துடித்து எழுந்த அவர், ஆவேசமாக கத்தினார். இதோ என் நகையை மீட்டு வருகிறேன் என்று புயலாக கிளம்பிய அவர், வீட்டு முன் பகுதியில் இருந்த கிணற்றில் குதித்தார். இதை பார்த்து கூச்சல் போட்டப்படி ஓடி வந்த அவரது தாய், கிணற்றுக்குள் மகன் தத்தளித்தபடி பிணமாகி விட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் மனநிலை பாதித்து பைத்தியமானார்.

ஒரே மகன் மாண்டான், மனைவி புத்தி பேதலித்த நிலையில் தெரு தெருவாக ஓடினார். மகனே, மகனே என்று பாசத்துடன் அவர் போட்ட கூச்சல் உள்ளத்தை உருக்கியது.

ஒரு குடும்பத் தலைவரின் தீய பழக்கத்தால்,  மலர்ந்து சிரிக்க வேண்டிய மலர் மொட்டிலே கருகிறது.

செழித்து வளர வேண்டிய ஒரு குடும்பம் வேரோடு சாய்ந்தது.


குடிகார சகோதரர்களே, இஸ்லாம் ஏன் மதுவை தடை செய்தது என்பதை மாச்சரிய உணர்வு இல்லாமல் சிந்தித்து பாருங்கள்... உங்களுக்கு பாடமாக அமையும்...

சகோதரர் மசூது அவர்கள், தாம் கண்ட உண்மை சம்பவத்தை எழுது வடிவில் மிக அழகாக வரைந்து விட்டார்.

மேலே குறிப்பிட்ட உண்மை சம்பவத்தை படித்து உணர்ந்து மது பிரியர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதே நமது ஆவல்....

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

மதுவுக்கு எதிராக ஓர் போர்....! ( 51)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்....!"

நாள் - 51


என்னுடைய திரைப்படங்களில் டாஸ்மாக் காட்சிகள் இல்லை.....!

தமிழ் திரைப்பட இயக்குநர்  விக்ரமன் பெருமிதம்.....!!

புதுவசந்தம், பூவே உனக்காக, சூர்யவம்சம், வானத்தைப்போல உள்பட பல படங்களை டைரக்டு செய்தவர் இயக்குநர் விக்ரமன்.

சில வருட இடைவெளிக்குப்பின் அவர் டைரக்டு செய்திருக்கும் புதிய படம், நினைத்தது யாரோ.

இந்த படம் விரைவில் திரைக்கு வருவதையட்டி விக்ரமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.


அப்போது பேசிய அவர், தாம் இயக்குநராக அறிமுகமாகி 25 வருடங்கள் ஆகிவிட்டதாக தெரிவித்தார்.

தன்னுடைய படங்களில் ஆபாச காட்சிகளோ, இரட்டை அர்த்த வசனங்களோ இடம்பெறாது என்றார் விக்ரமன்.

இந்த படத்தையும் அதுபோல் குடும்பத்துடன் பார்க்கிற மாதிரி கண்ணியமாக இயக்கி இருப்பதாக கூறிய அவர்,  குறிப்பாக, டாஸ்மாக் காட்சிகள் படத்தில் வைக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.


படத்தை அனைத்து தரப்பினரும் பார்க்கும் வகையில் தணிக்கை குழுவினர், யு சான்றிதழ் கொடுத்து இருப்பதாக விக்ரமன் கூறினார்.

நினைத்தது யாரோ படத்தில், புதுமுகங்களை நடிக்க வைத்ததில், தமக்கு எந்த சிரமமும் இல்லை என்றும்,  இன்னும் சொல்லப்போனால், சவுகரியமாக இருந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

ரூ.100 கோடி கொடுத்தாலும், இனிமேல் பெரிய நடிகர்கள் பக்கம் போக வேண்டாம் என்று தோன்றுவதாக விக்ரமன் கூறினார்.


தன்னுடைய திரைப்படங்களில் மது குடிக்கும் காட்சிகள், டாஸ்மாக் காட்சிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளும் இயக்குநர் விக்ரமனுக்கு ஒரு பாராட்டு....

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

Sunday, January 19, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்.....! (50)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....!" 

நாள் - 50டாஸ்மாக் மதுபானக் கடைகளில் புத்தாண்டு மற்றும் பொங்கல் கொண்டாட்டங்களின்போது மட்டும் ரூ.600 கோடிக்கு மது விற்பனை......!

என்ன ஆச்சரியமாக இருக்கிறது....

நிச்சயம் இருக்காது.... ஏன் என்றால், தமிழகத்தில் மதுவின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது அனைவரும் அறிந்ததே...

ஆனால், பண்டிகை காலங்களில் குடும்பத்துடன் சந்தோஷமாக, மகிழ்ச்சியமாக இருக்க வேண்டியவர்கள், மதுக்கடைகளுக்கு சென்று தங்களின் வாழ்க்கை சிதைத்துக் கொள்வதுதான் வேதனை அளிக்கிறது.

பெரும்பாலானோர் குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாடி வரும் நிலையில், சிலர் மதுவை நாடிச் செல்லும் கவலை தரும் போக்கும் அதிகரித்து வருகிறது.


எப்போதாவது ஒரு முறை மது அருந்துவோர் கூட, தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் ஆகிய நாட்களில் மது குடிக்கும் போக்கு காணப்படுகிறது.

இந்த ஆண்டு புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்போது டாஸ்மாக் மதுக்கடைகளில் ரூ.250 கோடி அளவுக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

அதைத் தொடர்ந்து, பொங்கல் பண்டிகையின்போது ரூ.350 கோடி அளவுக்கு மது விற்பனையாகியுள்ளது.

கடந்த ஜனவரி 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.

அதற்கு முந்தைய இரு தினங்களில் ரூ.250 கோடிக்கு விற்பனை ஆனது. காணும் பொங்கல் தினத்தில் அதிகளவில் மது விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்டது.


‘குடி’மக்களில் பலர் டாஸ்மாக் கடைகளைத் தவிர்த்ததால் காணும் பொங்கல் அன்று ரூ.100 கோடி அளவுக்கு மட்டுமே விற்பனை ஆனது.

இது வழக்கமான வார விடுமுறை தின விற்பனையை விட சற்று அதிகம்.
.
மொத்தத்தில் இந்த புத்தாண்டு, பொங்கல் பண்டிகைக் காலத்தில் மட்டும் ரூ.600 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

கடந்த ஆண்டு புத்தாண்டு தினக் கொண்டாட்டங்களின்போது ரூ.200 கோடி அளவுக்கு மது விற்பனை ஆனது.

பொங்கல் பண்டிகையின்போது ரூ.300 கோடி வருமானம் கிடைத்து. இந்த ஆண்டு அதை விட ரூ.100 கோடி அதிகமாக மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன.


தமிழகத்தில், 6,838 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில், நாள்தோறும், அரசு நிர்ணயம் செய்துள்ள விலையில், சராசரியாக, 67 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாகின்றன.

'ஷாப்பிங் மால்'களில் அமோகம்:

உயர் வருவாய் பிரிவினருக்காக, சென்னையில், அல்சா மால், பீனிக்ஸ் மால், டென் ஸ்கொயர் மால், ரமீ மால், ஸ்பென்சர் பிளாசா ஆகிய,'ஷாப்பிங் மால்'களில், ஹைடெக் டாஸ்மாக் கடைகள் துவக்கப்பட்டுள்ளன. இந்த கடைகளில், காணும் பொங்கல் அன்று ஒரு நாளில் மட்டும், 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான, மதுபானங்கள் விற்பனையாகின.


புள்ளி விவரங்கள் அதிர்ச்சி அளிக்கிறது அல்லவா.....

மதுப்பிரியர்களும் அரசும் மனசு வைச்சால் மட்டுமே மதுவின் விற்பனையை குறைக்க முடியும்....

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

Saturday, January 18, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்......! (49)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்......!"

நாள் - 49குடி உயிரையும் உறவையும் கெடுக்கும்......!

தற்கொலை செய்த மதுரை காவலர் கடிதம்.......!!

மது பழக்கம் மனிதனை பாதாளத்திற்கு அழைத்துச் செல்லும் என்பது அனைவரும் அறிந்ததே...

இதற்கு பல உண்மை சம்பவங்கள் சாட்சிகளாக இருந்து வருகின்றன.

இதுபோன்ற ஒரு சம்பவம் மதுரையில் நடந்துள்ளது.

மதுரை மாவட்ட ஆயுதப்படை காவலர் கார்த்திக்ராஜா என்பவர், குடி உயிரையும், உறவையும் கெடுக்கும் என  கூறி கடிதம் எழுதி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள சர்வகுடியைச் சேர்ந்தவர் சித்திரைவேல் மகன் கார்த்திக்ராஜா.

மதுரை மாவட்ட ஆயுதப்படை காவலரான இவர், ஆயுதப்படை குடியிருப்பில் வசித்து வந்தார்.


கடந்த ஜனவரி 15ஆம் தேதி இரவு அதிகளவு தூக்க மாத்திரைகளை சாப்பிட்ட இவர், தற்கொலை செய்து கொள்ளப்போவதாக விளாங்குடியில் வசிக்கும் அவரது சகோதரிக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவர்கள் ஆயுதப்படை குடியிருப்புக்கு வந்து, மயங்கிய நிலையில் கிடந்த கார்த்திக்ராஜாவை மீட்டு, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி ஜனவரி 16ஆம் அதிகாலை கார்த்திக்ராஜா இறந்தார்.

தகவலறிந்த தல்லாகுளம் இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீஸார் கார்த்திக்ராஜாவின் வீட்டில் சோதனையிட்டபோது ஒரு கடிதம் சிக்கியது.


அதில், 'எனது சாவுக்கு யாரும் காரணமில்லை. குடி உறவையும், உயிரையும் கெடுக்கும். எனது முடிவு மற்றவர்களுக்கு பாடமாக இருக்கட்டும்' என எழுதியிருந்தார்.

ஆக, மது பழக்கம் உறவையும், உயிரையும் கெடுக்கும் என்பது காவலர் கார்த்திக் ராஜாவின் வாழ்க்கையின் மூலம் தெள்ளத் தெளிவாக தெரிய வருகிறது.

மதுப்பிரியர்கள் இதை உணர்ந்து கொண்டால் சரி....!

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

Saturday, January 11, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்.....! (48)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....!"

நாள் - 48

21 வயதுக்கு குறைந்தவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்று அனைத்து டாஸ்மாக் கடை பணியாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் பதிலளித்துள்ளது.

டாஸ்மாக் நிறுவனம் அளித்துள்ள இந்த பதில் குறித்து மது விற்பனைக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வரும் காந்தியவாதி சசிபெருமாள் கூறும் கருத்து என்ன தெரியுமா....


மது நாட்டுக்கும், வீட்டுக்கும், உயிருக்கும் கேடு என்று எழுதி வைத்துவிட்டுத்தான் தமிழகத்தில் மது விற்பனை செய்கிறார்கள்.

இவர்களுக்கு (அரசுக்கு) வருவாய்தான் முக்கியமே தவிர, மக்களின் உடல் நலன் பற்றி எவ்வித அக்கறையும் இல்லை.

இப்போது நீதிமன்றத்தில் வழக்கு வந்துள்ளது என்பதற்காக 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்பனை இல்லை என்று எழுதி வைக்கிறார்களே தவிர, உண்மையிலேயே 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்பனை செய்யமாட்டார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.


மக்கள் மீது உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், மது விற்பனையை முழுமையாக தடை செய்ய வேண்டும் என்றார் சசிபெருமாள்.

இதேபோன்று, உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள வழக்கறிஞர் கே.பாலு,  21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்பனை செய்யப்பட மாட்டாது என்று டாஸ்மாக் நிறுவனம் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது என்றும், ஆனால் இப்போதும் கூட பள்ளிச் சீருடையுடன் டாஸ்மாக் கடைகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கு மது விற்பனை செய்யப்படுகிறது என்றும் வேதனை தெரிவிக்கிறார்.


இது குறித்து நாங்கள் நீதிமன்றத்தின் கவனத்துக்கு எடுத்துச் செல்வோம் என்றும் வழக்கிறஞர் பாலு கூறியுள்ளார்.

21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்பனை செய்யப்பட மாட்டாது என்று அரசு கூறினாலும், அந்த விதிகள் கடைப்பிடிக்கப்படுவதில்லை என்பது நூற்றுக்கு நூறு உண்மை.

வழக்கறிஞர் பாலு கூறுவது ஏற்றுக் கொள்ளக் கூடிய உண்மை.

மதுவுக்கு எதிராக வழக்கறிஞர் பாலுவின் போராட்டம் வெல்ல எங்கள் ஆதரவு உண்டு.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

மதுவுக்கு எதிராக ஓர் போர்.....! (47)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....!"

நாள் - 47


புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது குடிவெறியில் துரத்திய மதுப்பிரியர்கள்....!

நடிகை பூனம் பாண்டே வேதனை........!!

இந்தி நடிகை பூனம் பாண்டே பெங்களூரில் நடைபெற்ற புத்தாண்டு பார்ட்டி ஒன்றில் நடனம் ஆடினார்

அப்போது தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை அவர் மிகவும் வேதனையுடன் கூறினார்.

அவருடைய வேதனையான அனுபவத்தை இப்போது படியுங்கள்....

பெங்களூர் ஓட்டல் ஒன்றில் புத்தாண்டி பார்ட்டில் ஆட கேட்டு கொண்டு நிறைய பணம் கொடுத்தார்கள்.

நான் ஆடத் தொடங்கியதும் ஏராளமான் ஆண்கள் குடிபோதையில் என்னை சுற்றி வட்டமிட்டு ஆடினர்.

ஆட்டம் முடிந்ததும்  சிலர் என்னிடம் அத்துமீறி நடந்து கொண்டனர்.

நான் அவர்கள் பிடியில் இருந்து தப்பித்து எனது அறைக்கு திரும்பினேன். இருந்தாலும் சிலர் குடி வெறியில் என்னை விடாமல்  துரத்தி வந்தனர்.

நான் தங்கி இருந்த அறைக்கும் துரத்தி வந்தனர். ஓட்டல் நிர்வாகத்தினரால் குடிகாரர்களை கட்டுபடுத்த முடியவில்லை. ஒரு வழியாக அவர்களிடம் இருந்து மீட்கப்பட்டேன்.


மற்ற நடிகைகளுக்கு ஒன்றை கூறிக்கொள்கிறேன்.

அதிக பணம் தருகிறார்கள் என்று பாதுகாப்பு இன்றி யாரும்  நடனம் ஆட செல்ல வேண்டாம். இவ்வாறு நடிகை பூனம் பாண்டே கூறியுள்ளார்.

மதுப்பிரியர்களால் நடிகை பூனம் பாண்டேக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் நமக்கு ஆச்சரியத்தை தவறில்லை.

நடனம் ஆடும் நடிகைக்கு இதுபோன்ற அனுபவம்தான் ஏற்படும்.

ஆனால், மதுவினால் ஒரு மனிதன் எப்படி மிருகமாக மாறுகிறான் என்பது நடிகை பூனம் பாண்டே பெற்ற அனுபவம் மூலம் தெள்ளத் தெளிவாக புரிந்துக் கொள்ள முடிகிறது.

இதேபோன்று, மற்றொரு நடிகை நித்யா மேனன் என்ன கூறுகிறார் தெரியுமா...


போதையுடன் அமர்ந்திருக்கும் ஆண்கள் மத்தியில் கோடி ரூபாய் கொடுத்தாலும் கவர்ச்சி நடனம் ஆட மாட்டேன் என்கிறார் நித்யா மேனன்.

அதற்கு அவர் கூறும் காரணம், போதையில் இருக்கும் ஆண்களின் பார்வை மிகவும் கொடூரமாக இருக்கும் என்றும், அதன்மூலம் பெண்களுக்கு எந்த பாதுகாப்பு கிடைக்காது என்றும் தெரிவிக்கிறார்.

ஆனால், திரைப்படத்துறையில் இருக்கும் இரண்டு பெண்கள், மதுவினால் ஆண்கள் எப்படி மிருகமாக நடந்துக் கொள்கிறார்கள் என்பதை தங்கள் அனுபவத்தின் மூலம் தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்கள்..

மதுவினால் ஏற்படும் பாதிப்புகள் ஏராளம். அதில் இதுவும் ஒன்று.....

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

Thursday, January 9, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்.....! (46)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....!"

நாள் - 46தமிழகம் முழுவதும் 4 நாட்கள் மதுக்கடைகள், பார்கள் அடைப்பு.....!

தமிழக அரசு அறிவிப்பு......!!

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.

ஆனால், இந்த கோரிக்கை அரசின் காதுகளில் இன்னும் விழவேயில்லை.


இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில்,
நபிகள் நாயகம் பிறந்த நாள் ஜனவரி 14-ந்தேதி (செவ்வாய்க்கிழமை), திருவள்ளுவர் தினம் ஜனவரி 15-ந்தேதி (புதன்கிழமை), வள்ளலார் நினைவுதினம் 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை). குடியரசு தினம் 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தினங்களை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனை சார்ந்த பார்கள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேபோன்று, எப்.எல்.2, உரிமம் கொண்ட கிளப்புகளை சார்ந்த பார்கள், எப்.எல்.3, உரிமம் கொண்ட ஹோட்டல்களை சேர்ந்த பார்கள் மற்றும் எப்.எல்.3 (ஏ), உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு இருக்க வேண்டும் என அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த 4 நாட்களில் மதுபானம் ஏதும் விற்பனை செய்யப்படமாட்டாது என்றும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த காலங்களில் ஒரே மாதத்தில் 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்படவில்லை என்பதும், டாஸ்மாக் கடைகளுக்கு இதுபோன்று 4 நாட்கள் விடுமுறை அளிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.


நான்கு நாட்கள் தொடர் விடுமுறை இருக்கட்டும்.....டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக இழுத்து மூட வேண்டும் என்பதுதானே மது இல்லாத வளமான நாட்டை காண விரும்பும் மக்களின் எதிர்பார்ப்பு....

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

மதுவுக்கு எதிராக ஓர் போர்.....! (45)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....!"

நாள் - 45


21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் கிடையாது.....!

அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் அறிவிப்பு பலகை......!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு விளக்கம்......!!!


சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சமூகநீதி பேரவையின் தலைவர் கே.பாலு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில்,  டாஸ்மாக் மது விற்பனை மூலம் தமிழக அரசு, பெருமளவு வருவாய் ஈட்டுகிறது.

கடந்த நிதியாண்டில் மட்டும் டாஸ்மாக் மது விற்பனையின் மூலம் ரூ.22 ஆயிரம் கோடி அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது.

ஆனால் இந்த மது விற்பனையின் காரணமாக சாலை விபத்துகள் அதிகம் நடக்கிறது. மதுகுடிப்பவர்களின் கல்லீரல் உள்ளிட்ட உடல் ரீதியான பாதிப்பு ஏற்படுகிறது. குடும்ப வன்முறை போன்ற பல சம்பவங்களும் நடக்கிறது.

அதேநேரம், தமிழ்நாடு மது சில்லரை விற்பனை விதி 11 ஏ-வின்படி 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது.ஆனால், இந்த உத்தரவை இதுவரை டாஸ்மாக் நிர்வாகம் அமல்படுத்தவில்லை. எனவே 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என்று உத்தரவிட வேண்டும்.

என வழக்கறிஞர் கே.பாலு கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வால், நீதிபதி எம்.சத்யநாராயணன் ஆகியோர் விசாரித்தனர். அப்போது, டாஸ்மாக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தாராபுரம் சவுண்டையா பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த பதில் மனுவில்,  21 வயதுக்கு குறைந்தவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்றும் அரசின் உத்தரவை தீவிரமாக அமல்படுத்தவேண்டும் என்றும் அனைத்து டாஸ்மாக் மதுக் கடை பணியாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், 21 வயதுக்கு குறைந்தவர்களுக்கு மது விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை தீவிரமாக கண்காணிக்கும்படி மாவட்ட டாஸ்மாக் மேலாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் சவுண்டையா கூறியுள்ளார்.


அதேபோல் 21 வயதுக்கு குறைந்தவர்களுக்கு மது விற்பனை இல்லை என்ற அறிவிப்பு பலகை அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் வைக்கவேண்டும் என்று அனைத்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றும்  பொதுமக்களுக்கு தெரியும் விதமாக, இந்த பலகையை கடைக்கு முன்பு வைக்கப்பட்டு வருகிறது என்றும் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

21 வயதுக்கு குறைந்தவர்களுக்கு மது விற்பனை இல்லை என்ற பலகை வைப்பதைவிட,
தமிழகத்தில் மது விற்பனையே இல்லை என்ற பலகை வைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்...

சமூக சிந்தனையாளர்களின் இந்த கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும் என்பது நமது கோரிக்கை..

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

Wednesday, January 8, 2014

மதுவுக்கு எதிரான ஓர் போர்....! (44)

"மதுவுக்கு எதிரான ஓர் (பிரச்சாரம்) போர்....!"

நாள் - 44

வீட்டில் உள்ளவர்கள் யாரும் மது குடித்தால் மதுவின் தீமையை மாணவர்கள்தான் எடுத்துச்சொல்லவேண்டும்....!

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா வேண்டுகோள்....!!

அவசரமான இந்த உலகில்.  இந்தியாவில் இளைஞர்கள் ஒரு மிகப்பெரிய சொத்தாக உள்ளனர்.

அந்த இளைஞர்கள் நோய் இன்றி ஆரோக்கியமாக வாழ்ந்தால்தான் வருங்கால இந்தியா பொருளாதாரத்தில் பெரிய வளர்ச்சியை அடையும் என்ற நோக்கத்தில் இளைஞர்களின் ஆரோக்கிய திருவிழா தொடக்கவிழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது.

விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா விழா மலரை வெளியிட்டார். அதை திட்டக்குழு துணை தலைவர் சாந்தா ஷீலா நாயர் பெற்றுக்கொண்டார்.


விழாவில் பேசிய நீதிபதி கே.என்.பாஷா, லஞ்சம் ஒழியவேண்டும் என்றும், அந்த கருத்து ஒவ்வொரு வீட்டில் இருந்தும் வரவேண்டும் என்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கூறியதாக தெரிவித்தார்.

அதுபோல மது என்ற அரக்கனை விரட்டி விடவேண்டும் என்ற உணர்வு ஒவ்வொரு வீட்டில் இருந்தும் வரவேண்டும் என்றார் நீதிபதி பாஷா.

எனவே மாணவர்களே உங்கள் வீட்டில் தந்தையோ அல்லது அண்ணனோ அல்லது குடும்பத்தில் யாராவது மது அருந்தும் பழக்கம் வைத்திருந்தாலோ அவர்களிடம் நீங்கள் அன்பாக மதுவின் தீமைகளை எடுத்துக்கூறுங்கள் என்று அவர் கேட்டுக் கொண்டார்.


அவர்களிடம் கைகூப்பி அன்புடன் வேண்டுகோள் விடுங்கள் என்றும் அவ்வாறு செய்தால் நிச்சயம் பலன்கிடைக்கும் என்றும் அறிவுரை வழங்கினார் நீதிபதி பாஷா.

அதுபோல புகை பிடிக்கும் பழக்கம் இருந்தாலும் அதன் தீமையை எடுத்துக்கூறி புகைப்பதை நிறுத்தும்படி சொல்லுங்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

புகை பிடிப்பவர்களுக்கு மட்டும் தீங்கு அல்ல. புகையை பக்கத்தில் இருந்து சுவாசிப்பவர்களுக்கும் தீங்கு விளைவிக்கும் என்றும் பாஷா வேதனை தெரிவித்தார்.

புகை பிடிப்பதனால் 40 வினாடிக்கு ஒருவன் இறந்து கொண்டிருக்கிறான் என்றும் ஒருவர் ஒரு சிகரெட் பிடித்தால் அவரது வாழ்நாளில் 5 நிமிடத்தை அவன் இழக்கிறான் என்றும் அவர் கூறினார்.


மது குடித்த உடன் அவனது நிலைமையை மறந்து விடுகிறான். மதுகுடிப்பதால் தான் அதிக விபத்துக்கள் ஏற்படுகிறது என்றும் நீதிபதி கே.என்.பாஷா தெரிவித்தார்.

நீதிபதி கே.என்.பாஷாவின் மாணவர் சமுதாயம் உள்வாங்கி செயல்பட வேண்டும் என்பது நமது வேண்டுகோள்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================