Wednesday, January 22, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்....! ( 52)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்....!"

நாள் - 52மதுவுக்கு எதிராக பல எழுத்தாளர்கள், நல்ல கருத்துக்களை அவ்வப்போது எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

வேலூர் மாலை முரசு நாளிதழில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற சகோதரர் முஹம்மது மசூது அவர்கள், சத்திய முழக்கம் என்ற தனது நூலில் மதுவால் ஏற்படும் பாதிப்பு குறித்து மிக அழகாக உதாரணத்துடன் கட்டுரை எழுதி இருந்தார்.

2003ஆம் ஆண்டு வெளிவந்த அவரது சத்திய முழக்கம் என்ற நூலில் இருந்த அந்த கட்டுரையை உங்கள் முன் வைக்க ஆசைப்படுகிறேன்.

"குடி"  குடியை கெடுக்கும்....!
=========================

"நபியே ! மது மற்றும் சூதாட்டம் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறுவீராக: அவ்விரண்டிலும் பெருங்கேடு இருக்கிறது. அவற்றில் மக்களுக்கு சிறுபயன் இருக்கலாம். ஆனால் அவற்றினால் ஏற்படும் பாவம் பயனைவிட அதிகமானது.
                                              (திருக்குர்ஆன் 2:219)

மது மற்றும் சூதாட்டத்தின் வாயிலாக உங்களுக்கு இடையில் பகையையும் வெறுப்பையும் ஏற்படுத்தி இறைவனை நினைவு கூர்வதில் இருந்தும், தொழுகையில் இருந்தும் உங்களை தடுத்துவிடவே சைத்தான் விரும்புகிறான். இதற்கு பிறகாவது நீங்கள் இவற்றை தவிர்த்து கொள்வீராக.
                                             (திருக்குர்ஆன் 5:91)

அன்றைக்கு அரேபியர்கள் மது போதையில் மூழ்கி இருந்தார்கள். பெண்களும், சிறுவர்களும் கூட மது குடிப்பதில் ஆனந்தம் கண்டனர். போதை உச்சிக்கு ஏறினால், கவிதை கூட, அருவி கொட்டுவது போல சரளமாக வரும். அதில் தனி சுகமே கண்டு வந்தார்கள். ஆனால், இதன் பாதிப்பை உணர்ந்த நல்ல இதயம் படைத்த தோழர்கள், மது பழக்கம் பற்றி எங்களுக்கு விளக்கம் தேவை என்று நபிகள் நாயகத்திடம் கேட்டபடி இருந்தார்கள். அப்போதுதான், மதுவை, போதை பொருளை பன்படுத்த தடை விதித்து திருக்குர்ஆனில் அருள் வசனம் அருளப்பட்டது.


உடனே, மது பானம் தடை செய்யப்பட்டு விட்டது என்ற நற்செய்தியை மதினத்து வீதிகளில் நபி தோழர் ஒருவர் அறிவித்துக் கொண்டே சென்றார். அதைக் கேட்டதும் மது குடிப்பதில் ஈடுபட்ட அரேபியர்கள், அப்படியே நிறுத்திவிட்டனர். மது கிண்ணங்களையும் கலசங்களையும் தூக்கிப் போட்டு உடைத்தனர். இதனால் மதினா நகர வீதிகள் மது வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.

இறைகட்டளையை அந்த அளவு போற்றினார்கள்.

நபிகள் நாயகம் கட்டளையிட்டார்கள்.

"எந்த பொருளை அதிகளவு உட்கொண்டால் போதை உண்டாகுமோ, அதே பொருளை குறைந்த அளவில் உட்கொள்வதும் தடை செய்யப்படுகிறது."

மிகுந்த தீர்க்கத்தரிசனமான வாக்கு.

ஏனென்றால் முதலில் குடிப்பவர்கள் ஒரு அவுன்ஸ், 2 அவுன்ஸ் என்றுதான் குடிப்பார்கள். நாளா வட்டத்தில் பெருங்குடி மன்னர்களாக மாறிவிடுவார்கள். அதன்மூலம், அவனது குடும்பமே சீரழிந்து வறுமைக்கும் வேதனைக்கும் தள்ளப்பட்டுவிடும்.


இதற்கு,  உதாரணமாக உண்மையிலேயே நடந்த நிகழ்வு ஒன்றை நினைப்படுத்துகிறேன்.

கண்ணியமிக்க ஒரு குடும்பத்தின் தலைவருக்கு குடிப்பழக்கம் உண்டு. ஆனால், குறைந்த அளவுதான் குடிப்பார். சிறுவனாக இருந்த அவரது மகனுக்கு அடிக்கடி அவர் குடிக்கும் காட்சியை பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டது.

அவனுக்கும் உள்ளத்தில் ஒரு ஆசை துளிர்விட்டது. தகப்பனார் மீதி வைத்துவிட்டு செல்லும் மது பாட்டிலை எடுத்து லேசாக ருசி பார்த்தான். விளையாட்டாக கூட இருக்கலாம்.

இது தகப்பனார் கவனத்துக்கு செல்லவில்லை. ஆனால், அவன் வாலிபனாக வளர்ந்தபோது, குடி பழக்கமும் கூடவே வளர்ந்து பெருங்குடி மகனாக பிரபலமாகி விட்டான். இதை அறிந்து அதிர்ந்து போன தகப்பனார் குடி பழக்கதை அடியோடு விட்டு விட்டார். ஆனால், மகனால் முடியவில்லை. விளைவு...

ஒருநாள் குடிபோதையில் வீதியிலே மயங்கி விழுந்து கிடந்த அவரை 3 பேர் தூக்கி வீட்டில் கொண்டு வந்து சேர்த்தனர். போதை மயக்கம் தெளிந்ததும்தான் அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.


அவர் அணிந்து இருந்த தங்க சங்கிலி, மோதிரத்தை காணவில்லை. துடித்து எழுந்த அவர், ஆவேசமாக கத்தினார். இதோ என் நகையை மீட்டு வருகிறேன் என்று புயலாக கிளம்பிய அவர், வீட்டு முன் பகுதியில் இருந்த கிணற்றில் குதித்தார். இதை பார்த்து கூச்சல் போட்டப்படி ஓடி வந்த அவரது தாய், கிணற்றுக்குள் மகன் தத்தளித்தபடி பிணமாகி விட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் மனநிலை பாதித்து பைத்தியமானார்.

ஒரே மகன் மாண்டான், மனைவி புத்தி பேதலித்த நிலையில் தெரு தெருவாக ஓடினார். மகனே, மகனே என்று பாசத்துடன் அவர் போட்ட கூச்சல் உள்ளத்தை உருக்கியது.

ஒரு குடும்பத் தலைவரின் தீய பழக்கத்தால்,  மலர்ந்து சிரிக்க வேண்டிய மலர் மொட்டிலே கருகிறது.

செழித்து வளர வேண்டிய ஒரு குடும்பம் வேரோடு சாய்ந்தது.


குடிகார சகோதரர்களே, இஸ்லாம் ஏன் மதுவை தடை செய்தது என்பதை மாச்சரிய உணர்வு இல்லாமல் சிந்தித்து பாருங்கள்... உங்களுக்கு பாடமாக அமையும்...

சகோதரர் மசூது அவர்கள், தாம் கண்ட உண்மை சம்பவத்தை எழுது வடிவில் மிக அழகாக வரைந்து விட்டார்.

மேலே குறிப்பிட்ட உண்மை சம்பவத்தை படித்து உணர்ந்து மது பிரியர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதே நமது ஆவல்....

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

No comments: