Saturday, November 30, 2013

மதுவுக்கு எதிராக ஓர் போர்..! (5)

" மதுவுக்கு எதிராக ஓர் ( பிரச்சாரம்) போர்.....! " நாள்: 5மதுக்கடைகளை மூடக் கோரி தமிழத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன...

குறிப்பாக, குடியிருப்பு பகுதிகள், வழிப்பாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள், மக்கள் அதிகமாக கூடும் சந்தை பகுதி ஆகிய இடங்களில், டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்க மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர்.

மதுக்கடைகளுக்கு எதிராக அண்மையில் நடைபெற்ற பல போராட்டங்களில் ஒருசில போராட்டங்கள் குறித்த தகவல்கள் இதோ உங்கள் பார்வைக்கு...

விழுப்புரம் அருகே குடியிருப்பு பகுதிக்குள் டாஸ்மாக் மதுபானக்கடையை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஏற்கனவே, ஒரு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.

இந்த கடைக்கே அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் வேளையில், வள்ளலார் நகர் பகுதியில் மேலும் ஒருகடையை டாஸ்மாக் நிறுவனம் திறந்துள்ளது.

இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் 30.11.2013 அன்று திறக்கப்பட்ட கடைக்கு பூட்டுப் போட்டு போராட்டம் நடத்தினார்கள்.

இதேபோன்று,  மதுவால் ஏற்படும் தீமைகளை விளக்கி ஏற்காடு தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் மதுரையை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி நந்தினியும், அவரது தந்தையும் துண்டுப் பிரச்சுரம் வினியோகம் செய்தனர்.

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த, இடைத்தேர்தலின்போது நோட்டோ பொத்தானை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், பிரச்சாரத்திற்கு போலீஸார் அனுமதி மறுத்ததால், மாணவி நந்தினியும், அவரது தந்தையும் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள்.

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் காயிதே மில்லத் நெடுஞ்சாலையில் உள்ள மதுபானக்கடையை அகற்றக் கோரி த.மு.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மதுக்கடையை இழுத்து மூடும் போராட்டம் என்ற பெயரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். பொதுமக்களும் ஆதரவு அளித்தனர்.

இதனால் அப்பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு அடைந்தது. பதற்றம் நிலவியதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இப்படி மதுக்கடைகளுக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெறும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களுக்கு பொதுமக்கள் பெரிதும் ஆதரவு அளித்து வருவது ஆறுதல் அளிக்கிறது...

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
=======================

மதுவுக்கு எதிராக ஓர் போர்..! (4)

" மதுவுக்கு எதிராக ஓர் ( பிரச்சாரம்) போர்.....! " - நாள்: 4


மதுபானக் காட்சிகள் கொண்ட படங்களுக்கு வரிவிலக்கு....!

அரசு மீது திரைப்பட இயக்குநர் சேரன் குற்றச்சாட்டு.....!!

தமிழ் திரைப்பட இயக்குநர்களில் மண்வாசனையுடன் அழுத்தமான படங்களைக் கொடுப்பவர் சேரன்..

மது குறித்தும் அந்த பழக்கத்திற்கு ஆளாகும் இளைஞர்கள் குறித்தும் இயக்குநர் சேரன் என்ன சொல்கிறார்....

" இளைஞர்கள் என்றாலே குடிப்பவர்கள், ஊச் சுற்றித் திரிபவர்கள், பெண் பிள்ளைகளோடு அலைகிறவர்கள் என்கிற பொதுப்புத்திதான் அனைவரிடமும் இருக்கிறது..

ஆனால், இப்படி இருக்கும் இளைஞர்கள் 10 சதவீதம் மட்டும்தான். 90 சதவீத மாணவர்கள், இளைஞர்கள் தங்களது எதிர்காலத்தைப் பற்றி அதிகம் சிந்திக்கிறவர்கள்..

வாழ்க்கையில் நமக்கான அடையாளத்தை விட்டுச் செல்ல வேண்டும் என்று நினைக்கிறவர்கள்...


இதற்காகத் தனது குடும்பத்தின் நிலையை உணர்ந்து செயல்படும் பெரும்பான்மையான நடுத்தட்டு மாணவர்களுக்குச் சரியான பாதை இதுதான் என்று தேர்ந்து கொள்ள முடியாமல் தடுமாறுகிறார்கள்..."

ஆக, சேரனின் கருத்துப்படி 90 சதவீத இளைஞர்கள் மதுவை விரும்பவில்லை....10 சதவீத இளைஞர்கள் மட்டும் மதுவை விரும்புகிறார்கள்...

ஆனால், அரசு, 90 சதவீத மக்களின், இளைஞர்களின் நலனில் அக்கறை செலுத்தாமல், 10 சதவீத இளைஞர்களின் விருப்பத்தை நிறைவேற்ற மதுக்கடைகளை திறந்து வைத்திருக்கிறது.

இது நியாயமா !


சமூகத்தில் உள்ள நல்ல உள்ளம் கொண்டவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்....

மேலும் ஒரு தகவலையும் தருகிறார் இயக்குநர் சேரன்...

அதாவது மதுபானக் காட்சிகள் கொண்ட படங்களுக்கு அரசு வரி விலக்கு கொடுப்பதாக கூறுகிறார் சேரன்...

இதோ,  படியுங்கள் அவரது கருத்தை....

" சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் ஒருமுறை போய் வாருங்கள்...

சாலையின் இருமருங்கிலும் இளநீர் கடைகளும் உண்டு.. டாஸ்மாக் மதுக்கடைகளும் உண்டு.

ஆனால், கூட்டம் எங்கே அதிகமாக நிற்கிறது... மதுக்கடைகளில்தானே..


இளநீர் இனிமையானது..ஆரோக்கியமானது...ஆனால், போதை எதில் இருக்கிறதோ அதற்குத்தானே முக்கியத்துவம் கொடுக்கிறோம் நாம்.

சினிமா மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன ?

இன்று நச்சுத்தன்மை கொண்ட படங்கள் அதிகரித்துவிட்டன.

மதுக்கடைக் காட்சிகள் கொண்டு படங்களுக்கு அரசு வரி விலக்கு கொடுக்கிறது..

அவர்களைப் பொறுத்தவரை இதுபோன்ற காட்சிகள் அவர்களது வியாபாரத்துக்கு உதவலாம் என்று நினைக்கிறார்கள் போலும்..."

ஆக, சேரனின் கருத்துப்படி, தற்போது நச்சுத்தன்மை கொண்ட திரைப்படங்கள்தான் அதிகம் வந்துக் கொண்டிருக்கின்றன...

மதுவை ஆதரிக்கும் படங்களுக்கு அரசும் ஆதரவு அளித்து வருகிறது...


என்ன அநியாயம் பாருங்கள்...

மதுவை ஒழிக்க வேண்டிய அரசு, மதுவுக்கு ஆதரவு கரம் நீட்டுகிறது...

எதிர்கால இளைஞர்களின் நலத்தைப் பற்றி சிறிதும் அக்கறை கொள்ளாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது...

இதையும் மீறி 90 சதவீத இளைஞர்கள் போதைக்கு அடிமையாகாமல் இருந்து கொண்டிருக்கிறார்கள்...


அவர்கள் மனம் மாறி, பாதை தடுமாறி போதையின் பக்கம், மதுப்பழக்கத்தின் பக்கம் போகாமல் தடுக்க வேண்டியது சமூகத்தின் கடமை....

இளைஞர்களின் நலன்களில் அக்கறை கொள்வோம்...

மதுவின் தீமை குறித்து இளைஞர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்...

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
=======================

மதுவுக்கு எதிராக ஓர் போர்...! (3)

" மதுவுக்கு எதிராக ஓர் ( பிரச்சாரம்) போர்.....! " - நாள்: 3


மது அருந்தினால் கற்பனை சிறகடித்து பறக்குமா....? புதிய சிந்தனை உருவாகுமா...?

உலக புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஒருவர் என்ன சொல்கிறார்.... வாருங்கள் பார்க்கலாம்...

மது அருந்தினால் நல்ல கற்பனை பிறக்கும்...

கவிஞர்களின் சிந்தனையில் புதிய புதிய வார்த்தைகள் வந்து விழும்....

கலைத்துறையில் உள்ளவர்கள், குறிப்பாக கவிஞர்கள், இசையமைப்பாளர்கள், எழுத்தாளர்கள் என பல்வேறு தரப்பினர் இடையே இந்த நம்பிக்கை இருந்து வருகிறது..

மது அருந்தினால் இசையமைப்பாளர்களுக்கு இசை ஞானம் கூடும்....

புதிய இசை பிறக்கும்...

என்ற மூட நம்பிக்கை நம்மில் பலருக்கு உண்டு...

ஏன்,  உலகம் முழுவதும் இசைத்துறையில் இருக்கும் கலைஞர்கள் பலர், இப்படிதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்...

அதனால் மது பழக்கத்திற்கு ஆளாகி, உடலை கெடுத்து, வாழ்க்கையையும் சீரழித்துக் கொள்கிறார்கள்...

ஆனால், உலக புகழ் பெற்ற நம்மூர் இசையமைப்பாளர், ஆஸ்கர் நாயகன், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்  என்ன சொல்கிறார் தெரியுமா...


மதுவுக்கும் இசைக்கும் சிறிதும் சம்பந்தம் இல்லை என்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்...

மது அருந்தினால் கற்பனை பிறக்கும்...புதிய இசை உருவாகும் என்பது ஓர் மாயை என்கிறார் அவர்...

அது பலரின் குருட்டு நம்பிக்கை என்பது ஏ.ஆர்.ரஹ்மானின் வாதம்...

பல இசையமைப்பாளர்கள் இந்த குருட்டு நம்பிக்கையில் இன்னும் இருந்துக் கொண்டிருக்கிறார்கள் என கூறும் ரஹ்மான், அதை தங்கள் தொழிலில் செயல்படுத்தியும் வருவதாக வேதனை தெரிவிக்கிறார்...

அவர்களை (மது பழக்கத்திற்கு அடிமையான இசையமைப்பாளர்களை) தாம் குறை கூற விரும்பவில்லை என கூறும் ரஹ்மான், அவர்களுக்கு என்ன பிரச்சினையோ என்றும் சொல்கிறார்...


இசை என்பது இறைவன் கொடுத்த வரம்....

இறைவன் மூலம் மனிதர்களின் கற்பனையில் பிறக்கும் ஓர் அற்புதம்...

அதன்மூலம் ஒருவரின் திறமை வெளிச்சத்திற்கு வருகிறது...

ஆனால், மதுவால் நல்ல இசையை உருவாக்கவே முடியாது என்றும் அடித்து சொல்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்...

மதுவின் தீமைகள் குறித்தும், அதன் பாதிப்புகள் குறித்தும் நன்றாகவே அறிந்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான்,  மது பழக்கத்திற்கு ஆளாகாமல், நல்ல இசையை, உலகம் போற்றும் இசையை இன்னும் தந்துக் கொண்டிருக்கிறார்...


அதன்மூலம், உலகத்தின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டிருக்கிறார்...

கோடிக்கணக்கான இதயங்களை கவர்ந்து கொண்டிருக்கிறார்...

மதுவினால் சில குடும்பங்கள் சீரழிந்து போனதை தாம் நேரில் பார்த்து வேதனை அடைந்ததாக ஏ.ஆர். ரஹ்மான் கூறியுள்ளார்....

ஆக, மது மனிதனின் திறமையை அதிகரிக்க செய்யாது என்பது உறுதி...

ஒருவர் உலகம் போற்றும் வல்லவராக மாற வேண்டுமானால், நிச்சயம் மது பழக்கத்திற்கு அடிமையாக கூடாது..

இது ஏ.ஆர்.ரஹ்மான் தரும் செய்தி....


சில ஆண்டுகளுக்கு முன்பு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட அவரது பேட்டியில் மதுவுக்கு எதிரான பல சுவையான தகவல்களை ரஹ்மான் கூறியிருந்தார்.

அந்த தகவல்கள்தான் நீங்கள் மேலே படித்தது...

அந்த பேட்டி தொடர்பான குறிப்பு கீழே உள்ளது...அதன்மூலம் அதை பார்த்து, கேட்டு உண்மையை அறிந்து கொள்ளலாம்.....

மது பழக்கத்திற்கு ஆளாகாமல் நல்ல வாழ்க்கையை வாழலாம்....

நிம்மதி பெறலாம்....மகிழ்ச்சி அடையலாம்...

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
=======================

http://www.youtube.com/watch?v=7W3fCOIjl3E

Thursday, November 28, 2013

மதுவுக்கு எதிராக ஓர் போர்...!

" மதுவுக்கு எதிராக ஓர் ( பிரச்சாரம்) போர்.....! " - நாள்: 2தொடர் மது பழக்கத்தால் ஆண்மை பறிபோகும்....! இளம் மதுப்பிரியர்களே....உஷார்....! அதிர்ச்சி தரும் ஓர் ரிப்போர்ட் இதோ.....மது உயிருக்கு கேடு, குடி குடியை கெடுக்கும் என மதுபாட்டில்களில் அச்சிடப்பட்டாலும், டிவி, ரேடியோ, பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்தாலும் மதுவின் உடும்புப் பிடியிலிருந்து குடிமகன்கள் விடுபட முடியாமல் அவதிப்படுகின்றனர். மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதில் அதிர்ச்சி என்னவென்றால் பள்ளி மாணவர்களும் மதுவின் பிடியில் சிக்கி சீரழிவது தான். தொலைக்காட்சி, சினிமாக்களில் மதுகுடிப்பது போன்ற காட்சிகள் வருவது இளைய தலைமுறையை பாதிக்கக்கூடும் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டிய போதிலும் அதுபோன்ற காட்சிகள் குறைந்தபாடில்லை. அவற்றின் தாக்கத்தால் சிறுவர்கள் கூட மது அரக்கனின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கின்றனர். கொலை, பாலியல் வன்கொடுமை போன்றவற்றிலும் ஈடுபடுகின்றனர். நட்பு வட்டத்தைக்கூட மதுப்பழக்கம்தான் பிணைக்கிறது என்ற தவறான எண்ணங்களும் பரப்பப்படுகின்றன. ஆனால் அது கூடாநட்பு என்பது நாளடைவில் தெரியவரும்போது மதுப்பழக்கம் சம்பந்தப்பட்ட நபரை அடிமையாக்கி இருக்கும்.கவலையை மறக்க, மகிழ்ச்சியாய் இருக்க மது உதவி புரிவதாக அதைக் கையில் எடுக்கும் மக்கள், பின்னர் அதன் பிடியில் இருந்து விடுபட முடியாமல் சிக்கி சீரழிந்து தங்கள் வாழ்க்கையையே இழக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். மது அருந்துவதால் உடல் சுறுசுறுப்பாகிறது. புத்துணர்வு ஏற்படுகிறது, குடித்தால்தான் சில வேலைகளை செய்ய முடிகிறது என்றெல்லாம் பேசும் குடிமகன்களுக்கு, அதில் ஏதும் ஊட்டச்சத்துகள் கிடையாது என்பது தெரிவதில்லை. மதுவில் உள்ள எத்தில் ஆல்கஹால் என்ற நச்சுப் பொருள் மிகவும் ஆபத்தானது. இது ரத்தத்தில் நேரடியாக கலந்து குடிப்பவரின் சிறுமூளையையும், நரம்பு மண்டலத்தையும் பாதிக்கிறது. இதன் விளைவாக உளறுதல், தடுமாற்றம் போன்றவை ஏற்பட்டு மூளையை சோர்வடைய செய்கிறது. பலமுள்ள இளைஞனுக்கு ஒரு அவுன்சு விஸ்கி கொடுத்தால் மூன்றில் ஒரு பங்கு பலம் குறைவதாக கூறுகிறது ஒரு ஆய்வு.
மது, உடலில் உள்ளே சென்றதும் பார்க்கும் பொருட்கள் எல்லாம் இரண்டாக தெரிவதால், பார்வை மங்குவதால் இடைவெளிகளை சரியாக கணிக்க முடியாமல் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. குடிக்க பணம் தராததால் குடும்ப சண்டைகள் ஏற்பட்டு உச்சகட்டமாக கொலைவரை சென்று விடுகிறது. கற்பழிப்பு, கொள்ளை போன்ற சமூக விரோத செயல்களுக்கும் அடிப்படை காரணமாக குடிப்பழக்கம் உள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார்.இது தொடர்பாக சமூக ஆர்வலர் கூறுகையில், குடி பழக்கத்தால் பெரும்பாலான இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது பெண்களும் மது அருந்துவது மாநகரங்களில் மட்டும் அல்லாமல் நகரங்களிலும் பரவி உள்ளது. இப்பழக்கம் கிராமம் வரை நீண்டால் நாட்டில் வளர்ச்சி பாதிக்கப்பட்டு அடுத்த சந்ததியினருக் கும் பாதிப்பை ஏற்படுத்தும். மாணவ விடுதியிலும் மது அருந்தும் பழக்கம் பரவி உள்ளது என்று வேதனையுடன் தெரிவித்தார்.
மத்திய அரசின் ஹோமியோபதி கவுன்சில் ஆலோசகர் டாக்டர் லெனின் கூறுகையில், மது குடித்து வருபவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு முதல் அறிகுறி வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னை. நினைவு, தடுமாற்றம், புரிந்து கொள்ள முடியாமை, ஆளுமைத்திறனை இழத்தல் போன்றவை ஏற்படும். காலப்போக்கில் ஆண்மை குறையும். இதனால் தம்பதியினரிடையே பாலியல் சிக்கல்களை உருவாக்கும். மனநோயும், தற்கொலை எண்ணமும் கூட அடிக்கடி தலைதூக்கும். தொண்டை புற்றுநோய் ஏற்படும். வயிற்றின் மிகப்பெரிய உறுப்பான கல்லீரலை சிதைக்கும். தொடர்ந்து ஒருவர் 5 வருடம் குடித்து வந்தால் உயிர் பலி நிச்சயம். மதுவால் எதிர்ப்பு சக்தி குறைந்து அம்மை போன்ற தொற்றுநோய்கள் எளிதில் வரும், என்றார்.


உலகில் மிகப்பெரிய அளவில் இளைஞர் சக்தியை கொண்ட நாடாக விளங்கி வரும் இந்தியாவில் மதுப்பழக்கம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. அரசே மதுக்கடைகளை நடத்துவது, பண்டிகை காலங்களில் விற்பனை இலக்கு நிர்ணயிப்பது என்பன போன்றவையும் சமூகத்தை தவறான பாதையில் வழிநடத்திச்செல்வதாக சமூக அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. எனவே மதுவில்லாத சமுதாயம் அமைக்க ஒவ்வொருவரும் சபதம் ஏற்க வேண்டும். அப்போதுதான் நாளைய சமுதாயம் வளமாக, நலமாக அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.நன்றி...தமிழ் முரசு நாளிதழ் (27.11.2013)

தொகுப்பு....எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
===============================

Wednesday, November 27, 2013

மதுவுக்கு எதிராக ஓர் போர்...!

" மதுவுக்கு எதிராக ஓர் ( பிரச்சாரம்) போர்.....! "  - நாள்: 1

அனைத்து தீமைகளின் ஆணி வேர் மது...

ஆனால், தமிழகத்தில் மது ஆறாக ஓடுகிறது...

இளம் தலைமுறை மெல்ல மெல்ல மதுப்பழக்கத்திற்கு ஆளாகி வருகிறது...

ஏன், இளம் பெண்களில் சிலர் மதுவை விரும்பி அருந்துகின்றனர்...

இப்படி, ஒரு சமூகம் சீர் கெட்டு போய் கொண்டே இருக்கிறது...

மதுவுக்கு எதிராக பல்வேறு தரப்பினர் போராட்டங்களை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்...

ஆனால், அரசு கண்டு கொள்வதாக தெரியவில்லை...

என் பங்கிற்கும் ஏதாவது செய்து வைக்க வேண்டும் என்ற ஆசை...

இனி வரும் நாட்களில் மதுவுக்கு எதிராக செய்திகள், கட்டுரைகள், நான் சந்தித்து அனுபவங்கள், மது பிரியர்களின் அட்டகாசங்கள், மது அருந்திவிட்டு வீதியில், சாலைகளில் கிடக்கும் மதுப்பிரியர்களின் புகைப்படங்கள்...

மதுவால் சீரழிந்த குடும்பங்கள்,

மது விற்பனையின் உச்சம் குறித்த தகவல்கள்...

இப்படி பல்வேறு தகவல்களை முகநூல் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என ஆசை...

என்னுடன் சேர்ந்து முகநூல் நண்பர்களும் மதுவுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்...

தங்கள் அனுபவங்கள், மதுவுக்கு எதிராக தங்களிடம் இருக்கும் தகவல்கள், புகைப்படங்கள், செய்திகள் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்...

சரி...

மதுவுக்கு எதிராக, முதல் படியாக தமிழக முதலமைச்சர் அம்மா அவர்களுக்கு ஒருசில வரிகளில் ஒர் கடிதம்...

மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்களுக்கு,

இறைவன் உங்கள் மீது சாந்தியும் சமாதானத்தையும் பொழிவானாக...

மதுவின் தீமைகள் குறித்து நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

தமிழகத்தில் தற்போது மது விற்பனை உச்சத்தை தொட்டு வருகிறது...

இளம் சமுதாயம் மதுப்பழகத்திற்கு மெல்ல மெல்ல அடிமையாகி வருகிறது...

குடும்பங்களில் குழப்பங்கள், அமைதி இழப்பு.... இப்படி பல பிரச்சினைகளுக்கு மது மூல காரணமாக இருந்து வருகிறது...

பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோர் முதலமைச்சர்களாக இருந்தபோது, மதுக் கடைகளை தமிழகத்தில் அனுமதிக்கவில்லை...

ஆனால், பிறகு வந்த ஆட்சியாளர்கள் ஏனோ மதுவை தாராளமயமாக்கி விட்டார்கள்...

அதன் காரணமாக, சமூகம் மெல்ல மெல்ல தனது வலிமையை இழந்து வருகிறது...


தமிழகத்தில் இருந்து மதுவை ஒழிக்க பலர் போராடிக் கொண்டிருக்கிறார்கள்...

தமிழகத்தில் இருந்து மதுவை ஒழிக்க துணிச்சலான உங்களால் மட்டும்தான் முடியும் என்பது எல்லோரின் கருத்து... ஏன் எதிர்பார்ப்பும் கூட...

பெண்களின் கண்ணீரை துடைக்க நீங்கள் முன்வர வேண்டும்...

சமூகத்தில் இளம் தலைமுறையினர் வீறுகொண்டு நடைபோட, மதுவை ஒழிக்க நீங்கள் முன்வர வேண்டும்...

தமிழகம் அமைதி பூங்காவனமாக மாற மதுவை ஒழிக்க நீங்கள் முன்வர வேண்டும்...

மதுவால் அதிகரித்து வரும் சாலை விபத்துக்களை தவிர்க்க ,மதுவை ஒழிக்க நீங்கள் முன்வர வேண்டும்...

கடைசியாக,

அரசியல் லாபத்திற்காக கூட இந்த முடிவை நீங்கள் எடுக்க வேண்டும்...

வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு உண்டு...

அதற்கு பெண்களின் வாக்குகள் அவசியம் தேவை...

மதுக்கடைகளை மூட உத்தரவு போடுங்கள்...வாக்குகள் உங்கள் கட்சிக்கு தானாக வந்து சேரும்...

மதுக்கடைகளை உடனே மூடுவது சாத்தியமில்லை என்று மட்டும் சொல்லி விடாதீர்கள்...

படிப்படியாக கூட மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்கலாம்..

மதுக்கடைகளை திறக்கும் நேரத்தை மாற்றி அமைக்கலாம்...அவை இயங்கும் நேரத்தை குறைக்கலாம்...

இப்படி பல படிகள் மூலமாக நிச்சயம் மதுக்கடைகளை மூடலாம்... தமிழகத்தில் இருந்து மதுவை ஒழிக்கலாம்...

சமூகத்தின் கோரிக்கையை பரிசீலனை செய்யுங்கள்...

வாழ்த்துக்கள்....

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

=========================

வெற்றிக்கு.....!

" வெற்றிக்கு தேவைப்படும் துணைக் காரணங்கள்.....!"இப்ராஹிம் பாய்...!

என் சகோதரர்கள் நடத்தி வந்த பீடி கம்பெனியில் பணிபுரிந்து ஊழியர்...

என் பள்ளி பருவத்தில், நான் கம்பெனிக்கு செல்லும்போது அவரை அடிக்கடி சந்திப்பது உண்டு...

குறிப்பாக, அதிகாலை நேரங்களில் செல்லும்போது, தினமணி நாளிதழை மிகவும் ஆர்வத்துடன் படித்துக் கொண்டிருப்பார் இப்ராஹிம் பாய்...

அவர் படித்து முடித்த பிறகுதான், தினமணியை நாங்கள் படிக்க வாய்ப்பு கிடைக்கும்...

அதற்காக மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்...

அதனால் சில நேரங்களில் இப்ராஹிம் பாய் மீது கோபம் ஏற்படும்...

கம்பெனிக்காக தினமணி நாளிதழை கடையில் இருந்து வாங்கி வரும் இப்ராஹிம் பாய் ஒவ்வொரு செய்தியின் ஆழத்திற்கு சென்று வருவார்...

தலையங்கம் முதல் விளையாட்டு செய்திகள் வரை ஒன்றை விட மாட்டார்...

பள்ளி பருவத்தில் எங்களுக்கு தினமணியில் வரும் சிறுகதைகள், துணுக்குகள் ஆகியவற்றை படிக்க ஆர்வம் இருக்கும்...

ஏன், சினிமா செய்திகள் பக்கமும் கவனம் செல்லும்...

ஆனால், இப்ராஹிம் பாய் வெகுநேரம் தினமணியை எடுத்துக் கொள்வதால், பொறுமை இழந்து நாங்கள் வீட்டிற்கு திரும்பி விடுவோம்...

இதனால், மறுநாள், பழைய செய்தித்தாளை எடுத்து படிக்க வேண்டிய நிலை எங்களுக்கு ஏற்படும்...


ஆனால், ஒரு விஷயம் மட்டும் இப்ராஹிம் பாய் எங்களுக்கு சொல்லித் தருவார்...

எந்த செய்திகளை அவசியம் படிக்க வேண்டும்...

அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு என்ன...தினமணி எப்படி தலையங்கம் தீட்டியுள்ளது..

வகுப்புவாத கட்சிகள் எவை...

இப்படி பல செய்திகள் குறித்து சிறு பாடம் நடத்துவார் இப்ராஹிம் பாய்...

அப்போதெல்லாம், அது எனக்கு பெரிதாக தென்படவில்லை...

ஆனால்,  இன்று பல்வேறு ஊடகங்களில் நான் பணிபுரிய வாய்ப்பு கிட்டியபோது, இப்ராஹிம் பாயின் நினைவுதான் அடிக்கடி வந்து செல்லும்...

என் வளர்ச்சிக்கு என் குடும்பம்,

என் தாய்,

என் சகோதரர்கள்

என் சகோதரிகள்

என பலர் காரணமாக இருக்கிறார்கள்...

ஏன், உறவினர்கள் கூட என் வளர்ச்சியில் அக்கறை கொண்டார்கள்...

அதனால் நான்,

மணிச்சுடர் நாளிதழ்,

சன் தொலைக்காட்சி,

மக்கள் தொலைக்காட்சி

ஜி தமிழ் தொலைக்காட்சி (சிறிது காலம்)

ஜி செய்தி தொலைக்காட்சி

இமயம் தொலைக்காட்சி (சிறிது காலம்)

ராஜ் தொலைக்காட்சி

என பல ஊடகங்களில் பணிபுரிந்துள்ளேன்...இவற்றிற்கு எல்லாம் காரணம் என்னுடைய உழைப்பு, என்னுடைய அறிவு, என்னுடைய திறமை என நான் ஒருபோதும் நினைத்தது இல்லை...

ஒரு முறை ஆனந்த விகடன் இதழில் கவிபேரரசு வைரமுத்து எழுதியிருந்தார்.

" ஒரு மரத்தின் பலம்
 மரத்தில் இல்லை..
 அது மண்ணைச் சார்ந்து,
 நீரைச் சார்ந்து,
 காற்றைச் சார்ந்து,
 வெளிச்சத்தைச் சார்ந்து,
 இருக்கிறது....
 மரம்,
 நானாக வளர்ந்தேன்
 என்று சொல்வது
 அறியாமை...
 எல்லா மனிதர்களின்
 வெற்றிக்கும்
 துணைக் காரணங்கள்
 தேவைப்படுகின்றன...
 எனக்குக் கிடைத்த
 துணைக் காரணங்கள்
 என்னைவிட
 வலிமையானவை
 என்பதால்
 நான் நிமிர்ந்து
 நிற்கிறேன்...
 அவர்களுக்கு
 நன்றி பாராட்டுவது
 என் கடமை....."

இவ்வாறு தனது வெற்றிக்கு காரணமானவர்கள் குறித்து கவிபேரரசு வைரமுத்து மிக அழகாக குறிப்பிட்டிருந்தார்.இதுபோன்றுதான், என்னுடைய வாழ்விலும் நான் தற்போது அடைந்திருக்கும் நிலைக்கு பலர் காரணமாக இருந்திருக்கிறார்கள்....இருக்கிறார்கள்...

என் வளர்ச்சிக்காக என்னை சுற்றியுள்ளவர்கள் செய்த தியாகங்கள் ஏராளம்...

அதில் ஒருவர்தான் இப்ராஹிம் பாய்...

எனக்காக அவர் ஒன்றும் பெரிதாக செய்துவிடவில்லை என நீங்கள் நினைக்கலாம்...

ஆனால், என்னுள் இருந்த ஊடக திறமையை வெளிச்சத்திற்கு வர அவரும் ஒரு காரணம் என்றால் அது மிகையாகாது...

செய்திகள் குறித்து ஒன்றும் அறியாத பள்ளி பருவத்தில், பல விஷயங்களை கூறியவர் இப்ராஹிம் பாய்...

அப்போது எனக்கு அது புரியாமல் இருந்திருக்கலாம்...

ஆனால், தற்போது நான் செய்தி ஊடகங்களில் நல்ல திறமையை வெளிப்படுத்துவதற்கு அவரும் ஒரு காரணம் என்பதை என்னால் மறுக்க முடியாது...

அதன் காரணமாகவேதான், இப்போது, டீம் ஒர்க் (ஒன்று கூடி குழுவாக பணிபுரிதல்)
மூலம் நல்ல பலனை பெறலாம் என உறுதியாக நம்பி அப்படியே பணிபுரிந்து வருகிறேன்.

என்னால்தான் அனைத்தும் என்ற நினைப்பு என் உள்ளத்தில் சிறிதும் ஏற்படுவதில்லை...

ஊடகமே ஒரு டீம் ஒர்க்தான்... அப்படி பணி புரிந்தால்தான் நல்ல வெற்றியை நல்ல ரிசல்ட்டை சுவைக்க முடியும்....

சிலர் நினைப்பதுபோன்று அல்லாமல், டீம் ஸ்பிரிட்டோடு பணிபுரிய என் பள்ளி பருவத்தில், ஒன்றும் அறியாத பருவத்தில் இப்ராஹிம் பாய் சொல்லிய பல செய்திகள் இன்று எனக்கு வழிகாட்டி கொண்டிருக்கின்றன...

திடீரென இப்ராஹிம் பாயின் நினைவு வந்தது....

எனவே, எழுதிவிட்டேன் சில வார்த்தைகளை...எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

==========================

திருமண வாழ்த்து...!

மக்கள் தொலைக்காட்சியில் தொழில் நுட்பப் பிரிவில் பணிபுரிபவர் நண்பர் கார்த்திக்... நல்ல உள்ளம் கொண்டவர்... சமீபத்தில் அவருக்கு திருமணம் இனிதாக நடந்து முடிந்தது.. ஆனால், பல சூழ்நிலைகளால் என்னால் அவரது திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை...

எனவே, கடந்த 26.11.2013 என்று கார்த்திக்கின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரை வாழ்த்தி மகிழ்ந்தேன்... அப்போது எடுத்த புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு...


கார்த்திக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்தியபோது எடுத்தப்படம்...


கார்த்திக்கின் அறிவு பசி தீர்க்க அண்ணலாரின் பழமொழிகள் அடங்கிய நூல் பரிசளிப்பு வழங்கப்பட்டபோது எடுத்தப்படம்...


இது மற்றொரு கோணத்தில் எடுத்தப் படம்...


கார்த்திக்கின் திருமண புகைப்பட ஆல்பம் பார்த்தபோது எடுத்தப்படம்...


மற்றொரு கோணத்தில்....


கார்த்திக்கின் அன்பு உபசரிப்பு...


புதுமண தம்பதிகளுடன்...மற்றொரு படம்...


மீண்டும் உபசரிப்பு....


கார்த்திக்கை நேரில் சந்தித்து வாழ்த்திய நாள் வாழ்க்கையில் மகிழ்ச்சி அளித்த நாள்...

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

===========================

Sunday, November 24, 2013

ஊடகப் பணியில் நான்....!


ஊடகப் பணியில் ஈடுபட்டு பல்வேறு அலுவலங்களில், தொலைக்காட்சி நிறுவனங்களில் பணிபுரிந்தபோது எடுத்தப் புகைப்படங்கள்
இனி நீங்கள் கண்டு ரசிக்கலாம்....மூத்த பத்திரிகையாளர்கள் சந்தானம், இளம்பரிதியுடன்.....


இளம் பத்திரிகையாளர்களுடன்....


மற்றொரு புகைப்படம்...செல்வநாயகம் மற்றும் இளம்பரிதியுடன்சந்தானம் மற்றும் பரிதியுடன் மற்றொரு புகைப்படம்திருக்குமரன் மற்றும் பரிதியுடன்பணியில் நான்மற்றொரு கோணத்தில்..... மும்மூரமாக செய்தியை உருவாக்கி கொண்டிருந்தபோது....ஊடக நண்பர்களுடன் மற்றொரு படம் 


மூத்த பத்திரிகையாளர் மைக்ல் ஜார்ஜ்வுடன்....


இதுவும் மைக்ல் ஜார்ஜ்வுடன் இருக்கும் புகைப்படம்தான்...


மூத்த பத்திரிகையாளர் ஸ்ரீதர் மற்றும் அவரது சகோதரர் முரளிதரனுடன்...மூத்த பத்திரிகையாளர் ஸ்ரீதருடன்...
நல்ல அனுபவங்கள், நல்ல நண்பர்கள், நல்ல ஊடக சகோதரர்கள்...

அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் நல்ல மகிழ்ச்சியை தரும்...

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

குறுஞ்செய்தி......!

" குறுஞ்செய்தி......! (SMS) "


இரவு பணி முடிந்து அலுவலகத்தில் இருந்து வழக்கம் போல, திருவல்லிக்கேணியில் இருக்கும் எனது அறைக்கு திரும்பிய நேரம் அது....

என் செல்பேசி திடீரென சிணுங்கியது...

செல்பேசியை கையில் எடுத்து பார்த்தபோது, நண்பர் கிரிஸ்டோபர் அனுப்பிய குறுஞ்செய்தி இருந்தது...

கிரிஸ்டோபர் அனுப்பிய செய்தி இதுதான்....

" இதுவரை
  நீங்கள்
  எனக்கு
  அனுப்பிய
  86
  குறுஞ்செய்திகளுக்கு
  என் அன்பு நன்றி....
  அவைகளை
  நான்
  சேமித்து
  வைத்துள்ளேன்..
  வாழ்க்கையின்
  பல
  சூழ்நிலைகளில்
  அவை
  எனக்கு
  நண்பனாக
  துணை நின்றது...
  மிக்க நன்றி...
  தொடரட்டும்
  உங்கள்
  பெருந் தொண்டு...."

கிரிஸ்டோபரின் வார்த்தைகளை படிக்கும்போது உண்மையிலேயே மனம் மகிழ்ச்சி அடைந்தது...


என்னுடைய நெருங்கிய நண்பர்களுக்கு நாள்தோறும் ஒரு பொன்மொழி அல்லது வாழ்க்கை தத்துவம் அல்லது, சிரிப்பு மொழி என ஏதாவது ஒரு குறுஞ்செய்தியை (SMS) செல்பேசி வழியாக அனுப்பும் பழக்கம் என்னிடம் உண்டு...

குரூப் எஸ்.எம்.எஸ். என்ற வகையில் அனுப்பாமல், ஒவ்வொரு நண்பருக்கும் தனித்தனியாக அனுப்பி வைப்பேன்...

அதன்மூலம், அந்த நண்பரின் முகம் என் மனத்திரை முன் வந்து செல்லும்...

அந்த நேரத்தில் நண்பர்களை நினைக்கும்போது, உள்ளத்தில் ஒருவித ஆனந்தம் பிறக்கும்...


நான் அனுப்பும் குறுஞ்செய்தியை படிக்கும் நண்பர்கள், என்னையும் ஒரு நிமிடம் நினைத்து பார்க்கும் நிலை உருவாகும்...

இதன்மூலம் நல்ல உறவு, நட்பு தொடரும்...

இது எனது ஆசை....

என்னுடைய ஆசை கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து நிறைவேறிக் கொண்டிருக்கிறது...

நான் பல ஊடகங்களில் பணிபுரிந்தாலும், அந்தந்த ஊடகங்களில் பணிபுரியும் நண்பர்களுடன் இப்போதும் எனக்கு நெருங்கிய தொடர்பு உண்டு...


அதற்கு முக்கிய காரணம் நான் அனுப்பும் குறுஞ்செய்தி என்றே கூறலாம்...

பல குறுஞ்செய்திகளை படித்து நண்பர்கள் உடனே என்னை அழைத்து பாராட்டுவது உண்டு...

அது மகிழ்ச்சி அளித்தாலும், அந்த நண்பர் சிறிது நேரம் என்னுடன் பேசும்போது, இருவரிடம் இருக்கும் உறவு, பாசம் மேலும் அதிகரிக்கும்...

இப்படிதான், கிரிஸ்டோபருக்கும் குறுஞ்செய்திகளை அனுப்பினேன்... அதனால் மகிழ்ச்சி அடைந்து அவர் எனக்கு அனுப்பிய செய்தி இப்போது என்னை உற்சாகப்படுத்தியுள்ளது...


எனினும்...

குறுஞ்செய்தி அனுப்பும்போது முக்கியமான ஒரு விஷயம் நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டும்...

நான் அதனை கண்டிப்பாக கடைப்பிடித்து வருகிறேன்...

அவசியம் இல்லாமல் அதிகாலை நேரங்களில் குறுஞ்செய்திகளை யாருக்கும் அனுப்புவதில்லை...

சமீபத்தில் திருமணம் முடித்த நண்பர்களுக்கு ஒரு மாதம் வரை குறுஞ்செய்தி அனுப்புவதில்லை... அதனால் அவர்களுக்கு என்னால் எந்த தொல்லையும் இருக்கக் கூடாது என்பதுதான் முக்கிய காரணம்...


துன்ப நேரங்களில் நண்பர்கள் இருந்தால், அந்த நேரத்தில் மகிழ்ச்சியான, சிரிப்பை வரவழைக்கும் சில ஜோக்குகளை கண்டிப்பாக அனுப்பி வைப்பதில்லை...

முடிந்தவரை, அந்த நண்பர்களின் துன்பங்களில் நேரில் பங்கேற்று ஆறுதல் கூற முயற்சி செய்வேன்...

பல நேரங்களில் நண்பர்களிடம் நேரடியாகவே கேட்டு விடுவேன்... என்னுடைய குறுஞ்செய்திகள் உங்களுக்கு தொல்லை கொடுகிறதா...அப்படி இருந்தால் சொல்லுங்கள்... குறுஞ்செய்திகளை அனுப்புவதை நிறுத்தி விடுகிறேன்...

இப்படி, நேரடியாக கேட்பதில் எனக்கு எந்த தயக்கமும் இருப்பது இல்லை...

தோழர்களுக்கு அனுப்பும் ஒருசில குறுஞ்செய்திகளை தோழிகளுக்கு கண்டிப்பாக அனுப்புவதில்லை...


இப்படி பல நெறிமுறைகளை குறுஞ்செய்திகளை அனுப்பும்போது நான் கடைப்பிடிப்பது வழக்கம்...

பல நேரங்களில் தவறி குறுஞ்செய்தி அனுப்பி விட்டால், அந்த தவறுக்காக உடனே மன்னிப்பு கேட்டு விடுவதும் உண்டு...அதை கவுரவக் குறைவாக நினைப்பதே இல்லை...

ஆக, குறுஞ்செய்தி அனுப்பும் பழக்கதால் பல நண்பர்களின் நட்பு இன்னும் தொடர்கிறது...

பலர் பல்வேறு ஊர்களில், பணிகளில் இருக்கிறார்கள்...

ஆனால், எஸ்.எம்.எஸ். என்ற குறுஞ்செய்திகள் எங்களை நாள்தோறும் இணைக்கிறது...


உள்ளங்கள் இணைகின்றன....

பல மதங்கள், பல நிறங்கள், பல மார்க்கங்கள்... பல சிந்தனைகள்.... பல தொழில்கள்...
பல கொள்கைகள்...

ஒவ்வொருவரும் அவரவர் கொள்கைகளில் உறுதியாக இருப்பவர்கள்...

ஆனால், எங்களை, ஒவ்வொரு நாளும் நான் அனுப்பும் எஸ்.எம்.எஸ்... என்ற குறுஞ்செய்தி நிச்சயமாக இணைத்துக் கொண்டிருக்கிறது....


உள்ளங்கள் இணையட்டும்....சகோதரத்துவம் தழைக்கட்டும்....

அதற்கு, எஸ்.எம்.எஸ். என்னும் குறுஞ்செய்தி துணையாக நிற்கட்டும்...


எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

====================