Thursday, November 28, 2013

மதுவுக்கு எதிராக ஓர் போர்...!

" மதுவுக்கு எதிராக ஓர் ( பிரச்சாரம்) போர்.....! " - நாள்: 2தொடர் மது பழக்கத்தால் ஆண்மை பறிபோகும்....! இளம் மதுப்பிரியர்களே....உஷார்....! அதிர்ச்சி தரும் ஓர் ரிப்போர்ட் இதோ.....மது உயிருக்கு கேடு, குடி குடியை கெடுக்கும் என மதுபாட்டில்களில் அச்சிடப்பட்டாலும், டிவி, ரேடியோ, பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்தாலும் மதுவின் உடும்புப் பிடியிலிருந்து குடிமகன்கள் விடுபட முடியாமல் அவதிப்படுகின்றனர். மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதில் அதிர்ச்சி என்னவென்றால் பள்ளி மாணவர்களும் மதுவின் பிடியில் சிக்கி சீரழிவது தான். தொலைக்காட்சி, சினிமாக்களில் மதுகுடிப்பது போன்ற காட்சிகள் வருவது இளைய தலைமுறையை பாதிக்கக்கூடும் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டிய போதிலும் அதுபோன்ற காட்சிகள் குறைந்தபாடில்லை. அவற்றின் தாக்கத்தால் சிறுவர்கள் கூட மது அரக்கனின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கின்றனர். கொலை, பாலியல் வன்கொடுமை போன்றவற்றிலும் ஈடுபடுகின்றனர். நட்பு வட்டத்தைக்கூட மதுப்பழக்கம்தான் பிணைக்கிறது என்ற தவறான எண்ணங்களும் பரப்பப்படுகின்றன. ஆனால் அது கூடாநட்பு என்பது நாளடைவில் தெரியவரும்போது மதுப்பழக்கம் சம்பந்தப்பட்ட நபரை அடிமையாக்கி இருக்கும்.கவலையை மறக்க, மகிழ்ச்சியாய் இருக்க மது உதவி புரிவதாக அதைக் கையில் எடுக்கும் மக்கள், பின்னர் அதன் பிடியில் இருந்து விடுபட முடியாமல் சிக்கி சீரழிந்து தங்கள் வாழ்க்கையையே இழக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். மது அருந்துவதால் உடல் சுறுசுறுப்பாகிறது. புத்துணர்வு ஏற்படுகிறது, குடித்தால்தான் சில வேலைகளை செய்ய முடிகிறது என்றெல்லாம் பேசும் குடிமகன்களுக்கு, அதில் ஏதும் ஊட்டச்சத்துகள் கிடையாது என்பது தெரிவதில்லை. மதுவில் உள்ள எத்தில் ஆல்கஹால் என்ற நச்சுப் பொருள் மிகவும் ஆபத்தானது. இது ரத்தத்தில் நேரடியாக கலந்து குடிப்பவரின் சிறுமூளையையும், நரம்பு மண்டலத்தையும் பாதிக்கிறது. இதன் விளைவாக உளறுதல், தடுமாற்றம் போன்றவை ஏற்பட்டு மூளையை சோர்வடைய செய்கிறது. பலமுள்ள இளைஞனுக்கு ஒரு அவுன்சு விஸ்கி கொடுத்தால் மூன்றில் ஒரு பங்கு பலம் குறைவதாக கூறுகிறது ஒரு ஆய்வு.
மது, உடலில் உள்ளே சென்றதும் பார்க்கும் பொருட்கள் எல்லாம் இரண்டாக தெரிவதால், பார்வை மங்குவதால் இடைவெளிகளை சரியாக கணிக்க முடியாமல் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. குடிக்க பணம் தராததால் குடும்ப சண்டைகள் ஏற்பட்டு உச்சகட்டமாக கொலைவரை சென்று விடுகிறது. கற்பழிப்பு, கொள்ளை போன்ற சமூக விரோத செயல்களுக்கும் அடிப்படை காரணமாக குடிப்பழக்கம் உள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார்.இது தொடர்பாக சமூக ஆர்வலர் கூறுகையில், குடி பழக்கத்தால் பெரும்பாலான இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது பெண்களும் மது அருந்துவது மாநகரங்களில் மட்டும் அல்லாமல் நகரங்களிலும் பரவி உள்ளது. இப்பழக்கம் கிராமம் வரை நீண்டால் நாட்டில் வளர்ச்சி பாதிக்கப்பட்டு அடுத்த சந்ததியினருக் கும் பாதிப்பை ஏற்படுத்தும். மாணவ விடுதியிலும் மது அருந்தும் பழக்கம் பரவி உள்ளது என்று வேதனையுடன் தெரிவித்தார்.
மத்திய அரசின் ஹோமியோபதி கவுன்சில் ஆலோசகர் டாக்டர் லெனின் கூறுகையில், மது குடித்து வருபவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு முதல் அறிகுறி வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னை. நினைவு, தடுமாற்றம், புரிந்து கொள்ள முடியாமை, ஆளுமைத்திறனை இழத்தல் போன்றவை ஏற்படும். காலப்போக்கில் ஆண்மை குறையும். இதனால் தம்பதியினரிடையே பாலியல் சிக்கல்களை உருவாக்கும். மனநோயும், தற்கொலை எண்ணமும் கூட அடிக்கடி தலைதூக்கும். தொண்டை புற்றுநோய் ஏற்படும். வயிற்றின் மிகப்பெரிய உறுப்பான கல்லீரலை சிதைக்கும். தொடர்ந்து ஒருவர் 5 வருடம் குடித்து வந்தால் உயிர் பலி நிச்சயம். மதுவால் எதிர்ப்பு சக்தி குறைந்து அம்மை போன்ற தொற்றுநோய்கள் எளிதில் வரும், என்றார்.


உலகில் மிகப்பெரிய அளவில் இளைஞர் சக்தியை கொண்ட நாடாக விளங்கி வரும் இந்தியாவில் மதுப்பழக்கம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. அரசே மதுக்கடைகளை நடத்துவது, பண்டிகை காலங்களில் விற்பனை இலக்கு நிர்ணயிப்பது என்பன போன்றவையும் சமூகத்தை தவறான பாதையில் வழிநடத்திச்செல்வதாக சமூக அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. எனவே மதுவில்லாத சமுதாயம் அமைக்க ஒவ்வொருவரும் சபதம் ஏற்க வேண்டும். அப்போதுதான் நாளைய சமுதாயம் வளமாக, நலமாக அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.நன்றி...தமிழ் முரசு நாளிதழ் (27.11.2013)

தொகுப்பு....எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
===============================

No comments: