Wednesday, November 20, 2013

" ஹாட்ஸ் ஆப் விஜய் டி.வி..."


இசையில் கொஞ்சம் ஈடுபாடு உண்டு என்பதால், தொலைக்காட்சிகளில் வரும் இசை நிகழ்ச்சிகளை அவ்வப்போது நான் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து மகிழ்வேன்.

குறிப்பாக, அண்மைகாலமாக விஜய் டி.வி.யில் வரும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை நேரம் கிடைக்கும்போது பார்ப்பது வழக்கம்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் இளைஞர்கள் பெரும்பாலோர், இசையை முறைப்படி கற்று, அதில் தேர்ச்சி பெற்று பாடி அசத்துபவர்கள் என நினைப்பேன்.

அது உண்மையும் கூட...

ஒருமுறை நண்பர் கார்த்திகேயனுடன் பேசிக் கொண்டிருந்தபோது, சார் எல்லாம் வேஷம் சார் என்றார்...

பணக்காரர்கள், உயர்ஜாதி மக்கள் மட்டுமே இதுபோன்ற இசைப் போட்டிகளில் கலந்து கொள்கிறார்கள்....

என்னை போன்ற, உங்களை போன்ற எளிமையான குடும்பத்தில் இருந்து வருபவர்கள் யாரும் இந்த போட்டிகளின் ஆரம்பத்தில் கூட நெருங்க முடியாது.

நடுவர்களாக இருப்பவர்கள் கூட உயர்ஜாதியை சேர்ந்தவர்கள் என தனது ஆதங்கத்தை, குமறலை வெளிப்படுத்தினார் கார்த்திகேயன்...

அது உண்மையோ என நானும் நினைத்துக் கொண்டிருந்தேன்...
.


இதேபோன்று, மற்றொரு நண்பர் கிரிஸ்டோபர், தனது அனுபவத்தை கூறி, எல்லாம் மோடி சார் என்றார்...

எனவே, எனக்குள் ஒருவித சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது...

ஆனால், கடந்த ஆண்டு சூப்பர் சிங்கர் ஜுனியர் போட்டியில் கலந்து கொண்டு, இறுதியில் திருச்சியை சேர்ந்த சிறுவன் ஆஜீத் வெற்றி பெற்றார்.

இசையில் முழுமையான ஆர்வம் இல்லாத எளிய குடும்பத்தில் பிறந்து தனது ஆர்வத்தால், இசையை கற்றுக் கொண்டு, ஆஜீத் வெற்றி பெற்றபோது, நண்பர்களின் வாதம் என் உள்ளத்தில் இருந்து மெல்ல மெல்ல விலக ஆரம்பித்தது.

தற்போது, சூப்பர் சிங்கர் 4 நிகழ்ச்சி விஜய் டி.வி.யில் தொடர்ந்து ஒளிபரப்பப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்து அவ்வவ்போது பார்த்து வருகிறேன்...

பல அதிசயங்கள் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தின.

ஆட்டோ ஓட்டுனர், இசையில் ஆர்வம் கொண்ட பெரியவர் அழகேசன் போன்ற எளிய குடும்பதைத் சேர்ந்த பலர் போட்டியில் கலந்து கொண்டு பாடி அசத்தியது வியப்பில் ஆழ்த்தியது.

அதிலும்கூட கட்டிடத் தொழிலாளியின் ஏழை மகன் திவாகர், வசதி வாய்ப்புகள் எதுவும் இல்லாதபோதும், இசையில் ஆர்வம் கொண்டு அதற்காக தன்னுடைய உழைப்பை அர்ப்பணித்து டாப் 10 வரை வந்து இருப்பது மகிழ்ச்சி அடையச் செய்தது...

அவரது வாழ்க்கை குறித்து, கடந்த வாரத்தில் விஜய் டி.வி. ஒரு சிறிய குறிப்பை வெளியிட்டது.


திவாகர் கடந்த வந்த பாதை, தற்போது அவரது வாழ்க்கை நிலை ஆகியவற்றை விஷுவலாக பார்த்தபோது, என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது...

இரண்டு மூன்று நாட்கள் அதே சிந்தனையில் என் மனம் ஓடியது....

வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு ஏழ்மை ஒரு தடைக்கல் அல்ல என்பதை, திவாகர் மற்றவர்களுக்கு உணர்த்தி விட்டார்...

ஆர்வம் இருந்தால், கடின உழைப்பு இருந்தால் வாழ்க்கையில் எதையும் சாதிக்கலாம் என்பதை அழகாக நிருபித்துவிட்டார் திவாகர்...

அந்த நிகழ்ச்சியை பார்த்து அரங்கத்தில் இருந்த மற்ற பாடகர்கள் ஒருநிமிடம் என்ன செய்வது என்று அறியாமல் திகைத்து போய்விட்டனர்...

திவாகரின் திறமையை, உழைப்பை, ஆர்வத்தை பாராட்டிய பாடகர்கள், மற்ற இளைஞர்களுக்கு அவர் ஒரு ரோல் மாடல் என பாராட்டினர்...

இசையில் ஆர்வம் உள்ள இளைஞர்களுக்கு மட்டுமல்ல, பல்வேறு துறைகளில் ஆர்வம் உள்ள இளைஞர்களுக்கும் திவாகரின் வாழ்க்கையில் நிறைய படிப்பினைகள் உண்டு...

சாதனைகள் எல்லாம், பணக்காரர்களால் மட்டுமே செய்ய முடியும் என்பது அல்ல...

உலகில் பல சாதனைகளை, அற்புதங்களை எழை, எளிய மக்கள்தான் நிகழ்த்தியுள்ளனர்.

இதற்கு பல வரலாற்று சான்றுகள் உண்டு....

இன்றைய இளைஞர்கள், திவாகரின் உழைப்பை கண்டு மலைக்க வேண்டும்.. வியக்க வேண்டும்.....

தாங்கள் விரும்பும் துறையில் ஆர்வத்தை செலுத்தி முயற்சிக்க வேண்டும்...

வெற்றிக்கு ஏழ்மை ஒரு தடைக்கல் என நினைத்து ஓய்ந்துவிடக் கூடாது...



கடின உழைப்புக்கு, அர்ப்பணிப்புக்கு நிச்சயம் உலகில் ஒருநாள் அங்கீகாரம் கிடைத்தே தீரும்...

வாழ்க்கையில் முன்னேற பாதையை நோக்கிச் செல்லும்போது கிடைக்கும் அவமானங்கள், வலிகள், வேதனைகள், சிரமங்கள், பரிகாசங்கள், கேலிகள், கிண்டல்கள் ஆகியவற்றை தாங்கி கொள்ளும் வகையில் மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்...

இவற்றை மனத்தில் ஆழமாக உள்வாங்கிக் கொள்ள வேண்டும்...

இதற்கு திவாகர் சான்று....

திவாகர் சந்தித்த வேதனைகள், அவமானங்கள், கேலிகள், கிண்டல்கள் ஆகியவற்றின் பட்டியல் நீளும்..

எனினும் வாழ்க்கையில், தனது லட்சியத்தில் உறுதியாக நின்று திவாகர் வெற்றி கொடியை நாட்டியுள்ளார்...

வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் இளைஞர்களுக்கு திவாகர் ஒரு முன்னுதாரணம்....

திவாகர் போன்ற இளைஞர்களை அடையாளம் காட்டிய விஜய் டி.விக்கு
ஒரு ஹாட்ஸ் ஆப்...



எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

http://www.youtube.com/watch?v=N4sdcm9omkw

======================================

No comments: