Saturday, November 16, 2013

" ஹலோ சார்...... ஒரு நிமிடம்......! "

=================================


குளிர் காலத்தின் ஒரு மாலை நேரம் அது....

நான் தங்கியிருக்கும் திருவல்லிக்கேணிக்கு அருகிலேயே மெரினா கடற்கரை இருந்ததால், வழக்கம் போன்று கடற்கரைக்கு சென்று கண்ணகி சிலையில் அருகே இருந்த பகுதியில் அமர்ந்து இருந்தேன்.

குளிர் மற்றும் மழைக்காலம் என்பதால், கடற்கரையில் கூட்டம் அதிகமாக இருக்கவில்லை.

தனிமை...எனக்கு இனிமையை தந்தது.

என்னுள் சிந்தனைகள் உதயமாகி, சிறகடித்து பறந்து கொண்டிருந்தன.

அப்போது திடீரென, ஹலோ சார்.... ஒரு நிமிடம்.... என ஓர் குரல் கேட்டது...

திரும்பி பார்த்தேன்... யாரும் இல்லை....


எதோ பிரம்மையாக இருக்கும் என நினைத்து கொண்டு,  மீண்டும் வழக்கம் போன்று சிந்தனையில் ஆழ்ந்தேன்...

சிறிது நேரத்திற்கு பிறகு, மீண்டும் அதே குரல்...ஹலோ சார்.... ஒரு நிமிடம் என்றது...

மீண்டும் அக்கம் பக்கம் பார்த்தேன்... யாருமே இல்லை....

என்ன இது என குழப்பத்தில் ஆழ்ந்தபோது, ஹலோ நான்தான் உங்கள் இதயம் பேசுகிறேன்...

கொஞ்சம் என்னுடன் பேசுங்கள்...


நான் சொல்லும் சேதிகளை கொஞ்சம் உள்வாங்கி பதில் சொல்லுங்கள் என்றது அந்த குரல்...

சரி என்னப்பா சொல்லப்போகிறே என்றேன்....

உலகத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை கொஞ்சம் கவனித்து பார்க்கிறீர்களா...என்று கூறிய அந்த குரல், பின்னர் விரிவாக பேச ஆரம்பித்தது...


பிலிப்பைன்ஸ் நாட்டில் பயங்கர சூறாவளி வீசி கனழை பெய்து ஒரே நாளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டபர்கள் பலியாகி விட்டார்கள்...

பல லட்சம் பேர் வீடு, வாசல்களை இழந்து அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்...

இதுபோன்று, நம் நாட்டிலும் அடிக்கடி பல சம்பங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன...


ஹைதராபாத்தை நோக்கிச் சென்ற சொகுசு பேருந்து திடீரென வழியிலேயே தீ பிடித்து முற்றிலும் எரிந்து சாம்பலானது....

பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த நிலையிலேயே தீயில் சிக்கி உடல் கருகி உயிரிழந்தனர்...

மற்றொரு சம்பவமும் கர்நாடகா மாநிலத்தில் நடந்து, பேருந்தில் பயணம் செய்த 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்...


என்றது அந்த குரல்...

சரி....இப்போ இந்த சம்பவங்களுக்கும் என்னை அழைத்ததற்கும் என்ன  காரணம் என
என் இதய நண்பனிடம் கேட்டேன்....

தொடர்பு இருக்கிறது நண்பரே....

உலகத்தில் மனிதன் என்னமாய் ஆட்டம் போடுகின்றான்...கொஞ்சம் கவனித்து பாரு..

தன் ஆன்மாவிற்கு துரோகம் செய்து தனக்கு தானே செய்துக் கொள்ளும் அநியாயம் ஒருபுறம் இருந்தாலும், மனசாட்சிக்கு சிறிதும் அஞ்சாமல், கவலைப்படாமல், மற்றவர்களுக்கு மனிதன் செய்யும் அநீதிகள் எவ்வளவு நடந்து கொண்டிருக்கின்றன...


பணத்திற்காகவும், சொத்திற்காகவும் நடக்கும் அநியாயங்கள்தான் எத்தனை...

நாளிதழ்களை திறந்தால், அதுகுறித்த செய்திகள்தான் அதிகம் வந்துக் கொண்டிருக்கின்றன....

உற்றார் உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என யாராக இருந்தாலும், அவர்களை அழ வைக்கும் அளவுக்கு நம்மில் நிறைய பேர் நடந்துக் கொள்கிறார்கள்....

அற்ப உலக வாழ்விற்காக, சிறிது நாள் சுகம் அனுபவிப்பதற்காக மனிதர்கள் செய்யும் அட்டகாசங்கள்தான் எத்தனை...

பெற்ற தாய் தந்தையை, அண்ணன் தம்பிகளை, முதியோர் இல்லங்களுக்கு அனுப்பி விட்டு உல்லாச வாழ்க்கை வாழும் கூட்டம் நம்மில் அதிகரித்துள்ளது...

கல்வியில் ஆர்வம் உள்ள உறவினர்களுக்கு நிதியுதவி செய்ய மனம் இல்லை சிலருக்கு... ஆனால், கிரிக்கெட் போட்டியை காண பல ஆயிரம் ரூபாய் செலவு செய்கிறார்கள்...


நோய் தாக்கி அவதிப்படும் சொந்தங்களுக்கு உதவி செய்வதில்லை... ஆனால், நட்சத்திர ஹோட்டல்களில் டின்னர் சாப்பிட பல ஆயிரம் ரூபாய் செலவு செய்கிறார்கள் சிலர்...

அதைவிட கொடுமை, நோயாளி உறவினரை பார்க்க செல்வதுகூட கவுரவக் குறைவு என்று சிலர் நினைக்கிறார்கள்....

சொகுசு கார்களில் பயணம் செய்ய மனம் விரும்புகிறது சிலருக்கு, ஆனால், சொந்தங்களின் நலன்களில் அக்கறை செலுத்த அவர்களுக்கு ஆர்வம் இல்லை...

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்...

ஆனால், இயற்கை அடிக்கடி மனிதனை எச்சரிக்கிறது....பல நிகழ்வுகளை நடத்திக் காட்டி...

சுனாமி, சூறாவளி,,,பூகம்பம்.... பயங்கர விபத்து....கடும் நோய்..... என பல ரூபங்களில் ஆயிரக்கணக்கானோர், ஏன் லட்சக்கணக்கானோர் உலகில் இறந்து கொண்டேதான் இருக்கிறார்கள்...


ஆனால், மனிதன் இன்னும் மாறாமல் தன் போக்கிலேயே சென்றுக் கொண்டிருக்கிறான்...

ஏதோ நிம்மதியாக வாழ்ந்துவிட முடியும் என்று நினைக்கிறான்...

ஆனால், எந்த நேரத்தில் எதுவும் நடக்கலாம் என்பதை, உலகில் அடிக்கடி நிகழும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்களை கண்டும் காணாமல் இருந்துவிடுகின்றான்...

அதனால்தான், உலகில் பிரச்சினைகள் நாள்தோறும் தலைவிரித்து ஆடுகின்றன....

மனிதன் அமைதி இழந்து தவிக்கின்றான்...

ஆட்சிக்காகவும், அதிகாரத்திற்காகவும் ஒரு கூட்டம் அலைமோதும் போது, மற்றொரு கூட்டம் உலக இன்பங்களுக்காக சட்டவரம்புகளை மீறி செயல்பட்டு கொண்டிருக்கிறது...

இது நியாயமா.... கொஞ்சம் யோசித்து பதில் சொல்லு என்றது என் இதயம்....

நான் கொஞ்சம் யோசித்து கொண்டிருந்தபோதே, என்னிடம் பேசிய அந்த குரல் திடீரென காணாமல் போனது....

மெரினாவில் நிலவிய அமைதியான, சூழலில், மீண்டும் ஆழமான சிந்தனையில் சிறிது நேரம் சென்றது என் மனம்....

நீண்ட நேரத்திற்கு பிறகு.....திருவல்லிக்கேணியில் இருந்த என் அறைக்கு திரும்பினேன்...

இரவு வெகுநேரம் வரை எனக்கு ஏனோ உறக்கம் வரவில்லை.....


எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
=========================

No comments: