Tuesday, March 13, 2012

அச்சம் !



  • வேதனை வருமோ என அஞ்சும் மனிதன், தன்னுடைய  அச்சத்தால், வேதனையை ஏற்கனவே அனுபவிக்க தொடங்கி விடுகின்றான்.

                                                      -  மிஷேர் தெ மோன்த்தேன்


  • அச்சமில்லா உள்ளங்கள்தான், விரைவில் மணிமுடியை எட்ட முடியும்.
                                                       -  வில்லியம் ஷேக்ஸ்பியர்

  • குற்ற உணர்வையும், தீயச் செயல்களையும் அச்சம் சூழ்கிறது. அறவழி நடக்கும் இதயம், அச்சத்தை அறியாது.
                                                            - வில்லியம் ஹாவார்ட்


  • நோயைவிட அச்சம்தான், மனிதனை அதிகம்  கொல்லும். மிக விரைவில் மரணத்திற்கு அழைத்துச் செல்லும்.
                                                          -  ஜார்ஜ் ஹெர்பெர்ட்


  • ஏறுவதற்கு எனக்கு விருப்பம்தான். எனினும் இழறி வீழ்ந்து விடுவேனோ என்ற அச்சம் உண்டு.
                                                                  - தாமஸ் ஃபுல்லர்


  • அளவுக்கு மீறிய அச்சம், மனிதனை போராடவோ, ஓடவோ செய்யாது. கோழைத்தனமாய் வாழ்ந்து குலைநடுங்கிச் சாகத்தான் செய்யும்.
                                                               -  வில்லியம் ஷேக்ஸ்பியர்


  • ஒவ்வொரு நாளும் ஓர் அச்சத்தை வெளியேற்றாதவன், வாழ்க்கையின், படிப்பினையை உணராதவன்.
                                                                          -   எமர்ஸன்


அச்சம் குறித்து அறிஞர் பெருமக்களின் அருமையான கருத்துகள் உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன். படியுங்கள். பயன் பெறுங்கள்.
எஸ்.ஏ. அப்துல் அஜீஸ்

Sunday, March 11, 2012

சொன்னது யார் ?

  • நோயாளியைப் பார்க்க ஒரு மைல் தூரம் செல். இரண்டு பேர்களுக்கு       இடையே சமாதானம் செய்ய இரண்டு மைல் தூரம் செல். ஒரு நண்பனைக் காண மூன்று மைல் தூரம் செல்.
                                                  
                                                                                   -    அரேபியப் பழமொழி




  • நண்பனிடம் கடந்த காலத்தைப் பற்றிப் பேசாதீர்கள். உறவினர்களிடம் வசதி பற்றியும், வருமானம் பற்றியும் பேசாதீர்கள். உங்களைவிட வசதியாக இருப்பவர்களிடம் உங்கள் எதிர்காலம் குறித்து பேசாதீர்கள்.
                                                                                - கிரேக்கப் பழமொழி


  • நல்ல நண்பர்கள் உங்களுக்கு வேண்டுமா ?  முதலில் நீங்கள் நல்ல நண்பனாக இருக்கப் பழகிக் கொள்ளுங்கள்.    
                                                                                            - எமர்ஸன்

  • எந்தத் துறையிலும் நிச்சயம் வெற்றி பெறலாம். அதற்குத் தேவை மூன்று விஷயங்கள் மட்டுமே. அவை, உழைப்பு., சலியாத உழைப்பு., மற்றும் கவனமாக உழைப்பு.
                                                                                       - வெப்ஸ்டர்

  • தர்மமானது, இறைவனின் கோபத்தை தணிக்கும்  கெட்ட மரணத்தில் இருந்தும் காப்பாற்றும்.
                                                                                       - நபிகள் நாயகம் (ஸல்)

  • கல்லாத பெண், ஒரு களர் நிலம். அங்கே, புல் விளையுமேயன்றி, நல்ல புதல்வர்கள் விளைவதில்லை.
                                                                                            - பாரதியார்

  • பெரிய மீன், சின்ன மீனைத் தின்னலாம். ஆனால், சின்ன மீன், அதற்கும் சின்ன மீனைத் தின்றால், குற்றம் செய்கிறாய் என்று பெரிய மீன் தண்டிக்க வருகிறது. இதுதான் சமூகம்.
                                                                                               - புதுமைப்பித்தன்

  • நல்ல செயல்களைச் செய்ய நம்மைக் கண்டிப்பாகப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில், பழக்கம், இயற்கையைவிடப் பத்து மடங்கு சக்தி வாய்ந்தது.
                                                                                                          - வெலிங்டன்
  • மக்கள் தங்களது துயரங்களைத் தாங்களே தேடிக் கொள்வதற்கு அளிக்கப்படும் வாய்ப்பே, தேர்தல்.
                                                                                    - கவிஞர் கண்ணதாசன்

 
சிறைச்சாலைகளின் கம்பிகளின்
வழியாக மண் தரையை
ஏன் பார்க்க வேண்டும் ?
வானத்தில் உள்ள
நட்சத்திரங்களைப்
பார்க்கலாம் அல்லவா ?
                           - பாரசிகக் கவிஞரின் வார்த்தைகள்
  • மதுக் கடைகளை மூடினால் அரசுக்கு வருமானம் குறையும். ஆனால், மக்களின் கையில் வருமானம் மிஞ்சும். அவர்கள் கையில் மிஞ்சம் வருமானம், துணி மணியாய், நிலபுலனாய் மாறும்.
                                                                                      - மருத்துவர் ராமதாஸ்
  • நெஞ்சில் உறுதி இல்லாதவர்கள்தான் அரசு வேலையை தேடுவர். உறுதி உள்ள இளைஞர்கள் தொழில் துவங்குவர்.
                                                                - மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்



தொகுப்பு -  எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Saturday, March 10, 2012

இலட்சியம் !



புதுடெல்லி. குடியரசுத் தின நாள் விழா. எனக்கோ வயது 20.  கல்லூரியில் பி.காம். கடைசி ஆண்டு படித்துக் கொண்டிருந்த நேரம் அது. அப்போது, கல்லூரி மூலமாக, நண்பர்களுடன் சேர்ந்து டெல்லிக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டோம். நாங்கள் பயணம் சென்றபோது, குடியரசுத் தின நாள் விழா வந்து விடவே, டெல்லியில் நடைபெறும் குடியரசுத் தின ராணுவ அணிவகுப்பைக் காண மனம் ஆவல் கொண்டு துடித்தது. எனவே, நண்பர்களுடன் சேர்ந்து, ராணுவ வீரர்களின் அணிவகுப்பைக் காணச் சென்றிருந்தேன்.



அணிவகுப்பில், நம் ராணுவ வீரர்கள் வீரத்துடனும், உற்சாகத்துடனும், மிடுக்குடனும், கம்பீரமாக நடந்துச் சென்றதைப் பார்த்தபோது, உள்ளம் உண்மையிலேயே துள்ளிக் குதித்தது. இனம் புரியாத மகிழ்ச்சி பிறந்தது. மனதில் எதேதோ எண்ணங்கள் பிறந்தன. 






அலைஅலையாக ஆசைகள் உதிர்ந்தன. “நானும் ஒருநாள் இப்படி செல்ல வேண்டும். 
இராணுவத்தில் சேர்ந்து நம் நாட்டிற்காக உழைக்க வேண்டும். உண்மையான உழைப்பாளிகள் நம் இந்திய ராணுவ வீரர்கள்தான். என்ன ஒரு கட்டுப்பாடு. என்ன ஒரு ஒழுக்கம்” ஆக, நானும் இந்திய ராணுவத்தில் சேர முடிவு எடுத்துவிட்டேன்.




ஒரு வாரம் முழுவதும், இதே எண்ணம் என் மனதில் அடிக்கடி வந்து சென்றது. தூங்கும்போதும், நடக்கும்போது, அந்த எண்ணங்கள் எழுந்துக் கொண்டிருந்ததன. ஒவ்வொரு நிமிடமும் என் மனக் கண் முன் ராணுவ வீரர்களின் அணிவகுப்புக் காட்சிகள் தோன்றி, தோன்றி மறைந்தன.

இப்படிப்பட்ட நேரத்தில்தான், ஒருநாள் வாரப்பத்திரிகை ஒன்றை படித்துக் கொண்டிருந்தேன். அதில், பிரபல எழுத்தாளர் ஒருவரின் சிறுகதையும், அவருடைய பேட்டியும் பிரசுரமாகியிருந்தது. அந்தக் கதை இலக்கிய நயத்துடன், சிறந்த கருவை மையமாகக் கொண்டு எழுதப்பட்டிருந்தது. 

கதையைப் படித்தபொழுதும், அந்த எழுத்தாளரின் பேட்டியை வாசித்தபோதும், என் மனதில் மீண்டும் புதிய எண்ணங்கள் பிறந்தன. நாமும், இவரைப் போல பிரபல எழுத்தாளராக மாற வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் ?  எழுத்தாளர் பேட்டியில் கூறியது என் நினைவிற்கு வந்தது.

நிறைய படிக்க வேண்டும். வேறுபட்ட கருத்துக்களையும், எல்லா எழுத்தாளர்களின் படைப்புகளையும் மனம் ஒன்றிப் படிக்க வேண்டும். பிறகு நிறைய சிந்திக்க வேண்டும். ஒரு கருத்தை பல்வேறு கோணங்களில் வைத்துப் பார்க்க வேண்டும். அப்போதுதான், புதிது, புதிதாக சிந்தனைகள் தோன்றும். அப்படி தோன்றியவைகளை எழுத்தில் வடிக்க வேண்டும். அதை பலமுறை படித்து, நாமே, சுயவிமர்சனம் செய்து பார்க்க வேண்டும். பிறகு நமக்கு, நம்முடைய எழுத்துக்கள் உண்மையாகவே பிடித்திருந்தால், அதைப் பத்திரிகைகளுக்கு அனுப்பலாம். அவர்கள் நிச்சயம் நம்மை அங்கீகரிப்பார்கள்.

என்ன அழகான வார்த்தைகள். ஆழமாக ஒரு நல்ல வழியை கூறியிருக்கிறார் பிரபல எழுத்தாளர். நானும், உடனே, அதைப் பின்பற்றி நடக்க ஆரம்பித்தேன். வாடகை நூலகத்திற்குச் சென்று என்னுடைய பெயரை பதிவு செய்து, புத்தகங்களை அள்ளி எடுத்து வீட்டு வர ஆரம்பித்தேன். இரவு வெகுநேரம், கண்விழித்து படிக்க ஆரம்பித்தேன். நிறைய குறிப்புகளை தனி நோட்டில் எழுதியும் வைத்தேன். நானும் எழுத்தாளனாக மாற வேண்டும் அல்லவா. இப்படி பல நாட்கள் தொடர்ந்து செய்தேன். என்னுள் ஏதோ, ஒரு புதிய எழுச்சி பிறந்து கொண்டிருந்தது.

நானும் ஒரு நல்ல எழுத்தாளனாக மாறிவிட முடியும் என்று என் உள்மனம் என்னிடம் சொல்லியது. உண்மையிலேயே,  எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. நான் தொடர்ந்து எழுத ஆரம்பிதேன்.  இப்படி பல நாட்கள் சென்றன.

ஒருநாள் நண்பன் சேகரை பார்க்க, காட்பாடியில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றேன்.  


வீட்டில் அவருடைய தாயார் இருந்தார். என்னை அன்புடன் வரவேற்றார்.



“வாப்பா, எங்கே, இந்தப் பக்கம் ரொம்ப நாலாவே, ஆளையே பார்க்க முடியறதில்லே”

“அதான், இப்போ வந்திட்டேனே அம்மா, சேகர் இருக்கிறாரா?”

“ரூம்லே டி.வி. பார்த்துக் கொண்டிருக்கிறான். கிரிக்கெட் மாட்ச்ன்னா வீட்டை விட்டு வெளியே போறதே கிடையாது, டேய் சேகர், யார் வந்திருக்காங்க பாரு” என்று கூறி, என்னை சேகரின் அறைக்கு அனுப்பி வைத்தார், அவரது தாய்.


நான் வந்ததையும் கவனிக்காமல், சேகர், டி.வி.யில் மூழ்கி இருந்தான். சின்னத்திரையில், இந்திய-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி ஓடிக் கொண்டிருந்தது. நானும் சேகரின் பக்கத்தில் அமைதியாக அமர்ந்தேன். 


எனக்கும் கிரிக்கெட் பிடிக்கும். ஆனால், சேகரைப் போல அல்ல. கிரிக்கெட் பைத்தியம் என்று நாங்கள் சேகரை அழைப்பது வழக்கம். கிரிக்கெட் போட்டி, நடக்க ஆரம்பித்தால், அவ்வளவுதான், அவன் பைத்தியமாக மாறிவிடுவான். அவன் சிந்தனை எங்கும் செல்லாது.


கபில்தேவ், அழகாக, மிக நேர்த்தியாக, படு வேகமாக பந்து வீசிக் கொண்டிருந்தார். அவருடைய பந்து வீச்சு, எதிர் அணியினருக்கு பயமூட்டக் கூடியதாக இருந்தது. 


போட்டியின் ஒரே ஓவரில், அவர், மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை புரிந்தார்.


 அதைப் பார்த்தபோது, என் மனதில் மீண்டும் புதிய எண்ணங்கள் பிறந்தன. வழக்கம்போலதான்.

ஏன் நாமும், கிரிக்கெட் வீரனாக மாறக் கூடாது?



புகழ், பொருள், பணம், வெளிநாட்டு பயணங்கள். பத்திரிகைகளில் தினமும் நம் பெயர். உலகம் முழுவதும் நாமும், ஒரு பிரபல புள்ளியாக மாறலாம்.
ஜனாதிபதி, பிரதமர் என வி.வி.ஐ.பி.களை நேரில் சந்தித்து பேசலாம். முடிந்தால், தேர்தலில் நின்று நாடாளுமன்றத்திற்கோ, சட்டப்பேரவைக்கு சென்று மக்களுக்கு சேவை செய்யலாம்.




இப்படி மனம் சொல்லிக் கொண்டிருந்தது. நான் உற்சாகம் அடைந்தேன். மறுநாளே, சேகருடன் சேர்ந்து, கிரிக்கெட் விளையாட ஆரம்பிதேன். தினமும் கடுமையான பயிற்சிகள் செய்தேன். நிறைய உடற்பயிற்சிகளும் அதில் அடக்கம். களைப்பு தோன்றினாலும், விடாப்பிடியாக அனைத்தையும் செய்தேன். கிரிக்கெட் வீரனாக ஆக வேண்டும் அல்லவா.

என் ஆர்வத்திற்கு தீனி போட்டேன். கபில்தேவ் போல் நாமும் ஒருநாள் மாறுவோம். புகழ், பொருள் பெறுவோம் என மனதில் சொல்லிக் கொண்டேன்.

இப்படி பல நாட்கள் சென்றுக் கொண்டிருந்தன.





கல்லூரியில் வந்தது முத்தமிழ் விழா.  அதில் பல தமிழ் அறிஞர்கள், பேச்சாளர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அவர்களில் சிலர், மேடையில் தோன்றி, அட்டகாசமான, கம்பீரமான குரலில், அழகு தமிழில் பேசியபோது, அரங்கத்தில் கரவொலி பறந்தது. தமிழ் அறிஞர்களின் வாக்கு வன்மையையும், தமிழ்ப் புலமையையும், அதை அவர்கள், வெளிப்படுத்திய விதமும், என்னை மிகவும் கவர்ந்தன.

பேச்சு, ஒரு மனிதனை இந்த அளவிற்கு உயர்த்துமா ?

பேசிப்பேசியே நாட்டை பிடித்து, ஆண்டவர்கள் சரித்திரத்தில் ஏராளம்.

பேசத் தெரிந்தவன், வாழத் தெரிந்தவன் ஆகின்றான், என்று ஓர் அறிஞர் கூறியது, என் நினைவிற்கு வந்தது.


நானும், பேச்சாளனாக மாற உறுதி எடுத்துக் கொண்டேன். அதற்குரிய புத்தகங்களை வாசித்து, பயிற்சியும் செய்தேன்.

இப்படி,

இராணுவ வீரனாக,

எழுத்தாளனாக,

கிரிக்கெட் வீரனாக,

பேச்சாளனாக,

மற்றும் பல்வேறு துறைகளில் நிபுணத்துவத்தைப் பெற நான் ஆசைப்பட்டு, ஒன்றிலுமே முழு கவனம் செலுத்தாமல், அடிக்கடி, எண்ணங்களை மாற்றிக் கொண்டு, நேரத்தை வீணாக்கினேன்.

அதனால், எதிலும் என்னால் முழு வெற்றியை பெற முடியவில்லை.




நீங்களும் என்னைப் போன்று, இல்லாமல், எதாவது ஒரு துறையில் உங்களுடைய கவனத்தைச் செலுத்தி, அதில் வெற்றி பெற்று சாதனை புரியுங்கள். 





என்னுடைய அனுபவம் எனக்கு மட்டுமல்லாமல், உங்களுக்கும் ஒரு சிறந்த பாடம்.

இதை கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.
_________________________________________________________
சமரசம் மாதம் இருமுறை பத்திரிகையில், கடந்த 1990 ஆம் ஆண்டு மார்ச் 16-31 தேதியிட்ட இதழில்,  நான் எழுதிய  கட்டுரைதான் இது. 20 ஆண்டுகள் முடிந்த பிறகு, மீண்டும், ஒருமுறை படிக்க கூடிய வாய்ப்பு அண்மையில் கிடைத்தது. அதை உங்கள் பார்வைக்கும் வைத்து விட்டேன். 

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்