Sunday, April 27, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்.....! (78)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....! " 

நாள்  - 78




மது அருந்தினால் உடனடியாக இறப்பு ஏற்படாவிட்டாலும், படிப்படியாக என்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்று பார்ப்போம்.

மதுவின் பொதுவான மூலக்கூறு "எதில் ஆல்கஹால்".

பொதுவாக மதுவகைகளில் எவ்வளவு "எதில் ஆல்கஹால்"(Ethyl Alcohol) உள்ளது என்று கீழே பார்க்கவும்.
1. ரம்.... 50-60%
2. விஸ்கி, பிராந்தி, ஜின்---40-45%
3. ஷெர்ரி, போர்ட்---20%
4. ஒயின்---10-15%
5. பீர்--4-8 %
6. சாராயம்--40-50%

மது அருந்தியவுடன் ஏற்படும் விளைவுகளில் முதலானது; கிளர்ச்சி நிலை (excitement): தயக்கங்களிலிருந்து மெதுவாக விடுதலையும், சுதந்திரமான மனப்பான்மையும் ஏற்படும். ஆல்கஹால் அணுக்கள் மிக சிறியதாக இருப்பதால் நொதிகளின் உதவியுடன் செரித்து பின் இரத்தத்தில் கலக்க வேண்டியதில்லை. இவை நேரடியாக சவ்வூடுபரவல் மூலம் இரத்தத்தில் வெகுவிரைவில் கலக்கும். அதனால் தான் உடனடி போதை ஏற்படுகிறது.


மிகுந்த தன்னம்பிக்கையும், சுய கட்டுப்பாட்டை இழத்தலும் மெதுவாக ஏற்படும். இந்த நேரத்தில் தான் ரகசியங்களையும் மக்கள் உளர ஆரம்பிப்பார்கள். நல்ல மரியாதையும், பண்புகளும் மறக்க ஆரம்பிக்கும். ஆடை ஒழுங்காக உள்ளதா..??? என்று கவனம் இருக்காது.
இரத்தத்தில் 20 மி.கி. ஆல்கஹால் இருக்கும் போதே கூர்மையாக பார்க்கும் திறன் குறையும்.
இரத்தத்தில் 30 மில்லிகிராம் ஆல்கஹால் இருக்கும் போது; 1. தசை கட்டுப்பாடு இழக்கும். 2. தொடு உணர்வுகள் குறையும். 3. சிந்தனை, புரிந்துணர்வு, மதிப்பிடும் தன்மை ஆகியவை பாதிக்கப்படும்.

இரத்தத்தில் 50 மில்லிகிராமுக்கு மேல் போனால்; 1. வாய் வார்த்தைகள் குளறுதல், 2. நடையில் தள்ளாட்டம், 3. அதிக மயக்கம், 4. ஞாபக மறதி 5. அதிக குழப்பம் ஆகியவை ஏற்படும்.


பார்வைத்திறன் குறைவதால் பொருட்களை அதிக வெளிச்சத்தில் தான் பார்க்க முடியும். குறைந்த வெளிச்சத்திலுள்ள பொருட்கள் தெரியாது. கால நேர, தூர மதிப்பீடுகள் குறையும். அதனால் சாலையில் வரும் வாகனங்களின் வேகம், எவ்வளவு தூரத்தில் வருகிறது என்று சரியாக கணிக்கமுடியாது. இதனால் தான் மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் விபத்துகள் நிறைய ஏற்படுகின்றன.
மது அருந்தி சாலையில் நடப்போருக்கும் வாகனங்கள் வரும் தூரம், வேகம் ஆகியவை தெரியாது.

எனவே, நண்பர்களே...!!!
மதுவை தவிர்ப்போம்...
சுய சிந்தனை பெறுவோம்..

(படித்தது பயன் உள்ளது)

எஸ்..அப்துல் அஜீஸ்

=====================

Thursday, April 17, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்....!(77)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்....!" 

நாள் -  77



பாலத்திற்கு கீழ் போதையில் தூங்கிய இளைஞர்கள்....!

எழுப்பிய எஸ்.ஐக்கு அடி உதை.....!

வேப்பேரி குற்றப்பிரிவு காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் ராஜேந்திரன்.  இவர் 16.04.2014 இரவு புரசைவாக்கம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது டவுட்டன் பாலத்தின் கீழே இரு இளைஞர்கள் சந்தேகம்படும் படியாக படுத்து கிடந்தனராம்.

அவர்களிடம் ராஜேந்திரன் விசாரணை செய்தாராம்.

விசாரணையின்போது, அந்த இளைஞர்கள் ராஜேந்திரனிடம் தகராறு செய்தனராம்.

தகராறு முற்றவே அந்த இளைஞர்கள், ராஜேந்திரனை தாக்கினராம். இந்நிலையில் அந்தப் பகுதியில் ஜீப்பில் ரோந்து வந்த போலீஸôர், ராஜேந்திரன் தாக்கப்படுவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.


உடனே அவர்கள் அந்த இளைஞர்களை கைது செய்து, விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள், புரசைவாக்கம் கே.எம்.கார்டன் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித், பெரியமேடு கண்ணப்பர் திடல் பகுதியைச் சேர்ந்த பாளையம் என்பது தெரியவந்தது.

இவர்கள் இருவரும் பழைய துணி வியாபாரம் செய்து வருவதும், சம்பவத்தின்போது இருவரும் மதுபோதையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை தாக்கியிருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போதை மனிதனை எப்படி மிருகமாக மாற்றுகிறது என்பதற்கு இந்த சம்பவம் நல்ல உதாரணம் அல்லவா நண்பர்களே....

மதுவை ஒழிப்போம்...மனிதனாக வாழ முயற்சி செய்வோம்...

எஸ்..அப்துல் அஜீஸ்

=====================

Sunday, April 13, 2014

புற்றுநோய் மரணம் அதிகரிப்பு....!

இந்தியாவில் புற்றுநோய் மரணங்கள் அதிகரிப்பு....!

புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்....!!



இந்தியாவில் புற்றுநோயால் ஏற்படும் மரணங்கள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக லண்டனில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன் கிங் கல்லூரி பேராசிரியர்கள், மும்பை டாடா நினைவு புற்றுநோய் மருத்துவ மைய பேராசிரியர்கள் உதவியுடன் இந்த ஆய்வு அறிக்கையை தயாரித்துள்ளனர்.

அதில், புகை பிடித்தல், புற்றுநோயை தாமதமாக கண்டறிதல், சிகிச்சை பெற வசதி இல்லாமை போன்றவற்றால் இந்தியாவில் புற்றுநோய் மரணங்கள் அதிகரித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.


இந்தியாவில், ஆண்டுதோறும் புதிதாக 10 லட்சம் பேருக்கு புற்றுநோய் கண்டறியப்படுவதாகவும், சுமார் 6 லட்சம் முதல் 7 லட்சம் பேர் ஆண்டுதோறும் மரணம் அடைந்து வருவதாகவும், அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மரண எண்ணிக்கை 2035–ம் ஆண்டுக்குள் ஆண்டுதோறும் 12 லட்சமாக உயரும் என்றும் அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

95 சதவீத இந்திய மருத்துவ கல்லூரிகளில் விரிவான புற்றுநோய் மருத்துவ வசதி இல்லை என்றும், புற்றுநோய் சிகிச்சை வசதிகள் மற்ற நாடுகளைவிட பின்தங்கி இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி: தினந்தந்தி நாளிதழ் (14/04/2014)

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

Saturday, April 12, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்...! (76)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்...!"  

நாள் -  76


குடிக்க பணம் கொடுக்க மறுத்த மனைவியை அடித்து கொலை செய்த கணவன் கைது....!

சென்னை திருவான்மியூரில் பயங்கரம்....!!

மதுவால் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவது அனைவரும் அறிந்ததே....

பல ஆய்வுகள் அது உண்மைதான் என்று நிரூபித்து வருகின்றன.

பத்திரிகைகளில் நாள்தோறும் வரும் செய்திகளை படித்தால், மதுவால் ஏற்படும் பாதிப்புகள், குற்றச்செயல்கள் குறித்து நிறைய தகவல்கள் அதில் இடம் பிடிக்கின்றன...

அதுபோன்ற ஒரு செய்தி இதோ உங்கள் பார்வைக்கு....

சென்னை திருவான்மியூர் அடையாறு இந்திரா நகரை சேர்ந்தவர் மோகனரங்கம்... இவருடைய மனைவியின் பெயர் கற்பகவள்ளி.

இவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. குழந்தைகள் இல்லை.

மோகனரங்கம் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனால், கற்பகவள்ளி தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்காக வீட்டில், சமையல் செய்து கொடுத்து வந்தார்.

குறைந்த வருமானம் ஈட்டி வந்த மனைவி கற்பகவள்ளியிடம் மோகனரங்கம் மது குடிக்க அடிக்கடி பணம் கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் இருவரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 11.04.2014 அன்று கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மோகனரங்கம், கட்டிலின் ஒரு கால் கட்டையை உடைத்து கற்பகவள்ளியை தாக்கினார். பின்னர் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கற்பகவள்ளியின் மார்பு, கழுத்து பகுதிகளில் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

இதில் படுகாயம் அடைந்த கற்பகவள்ளி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த கொலை குறித்து தகவல் அறிந்ததும், திருவான்மியூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தப்பி ஓடிய மோகனரங்கத்தை அடையாறு பகுதியில் மடக்கி பிடித்து அவர்கள் கைது செய்தனர்.


இப்படிப்பட்ட செய்திகள் நாள்தோறும் நாளிதழ்களில் இடம் பெறுவது தற்போது வழக்கமாகி விட்டது.

மதுவால் மதி இழந்து மனிதன் எப்படி குற்றச் செயல்களில் ஈடுபடுகிறான் என்பதற்கு இதுபோன்ற செய்திகள், சம்பவங்கள் நல்ல உதாரணங்களாக இருந்து வருகின்றன.

ஆனால், அரசோ மதுவை ஒழிக்கஅழிக்க எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வருவதில்லை...மாறாக மது விற்பனையை மேலும் அதிகரிக்கதான் முயற்சி செய்து வருகிறது...

அரசின் இந்த நடவடிக்கை சமூக அர்வலர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது...

எஸ்..அப்துல் அஜீஸ்
=====================



Wednesday, April 9, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்....!(75)

மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்....!. 

நாள்  -75


தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அமைதியாக நடைபெற 10ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்....!.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை.....!

நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வரும் வைகோ, தேனி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அழகுசுந்தரத்தை ஆதரித்து தேனி இலட்சுமிபுரத்தில் வாக்குசேகரித்தார்.

அப்போது பேசிய அவர், நாடாளுமன்றத் தேர்தல் அமைதியாக நடைபெறுவதற்கு ஏதுவாக, வாக்குப்பதிவையொட்டி, மூன்று நாள்கள் மதுக்கடைகளை மூட வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்து உள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.

ஆளுங்கட்சியும், ஆண்ட கட்சியும் பூத் செலவுக்கு என்று முதல் கட்டமாகப் பணத்தை வாரி இறைத்து இருப்பதாக குற்றம் சாட்டிய வைகோ, இதன் காரணமாக அவர்களுடைய கைகளில் மகாத்மா காந்தி சிரித்துக் கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனால் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிவதாக அவர் கூறினார்.

டாஸ்மாக் கடைகளால், பெண்கள் நிம்மதியாக நடமாட முடியவில்லை என்றும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் அனைத்திற்கும் மூல காரணமே மதுக்கடைகள்தான் என்றும் வைகோ குற்றம் சாட்டினார்.


தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை நிறைவேற்ற வேண்டும் என்பது தங்களது கொள்கை என குறிப்பிட்ட வைகோ, அதற்காக தமிழகம் முழுவதும் ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரம் நடை பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்ததையும் நினைவு கூர்ந்தார்.

நாடாளுமன்ற தேர்தல் அமைதியாக நடைபெற வேண்டும் என விருப்பம் தெரிவித்த வைகோ, வாக்காளர்கள் சுயமாகச் சிந்தித்து வாக்கு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அதற்காக, குறைந்தது இரு வார காலம், அதாவது ஏப்ரல் 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை மாநிலத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூடுவதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

உண்மையிலேயே வைகோவின் கோரிக்கையில் நியாயம் இருக்கிறது.

தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா...பொறுத்து இருந்து பார்ப்போம்...

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

Sunday, April 6, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்....! (74)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்....!

 நாள் - 74

குடிபோதையில் அண்ணன் அடித்து கொலை: தம்பி மீது வழக்கு.....!

குடிபோதையில் அண்ணனை அடித்து கொலை செய்த சம்பவம் தொடர்பாக அவரது தம்பி மீது ஈரோடு தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு அருகே திண்டல் பகுதியை சேர்ந்தவர் ஆபிரகாம். அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுப்பெற்றவர். இவர் ஏற்கெனவே இறந்துவிட்டார். இவரது மனைவி சலோமி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வருகிறார்.

இத்தம்பதியினரின் மகன்கள் பிலிப் அன்பழகன். ஆண்ட்ரூஸ். இருவரும் இரட்டையர்கள். சலோமி நாமக்கல்லில் தங்கிபணியாற்றி வந்ததால், பாட்டி பத்மாவதியின் பராமரிப்பில் இவர்கள் இருவரும் இருந்தனர்.

பிலிப் அன்பழகன், தனியார் கார் நிறுவனத்திலும், ஆண்ட்ரூஸ் தனியார் மருந்து நிறுவனத்திலும் பணியாற்றி வந்தனர். இருவரும் சேர்ந்து அடிக்கடி குடிப்பார்களாம். கடந்த 6.4.2014 அன்று வீட்டின் மேல்தளத்தில் இருவரும் மது அருந்திக்கொண்டிருந்தனர்.அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்ததாம்.

இருவரும் வீட்டில் கிடந்த தடிகளை எடுத்து சேர்களை உடைத்துள்ளனர். பின்னர் ஒருவரை ஒருவர் தாக்கினார்களாம். இதில் ஆண்ட்ரூஸ் தாக்கியதில், பிலிப் அன்பழகனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மூளை சிதறியது.இதில் சம்பவ இடத்திலயே பிலிப் அன்பழகன் இறந்தார்.


தகவல் அறிந்த ஈரோடு தாலுகா போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பிலிப் அன்பழகனின் உடலை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஈரோடு தாலுகா போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோன்று மற்றொரு சம்பவமும் நடந்துள்ளது..

சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக் கடை ஊழியரை அடித்துக் கொலை செய்து, அவரிடம் இருந்த பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.



சேலம் மாவட்டம், அரியானூரை அடுத்த சின்ன சீரகாபாடி மேலத் தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் குமார். இவர், மல்லூரில் உள்ள டாஸ்மாக் மதுக் கடையில் விற்பனையாளராகப் பணியாற்றி வந்தார். இவர், கடந்த 5ஆம் தேதி (5.4.2014) இரவு பணி முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை, கே.பி.வலசு அருகே வந்தபோது, பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் குமாரை வழிமறித்துத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதில், பலத்த காயமடைந்த குமார் மயங்கி விழுந்தார். இதையடுத்து, அவர் வைத்திருந்த டாஸ்மாக் மதுக் கடை வசூல் பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு அந்தக் கும்பல் தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது. அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் சிலர், குமார் காயங்களுடன் மயங்கிக் கிடப்பதைக் கண்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரைச் சேர்த்தனர்.

பின்னர், தீவிரச் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார். குமார், தினசரி பணத்துடன் வருவதை அறிந்திருந்த கொள்ளைக் கும்பல், அவரைத் தாக்கி பணத்தை எடுத்துச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.


இதுகுறித்து ஆட்டையாம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த குமாருக்கு பூங்கொடி என்ற மனைவியும், சசிரேகா, ராஜேஷ் கண்ணா என்ற குழந்தைகளும் உள்ளனர்.

மது எப்படியெல்லாம் மனிதர்களை அழிக்கிறது என்பதற்கு இதுபோன்ற சம்பவங்கள் சாட்சிகளாக இருந்து வருகின்றன....

ஆனால், அரசோ மதுவை ஒழிக்காமல், அதன் விற்பனையை அதிகரிக்க இன்னும் முயற்சிகளை செய்துக் கொண்டே வருகிறது....

இது ஆச்சிரியம் மட்டுமல்ல, அதிர்ச்சியும் கூட...

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================