Saturday, April 12, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்...! (76)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்...!"  

நாள் -  76


குடிக்க பணம் கொடுக்க மறுத்த மனைவியை அடித்து கொலை செய்த கணவன் கைது....!

சென்னை திருவான்மியூரில் பயங்கரம்....!!

மதுவால் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவது அனைவரும் அறிந்ததே....

பல ஆய்வுகள் அது உண்மைதான் என்று நிரூபித்து வருகின்றன.

பத்திரிகைகளில் நாள்தோறும் வரும் செய்திகளை படித்தால், மதுவால் ஏற்படும் பாதிப்புகள், குற்றச்செயல்கள் குறித்து நிறைய தகவல்கள் அதில் இடம் பிடிக்கின்றன...

அதுபோன்ற ஒரு செய்தி இதோ உங்கள் பார்வைக்கு....

சென்னை திருவான்மியூர் அடையாறு இந்திரா நகரை சேர்ந்தவர் மோகனரங்கம்... இவருடைய மனைவியின் பெயர் கற்பகவள்ளி.

இவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. குழந்தைகள் இல்லை.

மோகனரங்கம் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனால், கற்பகவள்ளி தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்காக வீட்டில், சமையல் செய்து கொடுத்து வந்தார்.

குறைந்த வருமானம் ஈட்டி வந்த மனைவி கற்பகவள்ளியிடம் மோகனரங்கம் மது குடிக்க அடிக்கடி பணம் கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் இருவரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 11.04.2014 அன்று கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மோகனரங்கம், கட்டிலின் ஒரு கால் கட்டையை உடைத்து கற்பகவள்ளியை தாக்கினார். பின்னர் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கற்பகவள்ளியின் மார்பு, கழுத்து பகுதிகளில் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

இதில் படுகாயம் அடைந்த கற்பகவள்ளி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த கொலை குறித்து தகவல் அறிந்ததும், திருவான்மியூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தப்பி ஓடிய மோகனரங்கத்தை அடையாறு பகுதியில் மடக்கி பிடித்து அவர்கள் கைது செய்தனர்.


இப்படிப்பட்ட செய்திகள் நாள்தோறும் நாளிதழ்களில் இடம் பெறுவது தற்போது வழக்கமாகி விட்டது.

மதுவால் மதி இழந்து மனிதன் எப்படி குற்றச் செயல்களில் ஈடுபடுகிறான் என்பதற்கு இதுபோன்ற செய்திகள், சம்பவங்கள் நல்ல உதாரணங்களாக இருந்து வருகின்றன.

ஆனால், அரசோ மதுவை ஒழிக்கஅழிக்க எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வருவதில்லை...மாறாக மது விற்பனையை மேலும் அதிகரிக்கதான் முயற்சி செய்து வருகிறது...

அரசின் இந்த நடவடிக்கை சமூக அர்வலர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது...

எஸ்..அப்துல் அஜீஸ்
=====================



No comments: