Sunday, April 6, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்....! (74)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்....!

 நாள் - 74

குடிபோதையில் அண்ணன் அடித்து கொலை: தம்பி மீது வழக்கு.....!

குடிபோதையில் அண்ணனை அடித்து கொலை செய்த சம்பவம் தொடர்பாக அவரது தம்பி மீது ஈரோடு தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு அருகே திண்டல் பகுதியை சேர்ந்தவர் ஆபிரகாம். அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுப்பெற்றவர். இவர் ஏற்கெனவே இறந்துவிட்டார். இவரது மனைவி சலோமி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வருகிறார்.

இத்தம்பதியினரின் மகன்கள் பிலிப் அன்பழகன். ஆண்ட்ரூஸ். இருவரும் இரட்டையர்கள். சலோமி நாமக்கல்லில் தங்கிபணியாற்றி வந்ததால், பாட்டி பத்மாவதியின் பராமரிப்பில் இவர்கள் இருவரும் இருந்தனர்.

பிலிப் அன்பழகன், தனியார் கார் நிறுவனத்திலும், ஆண்ட்ரூஸ் தனியார் மருந்து நிறுவனத்திலும் பணியாற்றி வந்தனர். இருவரும் சேர்ந்து அடிக்கடி குடிப்பார்களாம். கடந்த 6.4.2014 அன்று வீட்டின் மேல்தளத்தில் இருவரும் மது அருந்திக்கொண்டிருந்தனர்.அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்ததாம்.

இருவரும் வீட்டில் கிடந்த தடிகளை எடுத்து சேர்களை உடைத்துள்ளனர். பின்னர் ஒருவரை ஒருவர் தாக்கினார்களாம். இதில் ஆண்ட்ரூஸ் தாக்கியதில், பிலிப் அன்பழகனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மூளை சிதறியது.இதில் சம்பவ இடத்திலயே பிலிப் அன்பழகன் இறந்தார்.


தகவல் அறிந்த ஈரோடு தாலுகா போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பிலிப் அன்பழகனின் உடலை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஈரோடு தாலுகா போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோன்று மற்றொரு சம்பவமும் நடந்துள்ளது..

சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக் கடை ஊழியரை அடித்துக் கொலை செய்து, அவரிடம் இருந்த பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.சேலம் மாவட்டம், அரியானூரை அடுத்த சின்ன சீரகாபாடி மேலத் தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் குமார். இவர், மல்லூரில் உள்ள டாஸ்மாக் மதுக் கடையில் விற்பனையாளராகப் பணியாற்றி வந்தார். இவர், கடந்த 5ஆம் தேதி (5.4.2014) இரவு பணி முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை, கே.பி.வலசு அருகே வந்தபோது, பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் குமாரை வழிமறித்துத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதில், பலத்த காயமடைந்த குமார் மயங்கி விழுந்தார். இதையடுத்து, அவர் வைத்திருந்த டாஸ்மாக் மதுக் கடை வசூல் பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு அந்தக் கும்பல் தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது. அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் சிலர், குமார் காயங்களுடன் மயங்கிக் கிடப்பதைக் கண்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரைச் சேர்த்தனர்.

பின்னர், தீவிரச் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார். குமார், தினசரி பணத்துடன் வருவதை அறிந்திருந்த கொள்ளைக் கும்பல், அவரைத் தாக்கி பணத்தை எடுத்துச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.


இதுகுறித்து ஆட்டையாம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த குமாருக்கு பூங்கொடி என்ற மனைவியும், சசிரேகா, ராஜேஷ் கண்ணா என்ற குழந்தைகளும் உள்ளனர்.

மது எப்படியெல்லாம் மனிதர்களை அழிக்கிறது என்பதற்கு இதுபோன்ற சம்பவங்கள் சாட்சிகளாக இருந்து வருகின்றன....

ஆனால், அரசோ மதுவை ஒழிக்காமல், அதன் விற்பனையை அதிகரிக்க இன்னும் முயற்சிகளை செய்துக் கொண்டே வருகிறது....

இது ஆச்சிரியம் மட்டுமல்ல, அதிர்ச்சியும் கூட...

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

No comments: