Monday, December 5, 2011

பூண்டு !

உணவில் பூண்டு சேர்க்கும் பழக்கம் உண்டா உங்களுக்கு?

இல்லையெனில், இனியாவது சேருங்கள்; பூண்டில் இல்லாத சத்துக்களே இல்லை.

 உங்கள் குடும்ப டாக்டர் பில் குறையணும்; இருமல், காய்ச்சல் வராமல் இருக்க வேண்டுமானால், பூண்டை விட சிறந்தது வேறில்லை.

கடுகு, மிளகு, தனியா போன்ற அன்றாட உணவு தானியங்களில் ஆரம்பித்து,  நாம் பல ஆண்டாக பின்பற்றும் தானியங்களில் இல்லாத சத்துக்களே இல்லை.

அமெரிக்கா உட்பட பல நாடுகளிலும் சரி, ஐந்து நட்சத்திர ஓட்டல்களிலும் சரி, இந்த தானியங்கள் தான் சுவை சேர்க்கின்றன.

எளிய முறையில் பயன்படுத்தக்கூடிய இந்த உணவு தானியங்களில் உள்ள மகிமை, இப்போதுள்ள தலைமுறையினருக்கு தெரிவதில்லை என்பது வேதனை தான்.

இந்த வகையில் இயற்கையாக கிடைக்கும் பூண்டு, நமக்கு தரும் மருத்துவ பயன்கள் பட்டியலிட முடியாதவை.

சீனாவில் யுன்னான் மாகாணத்தில்தான் முதன் முதலில் பிறந்தது இந்த வெங்காய குடும்ப வகையை சேர்ந்த பூண்டு.

சீனாவை அடுத்து அதிகமாக உற்பத்தி செய்வது இந்தியாதான். மருத்துவ, உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது என்றாலும், இப்போது தான் பூண்டு மகிமை பலருக்கு தெரிகிறது.

 தினமும் மூன்று பூண்டு விழுதுகளை கடித்து சாப்பிட்டாலே போதும்; ஜலதோஷம் முதல் தொற்றுக்கிருமிகள், வயிற்று பிரச்னைகள் எதுவும் வராது.

 பூண்டு சாப்பிட்டால், மூச்சு விட்டாலும், அதன் மணம் தான் வீசும். மூக்கை பிடிக்க வைக்கும் வாசனை தான் பலரையும் சாப்பிட விடாமல் பயமுறுத்துகிறது.


பாக்டீரியா, வைரஸ் மூலம் பரவும் காய்ச்சல், இருமல், தொற்றுநோய்கள், காயங்கள் எதுவும் பூண்டு சாப்பிட்டு வந்தால் வரவே வராது. வந்தாலும் உடனே பறந்து விடும்.

உணவில் சேர்த்தால் நல்லது தான்;ஆனால், அதில் சத்துக்கள் குறைந்து விடுகின்றன; அதனால், அப்படியே கடித்து விழுங்குவது நல்லதே.

 தொண்டை கரகரப்பா? கவலையே வேண்டாம்; டாக்டரிடம் போக வேண்டாம்; நான்கு பூண்டு விழுதுகளை கடித்து விழுங்கி விடுங்கள்.

சர்க்கரை நோயுள்ளவர்கள் பூண்டு உட்கொண் டால், சர்க்கரை அளவை சீராக்குகிறது; இன்சுலின் சுரப்பதை அதிகரிக்கிறது.

ஐந்து மாதம் தொடர்ந்து பூண்டு சாப்பிட்டு வந்தால், ரத்த அழுத்தம் குறைந்து விடும்.
பூண்டில் , அலிசின் என்ற ஆன்டிஆக்சிடண்ட் உள்ளது. இந்த சத்து, உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

கழலை, மரு போன்றவை நீங்குவதற்கும் பூண்டு கைகொடுக்கிறது. இரவு தூங்கும் முன், சிறிது அரைத்து அதன் மீது பூசினால் போதும், நாளடைவில் மரு காணாமல் போய்விடும்.

அலர்ஜியை விரட்ட அருமையான மருந்து பூண்டு; மூன்று வாரம் தொடர்ந்து ஒரு நாளைக்கு மூன்று பூண்டு விழுது சாப்பிட்டு வந்தால் போதும், அலர்ஜி போய் விடும்.

பல்வலியா, அதற்கும் பூண்டு போதும். ஒரு விழுதை கடித்து அதன் ரசம் பட்டால் போதும், பல்வலி போய்விடும்.

சரியான “மேனியா’வா?
அநியாயத்துக்கு சிலருக்கு, அர்த்தமே இல்லாமல் கடுங்கோபம் வரும்; இந்த அனுபவம் உண்டா உங்களுக்கு? இப்படிப்பட்டவர்களை சரியான “மேனியா’வாக இருக்கிறாரே மனுஷன்…என்று அழைப்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள்.

மேனியா என்றால் என்ன தெரியுமா? சாதாரண மனிதராக இல்லாமல், அடிக்கடி கோபம், தேவையில்லாமல் சீற்றம், எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள தயாரில்லா குணம் கொண்டவர் என்று பொருள்.

மனோரீதியான பிரச்னை உள்ளவர். சாதா மேனியாவாக உள்ளவர்கள் பலர் உள்ளனர். அவர்களுக்கு சில மணி நேரம், சில நாள், சில மாதம் தான் இப்படிப்பட்ட நிலை நீடிக்குமாம். ஆனால், மாதக்கணக்கில் நீடித்தால், மனோதத்துவ நிபுணரை பார்க்கத்தான் வேண்டும்.

யாருக்கு வருகிறது மேனியா? அதன் அறிகுறி என்ன?

பகட்டாகதான் இருப்பர்; ஆனால், எந்த ஒரு விஷயத்தையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்; எதிர்வாதம் எப்போதும் உண்டு. உச்சமாக சண்டையும் போடுவர்.

திடீரென உணர்ச்சிவசப்படுவர்; “நீ சொல்றது தப்பு, உனக்கு ஒண்ணும் தெரியாது’ போன்ற வசனங்கள் அடிக்கடி வரும்.


அதிகமாக செலவழிப்பர்; ஆடம்பரம் பிடிக்கும்; செக்ஸ் போக்கு அதிகமாக இருக்கும்.

தூங்குவது குறைவாகத்தான் இருக்கும்; ஆனால் சோர்வே தெரியாது.
எதிலும் திட்டமிடாத நிலை உள்ளதால், இவர்கள் கடனாளி ஆவதுண்டு. அதனால், மது, போதைக்கும் அடிமையாகிவிடுவர்.

எந்த ஒரு சிறிய சண்டையும் விர்ர்ர்ரென தலைக்கு ஏறி விடும் என்பதால், எந்த விளைவுகளும் இவர்களுக்கு வந்து சேரும்.நார்மலான மனிதர்கள் அல்ல என்பதால், இவர்கள் சாப்பிடுவதிலும், சிரிப்பதிலும், அழுவதிலும் மிகவும் அதிகமாகவே இருப்பர். இவர்கள் எல்லா நடவடிக்கையும் நார்மலுக்கு மாறாகவே இருக்கும்.

Sunday, November 13, 2011

தியாகத் திருநாள் – சில தகவல்கள் !

தியாகம் இல்லாமல் மனிதனுடைய வாழ்க்கையில் நிச்சயம் நிம்மதி இருக்க முடியாது. 
பெற்ற குழந்தைக்காக ஒரு தாய் செய்யும் தியாகம், அந்த தாய்க்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது.
குழந்தையின் வளர்ச்சிக்காக, கல்விக்காக ஒரு தந்தை செய்யும் பல தியாகங்கள், அவனுடைய வாழ்க்கையில் சந்தோஷத்தை தருகிறது.
இப்படி, தியாகம்தான், மனிதனுக்கு, வாழ்க்கையின் உண்மையான தத்துவத்தை மறைமுகமாக சொல்லித் தருகிறது.
சரி, மனிதர்களுக்காக மனிதன் செய்யும் தியாகத்தில் மகிழ்ச்சி கிடைத்தாலும், ஓர் இறைக் கொள்கைக்காக நபி இப்ராஹீம் (அலை) அவர்களும், நபி இஸ்மாயில் (அலை) அவர்களும் செய்த தியாகங்கள் மூலம்,  உலக மக்கள் அனைவருக்கும் பல நன்மைகள் கிடைத்தன.
அவை, மனிதன் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும்,  வழி தவறாமல், வழி பிழறாமல் இருக்க வேண்டும் என்ற படிப்பினைதான்.

ஓர் இறைக் கொள்கையை மனதில் உறுதியாக ஏற்றுக் கொண்ட, நபி இப்ராஹீம் (அலை) அவர்கள், தன்னுடைய வாழ்க்கை முழுவதும் கொண்ட கொள்கையில் உறுதியாகவே இருந்தார்.
சிலைகளை உருவாக்கும் குடும்பத்தில் பிறந்தாலும், மனிதன் உருவாக்கிய சிலைகளை மனிதனே வணங்குவதா என வினா எழுப்பிய அவர்,  இறைவன் ஒருவனுக்காவே நாம் வாழ வேண்டும் என உள்ளத்தில் உறுதி ஏற்றுக் கொண்டார் நபி இப்ராஹீம் (அலை).
தன்னுடைய வாழ்க்கையில், ஓர் இறைக் கொள்கையை அவர் சிறிதும் விட்டுக் கொடுக்கவில்லை.
அதற்காக பல தியாகங்களை செய்தார். கொடுமைகளை அனுபவித்தார். எல்லாமே இறைவன் ஒருவன் என்ற கொள்கைக்காக செய்த தியாகங்கள்தான்.
இறைவனுக்காக நம்மை நாம் அர்ப்பணித்துக் கொண்டால், இறைவனும் நம் மீது கருணை காட்டத் தொடங்கி விடுவான்.

இந்த கருத்தில் உறுதியாக இருந்தார் நபி இப்ராஹீம் (அலை).
கனவில் மகன் இஸ்மாயிலை  அறுப்பதாக கண்டபோது, அதிர்ச்சி அடைந்தாலும், அது இறைவனின் கட்டளை என்பதை உறுதியாக நம்பினார்.
மகன் இஸ்மாயில் (அலை)யிடம் தாம் கண்ட கனவை கூறியபோது, இஸ்மாயில் சிறிது தயங்கவில்லை.
இறைவனுக்காக, தன்னை தியாகம் செய்ய முன்வந்தார்.
இப்படி, இறைவனுக்காக தந்தையும் மகனும் உறுதியுடன் செய்த தியாகங்கள்தான், இன்று மனிதர்களை நெறித் தவறாமல் இருக்க செய்கிறது.
இந்த வரலாற்று சம்பவத்தை நினைவுக்கூறும் வகையில்தான்,  ஒவ்வொரு ஆண்டும்  இஸ்லாமியர்கள், தியாகத் திருநாளை கொண்டாடி மகிழ்கின்றனர்.

தியாகத் திருநாளின்போதுதான், ஹஜ் கடமையும்,  இஸ்லாமியர்களால் நிறைவேற்றப்படுகிறது.
இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் கடைசி தூண் ஹஜ் கடமையாகும்.
ஓர் இறைக் கொள்கையில் உறுதி.
தொழுகை நிறைவேற்றம்.
ரமலான் நோன்பு.
ஜகாத் வழங்கல்
இவையெல்லாம் மற்ற நான்கு தூண்கள்.  
ஐந்தாவது தூணான ஹஜ்ஜை, நிறைவேற்றும்போதுதான், உலக மக்கள் அனைவரும் காபா இறை இல்லத்தில் ஒன்று கூடி, உலக அமைதிக்காகவும், நன்மைக்காகவும், சகோதரத்துவம் வளரவும் மனம் உருவாகி துஆ செய்கின்றனர்.

அதாவது, இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.
மனிதன் எப்போதும் அவரசப் புத்திக்காரன். அவன் பாவங்கள் செய்வது  இயற்கை. அவற்றை தவிர்க்க முடியாது.
ஆனால், மனம் உருகி, கையேந்தி இறைவனிடம் மன்னிப்பு கேட்கும்போது, மனம் லேசு அடைகிறது.
மனசில் உள்ள அழுக்குகள் அகல்கின்றன.
இவையெல்லாம், ஹஜ் கடமையை நிறைவேற்றும் இஸ்லாமியர்கள், காபா இறை இல்லத்தில் மனம் உருகி செய்யும் பிரார்த்தனைகளால் கிடைக்கும் நன்மைகள்.

பல நாடுகள். பல மொழிகள். பல இனங்கள். பல நிறங்கள்.
இப்படி உலகின் பல பகுதிகளில் இருந்து மெக்கா நகரில் உள்ள காபா இல்லத்தில்  குவியும் இலட்சக்கணக்கான இஸ்லாமியர்கள், வேறுபாடுகளை மறந்து, மனித இனம், ஓரே குலத்தைச் சேர்ந்தது என்பதை உணர்ந்து அன்பு மலர, சகோரத்துவம் வளர பிரார்த்தனை செய்கின்றனர்.
இதன்மூலம், வேறுபாடுகள் மறைகின்றன.
பிரிவுகள் களைகின்றன.
மனிதன் தூய்மையான மனிதனாக மாறுகின்றான்.

மீண்டும், அவரவர் நாடுகளுக்கு சென்று, மனித குலம் படைக்கப்பட்டதன் உண்மையான நோக்கம், மனித குலம் எப்படி ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பது குறித்து அனைவரிடமும் தெரிவிக்கின்றனர்.
இவையெல்லாம், ஹஜ் கடமையை நிறைவேற்றும் ஒவ்வொரு இஸ்லாமியர்களுக்கு கிடைக்கும் நன்மைகள்.
உலக மக்களுக்கு மறைமுகமாக கிடைக்கும் படிப்பினைகள்.
ஆக, தியாகங்களை செய்ய அனைவரும் முன் வருவோம்.
அந்த தியாகங்கள் மூலம், மனித குலத்திற்கு நன்மைகள் கிடைக்கும்.
ஓர் இறைக் கொள்கையை உள்ளத்தில் பதிய வைத்துக் கொண்டு, வீண் கலாசாரப் பண்பாடுகளை தூக்கி எறிவோம்.


அனைத்து தரப்பு மக்கள் மீதும் அன்பு செலுத்துவோம்.
இனம், மொழி, நிறம் ஆகியவற்றை தூக்கி எறிந்து விட்டு, மனிதன் இறைவனின் படைப்பு.
ஓர் குலத்தைச் சேர்ந்தவன்.
என நினைத்துக் கொண்டு, தியாகங்களை செய்வோம்.  

குடும்பத்திற்காகவும், நண்பர்களுக்காகவும், உறவினர்களுக்காகவும் ஒருமுறை தியாகங்கள் செய்து பாருங்கள்.
உண்மையிலேயே உள்ளத்தில் மகிழ்ச்சி பிறக்கும்.

மறுமுறை தியாகம் செய்ய  ஆசை பிறக்கும்.

இதுதான், நபி இப்ராஹீம் (அலை), நபி இஸ்மாயில் (அலை) ஆகியோர் செய்த தியாகங்கள் மூலம் மனிதர்களுக்கு கிடைக்கும் படிப்பினைகள்.
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
(தியாகத் திருநாளை முன்னிட்டு எழுதப்பட்ட கட்டுரை)

Sunday, October 30, 2011

ஏழாம் அறிவு - ஓர் பார்வை !

தமிழனின் பெருமையை உலகத்திற்கு தெரிவிக்கும் படம் ஏழாம் அறிவு !

கஜினியை மிஞ்சியப் படமாக இது இருக்கும் !

இப்படி, ஏழாம் அறிவு படம் குறித்து, அது வெளியாவதற்கு முன்பு பெருமைப்பட கூறினார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.

இந்திய திரைப்படத்துறையில் நல்ல ஒரு திறமையான இளம் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.

நல்ல ஒரு கருத்தை உள்வாங்கி, தமிழனின் பெருமையை, வரலாற்றை பதிவுச் செய்ய வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் ஏழாம் அறிவு படத்தை எடுத்து முடித்துள்ளார்.

ஏழாம் அறிவு திரைப்படத்தை பார்க்கும் முன்பு, பல கற்பனைகள், பல எண்ணங்கள் என்னுள் வந்து வந்துச் சென்றன.

இது போன்ற எண்ணங்கள் இலட்சக்கணக்கான ரசிகர்களுக்கும் இருந்தன.

ஆனால், படம் பார்த்த பிறகு, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நல்ல ஒரு கருத்தை, டாகுமெண்டரி படம் போல் எடுத்து விட்டாரே என்றே எண்ணத் தோன்றியது.

ஆரம்பக் காட்சிகள் விறுவிறுப்பாக இருக்கும் என்று நினைத்து,  படத்தை பார்த்தால்,  ஆரம்பமே சொதப்பி விட்டார் முருகதாஸ்.

சரி. என்னதான் செய்து இருக்கிறார் என மெனக் கெட்டு படம் பார்த்தேன்.

சூரியா சர்க்கஸ் கலைஞராக வருகிறார். ஒருசில வித்தைகள் செய்கிறார்.

திடீரென பாட்டு பாடுகிறார்.  சாலைகளில், சந்தைகளில் கூட்டத்தின் நடுவில் ஆடுகிறார்.

எல்லாம் சரி. படத்திற்கும் இதற்கும் சம்பந்தம் உண்டா, என்றால் சிறிதும் இல்லை.

காட்சிகள் மனத்தில் ஒட்டவே மறுக்கின்றன.

கஜினியை மிஞ்சிய படமாக இருக்கும் என்ற ஏ.ஆர்.முருகதாசின் வார்த்தைகள், ஏழாம் அறிவில் சிறிதும் மெய்பிக்கப்படவில்லை.

கஜினி. கஜினிதான்.

அந்த பாடத்தை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.

அப்படி ஒரு விறுவிறுப்பை, காட்சி நகர்த்தலை, எடிட்டிங்கை செய்திருப்பார் முருகதாஸ்.

இது ஏழாம் அறிவில் மிஸ்சிங்.

போதி தர்மர். ஒரு வித்தகர். மருத்துவர். அவர் களறிக்கலையை சீனர்களுக்கு கற்று தந்து அங்கே தெய்வமாக மதிக்கப்படுகிறார்.

இதனை நாம் உணர்ந்துக் கொள்ளவில்லை. அறிந்துக் கொள்ளவில்லை. தமிழரின் பெருமைகளை மறந்து விட்டோம்.

எல்லாம் சரி அய்யா. அதை எப்படி தமிழக, இந்திய இளைஞர்களின் மனதில் பதிய வைத்திருக்க வேண்டும்.

ஆரம்ப காட்சிகளே விறுவிறுப்பாக அமைத்து இருக்க வேண்டும் அல்லவா.

இளைஞர்களை சீட்டின் நுணிக்கு கொண்டு வந்து, சுண்டி இழுக்க வேண்டும் அல்லவா.

இதையெல்லாம் செய்ய தவறி விட்டீர்களே முருகதாஸ்.

சரி வில்லன் ஜானி ட்ரை ஙயென் (Johnny Tri Nguyen)வரும் காட்சிகள் அட்டகாசமாக இருக்கும் என்றால், அவை அதிர்ச்சியைதான் ஏற்படுத்துகின்றன.

ஹிப்னாடிஸம் மூலமாகவும், நோக்குவர்மர் கலை மூலம் அவர் செய்யும் அட்டகாசங்கள், நம்பும்படியாகவா உள்ளது.

சாலைகளில் செல்லும் கார்களையும் மனிதர்களையும் தன்வசம் படுத்தி, சூர்யாவை வில்லன் ஜானி பந்து ஆடுகிறார்.

ஆனால் இந்த காட்சிகள் அனைத்தும் சிரிப்பைதான் வரவழைக்கின்றன.

குழந்தைத்தனமாகதான் உள்ளன.

அதில் சிறிதும் லாசிக் இல்லை. நம்பும்படியாக இல்லை.

போதி தர்மர் குறித்து ஆரம்பத்தில் நீங்கள் சொன்ன செய்திகளை, காட்சிகளை ப்ளாஷ்பேக்கில் சொல்லி இருந்தால், படத்தில் ஒரு சுவை கிடைத்திருக்கும்.

இளைஞர்களுக்கு ஓர் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கும்.

ஆரம்பமே, போதி தர்மர் குறித்து சொல்லிவிட்டு, படத்தை பாருங்கள் என்றால் யாருக்கு சார் படத்தின் மீது கவனம் செல்லும்.

உங்களுக்கு தமிழரின் பெருமையை எப்படியும் மக்களிடம் சொல்ல வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருக்கிறது.

நம் மண்ணின் பெருமையை சொல்லி ஆக வேண்டும் என்ற ஆர்வம் மிகுந்து இருக்கிறது.

அதனால், கதை சொல்லும் பாணியில் சிறிது தவறு ஏற்பட்டு இருக்கிறது.

இசையிலும் இந்த முறை நீங்கள் கவனம் செலுத்தவில்லை என்றே தோன்றுகிறது.

ஓ ரிங்கா ரிங்கா பாடலை தவிர மற்ற பாடல்கள் எதுவும் மனதில் ஒட்டவில்லை.

அதேநேரத்தில் படத்தில் ஒருசில சிறப்பு அம்சங்கள் இருப்பதையும் மறுப்பதற்கு இல்லை.

காட்சிகளை மிக அழகாக வடிவமைத்துள்ளீர்கள்.
படம் பிடித்துள்ளீர்கள்.

பின்னணி இசையில் ஹாரீஸ் ஜெயராஜ், தனது வழக்கமான பாணியில் கலக்கி இருக்கிறார்.

மொத்தத்தில் கஜினியை மிஞ்சும் பாடமாக ஏழாம் அறிவு இல்லை என்பதே யதார்த்தமான உண்மை.

கடைசியாக முருகதாசுக்கு ஒருசில கேள்விகள்:

காஞ்சிபுரத்தில் பிறந்த போதி தர்மர் ஏன் அய்யா சீனாவிற்கு சென்றார்.

இங்கேயே இருந்து தமிழர்களுக்கு தன்னுடைய கலைகளை சொல்லி தந்து இருக்கலாம் அல்லவா.

தன்னுடைய மருத்துவச் சிகிச்சை முறைகளை தமிழக மக்களுக்கு சொல்லி தந்து இருந்தால், இங்குள்ள தமிழர்கள் இன்னும் பலன் அடைந்து இருப்பார்கள்.

போதி தர்மரை கொண்டாடி இருப்பார்கள்.

அவரது மருத்துவக் குறிப்புகள் இன்றைய இளம் மருத்துவர்களுக்கு பயன் அளித்து இருக்கும்.

ஆனால், கால்நடையாகவே சீனாவுக்கு சென்று சீன மக்களுக்கு போதி தர்மர் கலைகளை சொல்லித் தருகிறார். மருத்துவச் சேவை செய்கிறார்.

அதனால் அந்த மக்கள் அவரை தெய்வமாக மதிக்கிறார்கள்.
இதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அப்படிதான் செய்ய வேண்டும்.

ஆனால், தமிழர்களாகிய நாம், போதி தர்மரை மறந்து விட்டோம், அவரது பெருமையை அறிய தவறி விட்டோம் என நீங்கள் கேள்வி எழுப்பி ஆதங்கப்படுவதில் சிறிது நியாயம் இல்லை என்றே தோன்றுகிறது.

இந்திய மண்ணில் பிறந்து விட்டு, இந்திய காசில் படித்து விட்டு வெளிநாடுகளுக்கு பறந்து செல்லும் இளைஞர்களை போன்றுதான், போதி தர்மரும், சீனாவிற்கு சென்று இருக்கிறார்.
அப்படிதான் நினைக்க தோன்றுகிறது.

சரி. சீனர்களுக்கு தற்காப்பு கலைகளையும், மருத்துவத்தையும் சொல்லித்தந்த அந்த உத்தமரை ஏன் அய்யா சீனர்கள் விஷம் வைத்து கொள்ள வேண்டும்.

அது எவ்வளவு பெரிய அநீதி.

தமிழருக்கு கிடைத்த அநியாயம்.

உங்கள் படத்தை பார்த்தபோது, போதி தர்மர் குறித்து நீங்கள் கூறிய கருத்துகள் குறித்து அறிந்தபோது, மனதில் இப்படிப்பட்ட எண்ணங்கள்தான் உதிர்த்தன.

எது எப்படியோ, தமிழரின் பெருமைகளை அறிய வேண்டும். வரலாற்றை இளைஞர்கள் மறந்து விடக்கூடாது என்ற உயர்ந்த எண்ணத்தில் நீங்கள் செய்த முயற்சிக்கு தமிழர்களாகிய எங்கள் தரப்பில் உங்களுக்கு பாராட்டுகள் உண்டு.

அடுத்த படத்திலாவது, கதை சொல்லும் பாணியில் சிறிது கவனம் செலுத்துங்கள்.

கஜினி, ரமணா  போன்ற சுவையான படங்களை கருத்துடன் படைக்க முயற்சி செய்யுங்கள்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Monday, October 24, 2011

லிபிய முட்டாள்கள் !

லிபியாவை 42  ஆண்டுகள் வழி நடத்திச் சென்ற மம்மர் முஹம்மது அபு மின்யார் அல் கடாஃபி,  கடந்த 20 ஆம் தேதி புரட்சிப்டை என அழைக்கப்பட்ட அமெரிக்காவின் கூலிப்படையால், மிக கொடூரமாக, சித்தரவதை செய்து கொல்லப்பட்டார்.

சாத்தான் அமெரிக்காவின் சூழ்ச்சி வலையில் சிக்கிய லிபிய மடையர்கள்,  பிசாசு இங்கிலாந்தின் ஆசைகளை நிறைவேற்றியுள்ளனர்.

42 ஆண்டுகள் லிபியாவை ஆண்ட கடாஃபி, அரேபிய நாடுகளின் ஒற்றுமைக்காவும், ஆப்பிரிக்கா நாடுகளின் ஒற்றுமைக்காகவும்  தொடர்ந்து பாடுபட்டு வந்தார்.

லிபியாவில் மேலாதிக்க சக்திகள் கோலோச்சுவதை அவர் ஒருபோதும் விரும்பவில்லை.

மேலாதிக்க மற்றும் மேலை நாடுகளின் கலாச்சாரம்,  லிபியாவில் பரவுவதை கடாஃபி அனுமதிக்கவில்லை.

அரபு மொழி ஆட்சி மொழியாக்கப்பட்டது.

வணிக நிறுவனங்களில் ஆக்கிரமிப்பு செய்து வந்த பிறமொழிகள் அகற்றப்பட்டு, அரேபிய மொழி அலங்கரிக்க தொடங்கியது கடாஃபியின் ஆட்சி காலத்தில்தான்.

அமெரிக்காவின் அடாவடித்தனங்களுக்கு கடாஃபி கொஞ்சம் கூட அடங்கவில்லை.

அதனால்தான், லிபியா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன. அதற்கும் கடாஃபி கவலைப்படவில்லை.

தனது ராணுவ பலத்தை அணு ஆயுத சக்தி மூலம் அதிகரிக்க முயற்சி செய்தார்.

இது, ஓநாய் அமெரிக்காவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நாய் இங்கிலாந்திற்கு கலக்கத்தை உருவாக்கியது.

எப்படியும் கடாஃபியை வீழ்த்த வேண்டும் என இந்த இரு பிசாசுகளும் ரகசிய ஒப்பந்தங்களை செய்துக் கொண்டன.

அதற்காக சதி வலையை விரித்தன.


லிபியாவின் எண்ணெய் வளத்தை கொள்ளையடிக்க வேண்டும்.

விடுதலை என்ற பெயரில் அந்த நாட்டு மக்களை அடிமைகளாக மாற்ற வேண்டும்.

இது அமெரிக்காவின் எண்ணம்.

இதற்காக நீண்ட, நெடிய திட்டத்தை பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது அமெரிக்கா.

இங்கிலாந்துடன் கைகோர்த்து, பிரான்ஸ் உள்ளிட்ட சில மேலாதிக்க நாடுகளை இணைத்துக் கொண்டு,   விரிவான திட்டத்தை செயல்வடிவில் கொண்டு வந்தது.

இந்த சதிகளை புரிந்துக் கொள்ளாத கடாஃபி,  அமெரிக்காவின் வலையில் எப்படியோ சிக்கிக் கொண்டார்.

அணு ஆயுதங்கள் தொடர்பான ரகசியங்கள் தெரிவிக்க முன்வந்தார்.

லிபியா வளம் பெறும் என நம்பினார். நட்பு நாடுகளை உதாசீனம் செய்தார்.

இப்படிதான் அமெரிக்கா ஆசை வார்த்தை கூறியது.

இங்கிலாந்தும் அதைதான் கூறியதால், லிபியாவின் நன்மைக்காக, வளர்ச்சிக்காக தன்னை மறந்து, அணு ஆயுதங்கள் குறித்து விவரங்களை அளித்தார்.

லிபியாவில் இருந்த அணு ஆயுதங்களை ஒழிக்கப்பட்டன.

அமெரிக்காவும், இங்கிலாந்தும் திருப்தி அடைந்தன.

மீண்டும் புதிய திட்டம் தீட்டின.

 அது லிபிய அதிபர் கடாஃபியை கொல்வது என்பதுதான்.

அதற்காக நேரம் பார்த்துக் கொண்டிருந்த இந்த பிசாசு நாடுகள், எகிப்து உள்ளிட்ட ஒருசில அரபு நாடுகளில் ஏற்பட்ட உள்நாட்டு புரட்சியை தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொண்டன.

லிபிய முட்டாள்கள் சிலரை வலைவீசி தேடி, தங்களுக்கு நண்பர்களாக மாற்றிக் கொண்டன இந்த பிசாசுகள்.

ஆசை வார்த்தைகளை அள்ளி வீசின.

இதில் மயங்கிய விழுந்த லிபிய முட்டாள்கள், அதிபர் கடாஃபிக்கு எதிராக புரட்சிப்படை என்ற பெயரில் புதிய படையை உருவாக்கி போராட ஆரம்பித்தன.

அதற்கு நேட்டோ படைகள் முழு ஆதரவு அளித்தன.

இதன்மூலம், 42 ஆண்டுகள் லிபியாவை வழிநடத்திச் சென்ற மாவீரன் கடாஃபிக்கு எதிராக கலவரங்கள், வன்முறைகள் தலை விரித்தாடின.

திரிபோலி உள்ளிட்ட லிபியாவின் முக்கிய நகரங்களில் வன்முறை வெடித்தன.

ஒவ்வொரு ஆட்சியாளர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் விரோதிகள் இருப்பது மறுக்க முடியாது.

அதுபோன்று, கடாஃபிக்கும் விரோதிகள் இருக்கவே செய்தனர்.

அந்த விரோதிகள், இந்தமுறை எப்படியும் கடாஃபியை வீழ்த்தியே தீர வேண்டும் என கங்கனம் கட்டிக் கொண்டன.

கடாஃபிக்கு எதிராக மக்களை திரட்ட இந்த கயவர்கள் முயற்சி செய்து அதில் சிறிதளவு வெற்றியும் பெற்றன.

நல்ல ஆட்சியில் மக்கள் சில துன்பங்களை சகித்துக் கொள்ள வேண்டும் என்பது எழுத முடியாத ஒரு சட்டம்.

இதனை ஏற்றுக் கொள்ள லிபிய மக்களில் சிலர் விரும்பவில்லை.

சுதந்திரம் என்ற பெயரில் இஸ்லாமிய கட்டுபாடுகளை நவீன லிபிய மக்கள் சிலர் விரும்பவில்லை.

இதனால், கடாஃபிக்கு எதிராக எழுந்த கலவரத்திற்கு ஆதரவு அளித்தனர்.

அமெரிக்காவும், இங்கிலாந்தும் மற்றும் பிறநாடுகளும் லிபியாவின் எண்ணெய் வளத்தை சுருண்ட திட்டமிட்டு இருப்பதை இந்த மக்கள் புரிந்துக் கொள்ளவே இல்லை.

சூழ்ச்சியை விளங்கிக் கொள்ளவில்லை.

இதனால், எரியும் வீட்டில் எண்ணெய் ஊற்றியது போன்று, அமெரிக்காவும், இங்கிலாந்தும் செய்த சூழ்ச்சிக்கு பலியாகி, எப்படியும் கடாஃபியை கொன்ற தீருவது முடிவு கட்டிக் கொண்டு, லிபிய மடையர்கள் தங்களது கொலை வெறியை வேகப்படுத்தினர்.

அணு ஆயுதங்கள் அனைத்து ஒப்படைத்த பிறகு, தமக்கு எதிராக எழுந்த தொடர் போராட்டங்கள், கலவரங்களை கடாஃபியால் கட்டுப்படுத்த முடியவில்லை.

நேட்டோ படைகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தியதாலும், லிபிய முட்டாள்களை  கொண்டே, கடாஃபியை கொல்ல திட்டமிட்டதாலும், எப்படியும் தப்பிக்க நினைத்தார் கடாஃபி.

தனது சொந்த ஊரான சிர்டேவிற்கு பறந்தார்.

தமக்கு எதிராக புரட்சிகள், வன்முறைகள், கலவரங்கள் வெடித்தபோதும், அவர் வெளிநாட்டிற்கு தப்பி ஓடவில்லை.

என்னுடைய உயிர் லிபியாவில்தான் பறிபோகுமே தவிர, வெளிநாட்டிற்கு நான் தப்பி ஓட மாட்டேன் என்றார் அந்த மாவீரன்.

இப்படிப்பட்ட மாவீரனை, நேட்டோ படை என்ற கூலிப்படையின் உதவியுடன் புரட்சிப்படை என்று அறிவிக்கப்பட்ட லிபிய முட்டாள் படைகள், எப்படியோ பிடித்துவிட்டன.


42 ஆண்டுகளாக லிபியாவை வழிநடத்திச் சென்ற அந்த மாவீரனை, அமெரிக்காவிற்கு அஞ்சாத அந்த வரலாற்று நாயகனை, கொடூரமாக, சித்தரவதை செய்து கொலை செய்தன.

அந்த காட்சிகளை ராய்டரில் பார்த்தபோது, கண் கலங்கி போனது.

உலக மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். இப்படியும் நடக்குமா என ஒவ்வொருவரின் உள்ளம் கேட்டுக் கொண்டது.

லிபியாவின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் பாடுபட்ட ஒரு நாயகனை, லிபிய மடையர்கள், முட்டாள்கள், அமெரிக்காவின் வஞ்சத்தில் வீழ்ந்து சித்தரவதை செய்து கொலை செய்தது எவ்வளவு பெரிய போர்க்குற்றம்.

துப்பாக்கியால் சுடப்பட்டு ரத்தம் சொட்டச் சொட்ட அந்த மாவீரன் கதறுகிறார். வலியால் துடிக்கிறார்.

ஆனால், கூலிப்படைகள் அவர் மீது மீண்டும் தாக்குதல்களை அரங்கேற்றுகின்றனர்.

ஈவு, இரக்கம் இன்றி சித்தரவதை செய்கின்றனர்.

இப்படி கொடூரமாக கொலை செய்த அந்த கயவர்களை நடுத்தெருவில் நிற்க வைத்து சுட வேண்டும்.

நேட்டோ படையின் மூலம் லிபியாவில் அட்டகாசம் செய்த அமெரிக்காவையும் இங்கிலாந்தையும் போர்க்குற்றவாளிகளாக உலக நாடுகள் அறிவிக்க வேண்டும்.

42 ஆண்டுகளின் ஆட்சியின்போது, கடாஃபி ஒருசில குற்றங்களை செய்து இருக்கலாம்.

அரசியல் விரோதிகளை கொலை செய்து இருக்கலாம்.

ஆனால், லிபியாவின் வளர்ச்சிக்கு கடாஃபி ஆற்றிய பங்களிப்பை ஒருபோதும் மறக்க முடியாது.

அரபுலக ஒற்றுமைக்காகவும், ஆப்பிரிக்கா நாடுகளின் ஒற்றுமைக்காகவும் அவர் செய்த முயற்சிகளை வரலாறு மறக்காது.

அப்படிப்பட்ட வரலாற்று நாயகனை, கூலிப்படைகள், லிபிய முட்டாள்கள் கொலை செய்துள்ளனர்.


லிபியா சுதந்திரம் அடைந்து விட்டதாக இன்று பிரகடனம் செய்து உள்ளனர்.

அட, லிபிய முட்டாள்களே, இப்போதுதான் நீங்கள் அடிமைகளாக மாறியுள்ளீர்கள்.

அமெரிக்காவின், இங்கிலாந்தின், பிரான்சின் கைகூலிகளாக மாறியுள்ளீர்கள்.

சிறிது காலம் உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கலாம். விடுதலை கிடைத்து விட்டதாக கூடி, ஆடிப்பாடலாம்.

ஆனால், மேற்கித்திய கலாச்சாரம் என்பது இஸ்லாமிய கலாச்சாரத்திற்கு எதிரானது என்பதை விரைவில் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்.

அப்போது கடாஃபியின் அருமை உங்களுக்கு தெரிய வரும்.

லிபியாவின் எண்ணெய் வளம் சுரண்டப்படும்போது, கடாஃபியின் சேவை உங்கள் முன்வந்து செல்லும்.

லிபியாவின் ஸ்திரத்தன்மைக்கும், வளர்ச்சிக்கும் கடாஃபி ஆற்றிய பணிகளை நீங்கள் கட்டாயம் நினைத்து பார்க்ககூடிய நேரம் வரும்.

அப்போது, சாத்தான் அமெரிக்காவையும், பிசாசு இங்கிலாந்தையும் லிபிய முட்டாள்களாகிய நீங்கள் நீச்சயம் தூற்றுவீர்கள்.

மீண்டும் ஒருமுறை விடுதலைக்காக போராடுவீர்கள்.

அப்போது, கடாஃபி போன்ற ஒரு மாவீரன், அமெரிக்காவை தொடர்ந்து எதிர்த்த ஒரு மாவீரன் நமக்கு  கிடைக்க மாட்டானா என நீங்கள் நிச்சயம் எதிர்பார்ப்பீர்கள்.

கடைசியாக ஒரு வார்த்தை.

மாவீரன் கடாஃபி குறித்து ஊடகங்கள் பரப்பும் தவறான பொய்யான செய்திகளை யாரும் நம்ப வேண்டாம்.

இவையெல்லாம் மேற்கித்திய நாடுகளின் சூழ்ச்சியால் பரப்பப்படும் செய்திகள்.

உலக மக்களை மடையர்களாக மாற்ற வெளியிடப்படும் வதந்திகள்.

இதுபோன்ற செய்திகளால், கடாஃபி போன்ற மாவீரனின் புகழ் அழிக்க முடியாது. 


எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Sunday, October 23, 2011

இசை மனிதர் !

A.R.ரஹ்மான் !

எல்லாப் புகழும் இறைவனுக்கே!

வ்வொரு வெற்றியை சுவைக்கும்போதும்,  அல்லாஹ் ரக்கா ரஹ்மான் வெளிப்படுத்தும் வார்த்தைகள்தான் இவை.

அல்லாஹ் ரக்கா ரஹ்மான்,  தனது இசையால் புகழின் உச்சியை தொட்ட இந்தியர். தமிழர்.

எல்லாவற்றிற்கும் மேலாக நல்ல மனித நேயர்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், இப்போதும் தனது இசையின் மூலம்  உச்சியைத் தொட்டுக் கொண்டுதான் இருக்கிறார்.

புகழின் உச்சிக்கு சென்றாலும், அவரிடத்தில் சிறிதளவு கூட கர்வம் இல்லை.

பந்தா இல்லை.

எதுவும் என்னால் வந்தது இல்லை. எல்லாமே இறைவன் கொடுத்த சக்தி.

இறைவன் கொடுத்த ஆற்றலின்  மூலம்தான் நான் பயணிக்கிறேன்.

எனக்கு கிடைக்கும் அனைத்து வெற்றிகளுக்கும், புகழுக்கும்,  இறைவன் ஒருவன்தான் காரணம்.

ஒருசிறிய பொறி கிடைக்கும். அது இசையாக மாறி விடும். இது இறைவனால் கிடைக்கப் பெற்ற வரம்.

இப்படி ஒவ்வொரு நிமிடமும் தனது மனத்தில் நினைக்கும் ரஹ்மான், எதுவும் என்னால் இல்லை என்கிறார்.

அதனால்தான் எல்லாப் புகழும் இறைவனுக்கே ! என சொல்லி கொள்கிறேன் என்கிறார்.

சென்னையில் 1966 ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி பிறந்த ஏ.ஆர்.ரஹ்மானின்  இயற்பெயர் திலிப்குமார்.

இஸ்லாத்தை தழுவியதன் மூலம் அல்லாஹ் ரக்கா ரஹ்மானாக மாறினார்.

தனது 9வது வயதில் இசைப் பயணத்தைத் தொடங்கிய அவர், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா உள்ளிட்டோரிடம் சில காலம் பணியாற்றினார்.

பின்னர், விளம்பர படங்களுக்கு இசை அமைத்ததன் மூலம் மக்களின் கவனத்தை ரஹ்மான் கவர்ந்தார்.

இதனால், இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் தயாரிப்பில்,  இயக்குநர் மணிரத்னம் இயக்கி, 1992 ஆம் ஆண்டு வெளிவந்த ரோஜா திரைப்படத்திற்கு, முதல்முறையாக இசை அமைக்கும் வாய்ப்பு ரஹ்மானுக்கு கிடைத்தது.

சின்னச் சின்ன ஆசை,  போன்ற  மனதை வருடும் பாடல்களை தமது முதல் படத்திலேயே தந்ததன் மூலம் தேசிய விருது,  ரஹ்மானின்  வீட்டுக் கதவைத் தட்டியது.

இதனால்தான், தான் அறிமுகப்படுத்திய கலைஞர்களில் தன்னை மிகவும் கவர்ந்த தமிழர், இளைஞர் ஏ.ஆர்.ரஹ்மான்தான் என பெருமையுடன் கூறுகிறார் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்.

குட்டிப் பையன் போன்று இருந்த, இந்த இளைஞனிடம் இவ்வளவு திறமைகள் ஒளிந்து இருப்பது ஆச்சிரியம்தான்  என்கிறார் இயக்குநர் மணிரத்னம்.

எனவேதான் இயக்குநர் மணிரத்னம் இயக்கும் ஒவ்வொரு படத்திற்கும் இசையமைக்கும் பொறுப்பு ஏ.ஆர்.ரஹ்மானுக்கே வந்து சேருகிறது.

தில்சே,
குரு,
பம்பாய்,
ராவணன்,
ஆயுத எழுத்து

என இந்த பட்டியல் நீளுகிறது.

ஆயுத எழுத்து படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் அருமை.

அதில், நெஞ்சமெல்லாம்.... என்ற  ஒரு பாடலை மட்டும் கேட்டுப் பாருங்கள்.

ஏ.ஆர்.ரஹ்மானை கட்டித்தழுவி பாராட்ட உங்கள் மனம் துள்ளும்.


குரு படத்தில் வரும் ஆயிருரே..... பாடலை கேளுங்கள்.

உடனே எழுந்து நடனம் ஆட ஆசை பிறக்கும்.

ரங்கீலா என்ற ஹிந்திப் படத்திற்கு முதல் முறையாக இசை அமைத்து வட இந்தியக் கலைஞர்களின் கவனத்தை தமிழகத்தின் பக்கம் திருப்பினார் ஏ.ஆர்.ரஹ்மான்.

டால் என்ற இந்திப்படத்தின் இசை, அவரது இந்திய இசைப் பயணத்தில் ஒரு மகுடம். மைல்கல்.

இசைக்காகவே ஓடி,  பல கோடிகளை அள்ளிக்குவித்தப்  படம் அது.


இயக்குநர் சுபாஷ் கை போன்ற இசைப்பிரியர்களின் ஆசைகளை, எதிர்பார்ப்புகளை டால் படத்தின் இசை மூலம் பூர்த்தி செய்தார் ஏ.ஆர்.ரஹ்மான்.

அமீர்கானின் லகான் படம், இந்திய கலாசத்சாரத்தையும் பண்பாட்டையும் பிரதிபலிக்கும் வகையில் எடுக்கப்பட்ட படம்.

இந்திய கிராமிங்களில்  இசை எப்படி இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக, இந்த படத்தின் பாடல் அமைந்து இருக்கும்.

அதனால்தான், அந்த இசைக்கு ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தேசிய அங்கீகாரம் கிடைத்தது.

சுவதேஷ். இது ஷாருக்கான் நடித்த ஒரு இந்திப்படம்.

இதற்கும் இசை ஏ.ஆர்.ரஹ்மான்தான். 

இந்த படத்தின் பாடல்கள் மட்டுமல்ல, பின்னணி இசையை கேட்கும்போது, உண்மையிலேயே கண்களில் கண்ணீர் வரும்.

இந்திய கிராமங்கள் இன்னும் வளர்ச்சி அடையாமல், மக்கள் வறுமையிலும், வேதனையிலும் வாழ்வதை இந்தப்படம் படம் பிடித்துக் காட்டும்.

அதற்கு ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, மனதை நெருடச் செய்யும்.

படத்தை பார்த்துவிட்டு, திரையரங்கை விட்டு வெளியே வரும்போது, மனதில் இனம் புரியாத ஒரு பிரிதல் ஏற்படும்.

இப்படி இதயங்களை கவரும் பாடல்களை இசையில் கோர்த்ததால், ஜாவீத் அக்தர், குல்சார் போன்ற ஜாம்பவான் கவிஞர்கள், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் தங்கள் பாடல்கள் வருமா என எதிர்பார்க்கும் நிலை உருவானது.

இயக்குநர் ஷங்கர் இயக்கிய  ஜென்டில்மேன், சீன்ஸ், காதலன், இந்தியன், பாய்ஸ்., முதல்வன், நாயக்., சிவாஜி, எந்திரன் ஆகிய படங்கள், கதைக்காகவும் இசைக்காகவும் ஓடிய படங்கள்.

இந்த படங்களில் வரும் அனைத்துப் பாடல்களும் இன்றும் காதுகளில்  ரீங்காரம் செய்துக் கொண்டே இருக்கின்றன. 

ரோஜா படத்திற்கு பிறகு, ரஹ்மானின் வளர்ச்சியில் சிறிது தொய்வு ஏற்பட்டது.

மேலாதிக்க சக்திகள், ஒரு தமிழன், அதுவும் ஒரு இஸ்லாமியன் இப்படி அபார வளர்ச்சி பெறுவதை விரும்பவில்லை.

மறைமுகமாக தடைகளை ஏற்படுத்தினர்.

அப்போதுதான் வந்தது இயக்குநர் ஷங்கரின் ஜென்டில்மென்.

ஜென்டில்மென் படத்தில் வரும் சிக்கு புக்கு ரயிலே, உசிலம்பட்டி பெண்குட்டி போன்ற காலத்தால் அழிக்க முடியாத பாடல்கள்,   இளைஞர்களை சுண்டி இழுத்தன.

இசைப்புயலின் இசை உலகம் முழுவதும் பேசப்பட்டது.

இதனால், மறைமுக எதிர்ப்புகள் காணாமல் போயின.

பொறாமைக்காரர்கள் அதிர்ச்சி அடைந்து திகைத்து நின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப் பயணத்தை, வளர்ச்சியை அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை.

இதனால்தான் காவியக் கவிஞர் வாலி ஒருமுறை சொன்னார்,

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.ருக்கு பிறகு, தமிழக மக்களின், ஏன் உலக மக்களின் நாடித்துடிப்பை நன்கு அறிந்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். இதன் காரணமாக அவர் நடத்தும் இசை நிகழ்ச்சிகளுக்கு வௌளம் போன்று மக்கள் கூடுகின்றனர்.

இது கவிஞர் வாலியின் புகழாரம்.

மின்சார கனவு ! இது ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து தேசிய விருது பெற்ற தமிழ் திரைப்படம்.


இந்த படத்தில் வரும் தங்க தாமரை மகளே.... பாடிய எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கும் சிறந்த பாடகருக்கான விருது கிடைத்தது.

இதைக்குறித்து கருத்து தெரிவித்த பாலசுப்ரமணியம், இதற்கு எல்லாமே ரஹ்மான்தான் காரணம் என்றார்.

ரஹ்மான் சொல்லிக் கொடுத்ததைதான் நான் பாடினேன். இந்த விருதுக்கு உரியவர் ரஹ்மான்தான் என்றும் எஸ்.பி.பி. தெரிவித்தார்.

இந்த பாடலை கேட்பவர்கள் மீண்டும் ஒருமுறை அதனை கேட்காமல் இருப்பதில்லை.

அப்படி ஒரு தாக்கம் இந்த பாடலில் இருக்கும்.

இசையில் புது புது நடையை புகுத்துவதில் ரஹ்மானுக்கு என்றும் தணியாத ஆசை.

அதனால்தான், புது புது டெக்னிக்குகளை தனது இசையில் புகுத்திக் கொண்டே இருக்கிறார்.

விண்ணைத்தாண்டி வருவாயோ படத்தில் வரும் ஓசானா பாடல் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

தாயின் மீது என்றும் அன்பு கொண்ட ரஹ்மான், நியூ படத்தில் காலையில் எழுந்ததும்.... என்ற வரிகளுடன் தொடங்கும் பாடலில், தாயின் பெருமைகளை மனதில் பதியும் வண்ணம் இசையமைத்து, கண்களில் கண்ணீரை வரவழைத்துவிடுவார்.

இசை ஒரு கடல். அதில் புதையல்கள் குவிந்து கிடக்கின்றன.

இதை நன்றாக புரிந்துக் கொண்டுள்ள, ஏ.ஆர்.ரஹ்மான், அந்த புதையல்களை தேடிக் கொண்டே இருக்கிறார்.

அந்த தேடல்தான், அவரின் இசைக்கு வெற்றியாக அமைந்துக் கொண்டு இருக்கிறது.

அதனால்தான், உலக இசை ஜாம்பான்களான Ron Fair, Baz Luhrmann, உள்ளிடடோர், உலகில்   தற்போது உலகில் வாழும் இசைக்கலைஞர்களில்,  எல்லா மொழிகளிலும் இசையமைக்கும் திறமை  ஏ.ஆர்.ரஹ்மானிடம் மட்டுமே உள்ளது  என புகழ்ந்துள்ளனர்.

ரஹ்மான் இசையமைத்து விரைவில் வெளிவர இருக்கும் இந்திப்படம் ராக்ஸ்.

அதில் பல புதிய தேடல்களை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார் ரஹ்மான்.

கவாலி இசைப்பாடல்கள் தற்போது மெல்ல மெல்ல மறைந்து வரும் நிலையில், அதற்கு புத்துணர்ச்சியை கொடுத்துள்ளார் ரஹ்மான்.

ராக்ஸ் படத்தில் வரும் கவாலி பாடலை கேட்டுப் பாருங்கள்.

உங்களை நீங்கள் மறந்து போவீர்கள்.

அதன் இசையில் லயித்து போய் விடுவீர்கள்.

தனது இசையால் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்துள்ள ரஹ்மான்,   தாய் மண்ணே வணக்கம் என்ற பாடலுக்கு இசை அமைத்து நாடு முழுவதிலும் உள்ள மக்களிடம் தேசிய ஈர்ப்பை ஏற்படுத்தினார்.

தமிழ், ஹிந்தி என நான்கு முறை தேசிய விருதுகளும், ஐந்து முறை தமிழக அரசின் விருதுகளையும் பெற்றிருக்கிறார் ரஹ்மான்.  

திரை உலகின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருதை வென்ற முதல் தமிழர் என்ற பெருமையை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பெற்றார்.

ஸ்லம்டாக் மில்லினியர் என்ற ஆங்கில திரைப்படத்திற்கு இசை அமைத்ததற்காக அவருக்கு கடந்த 2009 ஆம் பிரப்ரவரி மாதம் 23 ஆம் தேதி இரண்டு ஆஸ்கர் விருதுகள் கிடைத்தன.

இதன்மூலம் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இன்றளவும்  வாழ்த்துகள் குவிந்தக் கொண்டே இருக்கின்றன.

இரண்டு விருதுகளை பெற்றபோது, ரஹ்மான் சொன்ன வார்த்தைகள், எல்லாப் புகழும் இறைவனுக்கே !

என்னுடன் என் தாய் இருக்கிறார்.

இதுவே எனது வெற்றிக்கு காரணம் என எந்த துள்ளளும் இல்லாமல் அமைதியாக சொன்னார் ரஹ்மான்.

இப்படி, இந்திய இசையை உலகத்திற்கு கொண்டு சேர்த்த இந்த இளைஞனின் இசைக்கு மயங்காதவர்கள் உலகில் தற்போது இருக்க முடியாது.

அப்படி ஒருவர் இருக்கிறார் என்றால், அவர் மனிதனாக இருக்க முடியாது.

தற்போது ஒரு படத்திற்கு இசையமைத்து அதில் வெற்றி பெற்றாலேயே, பலர் துள்ளி குதிக்கின்றனர்.

பெரிய ஜாம்பவான்கள் போன்று பேட்டிகளை கொடுத்து வருகின்றனர்.

பல வெற்றிகளை குவித்து ரஹ்மானோ, இது எனக்கு கிடைத்த வெற்றி இல்லை. இறைவனுக்கு கிடைத்த வெற்றி.

எனவே, புகழ் அனைத்தும் இறைவனுக்கே என சொல்லி, அமைதியாக தனது பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

தனது இசைப்பயணம் தன்னுடன் மட்டுமே நிறைவு பெற்றுவிடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில், சென்னை கோடம்பாக்கத்தில் சர்வேத அளவில் புகழ் பெறும் வகையில் இசைப்பள்ளி நடத்தி வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

பன்னாட்டு அளவில் பல சமூக சேவைகளிலும் இசைப்புயலின் கவனம் திரும்பி இருப்பது பலரது புருவங்களை உயர்த்த செய்கின்றன.

இசையில் பல வெற்றிகளை குவித்து வரும் இசைப்யுல் ஏ.ஆர்.ரஹ்மான், ஆன்மீகத்திலும் அதிக ஈடுபாடு கொண்டவர்.

இஸ்லாத்தை தழுவிய அவர், உண்மையான இஸ்லாமியராகவே வாழ்ந்து வருகிறார்.

ஐந்து வேளை தொழுகை, ரமலான் நோன்பு, ஹஜ் பயணம், என இஸ்லாத்தின் அனைத்து கடமைகளையும் சரியாக நிறைவேற்றி வருகிறார் ரஹ்மான்.

இந்த சாதனை இளைஞனின் வாழ்க்கையில் இருந்து நமக்கு பல படிப்பினைகள் கிடைக்கின்றன.

அது,

மனதை ஒருநிலைப்படுத்தி ஓயாமல் உண்மையாகவே உழைக்கும்போது வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

வெற்றிகள் குவியும்போது, கர்வம் கொள்ளாமல், தன்னடக்கத்துடன் இருக்க வேண்டும்.

வெற்றிகளை கண்டு பொறாமை கொள்பவர்களின் வசை மொழிகளை காதில் வாங்கிக் கொள்ளவே கூடாது.

அதற்கு பதில் கூறிக் கொண்டு,  நேரத்தை வீணடிக்கக் கூடாது.
ஒரு புன்சிரிப்பு மட்டும் உதிர்த்துவிட்டு, நமது பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்.

வெற்றிகளை குவிக்கும்போதும், இந்த புன்சிரிப்பு மட்டுமே போதும்.

இவை, சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு,  வெற்றியாளர், சாதனையாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கற்றுத்தரும் பாடங்கள். 

இவற்றை இளைஞர்கள் தங்களது மனதில் உள்வாங்கிக் கொண்டால், வெற்றிகளை குவிக்கலாம்.

வெற்றிகளை குவிக்கும்போது, அமைதியாக வாழலாம்.

வெற்றிகளை சுவைக்கும்போது, ஏ.ஆர்.ரஹ்மான் சொல்லும்  வார்த்தைகளை,  இளைஞர்களும்  வெளிப்படுத்தாலம்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே !


எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்