Sunday, October 23, 2011

இசை மனிதர் !

A.R.ரஹ்மான் !

எல்லாப் புகழும் இறைவனுக்கே!

வ்வொரு வெற்றியை சுவைக்கும்போதும்,  அல்லாஹ் ரக்கா ரஹ்மான் வெளிப்படுத்தும் வார்த்தைகள்தான் இவை.

அல்லாஹ் ரக்கா ரஹ்மான்,  தனது இசையால் புகழின் உச்சியை தொட்ட இந்தியர். தமிழர்.

எல்லாவற்றிற்கும் மேலாக நல்ல மனித நேயர்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், இப்போதும் தனது இசையின் மூலம்  உச்சியைத் தொட்டுக் கொண்டுதான் இருக்கிறார்.

புகழின் உச்சிக்கு சென்றாலும், அவரிடத்தில் சிறிதளவு கூட கர்வம் இல்லை.

பந்தா இல்லை.

எதுவும் என்னால் வந்தது இல்லை. எல்லாமே இறைவன் கொடுத்த சக்தி.

இறைவன் கொடுத்த ஆற்றலின்  மூலம்தான் நான் பயணிக்கிறேன்.

எனக்கு கிடைக்கும் அனைத்து வெற்றிகளுக்கும், புகழுக்கும்,  இறைவன் ஒருவன்தான் காரணம்.

ஒருசிறிய பொறி கிடைக்கும். அது இசையாக மாறி விடும். இது இறைவனால் கிடைக்கப் பெற்ற வரம்.

இப்படி ஒவ்வொரு நிமிடமும் தனது மனத்தில் நினைக்கும் ரஹ்மான், எதுவும் என்னால் இல்லை என்கிறார்.

அதனால்தான் எல்லாப் புகழும் இறைவனுக்கே ! என சொல்லி கொள்கிறேன் என்கிறார்.

சென்னையில் 1966 ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி பிறந்த ஏ.ஆர்.ரஹ்மானின்  இயற்பெயர் திலிப்குமார்.

இஸ்லாத்தை தழுவியதன் மூலம் அல்லாஹ் ரக்கா ரஹ்மானாக மாறினார்.

தனது 9வது வயதில் இசைப் பயணத்தைத் தொடங்கிய அவர், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா உள்ளிட்டோரிடம் சில காலம் பணியாற்றினார்.

பின்னர், விளம்பர படங்களுக்கு இசை அமைத்ததன் மூலம் மக்களின் கவனத்தை ரஹ்மான் கவர்ந்தார்.

இதனால், இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் தயாரிப்பில்,  இயக்குநர் மணிரத்னம் இயக்கி, 1992 ஆம் ஆண்டு வெளிவந்த ரோஜா திரைப்படத்திற்கு, முதல்முறையாக இசை அமைக்கும் வாய்ப்பு ரஹ்மானுக்கு கிடைத்தது.

சின்னச் சின்ன ஆசை,  போன்ற  மனதை வருடும் பாடல்களை தமது முதல் படத்திலேயே தந்ததன் மூலம் தேசிய விருது,  ரஹ்மானின்  வீட்டுக் கதவைத் தட்டியது.

இதனால்தான், தான் அறிமுகப்படுத்திய கலைஞர்களில் தன்னை மிகவும் கவர்ந்த தமிழர், இளைஞர் ஏ.ஆர்.ரஹ்மான்தான் என பெருமையுடன் கூறுகிறார் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்.

குட்டிப் பையன் போன்று இருந்த, இந்த இளைஞனிடம் இவ்வளவு திறமைகள் ஒளிந்து இருப்பது ஆச்சிரியம்தான்  என்கிறார் இயக்குநர் மணிரத்னம்.

எனவேதான் இயக்குநர் மணிரத்னம் இயக்கும் ஒவ்வொரு படத்திற்கும் இசையமைக்கும் பொறுப்பு ஏ.ஆர்.ரஹ்மானுக்கே வந்து சேருகிறது.

தில்சே,
குரு,
பம்பாய்,
ராவணன்,
ஆயுத எழுத்து

என இந்த பட்டியல் நீளுகிறது.

ஆயுத எழுத்து படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் அருமை.

அதில், நெஞ்சமெல்லாம்.... என்ற  ஒரு பாடலை மட்டும் கேட்டுப் பாருங்கள்.

ஏ.ஆர்.ரஹ்மானை கட்டித்தழுவி பாராட்ட உங்கள் மனம் துள்ளும்.


குரு படத்தில் வரும் ஆயிருரே..... பாடலை கேளுங்கள்.

உடனே எழுந்து நடனம் ஆட ஆசை பிறக்கும்.

ரங்கீலா என்ற ஹிந்திப் படத்திற்கு முதல் முறையாக இசை அமைத்து வட இந்தியக் கலைஞர்களின் கவனத்தை தமிழகத்தின் பக்கம் திருப்பினார் ஏ.ஆர்.ரஹ்மான்.

டால் என்ற இந்திப்படத்தின் இசை, அவரது இந்திய இசைப் பயணத்தில் ஒரு மகுடம். மைல்கல்.

இசைக்காகவே ஓடி,  பல கோடிகளை அள்ளிக்குவித்தப்  படம் அது.


இயக்குநர் சுபாஷ் கை போன்ற இசைப்பிரியர்களின் ஆசைகளை, எதிர்பார்ப்புகளை டால் படத்தின் இசை மூலம் பூர்த்தி செய்தார் ஏ.ஆர்.ரஹ்மான்.

அமீர்கானின் லகான் படம், இந்திய கலாசத்சாரத்தையும் பண்பாட்டையும் பிரதிபலிக்கும் வகையில் எடுக்கப்பட்ட படம்.

இந்திய கிராமிங்களில்  இசை எப்படி இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக, இந்த படத்தின் பாடல் அமைந்து இருக்கும்.

அதனால்தான், அந்த இசைக்கு ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தேசிய அங்கீகாரம் கிடைத்தது.

சுவதேஷ். இது ஷாருக்கான் நடித்த ஒரு இந்திப்படம்.

இதற்கும் இசை ஏ.ஆர்.ரஹ்மான்தான். 

இந்த படத்தின் பாடல்கள் மட்டுமல்ல, பின்னணி இசையை கேட்கும்போது, உண்மையிலேயே கண்களில் கண்ணீர் வரும்.

இந்திய கிராமங்கள் இன்னும் வளர்ச்சி அடையாமல், மக்கள் வறுமையிலும், வேதனையிலும் வாழ்வதை இந்தப்படம் படம் பிடித்துக் காட்டும்.

அதற்கு ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, மனதை நெருடச் செய்யும்.

படத்தை பார்த்துவிட்டு, திரையரங்கை விட்டு வெளியே வரும்போது, மனதில் இனம் புரியாத ஒரு பிரிதல் ஏற்படும்.

இப்படி இதயங்களை கவரும் பாடல்களை இசையில் கோர்த்ததால், ஜாவீத் அக்தர், குல்சார் போன்ற ஜாம்பவான் கவிஞர்கள், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் தங்கள் பாடல்கள் வருமா என எதிர்பார்க்கும் நிலை உருவானது.

இயக்குநர் ஷங்கர் இயக்கிய  ஜென்டில்மேன், சீன்ஸ், காதலன், இந்தியன், பாய்ஸ்., முதல்வன், நாயக்., சிவாஜி, எந்திரன் ஆகிய படங்கள், கதைக்காகவும் இசைக்காகவும் ஓடிய படங்கள்.

இந்த படங்களில் வரும் அனைத்துப் பாடல்களும் இன்றும் காதுகளில்  ரீங்காரம் செய்துக் கொண்டே இருக்கின்றன. 

ரோஜா படத்திற்கு பிறகு, ரஹ்மானின் வளர்ச்சியில் சிறிது தொய்வு ஏற்பட்டது.

மேலாதிக்க சக்திகள், ஒரு தமிழன், அதுவும் ஒரு இஸ்லாமியன் இப்படி அபார வளர்ச்சி பெறுவதை விரும்பவில்லை.

மறைமுகமாக தடைகளை ஏற்படுத்தினர்.

அப்போதுதான் வந்தது இயக்குநர் ஷங்கரின் ஜென்டில்மென்.

ஜென்டில்மென் படத்தில் வரும் சிக்கு புக்கு ரயிலே, உசிலம்பட்டி பெண்குட்டி போன்ற காலத்தால் அழிக்க முடியாத பாடல்கள்,   இளைஞர்களை சுண்டி இழுத்தன.

இசைப்புயலின் இசை உலகம் முழுவதும் பேசப்பட்டது.

இதனால், மறைமுக எதிர்ப்புகள் காணாமல் போயின.

பொறாமைக்காரர்கள் அதிர்ச்சி அடைந்து திகைத்து நின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப் பயணத்தை, வளர்ச்சியை அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை.

இதனால்தான் காவியக் கவிஞர் வாலி ஒருமுறை சொன்னார்,

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.ருக்கு பிறகு, தமிழக மக்களின், ஏன் உலக மக்களின் நாடித்துடிப்பை நன்கு அறிந்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். இதன் காரணமாக அவர் நடத்தும் இசை நிகழ்ச்சிகளுக்கு வௌளம் போன்று மக்கள் கூடுகின்றனர்.

இது கவிஞர் வாலியின் புகழாரம்.

மின்சார கனவு ! இது ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து தேசிய விருது பெற்ற தமிழ் திரைப்படம்.


இந்த படத்தில் வரும் தங்க தாமரை மகளே.... பாடிய எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கும் சிறந்த பாடகருக்கான விருது கிடைத்தது.

இதைக்குறித்து கருத்து தெரிவித்த பாலசுப்ரமணியம், இதற்கு எல்லாமே ரஹ்மான்தான் காரணம் என்றார்.

ரஹ்மான் சொல்லிக் கொடுத்ததைதான் நான் பாடினேன். இந்த விருதுக்கு உரியவர் ரஹ்மான்தான் என்றும் எஸ்.பி.பி. தெரிவித்தார்.

இந்த பாடலை கேட்பவர்கள் மீண்டும் ஒருமுறை அதனை கேட்காமல் இருப்பதில்லை.

அப்படி ஒரு தாக்கம் இந்த பாடலில் இருக்கும்.

இசையில் புது புது நடையை புகுத்துவதில் ரஹ்மானுக்கு என்றும் தணியாத ஆசை.

அதனால்தான், புது புது டெக்னிக்குகளை தனது இசையில் புகுத்திக் கொண்டே இருக்கிறார்.

விண்ணைத்தாண்டி வருவாயோ படத்தில் வரும் ஓசானா பாடல் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

தாயின் மீது என்றும் அன்பு கொண்ட ரஹ்மான், நியூ படத்தில் காலையில் எழுந்ததும்.... என்ற வரிகளுடன் தொடங்கும் பாடலில், தாயின் பெருமைகளை மனதில் பதியும் வண்ணம் இசையமைத்து, கண்களில் கண்ணீரை வரவழைத்துவிடுவார்.

இசை ஒரு கடல். அதில் புதையல்கள் குவிந்து கிடக்கின்றன.

இதை நன்றாக புரிந்துக் கொண்டுள்ள, ஏ.ஆர்.ரஹ்மான், அந்த புதையல்களை தேடிக் கொண்டே இருக்கிறார்.

அந்த தேடல்தான், அவரின் இசைக்கு வெற்றியாக அமைந்துக் கொண்டு இருக்கிறது.

அதனால்தான், உலக இசை ஜாம்பான்களான Ron Fair, Baz Luhrmann, உள்ளிடடோர், உலகில்   தற்போது உலகில் வாழும் இசைக்கலைஞர்களில்,  எல்லா மொழிகளிலும் இசையமைக்கும் திறமை  ஏ.ஆர்.ரஹ்மானிடம் மட்டுமே உள்ளது  என புகழ்ந்துள்ளனர்.

ரஹ்மான் இசையமைத்து விரைவில் வெளிவர இருக்கும் இந்திப்படம் ராக்ஸ்.

அதில் பல புதிய தேடல்களை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார் ரஹ்மான்.

கவாலி இசைப்பாடல்கள் தற்போது மெல்ல மெல்ல மறைந்து வரும் நிலையில், அதற்கு புத்துணர்ச்சியை கொடுத்துள்ளார் ரஹ்மான்.

ராக்ஸ் படத்தில் வரும் கவாலி பாடலை கேட்டுப் பாருங்கள்.

உங்களை நீங்கள் மறந்து போவீர்கள்.

அதன் இசையில் லயித்து போய் விடுவீர்கள்.

தனது இசையால் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்துள்ள ரஹ்மான்,   தாய் மண்ணே வணக்கம் என்ற பாடலுக்கு இசை அமைத்து நாடு முழுவதிலும் உள்ள மக்களிடம் தேசிய ஈர்ப்பை ஏற்படுத்தினார்.

தமிழ், ஹிந்தி என நான்கு முறை தேசிய விருதுகளும், ஐந்து முறை தமிழக அரசின் விருதுகளையும் பெற்றிருக்கிறார் ரஹ்மான்.  

திரை உலகின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருதை வென்ற முதல் தமிழர் என்ற பெருமையை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பெற்றார்.

ஸ்லம்டாக் மில்லினியர் என்ற ஆங்கில திரைப்படத்திற்கு இசை அமைத்ததற்காக அவருக்கு கடந்த 2009 ஆம் பிரப்ரவரி மாதம் 23 ஆம் தேதி இரண்டு ஆஸ்கர் விருதுகள் கிடைத்தன.

இதன்மூலம் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இன்றளவும்  வாழ்த்துகள் குவிந்தக் கொண்டே இருக்கின்றன.

இரண்டு விருதுகளை பெற்றபோது, ரஹ்மான் சொன்ன வார்த்தைகள், எல்லாப் புகழும் இறைவனுக்கே !

என்னுடன் என் தாய் இருக்கிறார்.

இதுவே எனது வெற்றிக்கு காரணம் என எந்த துள்ளளும் இல்லாமல் அமைதியாக சொன்னார் ரஹ்மான்.

இப்படி, இந்திய இசையை உலகத்திற்கு கொண்டு சேர்த்த இந்த இளைஞனின் இசைக்கு மயங்காதவர்கள் உலகில் தற்போது இருக்க முடியாது.

அப்படி ஒருவர் இருக்கிறார் என்றால், அவர் மனிதனாக இருக்க முடியாது.

தற்போது ஒரு படத்திற்கு இசையமைத்து அதில் வெற்றி பெற்றாலேயே, பலர் துள்ளி குதிக்கின்றனர்.

பெரிய ஜாம்பவான்கள் போன்று பேட்டிகளை கொடுத்து வருகின்றனர்.

பல வெற்றிகளை குவித்து ரஹ்மானோ, இது எனக்கு கிடைத்த வெற்றி இல்லை. இறைவனுக்கு கிடைத்த வெற்றி.

எனவே, புகழ் அனைத்தும் இறைவனுக்கே என சொல்லி, அமைதியாக தனது பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

தனது இசைப்பயணம் தன்னுடன் மட்டுமே நிறைவு பெற்றுவிடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில், சென்னை கோடம்பாக்கத்தில் சர்வேத அளவில் புகழ் பெறும் வகையில் இசைப்பள்ளி நடத்தி வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

பன்னாட்டு அளவில் பல சமூக சேவைகளிலும் இசைப்புயலின் கவனம் திரும்பி இருப்பது பலரது புருவங்களை உயர்த்த செய்கின்றன.

இசையில் பல வெற்றிகளை குவித்து வரும் இசைப்யுல் ஏ.ஆர்.ரஹ்மான், ஆன்மீகத்திலும் அதிக ஈடுபாடு கொண்டவர்.

இஸ்லாத்தை தழுவிய அவர், உண்மையான இஸ்லாமியராகவே வாழ்ந்து வருகிறார்.

ஐந்து வேளை தொழுகை, ரமலான் நோன்பு, ஹஜ் பயணம், என இஸ்லாத்தின் அனைத்து கடமைகளையும் சரியாக நிறைவேற்றி வருகிறார் ரஹ்மான்.

இந்த சாதனை இளைஞனின் வாழ்க்கையில் இருந்து நமக்கு பல படிப்பினைகள் கிடைக்கின்றன.

அது,

மனதை ஒருநிலைப்படுத்தி ஓயாமல் உண்மையாகவே உழைக்கும்போது வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

வெற்றிகள் குவியும்போது, கர்வம் கொள்ளாமல், தன்னடக்கத்துடன் இருக்க வேண்டும்.

வெற்றிகளை கண்டு பொறாமை கொள்பவர்களின் வசை மொழிகளை காதில் வாங்கிக் கொள்ளவே கூடாது.

அதற்கு பதில் கூறிக் கொண்டு,  நேரத்தை வீணடிக்கக் கூடாது.
ஒரு புன்சிரிப்பு மட்டும் உதிர்த்துவிட்டு, நமது பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்.

வெற்றிகளை குவிக்கும்போதும், இந்த புன்சிரிப்பு மட்டுமே போதும்.

இவை, சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு,  வெற்றியாளர், சாதனையாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கற்றுத்தரும் பாடங்கள். 

இவற்றை இளைஞர்கள் தங்களது மனதில் உள்வாங்கிக் கொண்டால், வெற்றிகளை குவிக்கலாம்.

வெற்றிகளை குவிக்கும்போது, அமைதியாக வாழலாம்.

வெற்றிகளை சுவைக்கும்போது, ஏ.ஆர்.ரஹ்மான் சொல்லும்  வார்த்தைகளை,  இளைஞர்களும்  வெளிப்படுத்தாலம்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே !


எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

1 comment:

Unknown said...

அருமையான தகவல் நண்பரே இசைக்கடல் இசை அரசன் நம் ரஹ்மான்