Thursday, October 6, 2011

ஹலிம் !

 ஹலிம் !ஐதராபாத் ஹலிம்  சாப்பிட்டு இருக்கியா அஜீஸ் என ஒருநாள் என்னைப் பார்த்து  கேட்டார்  எம்.எல்.ஏ. அப்துல் பாசித்.

அரசினர் தோட்டத்தில் இருக்கும் எம்.ஏல்.ஏ. ஹாஸ்டலில் வாணியம்பாடி எம்.எல்.ஏ. அப்துல் பாசித் அறையில் தங்கியிருந்தேன்.

எப்போதும் நகைச்சுவை உணர்வுடன் பேசும் அப்துல் பாசித், ஐதராபாத் ஹலிம்  குறித்து திடீரென கேட்டதால், எனக்கு விளங்கவில்லை.

ஐதராபாத் நவாப்கள் சாப்பிட்ட உணவுப்பா அது. என சொல்லி சிரித்தார்.

அதோமட்டும் நிற்காமல் ஒருநாள் சென்னை, திருவல்லிக்கேணி பெரிய பள்ளிவாசல் பகுதியில் இருந்த கடைக்கு  என்னை அழைத்துச் சென்று ஹலிமை வாங்கி கொடுத்து சாப்பிட சொன்னார்.


முதன் முதலாக ஹலிமை சாப்பிட்டபோதே, அதன் சுவை எனக்கு பிடித்து விட்டது. சாப்பிட்ட அன்றே  உடம்பில் ஒருவித  புதிய தெம்பு ஏற்பட்டதை உணர முடிந்தது.

பிறகு பலமுறை, திருவல்லிக்கேணிக்கு சென்று,  ஹலிமை வாங்கி  சுவைத்தேன். இப்போதும் அடிக்கடி சுவைப்பதை வழக்கமாக கொண்டுள்ளேன்.

நண்பர்கள் ஹரி, முரளி ஆகியோரை ஒரிருமுறை அழைத்து சென்று ஹலிமை வாங்கிக் கொடுத்து சாப்பிட்ட வைத்தேன்.

சரி. ஹலிமில் அப்படி என்னதான் இருக்கிறது?

கோதுமை, இறைச்சி, சக்தியான மூலப்பொருட்கள், மசாலா ஆகியவற்றின் ஒரு கலவைதான்  ஹலிம்.


சுமார் 7 மணி நேரம் வரை அடுப்பில் வைத்து  சமையல் செய்து, கோந்து மாதிரி தயாரிக்கப்படும்  ஹலிம்,  வாடிக்கையாளர்களுக்கு சுடச்சுட பரிமாறப்படுகிறது.

இதனுடன் ஷாமீயாவை என்று மற்றொரு உணவுவையும் சேர்த்துக் கொண்டால் இன்னும் சுவை கூடிவிடுகிறது.

ஹலிமை சாப்பிட்டவுடன், வயிறு நிரம்பிவிடுகிறது.  சிறிது நேரத்திலேயே  உடம்பில் ஒருவித புதிய தெம்பு ஏற்படுகிறது.
இதை,  இரவில் மிக நன்றாகவே உணர முடிகிறது.

முதன்முதலாக ஹலிமை சாப்பிட்ட நண்பர் ஹரி, மறுநாள் போன் செய்து, சார், நீங்கள் சொன்னது உண்மைதான் சார். என சிரித்துக் கொண்டே சொன்னார்.

இப்படி ஒரு ஹெல்த்தியான ஒரு உணவுதான் ஹலிம்.


அரேபிய நாட்டு உணவுவான ஹலிம், முகலாயர்களின் ஆட்சி காலத்தில், ஆப்கானிஸ்தான் வழியாக  முதன் முதலாக இந்தியாவுக்கு  வந்து சேர்ந்தது.

அன்று முதல் இன்று வரை, வடமாநில மக்களால் ஹலிம் விரும்பி சுவைக்கப்பட்டு வருகிறது.

வடமாநிலங்களில் அதிகளவு சாப்பிட்டு வந்தாலும், ஐதராபாத் நகரில் தயாரிக்கப்படும் ஹலிமுக்குதான் கிராக்கி அதிகம்.

ஐதராபாத் சார்மீனார் பகுதியில் இருக்கும் கடைகளில் மாலை நேரங்களில் விற்கப்படும் ஹலிமை வாங்கிச் சாப்பிடுவதற்காகவே மக்கள் கூட்டம் அலை மோதும்.

ஐதராபாத்தில் மட்டும் ஹலிம் தயாரிப்பில் 6 ஆயிரம் பேர் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதனால், நாள் ஒன்றுக்கு 100 கோடி ரூபாய் வரை வணிகம் நடைபெறுகிறது.

ரம்ஜான் மாதத்தில் இரவு பகல் என கணக்கு பார்க்காமல், 24 மணி நேரமும் ஹலிம் தயாரிக்கப்பட்டு,  மிக அழகாக பார்சல் செய்யப்பட்டு நாடு முழுவதும்  அனுப்பி வைக்கப்படுகிறது.

தமிழகத்தில்,  இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் சென்னை உள்ளிட்ட ஒருசில பகுதிகளில்  இடங்களில் மட்டுமே, ஹலிம் கிடைக்கிறது.


இஸ்லாமியர்களிடையே விரும்பி சாப்பிடப்படும் இந்த உணவு, தற்போது அனைத்துத்தரப்பு மக்கள் மத்தியிலும் விரும்பப்படுகிறது.

இதன் சுவை, உடம்பிற்கு கிடைக்கும் புதிய தெம்பு, உற்சாகம் ஆகியவற்றால் கவரப்படும் இளைஞர்கள், ஹலிமை நாடிச் செல்வது அதிகரித்துள்ளது.

இனிப்பு, காரம் என இரண்டு சுவைகளில் ஹலிம் கிடைத்தாலும், மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுவது காரச்சுவையான ஹலிமைதான்.

இஸ்லாமியர்களின் திருமணங்களின்போது,  ஹலிம் உணவு அதிகளவு பரிமாறப்படுவது  இன்றும் வழக்கமாக உள்ளது.

சுவையான ஐதராபாத் ஹலிம் உணவுக்கு தற்போது, காப்புரிமையும் கிடைத்து உள்ளது.

ஐதராபாத் ஹலிம் என்ற பெயரில் பிற இடங்களில் ஹலிமை  இனி விற்க முடியாது.


அப்படியே விற்றாலும், அது ஒரிஜனல் ஹலிமாக கருதப்படாது.

இந்தியர்களுக்கு உணவு வகைகளின் மீது எப்போதும் ஓர் அலாதி பிரியம் உண்டு.

பலவகை உணவுகளை சுவைத்து பார்ப்பதில், நம்மில்  பலருக்கு ஆர்வம் அதிகம்.

அப்படிப்பட்டவர்கள் ஹலிமை சுவைக்காமல் இருப்பதில்லை.

குண்டு உடல் கொண்டவர்கள் தொடர்ந்து ஹலிம் சாப்பிட்டு வந்தால், உடல் இளைக்க வாய்ப்பு உண்டு.

இது அனுபவப்பட்டவர்களின் வார்த்தைகள்.

ஐதராபாத் பிரியாணிக்கு பிறகு,  தற்போது ஐதராபாத் ஹலிம் நாடு முழுவதும் பிரபலம் அடைந்து வருகிறது.

அதற்கு முக்கிய காரணம், அனைத்துத் தரப்பு மக்களால், ஹலி¦ம் விரும்பி சாப்பிடப்படுவதுதான்.

இதனால்தான், கூரியர் சர்வீஸ் மூலமும், இந்தியாவின் பிற இடங்களுக்கு ஐதராபாத்தில் இருந்து ஹலி¦ம் அனுப்பி வைக்கப்படுகிறது.


இப்படி சுவையான விஷயங்கள் கொண்டு இந்த ஆரோக்கியமான  ஹலிமை ஒருமுறை நீங்களும் சுவைத்துதான் பாருங்களேன் !

பிறகு ஹலிமை நீங்கள் அடிக்கடி  நாடி செல்வது உறுதி !எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: