Tuesday, October 4, 2011

ஹரி !

V.ஹரிகிருஷ்ணன் என்று  அழகான பெயர்  அவருக்கு இருந்தாலும், நாங்கள் ஹரி என்றே செல்லமாக அழைப்பது வழக்கம். 

ஒல்லியான உருவம். நீட்டாக உடை அணிந்துக் கொண்டு, ஒரு கம்பீரமான நடை. முகத்தில் எப்போதும் ஒருவித புன்சிரிப்பு.

இது ஹரியின் அடையாளங்கள்.

பந்தா இல்லாத மனிதர். எல்லோரிடமும் சகஜமாக பழகிவிடும் பண்பாளர்.

மனதில் எதையும் மறைக்காமல், எதைப்பற்றியும், யாரைப்பற்றியும் கவலைப்படாமல் பேசிவிடும் குணம் கொண்டவர்தான் ஹரி.

சன் தொலைக்காட்சியில் நான் முதன் முதலில் சேர்ந்தபோது,  எனக்கு எல்லாமே புதிதாக இருந்தன.

பைட்.

ஏ.வி.

என,  டெக்சிஸ் இருந்த உதவி ஆசிரியர்கள் அவ்வப்போது பேசிக் கொண்டபோது, ஆச்சரியத்துடன் நான் கேட்டு வியந்தேன். 

பிரிண்ட் மீடியாவிலிருந்து, விஷுவல் மீடியாவிற்கு வந்ததுதான், இந்த குழப்பங்கள் அனைத்திற்கும் காரணம்.

அப்போது, ஹரிதான் எனக்கு  உதவ முன்வந்தார்.

சில விஷயங்களை  மிக அழகாக, பொறுமையாக  சொல்லித் தந்தார்.

என்னைவிட இளையவரான ஹரி, எனக்கு விஷுவல் மீடியா குறித்து சொல்லிய சில தகவல்கள் மிகவும் பலனை அளித்தன.

இப்படி ஹரியை பற்றி சொல்வதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன.

ஆனால் சுவையான ஒருசில விஷயங்களை மட்டுமே இங்கு உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.

அந்த விஷயங்கள் சுவையானவை மட்டுமல்ல. சிரிப்பையும் வரவழைக்கக் கூடியவை.

ஆரம்பத்திலேயே சொன்னப்படி, பிரிண்ட் மீடியாவில் இருந்து வந்ததால், முதலில் பக்கம் பக்கமாக செய்திகளை எழுதினேன்.

விஷுவல் மீடியா இதற்கு நேர்மாறாக இருந்தது.

சுருக்கமாக, விஷயங்களை குறிப்பிட்ட சில வரிகளில் மட்டுமே சொல்லக்கூடியது விஷுவல் மீடியா.

இதை ஹரி எனக்கு மிக எளிதாக புரிய வைத்தார்.

சரி. இப்போது விஷயத்திற்கு வருகிறேன்.

ஒருநாள் இரவு பணியின்போது, நான் எழுதிய செய்தியை,  ஹரி தன்னுடைய பாணியில் திருத்தம் செய்தார்.

அவர் திருத்தம் செய்துவிட்டு, சிறிது நேரம் ஓய்வு எடுக்கச் சென்றார்.

அதே இரவு நேரப்பணியில் இருந்த மற்றொரு உதவி ஆசிரியர், ஹரி திருத்தம் செய்து விட்டு சென்ற என்னுடைய செய்தியை எடுத்து படித்தார்.

அவருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை, உடனே நான் எழுதிய செய்தியை அவருக்கு ஏற்றப்படி திருத்தம் செய்து வைத்தார்.

ஓய்வு எடுக்கச் சென்ற ஹரி, மீண்டும் வந்து, அந்த செய்தியை எடுத்து படித்தார்.

மீண்டும் திருத்தம் செய்தார்.

இப்படி நான் எழுதிய செய்தி, பலமுறை திருத்தம் செய்யப்பட்டது. மாற்றம் செய்யப்பட்டது.

காலை 8 மணிக்கு செய்தி ஒளிப்பரப்பானதுபோது, நான் ஆரம்பத்தில் எழுதிய செய்தியாக அது இருக்கவில்லை.


எனக்கு உள்ளுக்குள் வருத்தம் இருந்தாலும், சிரிப்பு வரவே செய்தது.

ஹரியும் மற்றொரு உதவி ஆசிரியரும், தங்களுடைய விரும்பம் போல, செய்தியின் நடையை மாற்றி, மாற்றி அமைத்தது வினோதமாக தோன்றியது.

இப்போது நினைத்தாலும், அந்த காட்சிகள் சிரிப்பை வரவழைக்கும்.

இதேபோன்று, மற்றொரு நாள். இரவு 8 மணி செய்திக்கு சரியான தலைப்புச் செய்தி கிடைக்கவில்லை.

முதன்மை செய்தி ஆசிரியர் தலைக்கால் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தார்.

அப்போதுதான், ஆங்கில செய்தி தொலைக்காட்சி ஒன்றில் பறவைக்காய்ச்சல் குறித்து, ஒரு சிறிய குறிப்பு சென்றது.

அது  எப்படியோ ஹரியின் கண்களில் எதொச்சையாக பட்டுவிட்டது.

அவ்வளவுதான். நாட்டில் பறகைக் காய்ச்சல் நோய் வேகமாக பரவுகிறது என்ற செய்தியை எழுத ஆரம்பித்து விட்டார் ஹரி. 

இதனால் தமிழகத்தின் கோழிப்பண்ணைகளில் உள்ள கோழிகளும் நோயால் பாதிப்பு அடையும் என்ற தகவலும் அந்த செய்தியில் அடங்கியது.

அன்றிரவு 8 மணி செய்தியில் தலைப்புச் செய்தியாக பறவைக்காய்ச்சல் செய்தி வந்தது.

பிறகு தொடர்ந்து ஒருவாரம் பறவைக்காய்ச்சல் சம்பந்தப்பட்ட செய்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.


பிறகு, அனைத்து சேனல்களும் அந்த செய்திகளை அடிக்கடி வெளியிட்டன.

அவ்வளவுதான்.

நாமக்கல் கோழிப்பண்ணைகளில்  முட்டைகளின் விற்பனை அப்படியே படுத்து விட்டது.

கோழிக்கறியை சாப்பிட மக்கள் தயக்கம் காட்டியதால், இறைச்சி கோழிகளின் விற்பனையும் வீழ்ச்சி அடைந்தது.

தொலைக்காட்சியின் செய்திப்பிரிவுக்கு தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட நாமக்கல் வியாபாரிகள், தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து வேதனையுடன் தெரிவித்தனர்.

பிறகுதான், பறவைக்காய்ச்சல் தொடர்பான செய்திகள் வெளியிடுவது குறைந்தது.

இப்படி, ஒரே ஒருவரி செய்தியை வைத்துக் கொண்டு, மிகப் பெரிய செய்தியாக மாற்றி  அதன்மூலம், ஒரு அதிர்வை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டவர்தான் ஹரி.

இருவரும்  அடிக்கடி சந்திக்கும்போது இன்றும்கூட, அந்த சம்பவத்தைக் குறித்து  பேசி மகிழ்ந்து கொள்வோம்.


இப்படிதான். ஒருநாள் தி.நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ்க்கு என்னை அழைத்துச் சென்றார்

அழகான சர்ட் வாங்க வேண்டும் என்றார்.

அந்த பிரம்மாண்ட கடையில் விதவிதமான டிசைன்களில் சர்ட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

மூன்று மணி நேரம் பல சர்ட்டுகளை தேடினார் ஹரி.

பின்னர் தனக்கு பிடித்து மூன்று சர்ட்டுகளை எடுத்துக் கொண்டார்.

மீண்டும், தேடிய இடத்திற்கே சென்றார். வௌளைநிற சர்ட் ஒன்றை எடுத்தார்.

தான் ஏற்கனவே எடுத்த, கலர் சர்ட்டுகளை வைத்துவிட்டு, வௌளைநிற சர்ட்டை கையில் எடுத்துக் கொண்டார்.

சரி. கடைசியில் வௌளை சர்ட்டைதான் ஹரிக்கு பிடித்து இருக்கிறது என நான் நினைத்துக் கொண்டேன்.

ஆனால், ஹரியோ, மனதில் திருப்தி அடையவில்லை.

செல்பேசியை எடுத்தார். மனைவிக்கு போன் அடித்தார்.
நீண்ட நேரம் பேசினார்.

சார். வௌளை சர்ட் வேண்டாம் என என் மனைவி சொல்லி விட்டார் என கூறி அந்த சர்ட்டையும் கடையிலேயே வைத்து விட்டார்.

இப்படி மூன்று மணி தேடலுக்குப் பிறகுகூட,  ஒரு சர்ட்டையும் வாங்காமல் கடையில் இருந்து நடையை திரும்பினார்.

ஆனால், கடைசியாக ஒரு காரியத்தையும் ஹரி செய்தார்.  கடையில் இருந்த, பாத்ரூமிற்கு சென்று, நன்றாக முகத்தை கழுவிக் கொண்டு வெளியே வந்தார்.

எனக்கோ சிரிப்பு அடக்க முடியவில்லை.

மூன்று மணி நேர தேடல். எந்த பொருட்களையும் வாங்காமல், அமைதியாக கடையை விட்டு வெளியே வரும் துணிச்சல் ஹரிக்கு மட்டுமே உண்டு.

 இப்படி கிறுக்குத்தனமான செயல்கள் செய்தாலும், ஒரு ஜாலியான பேர்வழிதான் ஹரி.

நீண்ட நாட்கள் போன் செய்யவில்லை என்றால், அன்பாக கோபித்துக் கொள்வார்.

நண்பர்களின் இன்பம், துன்பங்களில் உரிமையோடு பங்கேற்பார்.

ஹரியின் நட்பு எனக்கு மட்டுமல்ல பல நண்பர்களுக்கு உற்சாகத்தை தரும் நட்பு. 

அப்படிப்பட்ட நட்பு இன்றும் எங்களிடையே தொடர்கிறது. வாழ்க்கையின் இறுதி காலம் வரை தொடரும்.


எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: