Saturday, December 28, 2013

மதுவுக்கு எதிராக ஓர் போர்..! (35)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்......!"

நாள்:  35



தமிழகத்தில் அனைத்து மதுக்கடைகளையும் மூட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் தொடங்கிய சட்டக்கல்லூரி மாணவர் கைது..!

திருமங்கலம் அருகே உள்ள திருமால் புதுப்பட்டியை சேர்ந்தவர் விஜிகுமார்.

இவர் மதுரை சட்டக்கல்லூரியில் 2–ம் ஆண்டு படித்து வருகிறார்.

தமிழகத்தில் அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும் என வலியுறுத்தி விஜிகுமார் கடந்த 27.12.2013 அன்று திருமங்கலம் தாலுகா அலுவலகத்திற்கு வந்தார்.

அங்கு தாலுகா அலுவலக வாயிலில் கோரிக்கை அட்டையுடன் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அமர்ந்தார்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவருடன் நின்ற மாணவர்கள் ‘சமுதாய மாற்றத்துக்காக இளைஞர்கள், மதுரை’ என்ற நோட்டீசை விநியோகித்தனர்.

அதில் “தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூடக்கோரி தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருக்கும் சட்டக்கல்லூரி மாணவர் விஜிகுமாருக்கு ஆதரவு தருமாறு அழைக்கிறோம்” என்று கூறப்பட்டு இருந்தது.

தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இதற்கிடையில் மாணவர் விஜிகுமார் 28.12.2013 அன்று காலை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார்.

நுழைவு வாயில் முன்பு உண்ணாவிரதம் போராட்டம் தொடங்கிய அவர், துண்டு பிரசுரங்கள் வழங்கி பொதுமக்களிடம் ஆதரவும் திரட்டினார்.

அப்போது பேசிய அவர், மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி பலமுறை உண்ணாவிரதம் இருந்துள்ளேன்.  திருமங்கலத்தில் உண்ணாவிரதம் தொடங்கினேன். அங்கு ஒரு கட்சி கூட்டம் நடப்பதால் இடையூறு ஏற்படும் என முடிக்க சொன்னார்கள்.

அதனால் இங்கு வந்து உண்ணாவிரதம் தொடங்கி உள்ளேன்.

வரும் ஜனவரி 6–ம் தேதி முதல் மதுரை சட்டக்கல்லூரி மாணவர்கள், இதே கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்க உள்ளனர்.

இதில் திருச்சி, செங்கல்பட்டு, கோவை கல்லூரி மாணவர்களும் பங்கேற்க உள்ளனர். மதுக்கடைகள் மூடாவிட்டால் போராட்டம் தீவிரமடையும் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாணவர் உண்ணாவிரதம் தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் விரைந்து வந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மாணவர் விஜிகுமார், உண்ணாவிரதத்தை கைவிட மறுத்ததால் போலீசார் அவரை கைது செய்தனர்.

மதுவுக்கு எதிராக களம் இறங்கிய சட்டக் கல்லூரி மாணவர் விஜிகுமாருக்கு எனது பாராட்டு....

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

மதுவுக்கு எதிராக ஓர் போர்......! (34)

" மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்......!"

நாள்:  34


மதுபோதையில் ரகளை செய்த டிக்கெட் பரிசோதகர்......!

பயணி பரபரப்பு புகார்.....!!

கோவை-சென்னை ‘சதாப்தி எக்ஸ்பிரஸ்’ ரெயிலில் மதுபோதையில் ரகளை செய்ததாக டிக்கெட் பரிசோதகர் மீது ரெயில்வே போலீசில் பயணி ஒருவர் புகார் தெரிவித்தார்.

சென்னை சென்டிரல் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் சென்னை செனாய் நகரைச் சேர்ந்த பத்மநாபன் என்பவர் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில்,  கோவை-சென்னை சென்டிரல் ‘சதாப்தி எக்ஸ்பிரஸ்’ ரெயிலில் ‘சி1’ பெட்டியில் கடந்த 26-ந்தேதி பயணித்தேன். அப்போது பணியிலிருந்த ராதாகிருஷ்ணன் என்ற டிக்கெட் பரிசோதகர் மதுபோதையில் பெண் பயணிகளுடன் மிகவும் மோசமாக கண்ணியக் குறைவுடன் நடந்துகொண்டார்.


மேலும் ரெயிலில் இருந்த சமையல்காரர்கள் மீது பிளாஸ்டிக் குப்பை தொட்டியை வீசி எறிந்தும் ரகளையில் ஈடுபட்டார்.

இதுதொடர்பாக நான் ரெயில்வே பாதுகாப்பு படை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தேன்.


அவர்கள் சென்டிரல் ரெயில்நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்குமாறு தெரிவித்தனர்.

எனவே மதுபோதையில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி ரகளையில் ஈடுபட்ட டிக்கெட் பரிசோதகர் ராதாகிருஷ்ணன் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த புகார் மனு பற்றி சென்டிரல் ரெயில்வே போலீசார்  கூறும்போது, “கோவை-சென்னை சென்டிரல் ‘சதாப்தி எக்ஸ்பிரஸ்’ ரெயிலில் கடந்த 26-ந்தேதி பணியிலிருந்த டிக்கெட் பரிசோதகர் மதுபோதையில் ரகளை செய்ததாக பயணி ஒருவர் புகார் மனு ஒன்றை எங்களுக்கு அனுப்பியுள்ளார்.


இந்த புகார் மனுவினை விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு சென்டிரல் ரெயில்நிலைய மேலாளருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரெயில்வே மேலாளர் துறைரீதியான விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுப்பார்” என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.


ஆக, மது அருந்திவிட்டு பணிபுரியும் ஊழியர்களால் ரயில் பயணிகள் தேவையில்லாமல் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது.

எல்லாம் மதுவால் வரும் கேடுதான்...

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

மதுவுக்கு எதிராக ஓர் போர்......! (33)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்......!"

நாள்:  33


 விதிகளுக்குப் புறம்பாக பொது இடங்களில் டாஸ்மாக் கடைகள்.....!

தமிழகத்தில் இயங்கும் பல டாஸ்மாக் கடைகள் விதிகளுக்கு புறம்பாக பொது இடங்களில் இருப்பது அதிர்ச்சி அளிக்கும் செய்தியாகும்...

இதனை எதிர்த்து பொதுமக்கள் அவ்வவ்போது போராட்டங்களை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்...

ஆனால், எந்த பலனும் கிடைப்பதில்லை.

சென்னை தரமணியிலும், மயிலாப்பூரிலும் பொது இடங்களில் மக்களுக்கு இடையூறாகவும் விதிகளுக்கு புறம்பாகவும் டாஸ்மாக் கடைகள் இருக்கின்றன.

குடித்து விட்டு தகாத முறையில் நடந்து கொள்வதால் அப்பகுதியினருக்கு குறிப்பாக பெண்களுக்கு இவை பெரும் ஆபத்தாக உள்ளன.

தரமணி நூறடி சாலையில் எஸ்.ஆர்.பி.டூல்ஸ் முதல் விஜயநகர் பேருந்து நிலையம் வரை 12 கடைகளும், எம்.ஜி.அர். சாலையில் மூன்று கடைகளும் உள்ளன.


நூறடி சாலையில், பிள்ளையார் கோயிலுக்கும், பேருந்து நிறுத்தத்துக்கும் மிக அருகில் ஒரு டாஸ்மாக் கடை அமைந்திருப்பதால் பேருந்து நிறுத்தத்தில் காத்திருப்பவர்களும், கோயிலுக்கு வருபவர்களும் அவதிக்குள்ளாகின்றனர்.

இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் சிலர் கூறுகையில், “டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி 3 மாதங்களுக்கு முன் போராட்டம் நடத்தினோம். ஆனால் பேருந்து நிறுத்தத்தை 20 அடி தள்ளி அமைத்துவிட்டு பிரச்சினை முடிந்தது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்” என்றனர்.

அதே நூறடி சாலையில் தேவாலயத்துக்கு எதிரில், வீரபாண்டிய தெரு முனையில் இருக்கும் டாஸ்மாக் கடை பிரதான சாலைக்கு செல்லும் வழியில் அமைந்திருக்கிறது. இதனால் பலர் பக்கத்து தெருக்கள் வழியாக பிரதான சாலையை சென்றடைகின்றனர்.


இதே போன்று கோதாவரி தெரு முனையில் பள்ளிக்கு அருகில் டாஸ்மாக் கடை உள்ளது. எம்.ஜி.ஆர். சாலையில் தரமணி ரயில் நிலையத்துக்கும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகத்துக்கும் அருகில் 3 கடைகள் அமைந்துள்ளன.

இது ரயில் நிலையத்தைப் பயன்படுத்தும் நூற்றுக்கணக்கான பயணிகளுக்கும் மாணவர்களுக்கும் இடையூறாக உள்ளது.

மயிலாப்பூர் ரயில் நிலையம் அருகே, இரண்டு டாஸ்மாக் கடைகள் அருகருகே அமைந்திருக்கின்றன. லேடி சிவசாமி உயர்நிலைப் பள்ளி, வித்யா பால மந்திர், சாந்தோம் உயர்நிலைப் பள்ளி உள்ளிட்ட பல பள்ளி மாணவர்கள் அந்த கடைகளின் வழியாக செல்ல வேண்டியிருக்கிறது. அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கூறுகையில், “நாங்கள் அந்தப் பக்கம் சென்றால் மூக்கை மூடிக் கொண்டுதான் செல்வோம். அவ்வளவு அருவருப்பான இடமாக மாறியுள்ளது” என்றனர்.


சென்னையில் 454 டாஸ்மாக் கடைகள் உள்ளன. ஆயிரம்விளக்கு, தாம்பரம் சானடோரியம், சிந்தாதிரிப்பேட்டை, திருவல்லிக்கேணி, திருமங்கலம் உள்ளிட்ட பல இடங்களில் பொது மக்களுக்கு தொந்தரவாக பல கடைகள் இருக்கின்றன.

இவற்றை அகற்றக் கோரி போராட்டம் நடத்தினால் போலீஸ் பாதுகாப்புடன் கடைகளை நடத்துகின்றனர் என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டு.

இதுகுறித்து டாஸ்மாக் உயர் அதிகாரி  என்ற கூறுகிறார் தெரியுமா, “கோயில், தேவாலயம் அருகில் டாஸ்மாக் கடை இருக்கக் கூடாது என்றுதான் விதிகள் உள்ளன. பேருந்து, ரயில் நிலையத்துக்கு அருகில் இருக்கக் கூடாது என்று விதிகள் கூறவில்லை. இதுபற்றி ஏதேனும் புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்போம்”.


என்ன அருமையான பதில் பாருங்கள்...

சென்னையில் மட்டுமல்ல, மாநிலத்தின் பல இடங்களில் இதே நிலைதான் உள்ளது...

அரசு ஏனோ கண்டு கொள்ளாமல் அமைதியாக இருக்கிறது....ஆண்வனுக்குதான் வெளிச்சம்...

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

மதுவுக்கு எதிராக ஓர் போர்.....! (32)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....!"  நாள் 32



புத்தாண்டையொட்டி 3 நாட்களுக்கு மதுக்கடைகளை மூட வேண்டும்.....!

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்....!!

மதுவுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 28.12.2013 அன்று வெளியிட்ட அறிக்கையில், மதுக்கடைகளை மூட வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கையின் விவரம் இதோ....

ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாட மக்கள் தயாராகிவரும் நிலையில், டிசம்பர் 31, ஜனவரி 1 ஆகிய இரு நாட்களில் மட்டும் ரூ. 250 கோடிகளுக்கு மது விற்பனை செய்ய தமிழக அரசு இலக்கு நிர்ணயித்திருக்கிறது.

தாராளமாக மது விற்பனை செய்ய வசதியாக ஒவ்வொரு கடையிலும் 15 நாட்களுக்கு தேவையான மது இருப்பு வைக்கப்பட வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியிருக்கிறது.

தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் மக்களுக்குத் தேவையான அரிசி, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை தேவையான அளவுக்கு இருப்பு வைப்பதில் ஆர்வம் காட்டாத அரசு, மது வகைகளை இருப்பு வைப்பதில் மட்டும் ஆர்வம் காட்டி வருவது கண்டிக்கத்தக்கது.


ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடும் வழக்கம் தமிழகத்தில்  அதிகரித்த பிறகு தான் இளைஞர்கள் மது அருந்தும் வழக்கமும் அதிகரித்திருப்பதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

14 முதல் 19 வயது வரையுள்ள சிறுவர்கள் மற்றும் இளைஞர்களில் 65 விழுக்காட்டினர் மது அருந்தும் வழக்கத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள் என்று அசோசெம் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அதுமட்டுமின்றி, 20 வயது முதல் 29 வயது வரையுள்ளவர்களில் 25 விழுக்காட்டினர் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் போது மது அருந்துவதற்காக மட்டும் ரூ.1000 முதல் ரூ.10,000 வரை செலவழிக்கிறார்கள் என்றும் இந்த ஆய்வுகளில் கண்டறியப்பட்டிருக்கிறது.


இந்த தகவல்கள்  மிகவும் அதிர்ச்சி அளிக்கின்றன என்ற போதிலும் இந்த உண்மைகளை எவரும் மறுக்க முடியாது.

கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவிலேயே மிக அதிக அளவில் சாலை விபத்துக்கள் நடைபெறும் மாநிலமாகவும், அதிக உயிரிழப்புகள் ஏற்படும் மாநிலமாகவும் தமிழகம் திகழ்கிறது.

அதிலும் குறிப்பாக புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது தான் அதிக அளவில் விபத்துக்கள் ஏற்படுகின்றன. கடந்த சில மாதங்களில் சென்னையில் சாலையோர நடைபாதைகளில் இருந்த குழந்தைகள் உள்ளிட்டோர்  உயிரிழக்கக் காரணமான 2 பயங்கர சாலை விபத்துக்களுக்கு காரணம் மது போதை தான் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.


அதேபோல், புத்தாண்டையொட்டி நிகழும் பாலியல் குற்றங்களுக்கும் மது தான் காரணமாக விளங்குகிறது.

இத்தனைத் தீமைகளுக்கும் காரணமான மதுவை கட்டுப்படுத்துவது தான் மக்கள் நலன் விரும்பும்  ஓர் அரசின் கடமையாக இருக்க வேண்டும். ஆனால், மக்களை பாதுகாக்க வேண்டிய அரசே புத்தாண்டின் போது இலக்கு நிர்ணயம் செய்து மதுவை விற்பனை செய்வது வெட்கக்கேடான ஒன்றாகும்.

புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் போது குடித்துவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது என்று ஒருபுறம் அறிவுறுத்தும் அரசு, இன்னொரு புறம் மதுக்கடைகளை திறந்து வைத்து, இலக்கு நிர்ணயித்து மது விற்பனை செய்வது முரண்பாடுகளின் உச்சமாகும்.

மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டவர்கள் அதிகம் வாழும் அமெரிக்கா, நியுசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கூட புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது விபத்துக்களைத் தவிர்க்கவும்,  மற்றவர்களுக்கு தொல்லையில்லாத கொண்டாட்டங்களை உறுதி செய்யவும் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.


அவ்வாறு இருக்கும் போது கலாச்சாரத்திற்கும், ஒழுங்குக்கும் பெயர்பெற்ற தமிழ்நாட்டில் அரசே அதிக அளவில் மது விற்பனை செய்வது சரியல்ல.

எனவே, மக்களின் நலன்கருதி  புத்தாண்டையொட்டி டிசம்பர் 31 முதல் ஜனவரி 2 வரை மூன்று நாட்களுக்கு மதுக்கடைகளை அரசு மூட வேண்டும்.

டாக்டர் ராமதாசின் வேண்டுகோளை அரசு ஏற்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு...

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

Thursday, December 26, 2013

மதுவுக்கு எதிராக ஓர் போர்...! (31)

மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்......!" நாள்  31

பூரணமதுவிலக்கு கோரி, மதுரை திரும்பிய பிறகும் போராட்டம்.... !

சட்டக்கல்லூரி மாணவி நந்தினி, தந்தை-தங்கையுடன் கைது...!!

மதுரை சட்டக்கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வருபவர் நந்தினி.

அவர் பூரணமதுவிலக்கை அமல்படுத்தக்கோரி போராட்டம் நடத்தி வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் உண்ணாவிரதம் இருந்த அவர் பின்னர் அதை கைவிட்டார். இந்தநிலையில் நந்தினி சென்னையில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தார்.

அதன்படி கடந்த 23-ந் தேதி காலையில் மதுரையில் இருந்து தன் தந்தை ஆனந்தனுடன் அவர் மோட்டார்சைக்கிளில் சென்னைக்கு புறப்பட்டார்.

குரோம்பேட்டையில் அவரை பிடித்த போலீசார் சென்னை மாநகருக்குள் நுழைய அனுமதிக்க முடியாது என கூறியதால் நந்தினி தன் தந்தையுடன் மதுரைக்கு செல்வதாக கூறி மோட்டார்சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.


ஆனால் அவர்கள் மதுரை செல்லாமல் கொடநாடு செல்ல முடிவு செய்தனர். அதன்படி சேலம் வழியாக கோவைக்கு மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிக்கோவில் பிரிவில் கடந்த 25ஆம் தேதி மாலை வந்து கொண்டு இருந்தனர்.

அப்போது மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு நந்தினியும், அவரது தந்தை ஆனந்தனும் தமிழகம் முழுவதும் பூரணமதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி அந்த வழியாக வருவோர், போவோரிடம் துண்டுபிரசுரங்களை வினியோகம் செய்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் பெருந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீசார் ஆனந்தன், நந்தினியிடம் விசாரித்தனர். சாப்பிடாமல் மிகவும் சோர்வாக இருப்பதாக கூறியதால் 2 பேரையும் போலீசார் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.


நந்தினி, அவரது தந்தை ஆனந்தன் ஆகியோர் மீது பொதுஅமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் கோஷமிட்டதாக பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் தந்தையையும், மகளையும் மதுரை மாநகர போலீஸ் கமிஷனரிடம் ஒப்படைக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

இதனையடுத்து நேற்று காலை பெருந்துறை போலீசார், ஆனந்தனையும், நந்தினியையும் மதுரைக்கு வேனில் அழைத்துச்சென்றனர்.

கடந்த 26ஆம் தேதி காலை அவர்கள் மதுரை வந்து சேர்ந்தனர். மதுரையிலும் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். வைகை ஆற்றங்கரையில் (கள்ளழகர் ஆற்றில் இறங்குமிடம்) நந்தினி உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவருடைய தந்தை ஆனந்தன், தங்கை ஆகியோரும் அவருடன் உண்ணாவிரதம் இருந்தனர்.


தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று, நந்தினியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நந்தினி உண்ணாவிரதத்தை கைவிட மறுத்தார். இதைத் தொடர்ந்து, அவரையும், அவருடைய தந்தை ஆனந்தன், தங்கை நிரஞ்சனா ஆகியோரையும் போலீசார் கைது செய்து, ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவர்களை அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

மதுவுக்கு எதிராக ஓர் போர்.....! (30)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....!"   நாள்: 30 



மதுவிலக்கு போராட்டத்துக்காக மோட்டார் சைக்கிளில் தந்தையுடன் சென்னை வந்த சட்ட மாணவி....!

மதுரை சட்டக்கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வருபவர் நந்தினி.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி, மாணவி நந்தினி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மதுரையில் உண்ணாவிரதம் இருந்த அவர், பின்னர் அதை கைவிட்டார்.


இந்த நிலையில், நந்தினி சென்னையில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தார்.

அதன்படி, கடந்த டிசம்பர் 23-ந்தேதி காலையில் மதுரையில் இருந்து தனது தந்தை ஆனந்தனுடன் அவர் மோட்டார் சைக்கிளில் சென்னைக்கு புறப்பட்டார்.

இருவரும் மாலை 4 மணிக்கு திருச்சி வந்தடைந்தனர். அங்கு அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

பின்னர், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து நந்தினியிடமும், அவருடைய தந்தையிடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.


ஆனால்,சென்னை செல்லும் முடிவில் அவர்கள் உறுதியாக இருந்ததால் 2 பேரையும் போலீசார் விடுவித்தனர்.

பிறகு, நந்தினி தன் தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்னைக்கு புறப்பட்டார்.

டிசம்பர் 24ஆம் தேதி  இரவு 2 பேரும் குரோம்பேட்டையை அடைந்தனர்.

அங்கு காத்திருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர்.

சாப்பிடாமல் பயணம் செய்ததால் சோர்வுடன் காணப்பட்ட அவர்களை போலீசார் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு 2 பேருக்கும் டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். பிறகு, மாணவி நந்தினியிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சென்னை மாநகருக்குள் நுழைய அனுமதிக்க முடியாது என்று அவர்களிடம் போலீசார் கூறினர்.

இதையடுத்து, நந்தினி தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் மதுரைக்கு புறப்பட்டு சென்றார்.


நந்தினி மனம்மாறி மீண்டும் சென்னைக்குள் நுழைந்துவிட கூடாது என்பதற்காக போலீசாரும் சிறிது தூரம் உடன் சென்றனர்.

ஆக, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி போராட்டம் நடத்தும் சட்டக் கல்லூரி மாணவி நந்தினிக்கு எனது பாராட்டுக்கள்.

நல்ல நோக்கத்திற்காக, பெண்களின் நலனுக்காக, இளைஞர்களின் அமைதியான வாழ்விற்காக, சமூக அக்கறையோடு களத்தில் இறங்கியுள்ள நந்தினியின் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

Wednesday, December 25, 2013

மதுவுக்கு எதிராக ஓர் போர்.....! (29)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....!"  நாள்: 29

மதுவிலக்கு ஒன்றுதான் உயிர்க் கொள்கை.......!

ஆந்திரமும் தமிழகமும் ஒன்றுபட்டிருந்த சென்னை மாகாணத்தின் பிரதமர், வங்கத்தின் ஆளுநர், இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல், மத்திய அரசின் உள்துறை அமைச்சர், மீண்டும் தமிழக முதல்வர், காந்தி-நேரு-படேல்-ஆசாத்-ராஜேந்திர பிரசாத் ஆகியோருக்கு இணையாக நாட்டு மக்களால் போற்றப்பட்டவர். 93 வயதான முதுபெரும் கிழவர் ராஜாஜி.

மதுவிலக்கு ஒன்றுதான் மூதறிஞர் ராஜாஜியின் உயிர்க் கொள்கையாக விளங்கியது.

வெள்ளையர் ஆட்சியில் சென்னை மாகாணப் பிரதமராகப் பொறுப்பேற்று மூன்று மாதங்கள் முடிவதற்கு முன்பே, தன்னுடைய சொந்த மாவட்டமான சேலத்தில் மதுவிலக்கை நாட்டிலேயே முதன்முறையாக ராஜாஜி நடைமுறைப்படுத்தினார்.

ராஜாஜி  பதவி ஏற்று மூன்று மாதங்களுக்குள், 1937 அக்டோபர் 1 முதல் அவரது சொந்த ஜில்லாவான சேலத்தில் மதுவிலக்கு அமலுக்கு வந்தது. படிப்படியாக பிற ஜில்லாக்களுக்கும் விரிவுபடுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டது.


இதனால் அரசின் வருவாயில் கணிசமான தொகை குறைந்துபோயிற்று. நிலவரியும் கள்ளுக்கடை ஏலமுந்தாம் அரசின் வருமானத்தின் பெரும் பகுதி. இருப்பினும் ராஜாஜி, 1937-இல் ஓர் உபரி பட்ஜெட்டையே வழங்கினார்.

அடுத்த இரண்டு வருடங்களிலும் அவ்வாறே வழங்க இருந்தார். எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.யான அப்பாதுரைப்பிள்ளை ‘விவரங்களைப் புரிந்துகொள்ளும் ஸி.ஆரின் திறனையும், பொருளாதார நுணுக்கங்களனைத்தையும் அறிந்திருந்த நேர்த்தியையும்’ வியந்து போற்றினார்.


நிலவரியும் கள்ளுக்கடை ஏலமும்தான் அன்று அரசின் முக்கிய வருவாய். மதுவிலக்கினால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட, ஆசியாவிலேயே முதன்முதலாக 1939-ல் ராஜாஜி விற்பனை வரியை அறிமுகப்படுத்தினார்.

இன்று எல்லா மாநில அரசுகளுக்கும் கொழுத்த வருவாயை அவர் கண்டெடுத்த விற்பனை வரியே அள்ளிக் குவிக்கிறது.

அதே நேரத்தில், மதுவின் விற்பனையும் கொடிகட்டிப் பறப்பதுதான் கொடுமையிலும் கொடுமை.


கலைஞர் கருணாநிதி 1972-ல் மதுக்கடைகளைத் திறந்தபோது, சொல்லில் அடங்காத சோகத்தில் ஆழ்ந்தார் அந்த மூதறிஞர்.

கொட்டும் மழையில் தன் பெருமை பாராது கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக் கதவைத் தட்டினார்.

அவருடைய கரங்களைப் பற்றியபடி “தமிழகத்தில் மதுவிலக்கு தொடர வேண்டும்” என்று கெஞ்சினார்.


“நம்பிக்கையுடன் அல்ல, மனசஞ்சலத்துடன் வீடு திரும்பினேன்” என்று மொழிந்த ராஜாஜி, அன்றுபோல் என்றும் தன் வாழ்வில் வருத்தமுற்று வேதனைப்பட்டதில்லை என்றார், அவருக்கு இறுதிவரை தொண்டூழியம் செய்த ‘கல்கி’ சதாசிவம்.

தி இந்து தமிழ் நாளிதழில் வந்த கட்டுரைகளில் இருந்து சில பகுதிகள்.....

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

மதுவுக்கு எதிராக ஓர் போர்.....! ( 28 )

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....!"  நாள்: 28 



மது குடித்து வீட்டு ஆட்டோ ஓட்டும் டிரைவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை...!

சென்னையில் மட்டுமல்ல, தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஏற்படும் விபத்துக்களுக்கு மூலக்காரணமாக மது இருந்து வருகிறது..

மது அருந்தி விட்டு வாகனங்களை ஓட்டும் டிரைவர்களால், பல அப்பாவி உயிர்கள் பலியாகின்றன.

மது அருந்தி வாகனங்களை ஓட்டும் டிரைவர்கள் மீது காவல்துறை பல நடவடிக்கைகள் எடுத்தாலும், மது அருந்துவதை ஏனோ, டிரைவர்கள் நிறுத்துவதில்லை.


இதனால், விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது...

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண சென்னை மாநகர காவல்துறை ஓர் அதிரடி முடிவு எடுத்துள்ளது.

அதன்படி, இனி, மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டும் டிரைவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை மேலும் அதிகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த பல மாதங்களாக அனைத்து முக்கிய இடங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த கண்காணிப்பு பணியின்போது, வாகனங்களை மறித்து சோதனை செய்யும் போலீசார், வாகன ஓட்டிகள் மது அருந்தி இருக்கிறார்களா என்றும் சோதனை செய்கின்றனர்.


குறிப்பாக, ஆட்டோ டிரைவர்கள் மது அருந்தி இருந்தால் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மது அருந்தி விட்டு ஆட்டோ ஓட்டும் பல ஆட்டோ டிரைவர்களால் அப்பாவி பயணிகள் பெரிதும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

இதனை தடுக்கும் நோக்கில் தற்போது போலீசார், கடும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர்.

முக்கிய இடங்களில் சோதனை நடத்தும் போலீசார், ஆட்டோ டிரைவர்கள் மது அருந்தி இருப்பதை உறுதி செய்தால், அவர்களுக்கு அபாரதம் விதித்து வருகின்றனர்.

தற்போது இந்த அபராதம் ஆயிரம் ரூபாயாக விதிக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

மேலும், மது அருந்தி ஆட்டோ ஓட்டும் டிரைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.



மது அருந்தி ஆட்டோ ஓட்டும் டிரைவர்கள் குறித்து புகார் அளிக்க பயணிகள் விரும்பினால் அதற்கான ஏற்பாடுகளையும் காவல்துறை செய்துள்ளதாகவும், புகார் அளிக்கும் பயணிகளுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

பெண் பயணிகளின் பாதுகாப்பு முக்கியம் என கூறியுள்ள சென்னை மாநகர காவல்துறை, மதுவுக்கு எதிராக புதிய நடவடிக்கை எடுத்து இருப்பது பாராட்டத்தக்கது என்றே கூறலாம்..

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

மதுவுக்கு எதிராக ஓர் போர்.....! (27)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....!"   நாள்: 27 

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி மாநிலத்தில் உள்ள சில கட்சிகள் அவ்வவ்போது போராட்டங்களை நடத்தி வருகின்றன..

பாமக, மதிமுக, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், த.மு.மு.க. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட அமைப்புகள் மதுவிற்கு எதிராக நாள்தோறும் குரல் கொடுக்க தவறுவதில்லை.

அந்த பட்டியலில் இடம் பிடித்துள்ள கட்சிகளில் பிஜேபியும் அடங்கும்.


தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம்  மார்த்தாண்டத்தில் கடந்த 22.12.2013 அன்று பிஜேபி சார்பில் மாநாடு நடத்தப்பட்டது.

மதுவின் கொடுமையால் இளைஞர்கள்  சீரழிவதுடன் தங்கள் குடும்பத்தையும் தெருவுக்கு கொண்டு வந்துவிடுவதால், மாநிலத்தில் மிகப் பெரிய அவல நிலை ஏற்பட்டு வருவதாக பிஜேபி புகார் தெரிவித்துள்ளது.

இதனை தடுக்கும் வகையிலும் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல் படுத்த வலியுறுத்தியும் பிஜேபி மகளிர் அணி சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்த தக்கலையில்  தாலி காக்கும் தாமரை மாநாடு நடைபெற்றது.


மாவட்ட மகளிர் அணித்தலைவர் மகேஷ்வரி தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் மதுவினால் இளைய சமுதாயத்தினர் பாதிப்பு அடைவது குறித்தும் அவர்களை பாதுக்கப்படுவது குறித்தும் பல நல்ல கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டன.

மாநாட்டில் பங்கேற்று பேசிய பிஜேபி மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல் படுத்த வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக் கொண்டார்.

மதுவுக்கு எதிரான இது போன்ற மாநாடுகள்  மாநிலம் முழுவதும் நடத்தப்படும் என்றும் பொன். ராதாகிரூஷ்ணன் தெரிவித்தார்.


மாநாட்டில் பெண்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்று மதுவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

மதுவுக்கு எதிராக குரல் கொடுக்கும் தமிழக பிஜேபிக்கு நமது பாராட்டுக்கள்...அவர்களது பணி தொடர வாழ்த்துக்கள்..-

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

Sunday, December 22, 2013

மதுவுக்கு எதிராக ஓர் போர்.....! (26)

" மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....!

நாள் : 26



புத்தாண்டு கொண்டாட்டங்களில் மது அருந்தும் இளம் பருவத்தினரின் எண்ணிக்கை மும்மடங்கு உயர்வு......!

ஆய்வில் அதிர்ச்சி தகவல்........!!

புத்தாண்டு கொண்டாட்டங்களில் மது அருந்தும் இளம் பருவத்தினரின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்துள்ளதாக, தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

நாட்டில் மது அருந்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தீபாவளி, புத்தாண்டு போன்ற சமயங்களில் மது விற்பனை அமோகமாக இருக்கும்.


இந்த பண்டிகை காலங்களில் அதிகமான இளம் பருவத்தினரும் மது அருந்தி வருவது தற்போது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

டெல்லி, மும்பை, கோவா, பெங்களூர், சண்டிகார் உள்ளிட்ட பெருநகரங்களில் ‘ஏ.எஸ்.டி.எப்.’ என்ற தனியார் தொண்டு நிறுவனம் ஆய்வு நடத்தியது.

இந்த ஆய்வில், பிறந்த நாள் மற்றும் வார இறுதி நாட்களில் மது குடிப்பவர்களை விட, டிசம்பர், ஜனவரி ஆகிய குளிர்கால மாதங்களில் மது அருந்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரியவந்து இருக்கிறது.


குறிப்பாக புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது அருந்துவோரின் எண்ணிக்கை மும்மடங்கு அதிகரித்துள்ளதாக அதிர்ச்சித்தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 1985-ம் ஆண்டுகளில், பண்டிகை காலத்தில் மது அருந்துவோரின் வயது 28-ல் இருந்து தொடங்கியது.

ஆனால் தற்போது ‘டீன்-ஏஜ்’ பருவத்தினரே, குறிப்பாக 14 வயதில் இருந்தே மது அருந்துவது தெரியவந்துள்ளது.


மேலும் வருகிற புத்தாண்டு கொண்டாட்டத்தில் மது அருந்துவோரின் எண்ணிக்கை 180 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்கலாம் என அந்த ஆய்வில் கூறப்பட்டு உள்ளது.

இதற்கு, இளம் வயதினரிடையே காணப்படும் அதிக பணப்புழக்கம், வெளிநாட்டு மதுபானங்கள் அதிகமாக கிடைப்பது, பெற்றோரின் கண்டிப்பற்ற தன்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.

குறிப்பாக பெற்றோரின் கண்டிப்பற்ற தன்மையே பெருநகரங்களில் ‘டீன்-ஏஜ்’ பருவத்தினர் மது அருந்த முக்கிய காரணமாக கூறப்படுகிறது.


ஆக, தீமை என்று நன்கு தெரிந்தும், உடல்நலம் பாதிக்கும் என்று நன்கு உணர்ந்தும், இளைஞர்கள் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி வருவது, அதிகரித்து வருவது ஆய்வில் உறுதியாக தெரிய வந்துள்ளது.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

மதுவுக்கு எதிராக ஓர் போர்.....! (25)

மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....! " 

நாள் : 25

மதுவால் அதிகரிக்கும் வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துக் கொண்டே போகிறது...

தமிழகத்தில் மட்டுமல்ல, நாட்டின் பல மாநிலங்களிலும் மது தொடர்பான வழக்குகள் அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் மட்டும் இந்த ஆண்டில் ஆயிரக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதே அதன் தகவல்கள் உங்கள் பார்வைக்கு.....

மதுவிலக்கு வழக்குகளில் இந்த ஓராண்டில் 3,800 பேர் கைது.....!

காஞ்சீபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மதுவிலக்கு வழக்குகளில் 600 பெண்கள் உள்பட 3800 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் என்று மாவட்ட காவல் ஆணையர் செ.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.


காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் காஞ்சீபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் சட்ட விரோதமாக கள்ள சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல், வெளி மாநில பிராந்தி பாட்டில்கள் விற்பனை செய்தல், மதுபான கடைகளுக்கு அருகாமையில் உள்ள பார்கள், மற்றும் கிராமங்களில் அல்லது பெட்டி கடைகளில் பிராந்தி பாட்டில்கள், விற்பனை செய்தல் போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் பற்றிய தகவல்களை பொதுமக்கள் எந்த நேரத்திலும் மதுவிலக்கு அமல் பிரிவு கூடுதல் சூப்பிரண்டு செல்போன் எண் 9445465400 -க்கு தகவல் தெரிவிக்கலாம் என்றார்.

தகவல் தருபவர்கள் பற்றிய விவரம் யாருக்கும் தெரியாமல் பாதுகாக்கப்படும் என்றும் மேலும் தகவல் தருபவர்களுக்கு தக்க வெகுமதி அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.


இந்த மாவட்டத்தில் 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த மாதம் டிசம்பர் வரை ரூ.68 லட்சம் எரிசாராயம் மற்றும் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறிய காவல்துறை அதிகாரி,  இதையொட்டி 600 பெண்கள் உள்பட 3,800 பேரை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் மாவட்டத்தில் மதுவிலக்குகளில் 71 வாகனங்கள் கைப்பற்றப்பட்டதாக அவர் கூறினார். இதில் மினி லாரி ஒன்று, கார் 10, ஆட்டோ 5, மோட்டார்சைக்கிள்கள் 55 ஆகும். இதில் 43 வாகனங்கள் ஏலம் விடப்பட்டது என்றும் இதன் மூலம் அரசுக்கு ரூ.20 லட்சத்து 32 ஆயிரத்து 41 வருமானம் கிடைத்துள்ளதாகவும் காவல் ஆணையர் தெரிவித்தார்.


மீதியுள்ள வாகனங்கள் விரைவில் ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், மதுவிலக்கு போலீசார் மாவட்டத்தில் 843 கேன்களில் 29 ஆயிரத்து 527 லிட்டர் எரிசாராயமும், 33 ஆயிரத்து 997 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்தார்.

மொத்தம் ரூ.67 லட்சத்து 47 ஆயிரத்து 470 பெறுமான எரிசாராயம் மற்றும் மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டதாக அவர் கூறினார்.


கள்ளச்சாராய வழக்கில் திருந்திய 37 பேருக்கு தமிழக அரசு ரூ.10½ லட்சம் நிதியுதவி அளித்துள்ளது என்றார் காவல் ஆணையர்.

மேலும் கள்ளச்சாராய வழக்கில் திருந்திய 22 பேருக்கு ரூ.6 லட்சத்து 60 ஆயிரம் நிதியுதவி வந்துள்ளதாகவும்,  விரைவில் அவர்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மதுவிலக்கில் ஈடுபட்ட குற்றவாளிகள் 42 பேரை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் தலா ஓராண்டு சிறையில் இந்த ஆண்டு இதுவரை அடைத்துள்ளதாகவும்,  இதில் 12 பேர் பெண்கள் என்றும் அவர் தகவல்களை அள்ளி வீசினார்.

தமிழ்நாட்டிலேயே காஞ்சீபுரம் மாவட்டத்தில்தான் கள்ளச்சாராய தடுப்பு சட்டத்தின் கீழ் 42 பேரை கைது செய்து சிறையில் அடைந்துள்ளதாக  போலீஸ் சூப்பிரண்டு செ.விஜயகுமார் கூறினார்.


ஆக, மதுவால் வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது... போலீசாருக்கு மிகப் பெரிய அளவுக்கு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

போலீசாருக்கு மட்டுமல்ல, பொதுமக்களுக்கு மதுவால் ஏற்படும் பிரச்சினைகள் ஏராளம்...அதனால் வரும் வழக்குகளின் எண்ணிக்கை தாராளம் எனலாம்...

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

Saturday, December 21, 2013

மதுவுக்கு எதிராக ஓர் போர்.....! (24)

" மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....! "

நாள் : 24



மதுவுக்கு எதிராக பல பத்திரிகைகளில் செய்திகள், கவிதைகள், கட்டுரைகள் வந்துக் கொண்டுதான் இருக்கின்றன.

ஆனால், மதுவை கட்டுப்படுத்த முடிகிறதா என்ற கேள்விக்கு விடை இல்லை என்றே வருகிறது..

இஸ்லாமிய இதழ்களில் மக்களின் இதயங்களில் இடம் பெற்றிருக்கும் இதழ் சமரசம்...

இஸ்லாமிய நிறுவனம் சார்பில் மாதம் இருமுறை வெளியாகும் சமரசம் இதழிலில், மதுவுக்கு எதிராக அவ்வவ்போது கட்டுரைகள், கவிதைகள், பேட்டிகள் வெளியாகி வருகின்றன....


இதேபோன்று, சமரசம் இதழில் டிசம்பர் 16-31 தேதியிட்ட இதழில்  "நான்தான் டாஸ்மாக்.....!"  என்ற தலைப்பில் கவிஞர் ருக்னுத்தீன் எழுதிய கவிதை இடம் பெற்றுள்ளது.

டாஸ்மாக் குறித்தும், மதுவால் எற்படும் பாதிப்புகள் குறித்தும், கவிஞர் ருக்னுத்தீன் வேதனையுடன் வரைந்த அருமையான வரிகள் இதோ உங்கள் பார்வைக்கு....

" நான்தான் டாஸ்மாக்....."

தினத்தோறும் அலைமோதும் கூட்டம்
என்னால் நம்ப முடியவில்லை...

எனக்கு இவ்வளவு வரவேற்பா
என்னுள் மகிழ்ச்சி தாளவில்லை

என்னிடம் வயது வித்தியாசம் பாராமல்
வருகிறார்கள்
என்னெவொரு தராதரம்....

நான் சாதி மதம் பாராமல் தருகிறேன்
இதுதான் தேச ஒற்றுமை....

நான் எத்தனை குடும்பங்களைச்
சீரழிக்கின்றேன்
என்னை என்ன செய்ய முடிந்தது....

நான் பல பெண்களை
விதவையாக்குகிறேன்
ஆண்களை ஊனமாக்கிறேன்....
உங்களால் என்ன செய்ய முடிந்தது....

நான் கற்றவர்களைக்
களங்கப்படுத்துகிறேன்
கல்லாதவர்களைக்
காட்டுமிராண்டியாக்குகிறேன்
உங்களால் என்னைக் கட்டுப்படுத்த
முடிந்ததா....

பல சாலை விபத்துக்களுக்கும் நான்தான்
காரணம்
பல கற்பழிப்புகளுக்கும் நான்தான்
கருவி


இருந்தும் என்மீது வழக்கு இல்லை....
பல தற்கொலைகளுக்கு நான்தான் ஊக்க மருந்து
என்னால் பல பொருளாதார இழப்பு

மாணவர்களை மதிமயக்குகிறேன்
இளைஞர்களை இழிவுக்குள்ளாக்குவேன்
இளைஞிகளையும் என் பசிக்கு இரையாக்குகிறேன்...

சினிமாதான் என் விளம்பரம்
நடிகர்கள்தான் என்
விளம்பரத் தூதர்கள்...

மகிழ்ச்சியிலும் துக்கத்திலும்
என்னைத் துணைக்கு 
அழைக்கிறார்கள்...
நான் அவர்களை அழிப்பவன்
என்று தெரியாமலேயே....


என் ஆக்டோபஸ் வலையில்
எல்லோரையும் வீழ்த்துகிறேன்...
ஏன் தெரியுமா...?
என்னை வழிநடத்துவது அரசாங்கம்தான்
எனக்கு எதைப் பற்றியும் கவலையுமில்லை,
பயமுமில்லை....

ஆனால்,
நான் ஒரே ஒரு விஷயத்திற்குத்தான்
அஞ்சுகிறேன்..
அது
இஸ்லாம்...

இப்படிக்கு,
டாஸ்மாக்....


அருமையான வார்த்தைகளை வரைந்த கவிஞர் ருக்குத்தீனுக்கு பாராட்டுகள்...

நன்றி: சமரசம் இதழ்

தொகுப்பு...எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

=================================