Wednesday, December 11, 2013

மதுவுக்கு எதிராக ஓர் போர்....! (14)

" மதுவுக்கு எதிராக ஓர் ( பிரச்சாரம்) போர்.....! "  நாள்: 14



மதுவுக்கு எதிராக தமிழகத்தில் உள்ள பல நாளிதழ்கள் அவ்வப்போது செய்திகளை வெளியிட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

சில நாளிதழ்களில் அரசுக்கு யோசனை சொல்லும் வகையில் தலையங்கம் எழுதப்படுகிறது.

கடந்த 11.12.2013 அன்று தினகரன் நாளிதழ் மதுவுக்கு எதிராக அருமையான தலையங்கம் ஒன்றை தீட்டியிருந்தது.

அதை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்....


கேடு, கேடு தவிர வேறில்லை.......!

மண மேடைக்கு மப்பில் வந்தார் மாப்பிள்ளை: திருமணத்தை நிறுத்தினார் மணப்பெண்.

வேனில் ரோந்து சென்றபோது போதையில் மட்டையான போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட்.

போதையில் துப்பாக்கி தூக்கிய தந்தையிடம் இருந்து தாயை மீட்க முயன்ற மகன்  கொலை.

மூன்றும் நேற்றைய தினகரன் இதழில் இடம்பெற்ற தலைப்புகள்.

சாத்தான்குளம், பென்னாகரம், செங்கம் ஆகிய சிற்றூர்களில் நடைபெற்ற சம்பவங்கள் தமிழ்நாட்டின் இன்றைய சமூக நிலவரத்தை பட்டவர்த்தனமாக எடுத்துக் காட்டுகின்றன.

10 பவுன் நகை, 25,000 ரொக்கம் வரதட்சணை வாங்கியவர்கள் மாப்பிள்ளையை அழைத்து வருகிறார்கள். சிறுநீர் கழிக்கப் போவதாக சொல்லி மது அருந்தி தாமதமாக வந்தவர் மேடையில் அமர முடியாமல் அப்படியே சரிந்து விழுந்திருக்கிறார்.

அடுத்த சம்பவத்தில் உதவி சப் இன்ஸ்பெக்டர் ரோந்து வாகனத்தை எடுத்துக் கொண்டு, வேறு இரண்டு ஊர்களில் பணியாற்றும் போலீஸ் நண்பர்களை வரவழைத்து வேனையே பாராக மாற்றி குடித்து போதை தலைக்கேறி மைக்கில் எஸ்.பி அழைப்பது கேட்காமல் மயங்கி கிடந்துள்ளனர்.


மூன்றாவது குற்றம், தள்ளாடியபடி வீடு திரும்பிய விவசாயி, மேலும் குடிக்க பணம் கொடு என்று மனைவியை மிரட்டியபோது நிகழ்ந்துள்ளது. 19 வயது மகன் பரிதாபமாக பலியாகி விட்டான்.

தமிழ்நாட்டின் பண்பாடும் கலாசாரமும் அடியோடு மாறிவிட்டது. ஊருக்கு ஒருவன் குடிப் பழக்கம் உள்ளவனாக இருந்து, அவனைக் கண்டு மற்றவர்கள் ஒதுங்கிச் சென்ற காலம் கரைந்து போனது. இன்று ஊருக்கு ஒருவன் குடிக்காமல் இருந்தால் குடிமக்கள் அவனை எள்ளி நகையாடும் காட்சியை பார்க்கிறோம்.

இன்றைய தமிழ் திரைப்படங்கள் இந்த எதார்த்தத்தை பிரதிபலிக்கிறதா அல்லது சமூகச் சீரழிவை சகஜமென சித்தரித்து ஊக்குவிக்கிறதா என்று பட்டிமன்றம் நடத்தலாம்.

மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு என போர்டு எழுதி வைத்து, ஆண்டுக்கு சில ஆயிரம் கோடிகள் கூடுதல் வருமானம் கிடைக்கும் வகையில் இலக்குகள் நிர்ணயித்து மது விற்கிறது அரசு.


குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது பெரும் குற்றம் என்று எச்சரிக்கும் காவல்துறை, மதுக்கடைகள் முன்பு நிறுத்தப்படும் ஆயிரக்கணக்கான வாகனங்களை கண்டுகொள்வதில்லை.

குற்றங்களும் விபத்துக்களும் அதிகரிப்பதற்கு குடிபோதை மிக முக்கியமான காரணம் என்பதை அதிகார வர்க்கம் அறிந்திருந்தாலும் ஆட்சியாளர்களின் கவனத்துக்கு கொண்டு செல்ல துணிவில்லை.

வருவாயை மதிப்பிட்டு மகிழும் அவர்களுக்கு வாழ்விடம், உழைப்பிடம் என அனைத்து முனைகளிலும் நேர்கின்ற இழப்பை கணக்கிட மனமில்லை.

பள்ளி மாணவர்கள் சீருடையில் புத்தகப் பையுடன் கூட்டத்தில் முட்டி மோதி மது புட்டிகளை வாங்கிச் செல்கிறார்கள்.

மது அருந்துவது தவறில்லை என்ற எண்ணத்தை இளம் நெஞ்சங்களில் ஆழமாக விதைத்த பெருமை புதிய தலைமுறை இயக்குனர்களை சாரும்.

குடியின் கோரப் பிடியில் இருந்து தமிழ்நாட்டை விடுவிக்கும் நல்லெண்ணம் சம்பந்தப்பட்ட யாருக்கும் இருப்பதாக தோன்றவில்லை. மதுக்கடைகளை மூடினால் மருத்துவமனைகளில் கூட்டம் பாதியாக குறைந்துவிடும் என டாக்டர்கள் புள்ளிவிவரங்களை கொட்டுகின்றனர்.


மக்களுக்கான நலத் திட்டங்களை செயல்படுத்த மதுக்கடைகளின் வருவாய் அவசியம் என்பது வாதமல்ல, பிடிவாதம். மதுவிலக்கு இனிமேல் சாத்தியமல்ல என அரசு உறுதியாக நம்பினால், கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டுவரலாம். முதல் கட்டமாக கடை திறந்திருக்கும் நேரத்தை கணிசமாக குறைக்கலாம்.

நன்றி : தினகரன் நாளிதழ் தலையங்கம் (11.12.1013)

தொகுப்பு...எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
=================================

No comments: