Wednesday, December 25, 2013

மதுவுக்கு எதிராக ஓர் போர்.....! (29)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....!"  நாள்: 29

மதுவிலக்கு ஒன்றுதான் உயிர்க் கொள்கை.......!

ஆந்திரமும் தமிழகமும் ஒன்றுபட்டிருந்த சென்னை மாகாணத்தின் பிரதமர், வங்கத்தின் ஆளுநர், இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல், மத்திய அரசின் உள்துறை அமைச்சர், மீண்டும் தமிழக முதல்வர், காந்தி-நேரு-படேல்-ஆசாத்-ராஜேந்திர பிரசாத் ஆகியோருக்கு இணையாக நாட்டு மக்களால் போற்றப்பட்டவர். 93 வயதான முதுபெரும் கிழவர் ராஜாஜி.

மதுவிலக்கு ஒன்றுதான் மூதறிஞர் ராஜாஜியின் உயிர்க் கொள்கையாக விளங்கியது.

வெள்ளையர் ஆட்சியில் சென்னை மாகாணப் பிரதமராகப் பொறுப்பேற்று மூன்று மாதங்கள் முடிவதற்கு முன்பே, தன்னுடைய சொந்த மாவட்டமான சேலத்தில் மதுவிலக்கை நாட்டிலேயே முதன்முறையாக ராஜாஜி நடைமுறைப்படுத்தினார்.

ராஜாஜி  பதவி ஏற்று மூன்று மாதங்களுக்குள், 1937 அக்டோபர் 1 முதல் அவரது சொந்த ஜில்லாவான சேலத்தில் மதுவிலக்கு அமலுக்கு வந்தது. படிப்படியாக பிற ஜில்லாக்களுக்கும் விரிவுபடுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டது.


இதனால் அரசின் வருவாயில் கணிசமான தொகை குறைந்துபோயிற்று. நிலவரியும் கள்ளுக்கடை ஏலமுந்தாம் அரசின் வருமானத்தின் பெரும் பகுதி. இருப்பினும் ராஜாஜி, 1937-இல் ஓர் உபரி பட்ஜெட்டையே வழங்கினார்.

அடுத்த இரண்டு வருடங்களிலும் அவ்வாறே வழங்க இருந்தார். எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.யான அப்பாதுரைப்பிள்ளை ‘விவரங்களைப் புரிந்துகொள்ளும் ஸி.ஆரின் திறனையும், பொருளாதார நுணுக்கங்களனைத்தையும் அறிந்திருந்த நேர்த்தியையும்’ வியந்து போற்றினார்.


நிலவரியும் கள்ளுக்கடை ஏலமும்தான் அன்று அரசின் முக்கிய வருவாய். மதுவிலக்கினால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட, ஆசியாவிலேயே முதன்முதலாக 1939-ல் ராஜாஜி விற்பனை வரியை அறிமுகப்படுத்தினார்.

இன்று எல்லா மாநில அரசுகளுக்கும் கொழுத்த வருவாயை அவர் கண்டெடுத்த விற்பனை வரியே அள்ளிக் குவிக்கிறது.

அதே நேரத்தில், மதுவின் விற்பனையும் கொடிகட்டிப் பறப்பதுதான் கொடுமையிலும் கொடுமை.


கலைஞர் கருணாநிதி 1972-ல் மதுக்கடைகளைத் திறந்தபோது, சொல்லில் அடங்காத சோகத்தில் ஆழ்ந்தார் அந்த மூதறிஞர்.

கொட்டும் மழையில் தன் பெருமை பாராது கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக் கதவைத் தட்டினார்.

அவருடைய கரங்களைப் பற்றியபடி “தமிழகத்தில் மதுவிலக்கு தொடர வேண்டும்” என்று கெஞ்சினார்.


“நம்பிக்கையுடன் அல்ல, மனசஞ்சலத்துடன் வீடு திரும்பினேன்” என்று மொழிந்த ராஜாஜி, அன்றுபோல் என்றும் தன் வாழ்வில் வருத்தமுற்று வேதனைப்பட்டதில்லை என்றார், அவருக்கு இறுதிவரை தொண்டூழியம் செய்த ‘கல்கி’ சதாசிவம்.

தி இந்து தமிழ் நாளிதழில் வந்த கட்டுரைகளில் இருந்து சில பகுதிகள்.....

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

No comments: