Sunday, December 8, 2013

மதுவுக்கு எதிராக ஓர் போர்...! (11)

" மதுவுக்கு எதிராக ஓர் ( பிரச்சாரம்) போர்.....! "  நாள்: 11



17 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள் !

இந்திய இளம் தலைமுறையினர் 17 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகி வருவதாக இந்திய பொது சுகாதார அறக்கட்டளை (பி.எச்.எப்.ஐ.) எச்சரிக்கை மணி அடித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த அமைப்பு நடத்திய ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மது, புகையிலைப் பழக்கம் வளர்ந்த நாடுகளில் கணிசமாகக் குறைந்துள்ளது. ஆனால் வளரும் நாடுகளான இந்தியா, சீனாவில் மதுப் பழக்கம் இளைஞர்களை ஆட்டிப் படைத்து வருகிறது.

வார விடுமுறை என்றால் மது விருந்து என்பது இப்போது பெரும்பாலானோரால் ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டது. இப்போது டிசம்பர் மாதம். இந்த சீஷனில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என அடுத்தடுத்து பண்டிகைகள் அணிவகுக்கின்றன. இதனால் மது வியாபாரம் செழித்து கொழிக்கிறது.

இந்தியர்களைப் பொறுத்தவரை பீர், ஒயின் மது வகைகளைவிட ஆல்கஹால் அதிகம் கலந்த விஸ்கி, ரம் மதுபானங்களையே அதிகம் விரும்புகின்றனர். இதனால் அவர்களின் உடல் நலம் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது.


குடி குடியைக் கெடுக்கும், குடலையும் கெடுக்கும் என்று டாக்டர்கள் எச்சரித்தாலும் குடியில் மூழ்கிய குடிமகன்களால் அதிலிருந்து மீண்டு வரவே முடியவில்லை.

நாடு முழுவதும் மது போதையால் நேரிடும் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சமூகவிரோத செயல்கள், வன்முறைச் சம்பவங்களுக்கும் மதுவே முக்கியக் காரணமாக உள்ளது. தொழிலாளர்களின் போதைப் பழக்கத்தால் பணியிடங்களில் உற்பத்தித் திறன் குறைகிறது.

மாயாஜால விளம்பரங்கள்

இந்திய இளைஞர்களிடம் மதுப் பழக்கம் அதிகரிப்பதற்கு மதுபான நிறுவனங்களின் மாயாஜால விளம்பர தந்திரங்களும் வலுவற்ற சட்டங்களுமே முக்கிய காரணம் என்று பி.எச்.எப்.ஐ. சுட்டிக் காட்டியுள்ளது.


நமது நாட்டில் மதுபான விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், மதுபான நிறுவனங்கள் வேறு பொருள்களின் பெயரில் தங்கள் சரக்குகளை விளம்பரப்படுத்துகின்றன. குடிநீர் பாட்டில், சோடா, சி.டி.க்கள், குளிர்பானங்களின் பெயர்களில் மதுபான வகைகளுக்கு கவர்ச்சிகரமான விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன.

இந்த விளம்பரங்களில் பிரபல நடிகர்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள் தோன்றி இளம் வயதினரை எளிதாக ஈர்க்கின்றனர். சில முக்கிய விருது நிகழ்ச்சிகளுக்கும் மதுபான நிறுவனங்கள், தங்களின் கிளை நிறுவனங்கள் மூலம் நிதியுதவி அளித்து மறைமுகமாக விளம்பரம் தேடிக் கொள்கின்றன.

திரைப்படங்களில் சரக்குகளின் பெயர்

இப்போது வெளியாகும் பெரும்பாலான திரைப்படங்களின் பாடல்கள், வசனங்களில் மதுபான வகைகளின் பெயர்கள் சர்வசாதாரணமாக பயன்படுத்தப்படுகின்றன. சில படங்களில் மதுபானங்களுக்கு மறைமுகமாக விளம்பரமும் செய்யப்படுகிறது. அண்மைக்காலமாக பேஸ்புக், டுவிட்டர் சமூக வலைத்தளங்களிலும் மதுபான விளம்பரங்கள் விதைக்கப்படுகின்றன.

இதனால் இந்திய இளைஞர்கள் 17 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் கொடுமை அரங்கேறி வருகிறது.


இதே நிலை நீடித்து போதைப் பழக்கத்தைக் கட்டுப்படுத்த தவறினால் நாட்டின் மனித வளம் மிக மோசமாகப் பாதிக்கப்படக் கூடும் என்று பி.எச்.எப்.ஐ. எச்சரித்துள்ளது.

எனவே, இப்போதுள்ள சட்ட விதிகளை கடுமையாக்க வேண்டும், புதிய மதுபான நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கக் கூடாது, மறைமுக விளம்பரங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை பி.எச்.எப்.ஐ. அறிவுறுத்தியுள்ளது.

நன்றி:  தி இந்து தமிழ் நாளிதழ் (08.12.2013)

தொகுப்பு:  எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
=================================

No comments: