Wednesday, December 4, 2013

மதுவுக்கு எதிராக ஓர் போர்...! (8)

" மதுவுக்கு எதிராக ஓர் ( பிரச்சாரம்) போர்.....! "  நாள்: 8



மது பழக்கத்தால் சின்னாபின்னமான கலீல் பாய் குடும்பம்....!

வேலூரில் நாங்கள் குடியிருக்கும் பகுதியில் வசித்தவர் கலீல் பாய்...

தலையனை, மெத்தை தயாரிக்கும் தொழிலை செய்து வந்தார்.

நல்ல வருமானமும் கிடைத்து வசதியாக வாழ்க்கையை நடத்தினார்..

அன்பான மனைவி, மூன்று ஆண் பிள்ளைகள், ஒரு பெண் பிள்ளை என அவருக்கு நான்கு பிள்ளைகள் இருந்தனர்...

அனைவரையும் பள்ளியில் சேர்த்து அவர்களுக்கு கல்வி வழங்க ஏற்பாடும் செய்தார் கலீல் பாய்...

இப்படி கலீல் பாயின் வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றுக் கொண்டிருந்தபோது, நண்பர் ஒருவரின் கூடப் பழக்கம் அவருக்கு கிடைத்தது..

அந்த நண்பரின் வழியாக மதுப்பழக்கத்திற்கு ஆளானார் கலீல் பாய்...

ஆரம்பத்தில் மெல்ல மெல்ல தொடங்கிய மதுப்பழக்கம், பின்னர் நாள்தோறும் என்ற நிலைக்கு எட்டியது...

மது அருந்தாமல் அவரால் இருக்க முடியவில்லை...

இரவு நேரத்தில் மட்டும் மதுவை அருந்தி வந்த கலீல் பாய், பின்னர், பகல் நேரத்திலும் மதுவை கட்டாயம் அருந்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்...


மது அருந்திவிட்டு தொழிலை கவனித்து வந்த கலீல் பாய்க்கு அதில் முழு கவனமும் செலுத்த முடியவில்லை...

இதனால், மெல்ல மெல்ல வருமானம் குறைந்தது...

இதில் மிகப் பெரிய கொடுமை என்னவென்றால், கலீல் பாய் தான் மட்டும் மது அருந்தாமல், தன்னுடைய மனைவிக்கும் அந்த பழக்கத்தை கற்று கொடுத்ததுதான்...

கணவனின் கட்டாயம் காரணமாக, மது அருந்த தொடங்கிய கலீல் பாயின் மனைவி, பின்னர், தொடர் குடிக்காரியாக மாறினார்...


கணவன், மனைவி இருவரும் வீட்டில் மது அருந்தி மகிழ்ந்தபோது, பிள்ளைகள் என்ன செய்வது என்று அறியாமல் தவிப்பார்கள்...

இதனால், கலீல் பாயின் வீட்டில் மெல்ல மெல்ல மகிழ்ச்சி கரைந்தது....வருமானம் குறைந்தது...

வறுமை மெல்ல மெல்ல எட்டிப் பார்த்தது...

அழகான, அன்பான குடும்பம், சாத்தானின் இல்லமாக மாறியது...

தொடர்ந்து மதுவை குடித்த கலீல் பாய், நாளடைவில் உடல்நலம் பாதிக்கப்பட்டு நோய்வாய் பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்...

மருத்துவமனையில் அவரை கவனிக்க ஆள் இல்லை...

மதுப்பழகத்திற்கு ஆளான  மனைவியின் உடல் நலமும் பாதிப்பு அடைந்தது.


கொஞ்சம் நாட்களிலேயே மதுப்பழகத்திற்கு அடிமையாகி, உடல்நலம் கெடுத்துக் கொண்டு மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்ட கலீல் பாய் உயிரிழந்தார்...

அவரைத் தொடர்ந்து கலீல் பாயின் மனைவியும், தொடர்ந்து மது அருந்தியதால், அவரும் விரைவிலேயே மரணம் அடைந்தார்...

கலீல் பாயின் பிள்ளைகள் நான்கு பேரை கவனிக்க ஆளில்லை..

பெண் பிள்ளை மீது பாசம் கொண்ட கலீல் பாயின் சகோதரர், அவரது பெண் பிள்ளையை தத்து எடுத்துக் கொண்டார்..

ஆனால், மூன்று ஆண் பிள்ளைகள்... இஸ்மாயில், கலீல்...இக்பால்... ஆகிய மூன்று பேரும் செய்வது அறியாமல் திகைத்தனர்...

தவறான வழியில் அவர்கள் கால் பதித்தனர்...வழித்தவறி சென்றனர்.


கலீல் பாயின் பிள்ளைகள் மூன்று பேரும், பின்னர் மதுப்பழகத்திற்கு ஆளாகி, குற்றச் செயல்களில் இறங்கினர்...

வாழ்க்கை சின்னாபின்னமாகியது....

இருள் சூழ்ந்தது...

அமைதி வழியில் செல்ல வேண்டியவர்கள், தவறான பாதையில் செல்லத் தொடங்கினர்...

ஆறுதல் கூற, வழிக்காட்ட ஆள் இல்லாததால், இஸ்மாயில், கலீல், இக்பால் ஆகிய மூன்று பேரின் வாழ்க்கையும் மதுப்பழக்கத்தால் கரைந்து போனது...

மூன்று பேருமே இளம் வயதிலேயே மரணம் அடைந்தனர்.

ஆக,  மதுப்பழக்கதால் ஒரு நல்ல குடும்பம் சிதைந்து போனது....

கலீல் பாய் மட்டுமல்ல, இதுபோன்று பலர் இன்று மதுப்பழகத்திற்கு ஆளாகி குடும்பங்களை சிதைத்து வருகின்றனர்....

வாழ்க்கையை கெடுத்துக் கொண்டு, அமைதி இழந்து தவிக்கின்றனர்...

மேலே நான் சொன்னது ஏதோ கற்பனை கதை என்று நினைத்து விட வேண்டாம்...


இது உண்மை சம்பவம்....நான் நேரில் பார்த்த அதிர்ச்சி சம்பவம்...

மது என்ற அரக்கண் ஒவவொருவரின் வாழ்க்கையை எப்படி அழிக்கிறது என்பதற்கு நல்ல சாட்சியம் கூறும் உண்மை சம்பவம்...

சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து கொண்டால் நன்மை அவர்களுக்கே....

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

No comments: