Thursday, December 26, 2013

மதுவுக்கு எதிராக ஓர் போர்...! (31)

மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்......!" நாள்  31

பூரணமதுவிலக்கு கோரி, மதுரை திரும்பிய பிறகும் போராட்டம்.... !

சட்டக்கல்லூரி மாணவி நந்தினி, தந்தை-தங்கையுடன் கைது...!!

மதுரை சட்டக்கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வருபவர் நந்தினி.

அவர் பூரணமதுவிலக்கை அமல்படுத்தக்கோரி போராட்டம் நடத்தி வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் உண்ணாவிரதம் இருந்த அவர் பின்னர் அதை கைவிட்டார். இந்தநிலையில் நந்தினி சென்னையில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தார்.

அதன்படி கடந்த 23-ந் தேதி காலையில் மதுரையில் இருந்து தன் தந்தை ஆனந்தனுடன் அவர் மோட்டார்சைக்கிளில் சென்னைக்கு புறப்பட்டார்.

குரோம்பேட்டையில் அவரை பிடித்த போலீசார் சென்னை மாநகருக்குள் நுழைய அனுமதிக்க முடியாது என கூறியதால் நந்தினி தன் தந்தையுடன் மதுரைக்கு செல்வதாக கூறி மோட்டார்சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.


ஆனால் அவர்கள் மதுரை செல்லாமல் கொடநாடு செல்ல முடிவு செய்தனர். அதன்படி சேலம் வழியாக கோவைக்கு மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிக்கோவில் பிரிவில் கடந்த 25ஆம் தேதி மாலை வந்து கொண்டு இருந்தனர்.

அப்போது மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு நந்தினியும், அவரது தந்தை ஆனந்தனும் தமிழகம் முழுவதும் பூரணமதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி அந்த வழியாக வருவோர், போவோரிடம் துண்டுபிரசுரங்களை வினியோகம் செய்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் பெருந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீசார் ஆனந்தன், நந்தினியிடம் விசாரித்தனர். சாப்பிடாமல் மிகவும் சோர்வாக இருப்பதாக கூறியதால் 2 பேரையும் போலீசார் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.


நந்தினி, அவரது தந்தை ஆனந்தன் ஆகியோர் மீது பொதுஅமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் கோஷமிட்டதாக பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் தந்தையையும், மகளையும் மதுரை மாநகர போலீஸ் கமிஷனரிடம் ஒப்படைக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

இதனையடுத்து நேற்று காலை பெருந்துறை போலீசார், ஆனந்தனையும், நந்தினியையும் மதுரைக்கு வேனில் அழைத்துச்சென்றனர்.

கடந்த 26ஆம் தேதி காலை அவர்கள் மதுரை வந்து சேர்ந்தனர். மதுரையிலும் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். வைகை ஆற்றங்கரையில் (கள்ளழகர் ஆற்றில் இறங்குமிடம்) நந்தினி உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவருடைய தந்தை ஆனந்தன், தங்கை ஆகியோரும் அவருடன் உண்ணாவிரதம் இருந்தனர்.


தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று, நந்தினியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நந்தினி உண்ணாவிரதத்தை கைவிட மறுத்தார். இதைத் தொடர்ந்து, அவரையும், அவருடைய தந்தை ஆனந்தன், தங்கை நிரஞ்சனா ஆகியோரையும் போலீசார் கைது செய்து, ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவர்களை அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

No comments: