Saturday, December 7, 2013

மதுவுக்கு எதிராக ஓர் போர்..! (10)

" மதுவுக்கு எதிராக ஓர் ( பிரச்சாரம்) போர்.....! "  நாள்: 10


" டாஸ்மாக் கலாச்சாரம் வருத்தமா இருக்கு !  இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் வேதனை !!

தற்போதைய பல திரைப்படங்களில் மதுக்கு ஆதரவான காட்சிகள்... நடிகர்கள் மது அருந்தும் காட்சிகள் நிச்சயம் இடம் பிடிப்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது....

ஆனால், இந்திய திரைப்படத்துறையில் பல ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்தி, பல சாதனைகளை புரிந்த இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர். மது குறித்து என்ன சொல்கிறார் தெரியுமா....

வாருங்கள், முதலில் அவரது கருத்தை பார்ப்போம்...

"பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கூட டாஸ்மாக்கிற்கு போகும் கலாச்சாரம் தற்போது      உருவாகியுள்ளது.

இந்தியாவில், தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்றே எனக்கு புரியவில்லை..

இதைப் பார்க்கும்போது, மிகவும் வருத்தமா இருக்கு...

இதையெல்லாம் மாற்றுவதற்கு யார் வரப் போகிறார்கள் என்றும் தெரியவில்லை.."


திரைப்படத்துறையைச் சேர்ந்த ஒருவர் மதுவுக்கு எதிராக கருத்தை தெரிவிக்கும் நிலையில் கூட, மதுக்கு ஆதரவான காட்சிகள், பாடல்கள் இன்னும் சினிமாவில் வந்துக் கொண்டுதான் இருக்கின்றன.

அண்மையில் வந்த ஒருசில திரைப்படங்களின் பாடல் வரிகள் இதோ...


இது கானா பாலா பாடிய பாடல் வரிகள்...

"கொடுக்கிறாடா டார்ச்சரூ...
போய்ச்சு என் ஃபிச்சாரு (future)
இதுக்கு எதுக்கு டாக்டரு
ஊத்து இன்னும் ஒரு குவார்டரு"

மற்றொரு பாடலில்

"நிம்மதியே இல்லே மச்சா
போனா அவ வீட்டுக்கு
அதுக்கு தண்டா
வந்து போறேன்
தினமும் ஓயின் ஷாப்புக்கு"

இந்த பாடல் வரிகளை கேட்டு இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை கை தட்டுகிறார்கள்...

விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்...ரசிக்கிறார்கள்...

ஆனால், மதுவுக்கு ஆதரவான இந்த பாடல்கள் இருப்பதை அவர்கள் சிறிதும் கவலைப்படவில்லை...

இதேபோன்றுதான் மதுவுக்கு ஆதரவாக சில நடிகர்கள் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்கள்...


சிரிப்பு நடிகர் சந்தானம், தான் நடிக்கும் படங்களில் நிச்சயம் மது அருந்தும் காட்சியில் வந்து செல்கிறார்...

சந்தானம் மட்டுமல்ல, ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட புதுமுக நடிகர்கள் பலர் மது அருந்தும் காட்சிகள் சர்வசாதாரணமாக நடித்துச் செல்கிறார்கள்...

அதன்மூலம், இளைஞர்கள் இடையே மது அருந்தும் பழக்கத்தை எளிதாக கற்றுத் தருகிறார்கள்...

பழைய நடிகர்களில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உட்பட பலர் மது அருந்தும் காட்சிகளில் சர்வசாதாரணமாக நடித்து சென்றார்கள்...


வாழ்க்கையில் மதுப்பழகத்திற்கு ஆளாகாத சில நடிகர்கள் கூட மதுக்காட்சிகளில் நடித்துள்ளார்கள்...

எனினும், ஒருசிலர் விதிவிலக்காக இருந்துள்ளார்கள்..

குறிப்பாக, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மது அருந்தும் காட்சிகளை தன்னுடைய படத்தில் தவிர்த்து வந்தார்.


அப்படியே மது அருந்தும் காட்சியில் நடித்துவிட்டால், அந்த படத்திலேயே அதற்கு எதிராக காட்சியை அமைத்து, மதுவின் தீமை குறித்து மக்களிடையே பிரச்சாரம் செய்தார்.

ஒளிவிளக்கு என்ற திரைப்படத்தில் மது அருந்தும் காட்சியில் எம்.ஜி.ஆர். நடித்து இருப்பார்.

ஆனால், எம்.ஜி.ஆரை, அவரது மனச்சாட்சி குற்றம் சுமத்தி பாடும் பாடல் ஒன்று உடனே வரும்...


இதோ, கவிஞர் வாலி எழுதிய அந்த பாடல் வரிகள் உங்கள் பார்வைக்கு....


"தைரியமாக சொல் நீ மனிதன் தானா?
மனிதன் தானா?
இல்லை!
நீ தான் ஒரு மிருகம் -
இந்த மதுவில் விழும் நேரம்
மனமும் நல்ல குணமும்
உன் நினைவை விட்டு விலகும்
நீ தான் ஒரு மிருகம் -
இந்த மதுவில் விழும் நேரம்

மானை போல் மானம் என்றாய்-
நடையில் மத யானை நீயே என்றாய்
வேங்கை போல் வீரம் என்றாய்-
அறிவில் உயர்வாக சொல்லிக் கொண்டாய்
மதுவால் விலங்கினும் கீழாய் நின்றாய்

தைரியமாக சொல் நீ
மனிதன் தானா மனிதன் தானா

அலையாடும் கடலை கண்டாய்
குடித்து பழகாமல் ஆடக் கண்டாய்
மலராடும் கொடியை கண்டாய்
மதுவை பருகாமல் ஆடக் கண்டாய்
நீயோ மதுவாலே ஆட்டம் கண்டாய்

தைரியமாக சொல் நீ
மனிதன் தானா மனிதன் தானா

பொருள் வேண்டிதிருடச் செல்வாய்
பெண்ணை பெறவேண்டி விலையை சொல்வாய்
துணிவோடு உயிரை கொல்வாய்
எதற்கும் துணையாக மதுவை கொள்வாய்
கேட்டால் நான்தானே மனிதன் என்பாய்

தைரியமாக சொல் நீ
மனிதன் தானா -இல்லை மனிதன் தானா
நீ தான் ஒரு மிருகம்
இந்த மதுவில் விழும் நேரம்........"

என்ன அருமையான வரிகள்....மதுவுக்கு எதிராக கவிஞர் வாலி எழுதிய வரிகள் இன்னும் நம் உள்ளத்தில் ஆழமாக ரிங்காரம் செய்து ஒலித்துக் கொண்டிருக்கின்றன...


ஆனால்,  தற்போது நிலைமை தலைகீழாக அல்லவா உள்ளது....

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் வேதனையாக குறிப்பிட்டது போன்று, இதையெல்லாம் மாற்றுவதற்கு யார் வரப் போகிறார்கள் என்று தெரியவில்லை....

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
=======================

http://www.youtube.com/watch?v=GscOC7aw97k

www.youtube.com/watch?v=GscOC7aw97k

No comments: