Thursday, December 19, 2013

மதுவுக்கு எதிராக ஓர் போர்...! (23)

" மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....!"  நாள் : 23



இஸ்லாத்தின் பார்வையில் மது அருந்துதல்!

மது அருந்துதல் குறித்து திருக்குர்ஆன் என்ன கூறுகிறது....

“(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்; “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது.” (அல்குர்ஆன் 2: 219)

மேலும் மது அருந்துதல் ஷைத்தானின் அருவக்கத்தக்க செயல் என திருக்குர்ஆன் எச்சரிக்கிறது..

ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் – அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? (அல்-குர்ஆன் 5:90-91)


மது அருந்துபவர் மற்றும் மதுவுடன் தொடர்புடையவர்கள் அனைவரையும் நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்.

மது அருந்துபவர், அதனை அருந்தச் செய்பவர், வாங்குபவர், விற்பவர், தயாரிப்பாளர், சுமப்பவர், இதன் மூலம் கிடைத்த வருவாயை சாப்பிடுபவர்கள் அனைவரையும் நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள். (ஆதாரங்கள் : அபூதாவுத், திர்மிதி, இப்னுமாஜா)

மதுவில் மூழ்கி இருப்பவனும், பெற்றோரைத் துன்புறுத்துபவனும், தன் மனைவியின் மீது வீண்பழி சுமத்துபவனும் சுவனம் புகமாட்டான்”  என்று நபிகள் நாயகம் (ஸல்) எச்சரித்துள்ளார்கள்.


“தொடர்ந்து மது அருந்துபவர், ஓடிப் போன அடிமை, தம் குடும்பத்தார்கள் செய்யும் தீய செயல்களைக் கண்டு திருப்தியடைந்தவர் ஆகிய இந்த மூவருக்கும் அல்லாஹ் சுவர்க்கத்தைத் தடை செய்திருக்கிறான்”

“போதைப் பொருளை அருந்துபவர்களுக்கு “தீனத்துல் கப்பால்” எனும் பானத்தை புகட்டுவதாக அல்லாஹ் முடிவு செய்துள்ளான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், “தீனத்துல் கப்பால் என்றால் என்னவென்று” கேட்டனர். அது ‘நரகவாசிகளின் வேர்வை’ அல்லது ‘நரகவாதிகளிடம் பிழிந்தெடுக்கப்பட்ட பானம்’ என பதிலளித்தார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), ஆதாரம் : முஸ்லிம்.


நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: மதுபோதையில் மூழ்கியவன் இறந்துவிட்டால் சிலை வணங்கியைப் போன்று -மறுமையில்- அல்லாஹ்வை சந்திப்பான்.

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: போதை தரும் அனைத்தும் மதுவாகும். போதை தரும் அனைத்தும் ஹராமாகும்.

மது அருந்திய நிலையில் மரணித்தால் நரகில் நுழைவான்! அதிலிருந்து விடுபட்டு பாவமன்னிப்புக் கோரினால் அல்லாஹ் மன்னிப்பான்: -

மது அருந்தி போதையடைந்தவனின் நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான்.


தொகுப்பு....எஸ்.ஏ,.அப்துல் அஜீஸ்
=================================

No comments: