Sunday, January 8, 2012

முல்லைப் பெரியாறு – கண்டனக் கவியரங்கம் !

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை !
தமிழகத்தில் தற்போது சூடு பிடித்துள்ள முக்கிய விவகாரங்களின் ஒன்று.

முல்லைப் பெரியாற்றில் தமிழகத்திற்கு உள்ள உரிமை குறித்து பல்வேறு அமைப்புகள் கருத்தரங்கங்கள், கவியரங்கங்கள் நடத்தி உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துக் கொண்டிருக்கின்றன.

அந்த வரிசையில், தமிழ் ஊடகப் படைப்பாளிகள் சங்கமும், தன் பங்கிற்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலக சிற்றரங்கத்தில் அண்மையில் கவியரங்கம் ஒன்றை நடத்தியது.


முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரள அரசின் தவறான அணுகுமுறைக் கண்டித்து நடைபெற்ற அந்த கண்டனக் கவியரங்கத்தில், சங்க உறுப்பினர்கள் மட்டுமல்லாமல், பல கவிஞர்கள், அழகான கவிதைகளை வாசித்தனர்.  

எனக்கும் கவிதை வாசிக்க ஆர்வம்தான். ஆனால் உடல்நலம் காரணமாக என்னால் உடனடியாக கவிதை எழுத முடியவில்லை.

ஆனால், நான் எப்போதும் கவிஞர் என அன்பாக அழைக்கும் கவிஞர் ச.முரளி, மிக அழகான கவிதையை வாசித்தபோது, மனம் உண்மையிலேயே மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது.


எளிமையான வார்த்தைகளில் நறுக் நறுக்கொன்று தனது கருத்துக்களை அள்ளி வீசினார் கவிஞர் முரளி.

அந்த கவிதையின் வரிகளை உங்கள் பார்வைக்கும் முன் வைக்கிறேன்.
படியுங்கள். பாராட்டு தெரிவியுங்கள் கவிஞர் முரளிக்கு.

ஒற்றுமை வேணும் தமிழா !

மூன்று புறமும் அலை !
ஒரு புறம் மலை!
இந்தியாவின் ஒரு அழகு சிலை!
தமிழனுக்கு ஏனடா இந்த நிலை!
எல்லாப் பக்கமும் அடிக்கிறான்
எங்கு போனாலும் உதைக்கிறான்
வளம் சேர்க்கப் போன இடத்தில்
தன் பலம் இழந்து கிடக்கிறான்!

நாடு விட்டு நாடு தாண்டி
நடந்ததென்று இருந்துட்டோம்
நாட்டுக்குள்ள நடக்குறப்போ
நாவடங்கி கிடந்துட்டோம்!

தேசம் ஒன்னா இருந்தப்போ
வளந்துவிட்ட பசங்களெல்லாம்
மொழிவாரி மாநிலத்தில்
நம்மள மொத்தி மொத்தி
எடுக்கிறான்!




நிமிர்ந்து நின்ன கூட்டமொன்னு
வளைந்துபோயி இருக்குது !
தண்ணீருக்கு பலஇடத்துல
தலைகுனிந்து கிடக்குது !
தன்நிலையை உயர்த்த மட்டும்
தமிழகத்த நாடுறான்
தண்ணியின்னு கேட்டுப்புட்டா
தகராறு பண்ணுரான்
மதம் பார்த்து இனம் பார்த்து
மொழி பார்த்து
பழகாத தமிழினம்
பாரத தேசத்துக்குள்ள
பாழ்பட்டுக் கிடக்குது !




வேற்றுமையில் ஒற்றுமையை
நாமமட்டும் பார்க்குறோம்
நமக்குள்ள இல்லாத ஒற்றுமையை
உலகமே பார்க்குது !

வெளியில அடிச்சா
உள்ளே உடைக்கிறான் !
நாசமா போனதெல்லாம்
நம்மோட பொருள்தானே!




வீரம் மட்டும் வாழ்க்கையல்ல
விவேகமும் வேணும் தமிழா உனக்கு !
தேக்கி வச்ச தண்ணிக்கும் (முல்லைப் பெரியாறு)
தேடிவர்ற தண்ணிக்கும் (காவிரி)
விடிவுகாலம் வரணுமுன்னா
அரசியல் கடந்து ஆய்வு செய்வோம் !
ஒன்றிணைந்து பாடுபட்டா
எவனும் இங்க வரமாட்டான்
தொல்லை எதுவும் தரமாட்டான் !




வழக்கு மொழியில் எளிமையான வரிகள் அல்லவா. முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு தீர்வு காண நல்ல ஆலோசனையும் தந்திருக்கிறார் கவிஞர் முரளி.

அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள், நீங்களும் வாழ்த்துச் செய்திகளை அனுப்புங்கள்.

அப்துல் அஜீஸ்