Wednesday, November 27, 2013

வெற்றிக்கு.....!

" வெற்றிக்கு தேவைப்படும் துணைக் காரணங்கள்.....!"



இப்ராஹிம் பாய்...!

என் சகோதரர்கள் நடத்தி வந்த பீடி கம்பெனியில் பணிபுரிந்து ஊழியர்...

என் பள்ளி பருவத்தில், நான் கம்பெனிக்கு செல்லும்போது அவரை அடிக்கடி சந்திப்பது உண்டு...

குறிப்பாக, அதிகாலை நேரங்களில் செல்லும்போது, தினமணி நாளிதழை மிகவும் ஆர்வத்துடன் படித்துக் கொண்டிருப்பார் இப்ராஹிம் பாய்...

அவர் படித்து முடித்த பிறகுதான், தினமணியை நாங்கள் படிக்க வாய்ப்பு கிடைக்கும்...

அதற்காக மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்...

அதனால் சில நேரங்களில் இப்ராஹிம் பாய் மீது கோபம் ஏற்படும்...

கம்பெனிக்காக தினமணி நாளிதழை கடையில் இருந்து வாங்கி வரும் இப்ராஹிம் பாய் ஒவ்வொரு செய்தியின் ஆழத்திற்கு சென்று வருவார்...

தலையங்கம் முதல் விளையாட்டு செய்திகள் வரை ஒன்றை விட மாட்டார்...

பள்ளி பருவத்தில் எங்களுக்கு தினமணியில் வரும் சிறுகதைகள், துணுக்குகள் ஆகியவற்றை படிக்க ஆர்வம் இருக்கும்...

ஏன், சினிமா செய்திகள் பக்கமும் கவனம் செல்லும்...

ஆனால், இப்ராஹிம் பாய் வெகுநேரம் தினமணியை எடுத்துக் கொள்வதால், பொறுமை இழந்து நாங்கள் வீட்டிற்கு திரும்பி விடுவோம்...

இதனால், மறுநாள், பழைய செய்தித்தாளை எடுத்து படிக்க வேண்டிய நிலை எங்களுக்கு ஏற்படும்...


ஆனால், ஒரு விஷயம் மட்டும் இப்ராஹிம் பாய் எங்களுக்கு சொல்லித் தருவார்...

எந்த செய்திகளை அவசியம் படிக்க வேண்டும்...

அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு என்ன...தினமணி எப்படி தலையங்கம் தீட்டியுள்ளது..

வகுப்புவாத கட்சிகள் எவை...

இப்படி பல செய்திகள் குறித்து சிறு பாடம் நடத்துவார் இப்ராஹிம் பாய்...

அப்போதெல்லாம், அது எனக்கு பெரிதாக தென்படவில்லை...

ஆனால்,  இன்று பல்வேறு ஊடகங்களில் நான் பணிபுரிய வாய்ப்பு கிட்டியபோது, இப்ராஹிம் பாயின் நினைவுதான் அடிக்கடி வந்து செல்லும்...

என் வளர்ச்சிக்கு என் குடும்பம்,

என் தாய்,

என் சகோதரர்கள்

என் சகோதரிகள்

என பலர் காரணமாக இருக்கிறார்கள்...

ஏன், உறவினர்கள் கூட என் வளர்ச்சியில் அக்கறை கொண்டார்கள்...

அதனால் நான்,

மணிச்சுடர் நாளிதழ்,

சன் தொலைக்காட்சி,

மக்கள் தொலைக்காட்சி

ஜி தமிழ் தொலைக்காட்சி (சிறிது காலம்)

ஜி செய்தி தொலைக்காட்சி

இமயம் தொலைக்காட்சி (சிறிது காலம்)

ராஜ் தொலைக்காட்சி

என பல ஊடகங்களில் பணிபுரிந்துள்ளேன்...



இவற்றிற்கு எல்லாம் காரணம் என்னுடைய உழைப்பு, என்னுடைய அறிவு, என்னுடைய திறமை என நான் ஒருபோதும் நினைத்தது இல்லை...

ஒரு முறை ஆனந்த விகடன் இதழில் கவிபேரரசு வைரமுத்து எழுதியிருந்தார்.

" ஒரு மரத்தின் பலம்
 மரத்தில் இல்லை..
 அது மண்ணைச் சார்ந்து,
 நீரைச் சார்ந்து,
 காற்றைச் சார்ந்து,
 வெளிச்சத்தைச் சார்ந்து,
 இருக்கிறது....
 மரம்,
 நானாக வளர்ந்தேன்
 என்று சொல்வது
 அறியாமை...
 எல்லா மனிதர்களின்
 வெற்றிக்கும்
 துணைக் காரணங்கள்
 தேவைப்படுகின்றன...
 எனக்குக் கிடைத்த
 துணைக் காரணங்கள்
 என்னைவிட
 வலிமையானவை
 என்பதால்
 நான் நிமிர்ந்து
 நிற்கிறேன்...
 அவர்களுக்கு
 நன்றி பாராட்டுவது
 என் கடமை....."

இவ்வாறு தனது வெற்றிக்கு காரணமானவர்கள் குறித்து கவிபேரரசு வைரமுத்து மிக அழகாக குறிப்பிட்டிருந்தார்.



இதுபோன்றுதான், என்னுடைய வாழ்விலும் நான் தற்போது அடைந்திருக்கும் நிலைக்கு பலர் காரணமாக இருந்திருக்கிறார்கள்....இருக்கிறார்கள்...

என் வளர்ச்சிக்காக என்னை சுற்றியுள்ளவர்கள் செய்த தியாகங்கள் ஏராளம்...

அதில் ஒருவர்தான் இப்ராஹிம் பாய்...

எனக்காக அவர் ஒன்றும் பெரிதாக செய்துவிடவில்லை என நீங்கள் நினைக்கலாம்...

ஆனால், என்னுள் இருந்த ஊடக திறமையை வெளிச்சத்திற்கு வர அவரும் ஒரு காரணம் என்றால் அது மிகையாகாது...

செய்திகள் குறித்து ஒன்றும் அறியாத பள்ளி பருவத்தில், பல விஷயங்களை கூறியவர் இப்ராஹிம் பாய்...

அப்போது எனக்கு அது புரியாமல் இருந்திருக்கலாம்...

ஆனால், தற்போது நான் செய்தி ஊடகங்களில் நல்ல திறமையை வெளிப்படுத்துவதற்கு அவரும் ஒரு காரணம் என்பதை என்னால் மறுக்க முடியாது...

அதன் காரணமாகவேதான், இப்போது, டீம் ஒர்க் (ஒன்று கூடி குழுவாக பணிபுரிதல்)
மூலம் நல்ல பலனை பெறலாம் என உறுதியாக நம்பி அப்படியே பணிபுரிந்து வருகிறேன்.

என்னால்தான் அனைத்தும் என்ற நினைப்பு என் உள்ளத்தில் சிறிதும் ஏற்படுவதில்லை...

ஊடகமே ஒரு டீம் ஒர்க்தான்... அப்படி பணி புரிந்தால்தான் நல்ல வெற்றியை நல்ல ரிசல்ட்டை சுவைக்க முடியும்....

சிலர் நினைப்பதுபோன்று அல்லாமல், டீம் ஸ்பிரிட்டோடு பணிபுரிய என் பள்ளி பருவத்தில், ஒன்றும் அறியாத பருவத்தில் இப்ராஹிம் பாய் சொல்லிய பல செய்திகள் இன்று எனக்கு வழிகாட்டி கொண்டிருக்கின்றன...

திடீரென இப்ராஹிம் பாயின் நினைவு வந்தது....

எனவே, எழுதிவிட்டேன் சில வார்த்தைகளை...



எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

==========================

No comments: