Saturday, November 30, 2013

மதுவுக்கு எதிராக ஓர் போர்..! (4)

" மதுவுக்கு எதிராக ஓர் ( பிரச்சாரம்) போர்.....! " - நாள்: 4


மதுபானக் காட்சிகள் கொண்ட படங்களுக்கு வரிவிலக்கு....!

அரசு மீது திரைப்பட இயக்குநர் சேரன் குற்றச்சாட்டு.....!!

தமிழ் திரைப்பட இயக்குநர்களில் மண்வாசனையுடன் அழுத்தமான படங்களைக் கொடுப்பவர் சேரன்..

மது குறித்தும் அந்த பழக்கத்திற்கு ஆளாகும் இளைஞர்கள் குறித்தும் இயக்குநர் சேரன் என்ன சொல்கிறார்....

" இளைஞர்கள் என்றாலே குடிப்பவர்கள், ஊச் சுற்றித் திரிபவர்கள், பெண் பிள்ளைகளோடு அலைகிறவர்கள் என்கிற பொதுப்புத்திதான் அனைவரிடமும் இருக்கிறது..

ஆனால், இப்படி இருக்கும் இளைஞர்கள் 10 சதவீதம் மட்டும்தான். 90 சதவீத மாணவர்கள், இளைஞர்கள் தங்களது எதிர்காலத்தைப் பற்றி அதிகம் சிந்திக்கிறவர்கள்..

வாழ்க்கையில் நமக்கான அடையாளத்தை விட்டுச் செல்ல வேண்டும் என்று நினைக்கிறவர்கள்...


இதற்காகத் தனது குடும்பத்தின் நிலையை உணர்ந்து செயல்படும் பெரும்பான்மையான நடுத்தட்டு மாணவர்களுக்குச் சரியான பாதை இதுதான் என்று தேர்ந்து கொள்ள முடியாமல் தடுமாறுகிறார்கள்..."

ஆக, சேரனின் கருத்துப்படி 90 சதவீத இளைஞர்கள் மதுவை விரும்பவில்லை....10 சதவீத இளைஞர்கள் மட்டும் மதுவை விரும்புகிறார்கள்...

ஆனால், அரசு, 90 சதவீத மக்களின், இளைஞர்களின் நலனில் அக்கறை செலுத்தாமல், 10 சதவீத இளைஞர்களின் விருப்பத்தை நிறைவேற்ற மதுக்கடைகளை திறந்து வைத்திருக்கிறது.

இது நியாயமா !


சமூகத்தில் உள்ள நல்ல உள்ளம் கொண்டவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்....

மேலும் ஒரு தகவலையும் தருகிறார் இயக்குநர் சேரன்...

அதாவது மதுபானக் காட்சிகள் கொண்ட படங்களுக்கு அரசு வரி விலக்கு கொடுப்பதாக கூறுகிறார் சேரன்...

இதோ,  படியுங்கள் அவரது கருத்தை....

" சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் ஒருமுறை போய் வாருங்கள்...

சாலையின் இருமருங்கிலும் இளநீர் கடைகளும் உண்டு.. டாஸ்மாக் மதுக்கடைகளும் உண்டு.

ஆனால், கூட்டம் எங்கே அதிகமாக நிற்கிறது... மதுக்கடைகளில்தானே..


இளநீர் இனிமையானது..ஆரோக்கியமானது...ஆனால், போதை எதில் இருக்கிறதோ அதற்குத்தானே முக்கியத்துவம் கொடுக்கிறோம் நாம்.

சினிமா மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன ?

இன்று நச்சுத்தன்மை கொண்ட படங்கள் அதிகரித்துவிட்டன.

மதுக்கடைக் காட்சிகள் கொண்டு படங்களுக்கு அரசு வரி விலக்கு கொடுக்கிறது..

அவர்களைப் பொறுத்தவரை இதுபோன்ற காட்சிகள் அவர்களது வியாபாரத்துக்கு உதவலாம் என்று நினைக்கிறார்கள் போலும்..."

ஆக, சேரனின் கருத்துப்படி, தற்போது நச்சுத்தன்மை கொண்ட திரைப்படங்கள்தான் அதிகம் வந்துக் கொண்டிருக்கின்றன...

மதுவை ஆதரிக்கும் படங்களுக்கு அரசும் ஆதரவு அளித்து வருகிறது...


என்ன அநியாயம் பாருங்கள்...

மதுவை ஒழிக்க வேண்டிய அரசு, மதுவுக்கு ஆதரவு கரம் நீட்டுகிறது...

எதிர்கால இளைஞர்களின் நலத்தைப் பற்றி சிறிதும் அக்கறை கொள்ளாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது...

இதையும் மீறி 90 சதவீத இளைஞர்கள் போதைக்கு அடிமையாகாமல் இருந்து கொண்டிருக்கிறார்கள்...


அவர்கள் மனம் மாறி, பாதை தடுமாறி போதையின் பக்கம், மதுப்பழக்கத்தின் பக்கம் போகாமல் தடுக்க வேண்டியது சமூகத்தின் கடமை....

இளைஞர்களின் நலன்களில் அக்கறை கொள்வோம்...

மதுவின் தீமை குறித்து இளைஞர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்...

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
=======================

No comments: