Wednesday, January 8, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்.....! (43)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....!"

நாள் -  43


அறிஞர் அண்ணா விரும்பியபடி மதுவிலக்கைக் கொண்டு வாருங்கள்:

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் வேண்டுகோள்

மதுவுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தமிழக தலைவர்களில் குமரி அனந்தன் மிகவும் முக்கியமானவர்.

தமிழகத்தில் மதுவிலக்கைக் கொண்டு வருவது குறித்து அவர் கூறிய சில யோசனைகள் இப்போது பார்க்கலாம்...

மதுவிலக்கு சாத்தியமில்லை என்று தமிழக அரசின் மதுவிலக்கு அமலாக்க அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், பேரறிஞர் அண்ணா பிறந்தநாளைக் கொண்டாடும் நேரத்தில் அறிவித்துள்ளார்.

நிதி பற்றாக்குறையைத் தவிர்க்க மதுக்கடைகளைத் திறக்கலாமே என்று முதல்- அமைச்சர் அண்ணாவிடம் சிலர் ஆலோசனை கூறிய போது, மதுவிலக்கால் வரும் நிம்மதி கோடானுகோடி பெறும் என்று உறுதியாகக் கூறியவர் பேரறிஞர் அண்ணா.

சுசீலா நய்யார் தலைமையின் மதுவிலக்கிற்கு ஆதரவாக சென்னையில் உண்ணாநோன்பு நடைபெற்றபோது, நேரில் சென்று அங்கே அமர்ந்து, மதுவிற்கு எதிரான தன் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தி ஆசிர்வதித்தார் பேரறிஞர் அண்ணா.

தமிழ்நாட்டைச் சுற்றி மது இருக்கும்போது மதுவிலக்கைக் கொண்டு வந்து தமிழ்நாடு தனித்தீவாக இருக்க முடியுமா? என்ற வினாவைத் தொடுத்துள்ளார் அமைச்சர்.


தமிழ்நாட்டைச் சுற்றி மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும் மதுக்கடைகள் இருந்தபோது, ராஜாஜி மேயரானவுடன் சேலம் நகரசபையில் உள்ள எல்லா கடைகளையும் மூடி மதுவிலக்கை அந்த நகரில் கொண்டு வந்தாரே!

குஜராத் மாநிலத்தில் செய்ய முடிந்ததை தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவாலும் செய்ய முடியும்- செய்ய வேண்டும்.  

மதுவிலக்கு வந்தால் கள்ளச்சாராயம் வந்து விடும், கஜானாவுக்கு வரவேண்டியவனவும் சமூக விரோதிகளுக்குச் சென்று விடும் என்கிறார் அமைச்சர்.

இப்போது மட்டும் என்ன? அரசின் அங்கீகாரம் பெற்ற மதுக்கடைகள் இருக்கின்றன. சென்னை, திருவண்ணா மலை, திருவள்ளூர், தஞ்சாவூர், தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் மட்டும் 12 போலி மது தயாரிக்கும் ஆலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கண்டுபிடிக்க முடியாதவை எத்தனையோ?

2011-ல் மட்டும் மதுவிலக்கு சோதனையின் மூலம் 17 ஆயிரத்து 949 பெண்கள் உள்பட, 1 லட்சத்து 930 பேர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளன. 47 லட்சத்து 1,877 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளன. 7 லட்சத்து 95 ஆயிரத்து 22 மதுபான பாட்டில்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.


இத்தகவல்களை தெரிவிப்பது தமிழக காவல்துறை அமலாக்கப்பிரிவு கூடுதல் இயக்குநர் காந்திராஜன். ஒரிஜினல் மது இருக்கும்போது ஏன் வந்தது போலி? எனவே மொத்தமாக மது விலக்கைக் கொண்டுவர தமிழக முதல்-அமைச்சர் ஆணை வெளியிட்டு, அண்ணாவின் நினைவையும் பெருமையையும் நிலைநாட்ட வேண்டும்.

மதுவை எதிர்க்கும் தலைவர்களையும், மது கூடாது எனக் கூறும் தொண்டு நிறுவனங்களின் சார்பாளர்களையும் அழைத்து, அவர்களையும் மதுவை ஒழிக்கத் துணை நிற்குமாறு கேட்டுக்கொள்ள வேண்டும்.


மதுவை ஒழித்துக் கட்டுவதில் தமிழக அரசுக்குத் துணையாக, சொன்ன இடத்தில் நின்று கண்காணித்து காவல் புரியச் சொன்னாலும் என்னைப் போன்றோர் தயாராக உள்ளோம்.

நல்ல யோசனைகள் தந்துள்ளார் குமரி ஆனந்தன்.

மதுவுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுக்கும் குமரி ஆனந்தனுக்கு எமது பாராட்டுகள்..

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

No comments: