Sunday, January 19, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்.....! (50)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....!" 

நாள் - 50



டாஸ்மாக் மதுபானக் கடைகளில் புத்தாண்டு மற்றும் பொங்கல் கொண்டாட்டங்களின்போது மட்டும் ரூ.600 கோடிக்கு மது விற்பனை......!

என்ன ஆச்சரியமாக இருக்கிறது....

நிச்சயம் இருக்காது.... ஏன் என்றால், தமிழகத்தில் மதுவின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது அனைவரும் அறிந்ததே...

ஆனால், பண்டிகை காலங்களில் குடும்பத்துடன் சந்தோஷமாக, மகிழ்ச்சியமாக இருக்க வேண்டியவர்கள், மதுக்கடைகளுக்கு சென்று தங்களின் வாழ்க்கை சிதைத்துக் கொள்வதுதான் வேதனை அளிக்கிறது.

பெரும்பாலானோர் குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாடி வரும் நிலையில், சிலர் மதுவை நாடிச் செல்லும் கவலை தரும் போக்கும் அதிகரித்து வருகிறது.


எப்போதாவது ஒரு முறை மது அருந்துவோர் கூட, தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் ஆகிய நாட்களில் மது குடிக்கும் போக்கு காணப்படுகிறது.

இந்த ஆண்டு புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்போது டாஸ்மாக் மதுக்கடைகளில் ரூ.250 கோடி அளவுக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

அதைத் தொடர்ந்து, பொங்கல் பண்டிகையின்போது ரூ.350 கோடி அளவுக்கு மது விற்பனையாகியுள்ளது.

கடந்த ஜனவரி 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.

அதற்கு முந்தைய இரு தினங்களில் ரூ.250 கோடிக்கு விற்பனை ஆனது. காணும் பொங்கல் தினத்தில் அதிகளவில் மது விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்டது.


‘குடி’மக்களில் பலர் டாஸ்மாக் கடைகளைத் தவிர்த்ததால் காணும் பொங்கல் அன்று ரூ.100 கோடி அளவுக்கு மட்டுமே விற்பனை ஆனது.

இது வழக்கமான வார விடுமுறை தின விற்பனையை விட சற்று அதிகம்.
.
மொத்தத்தில் இந்த புத்தாண்டு, பொங்கல் பண்டிகைக் காலத்தில் மட்டும் ரூ.600 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

கடந்த ஆண்டு புத்தாண்டு தினக் கொண்டாட்டங்களின்போது ரூ.200 கோடி அளவுக்கு மது விற்பனை ஆனது.

பொங்கல் பண்டிகையின்போது ரூ.300 கோடி வருமானம் கிடைத்து. இந்த ஆண்டு அதை விட ரூ.100 கோடி அதிகமாக மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன.


தமிழகத்தில், 6,838 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில், நாள்தோறும், அரசு நிர்ணயம் செய்துள்ள விலையில், சராசரியாக, 67 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாகின்றன.

'ஷாப்பிங் மால்'களில் அமோகம்:

உயர் வருவாய் பிரிவினருக்காக, சென்னையில், அல்சா மால், பீனிக்ஸ் மால், டென் ஸ்கொயர் மால், ரமீ மால், ஸ்பென்சர் பிளாசா ஆகிய,'ஷாப்பிங் மால்'களில், ஹைடெக் டாஸ்மாக் கடைகள் துவக்கப்பட்டுள்ளன. இந்த கடைகளில், காணும் பொங்கல் அன்று ஒரு நாளில் மட்டும், 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான, மதுபானங்கள் விற்பனையாகின.


புள்ளி விவரங்கள் அதிர்ச்சி அளிக்கிறது அல்லவா.....

மதுப்பிரியர்களும் அரசும் மனசு வைச்சால் மட்டுமே மதுவின் விற்பனையை குறைக்க முடியும்....

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

No comments: