Thursday, June 29, 2023

நடைப்பயிற்சி.....!


நினைவாற்றலை மேம்படுத்தும் நடைப்பயிற்சி....!

ஆய்வில் தகவல்......!!

மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு செல்லும் ஒவ்வொருவரிடமும் மருத்துவர் பொதுவாக கேட்கும் கேள்வி,  நீங்க டெய்லி வாக்கிங் போறீங்களா...? ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் வாக்கிங் போறீங்க....? என்பதாகவே இருந்து வருகிறது. 

மருத்துவப் பரிசோதனைக்கு வரும் நபர், தாம் வாக்கிங் போகவில்லை என்று சொன்னால், அப்படியெல்லாம் இனி இருக்கக் கூடாது. இனிமேல் தினமும் சுமார் 2 மணி நேரமாவது வாக்கிங் போகணும் என்று மருத்துவர் ஆலோசனை கூறுவது வழக்கமாக உள்ளது.

சரி, நடைப்பயிற்சியால் அப்படி என்னதான்  பலன் கிடைக்கிறது என ஆய்வு செய்தால், அதன் பயன்களை சொல்லிக் கொண்டே போகலாம். நீண்ட பட்டியல் வந்துவிடும். 

ஆய்வில் தகவல்:

அமெரிக்காவின் மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் சுகாதாரப் பிரிவு சார்பில் நடைப்பயிற்சி குறித்து ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் மூளையை பாதிக்கும் அல்சைமர் நோய் தொடர்பாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தீவிரம் காட்டினர். பல நிலைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின்போது மூளைக்கு புதிய உற்சாகத்தை அளிக்க நடைப்பயிற்சி முக்கிய காரணமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அல்சைமர் நோயால் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு அதன்மூலம் ஏற்படும் மந்த நிலையை  தடுத்து, நினைவாற்றலை அதிகரிக்க நடைப்பயிற்சி மிகப்பெரிய அளவுக்கு உதவிக்கரம் நீட்டுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. 

அல்சைமர் நோய் தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ள மேரிலாந்து பல்கலைக்கழக சுகாதாரப் பிரிவு, சாதாரண மூளை செயல்பாடு மற்றும் லேசான அறிவாற்றல் குறைபாடு தொடர்பாக வயதான பெரியவர்களின் மூளை மற்றும் நினைவூட்டல் திறன்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டதாக கூறியுள்ளது. மந்த புத்தி, மூளை பாதிப்பு மற்றும் மறதி உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு அல்சைமர் நோய் முக்கிய காரணமாக இருப்பதாகவும், மனதின் திறமையை அந்த நோய் மங்கக் செய்து விடுவதாகவும் ஆய்வில் கண்டுபிடிக்கப்ப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. 

கவனக்குறைவு ஆபத்தை ஏற்படுத்தும்:

இந்த ஆராய்ச்சியில், லேசான அறிவாற்றல் குறைபாடு மற்றும் அல்சைமர் நோய் உள்ளவர்களின் நிலைமை  காலப்போக்கில் மோசம் அடைந்துவிடுவது தெரியவந்துள்ளதாக மருத்துவர் ஆராய்ச்சியாளர் ஜே. கார்சன் ஸ்மித் எச்சரித்துள்ளார்.  மூளையின் இணைப்புடன் அவர்கள்  துண்டிக்கப்படுகிறார்கள் என்றும்  இதன் விளைவாக, நோய் பாதிப்புக்கு ஆளான மக்கள் தெளிவாக சிந்திக்கும் மற்றும் விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்ளும் திறனை இழக்கிறார்கள் என்றும் ஸ்மித் கூறியுள்ளார்.  

சரி, இந்த பிரச்சினைக்கு என்ன தீர்வு என்றும், மருந்துகள் மட்டுமே, பலன் அளித்துவிடுமா என்றும், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வில் உடற்பயிற்சியும் நடைப்பயிற்சியும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன. 

உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி:  

ஆய்வில், 71 மற்றும் 85 வயதுக்கு இடைப்பட்ட முப்பத்து மூன்று பேர் பங்கேற்றனர்.  வாரத்தில் நான்கு நாட்கள் என 12 வாரங்களுக்கு முப்பத்து மூன்று பேரும் கண்காணிப்பட்டு வந்தனர். அவர்களுக்கு உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி அளிக்கப்பட்டது. உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சிக்கு முன்பு அவர்களின் நிலைமை எப்படி இருந்தது என்று கண்காணிப்பப்பட்டது. 

இந்த பயிற்சிகள் அளிக்கப்பட்ட பிறகு, முதியவர்களின் நிலைமை எப்படி இருந்தது. அவர்களின் நினைவாற்றல் அதிகரித்ததா அல்லது குறைந்ததா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் பல அற்புதமான தகவல்கள் வெளியாகின. உடற்பயிற்சி, நடைப்பயிற்சி ஆகிய இரண்டும் மூளையின் இணைப்புகளை பலப்படுத்துகிறது என்பது உறுதிப்பட தெரியவந்துள்ளது. 

நடைப்பயிற்சி பெருமூளை இரத்த ஓட்டத்தை குறைக்கிறது என்றும் லேசான அறிவாற்றல் குறைபாடு உள்ள வயதானவர்களுக்கு மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது  என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளதாக மருத்துவர் ஸ்மித் கூறியுள்ளார்.  12 வார உடற்பயிற்சிக்குப் பிறகு, மீண்டும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பங்கேற்றவர்களின் நினைவாற்றல் திறன்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை தாங்கள் கண்டதாகவும் ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 

மூளையின் செயல்பாடு:

மூளையின் செயல்பாடு வலுவாகவும் ஒத்திசைக்கப்பட்டதாகவும் இருக்க உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி மிகவும் பலன் அளிப்பது ஆய்வில் நிரூப்பிக்கப்பட்டுள்ளது. உண்மையில் மூளையின் திறனை மாற்றுவதற்கும் மாற்றியமைப்பதற்கும் நடைப்பயிற்சி தூண்டுகிறது என்றும்  ஆய்வாளர் ஸ்மித் தெரிவித்துள்ளார்.  லேசான அறிவாற்றல் குறைபாடு உள்ளவர்களை மீட்க உடற்பயிற்சி பயனுள்ளதாக இருக்கும் என்றும், நீண்ட காலத்திற்கு, அல்சைமர்  நோய்க்கு அவர்கள் மாறுவதை தாமதப்படுத்தலாம் என்றும்  இந்த ஆய்வு நம்பிக்கை அளித்துள்ளது. 

என்ன, இனி தினமும் உடற்பயிற்சியுடன் நடைப்பயிற்சியும் செய்வது என முடிவு எடுத்து விட்டீர்களா. அப்படியெனில், உங்களது நினைவாற்றல் சக்தி இனி மேலும் அதிகரிக்கும். அதன்மூலம் பல்வேறு பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். 

இன்ஷா அல்லாஹ்....!

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: