Tuesday, June 27, 2023

ஓங்கும் காங்கிரசின் கை...!


மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் ஓங்கும் காங்கிரசின் கை....!

பாஜகவிற்கு எதிராக வீசும் அலை....!!

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மற்றும் தெலுங்கானா ஆகிய நான்கு மாநில சட்டப்பேரவைகளுக்கு இந்தாண்டு இறுதிக்குள் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளில் தற்போது தீவிரம் காட்டி வருகின்றன. கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வெற்றியால், காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்ச்சி கிடைத்து இருப்பதால், அடுத்த வரும் நான்கு சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் அக்கட்சி தேர்தல் பணிகளை வேகப்படுத்தியுள்ளது. 

அதேநேரத்தில், கர்நாடகாவில் தங்களுடைய வெறுப்பு அரசியல் எந்தவித பலனையும் தராததால், பாஜக அதிர்ச்சி அடைந்துள்ளது. எனினும், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என துடிப்புடன் பாஜகவினர் செயல்பட்டு வருகிறார்கள்.

காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்த பாஜக: 

கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் ஆதரவு அளித்தனர். இதனால் அதிக இடங்களில் வெற்றி பெற்ற அக்கட்சி, கமல்நாத் தலைமையில் ஆட்சி அமைத்தது. ஆனால், இந்த ஆட்சியை கவிழ்த்துவிட்டு, காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி பாஜக ஆட்சியை கைப்பற்றியது. இந்த அரசியல் விளையாட்டை மத்திய பிரதேச மக்கள் சிறிதும் விரும்பவில்லை. அதேநேரத்தில் ஆட்சிக்கு வந்த பாஜக, எந்தவித வளர்ச்சிப் பணிகளையும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு மத்திய பிரதேச மக்களிடையே இருந்து வருகிறது. 

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அலை:

முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்  தலைமையிலான பாஜக ஆட்சியில் நிறைய ஊழல் நடைபெற்று இருப்பதாக மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கமல்நாத் குற்றம்சாட்டி வருகிறார். அத்துடன், அனைத்துத் துறைகளிலும் பணிகள் நடைபெற 50 சதவீத கமிஷன் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் மக்களை பிரிக்கும் நோக்கில் பாஜக வெறுப்பு அரசியல் செய்து வருவதாகவும் கமல்நாத் கூறியுள்ளார்,. 

தாம் முதலமைச்சராக இருந்தபோது, விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றி இருப்பதை சுட்டிக் காட்டியுள்ள அவர், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இலவச மின்சாரம் உள்ளிட்ட பல திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.  காங்கிரஸ் கட்சியின் இந்த வாக்குறுதிகள் மத்திய பிரதேச மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. 

கருத்துக் கணிப்புகளில் முந்தும் காங்கிரஸ்:

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் நான்கு மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், பல்வேறு ஊடகங்களில் மத்திய பிரதேசத்தில் அடுத்து யார் ஆட்சிக்கு வருவார்கள் என்ற கருத்துக் கணிப்புகள் வெளிவர தொடங்கி விட்டன. 

மொத்தம் உள்ள 230 தொகுதிகளில், அதிக தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் என பல கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதுவரை நடத்தப்பட்ட வெவ்வேறு 6 கருத்துக் கணிப்புகளில், அனைத்து கருத்துக் கணிப்புகளிலும் பாஜகவிற்கு  தொடர்ந்து குறைந்த இடங்களே கிடைத்துள்ளன. இதுமட்டுமின்றி, பாஜகவின் சார்பில் எடுக்கப்பட்ட சர்வேயிலும் அக்கட்சி படுமோசமாக தோல்வி அடையும் என தெரியவந்துள்ளது. பாஜகவிற்கு 50 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என்றும் கணிப்புகள் தெரிவிக்கின்றன. 

காங்கிரஸ் கட்சிக்கு 150 தொகுதிகள்:

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 150க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஏற்கனவே நம்பிக்கை தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியின் இந்த கணிப்பை நிஜம் என கூறும் வகையில், காங்கிரஸ் கட்சிக்கு அதிக தொகுதிகள் கிடைப்பது உறுதி என்றும் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுவது உறுதியாகி விட்டது என்றும் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் உறுதிப்பட தெரியவந்துள்ளது. 

இந்நிலையில், பஜ்ரங் சேனா என்ற அமைப்பு, பாஜக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. இந்துகளின் வாக்குகளை வாங்கும் பாஜக, இந்து மக்களுக்கு எந்த நன்மையும் செய்வதில்லை என்றும் அந்த அமைப்பு புகார் தெரிவித்துள்ளது. மேலும் பஜ்ரங் சேனா அமைப்புச் சேர்ந்தவர்கள், காங்கிரசில் இணைந்து வருகின்றனர்.

இந்த சூழலில், கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஒற்றுமையுடன் உழைத்தது போன்று, மத்திய பிரதேசத்திலும் கடுமையாக பணியாற்றினால், வெறுப்பு அரசியல் செய்து மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி வரும் பாஜகவை வீழ்த்தலாம் என்று அரசியல் நோக்கர்களின் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ராஜஸ்தானில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி: 

ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது அசோக் கெய்லாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் ராஜஸ்தான் மாநிலம் பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்து இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

அத்துடன், 500 ரூபாய் சமையல் எரிவாயு சிலிண்டர், பெண்களுக்கு ஊக்கத் தொகை, இலவச மின்சாரம் உள்ளிட்ட பல மக்கள் நலத்திட்டங்களை ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு செயல்படுத்தி வருகிறது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எனவே, அசோக் கெய்லாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு மீண்டும் தொடர வேண்டும் என ராஜஸ்தான் மக்கள் விரும்புகின்றனர். இதுதொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், 60 சதவீத மக்கள், காங்கிரஸ் கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர். 

ராஜஸ்தான் மாநிலத்தில், காங்கிரஸ் தலைவர்கள் தங்களுக்கு இடையே நிலவி வரும் கோஷ்டி பூசலை நிறுத்திவிட்டு, ஒற்றுமையுடன் செயல்பட்டால், பாஜகவிற்கு மிகப்பெரிய தோல்வியை தரலாம் என  அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

சட்டீஸ்கர், தெலுங்கானா நிலவரம்: 

சட்டீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு சட்டீஸ்கர் மக்களிடையே நல்ல பெயர் இருந்து வருகிறது. ஏழை, நடுத்தர மக்களின் நலனை கருத்தில் கொண்டு மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட பல்வேறு நல்ல திட்டங்களை முதலமைச்சர் பூபேஷ் பாகல் செயல்படுத்தி வருகிறார். இது அம்மாநில மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன்மூலம், சட்டீஸ்கர் மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தெலுங்கானா மாநிலம் உருவாக காரணமாக இருந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு அம்மாநில மக்களிடையே நல்ல எண்ணம் இருந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் டி.ஆர்.எஸ். கட்சி குறித்து மக்களிடையே தற்போது, ஆர்வம் குறைந்துள்ளது. இதனை, காங்கிரஸ் நடத்தி வரும் மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றில் கலந்துகொள்ளும் மக்களின் எண்ணிக்கையை பார்க்கும் போது அறிய முடிகிறது. எனவே தெலுங்கானாவிலும் இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மற்றும் தெலுங்கானா ஆகிய நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால், காங்கிரஸ் இந்த நான்கு மாநிலங்களிலும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: