Tuesday, June 27, 2023

பாட்னா ஆலோசனை...!

பாட்னா ஆலோசனை தேசிய அரசியலில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துமா....!

கடந்த ஒன்பது ஆண்டு கால ஒன்றிய பாஜக ஆட்சியில் நாடு சந்தித்துள்ள பல நெருக்கடிகளுக்கு முடிவு காணும் வகையில், எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் இன்று நடைபெற்றுள்ளது.  ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் பீகார் முதலமைச்சருமான நிதிஷ்குமாரின் தீவிர முயற்சிகளுக்குப் பிறகு, அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்று தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர். அனைவரது ஒரே இலக்கு ஒன்றிய பாஜக அரசை வீழ்த்துவது என்பதாகவே இருந்தது. 

பாஜகவை ஏன் வீழ்த்த வேண்டும்:

நாடு முழுவதும் தன்னை பலம் வாய்ந்த கட்சியாக காட்டிக் கொள்ளும் பாஜக, பல மாநிலங்களில் மக்களின் ஆதரவு இல்லாமல் இருந்து வருகிறது. இந்துத்துவா கொள்கை கொண்டவர்கள் மத்தியில் மட்டுமே, அக்கட்சி செல்வாக்கு பெற்றுள்ளது. பெரும்பாலான இந்து மக்கள், பாஜகவின் கொள்கைகளை ஏற்றுக் கொள்வதில்லை. நாட்டில் அமைதியை விரும்பும் மக்கள், பாஜகவின் ஆட்சியில் சந்தித்த பல்வேறு இன்னல்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என விரும்புகிறார்கள். பல மாநிலங்களில் குறுக்கு வழியில் பாஜக ஆட்சியை கைப்பற்றி, தன்னுடைய கொள்கைகளை நிறைவேற்றி வருகிறது. 

நாடு முழுவதும் ஒரே சிவில் சட்டம், புதிய தேசிய கல்விக் கொள்கை, குடியுரிமை திருத்தச் சட்டம் என பல திட்டங்களை செயல்படுத்தும் பாஜக, மதசார்பற்ற நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தவே விரும்புகிறது. தேர்தல் நேரத்தில் மக்கள் மத்தியில் வெறுப்புணர்ச்சியை விதைத்தும், பல்வேறு கலவரங்களை ஏற்படுத்தியும், அரசியல் ஆதாயம் தேடுகிறது. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை சீர்குலைத்து, அதன்மூலம் வாக்குகளை பிரித்து, அரசியல் லாபம் பெற்று பாஜக ஆட்சியில் தொடர்கிறது. 

கடந்த ஒன்பது ஆண்டு கால ஒன்றிய பாஜக ஆட்சியில் நாட்டு மக்களுக்கு பெரும் அளவுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. மாறாக நாட்டில் வெறுப்புணர்ச்சி விதைக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிப் பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை சொல்லவே வேண்டியதில்லை. இளைஞர்களுக்கான புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. இதனால், படித்துவிட்டு கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலையில்லாமல் வறுமையில் வாழ வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். 

மணிப்பூர் மாநிலம் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக வன்முறையில் சிக்கி தவிக்கிறது. அங்கு அமைதியை ஏற்படுத்த எந்தவித முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இப்படி நாட்டில் நிலவும் பிரச்சினைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். எனவே, நாட்டில் அனைத்துத் தரப்பு மக்களும் விரும்பும் ஆட்சி ஒன்றியத்தில் அமைய வேண்டும். 

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை அவசியம்:

தற்போது நாடு மிகவும் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், மீண்டும் ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், நிலை மிகவும் மோசமாகிவிடும் என ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் எச்சரித்துள்ளார். மேலும் நாட்டில் தேர்தலே நடைபெறாது என்றும் அவர் கூறியுள்ளார். இதேபோன்று, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து ஒரு செயல் திட்டத்தை உருவாக்கி, வரும் மக்களவை தேர்தலை சந்தித்தால், ஒன்றியத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி அரசு நிச்சயம் அமையும் என பிரபல வழக்கறிஞர் கபில்சிபல் தெரிவித்துள்ளார்.  இதற்கான முயற்சியை தான் தொடங்கி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 

பல மாநிலங்களில் பாஜகவுக்கு எதிரான வாக்குகளை, ஒவ்வொரு எதிர்க்கட்சிகளும் தனித்தனியாக நின்று பிரித்து விடுவதால், குறைவான வாக்கு வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்று விடுகிறார்கள். கடந்த நாடாளுமன்ற மற்றும் பல்வேறு மாநில சட்டமன்ற தேர்தல் புள்ளிவிவரங்களை உன்னிப்பாக கவனித்தால், இந்த உண்மை மக்களுக்கு தெரியவரும். எனவே, பாஜகவுக்கு எதிரான வாக்குகள் பிரிந்துவிடக் கூடாது. இதற்கு ஒரே வழி எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைதான். ஒவ்வொரு தொகுதியிலும் பாஜகவுக்கு எதிராக அந்த தொகுதியில் வலுவாக உள்ள எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒரே வேட்பாளர் நிறுத்தப்பட  வேண்டும். இதன்மூலம், பாஜக நிச்சயம் தோல்வியை சந்திக்கும். எனவே, எதிர்க்கட்சிகள் தங்களுக்கு இடையே உள்ள ஈகோவை நாட்டு நலனுக்காக விட்டுக் கொடுத்து, வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேண்டும்.  பாஜக குறித்து தென் மாநில மக்களிடையே இருக்கும் விழிப்புணர்வு போன்ற ஒரு விழிப்புணர்வை உத்தரப் பிரதேசம், பீகார், உத்தரகாண்ட் உள்ளிட்ட பல வட மாநிலங்களில் ஏற்படுத்த வேண்டும். 

பாட்னா ஆலோசனை பலன் தருமா!

பீகார் தலைநகர் பாட்னாவில் இன்று நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில், காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி, சிவசேனா, ஆம் ஆத்மி, தேசிய மாநாடு கட்சி  உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்று ஆலோசனை நடத்தி இருப்பது ஒரு நல்ல முன்னேற்றம் என்றே கூறலாம். மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், மீண்டும் ஒருமுறை எதிர்க்கட்சிகள் கூடி ஆலோசனை செய்து நல்ல முடிவை எட்ட வேண்டும். நாட்டின் நலனில் உண்மையான அக்கறைக் கொண்ட அரசியல் தலைவர்கள், தங்களுடைய சுயநலத்தை நிச்சயம் பார்க்க மாட்டார்கள். 

பாஜகவுக்கு எதிரான அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணைந்து வலுவான கூட்டணியை அமைக்காவிட்டால், நாட்டின் எதிர்கால சந்ததி, அந்த தலைவர்கள் நிச்சயம் வெறுக்கும். இதனை எதிர்க்கட்சித் தலைவர்கள் கட்டாயம் உணர்ந்துக் கொள்ள வேண்டும். இந்துத்துவா மற்றும் பாசிச சக்திகளை வீழ்த்த வேண்டிய கட்டாயமும் அவசியமும் தற்போது நாட்டுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, எதிர்க்கட்சித் தலைவர்கள்,  நாட்டின் நலனை கருத்தில் கொண்டு, ஒற்றுமையாக செயல்பட்டால் மட்டுமே, பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனை பலன் உள்ள ஆலோசனையாக இருக்கும்.  இதற்கு வரும் நாட்களே பதில் சொல்லும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: