Thursday, June 29, 2023

எதிர்க்கட்சிகள்.....!

2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தல்....!

ஓர் அணியில் திரளும் எதிர்க்கட்சிகள்....!!

வரும் 2024-ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை பாஜக ஏற்கனவே தொடங்கி விட்ட நிலையில்,  பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஓரே அணியில் திரட்டும் முயற்சிகள்  தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மற்றும் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் அண்மையில் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி,  டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து, பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே அணியில்   இணைந்து செயல்படுவது தொடர்பாக முக்கிய ஆலோசனை மேற்கொண்டனர்.

பின்னர், கொல்கத்தா சென்ற அவர்கள், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜியை சந்தித்து மக்களவை தேர்தல் தொடர்பாகவும் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை குறித்தும் முக்கிய ஆலோசனை மேற்கொண்டனர்.

மேலும், லக்னோவில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவையும் சந்தித்து பேசினர். இந்த சந்திப்புகள் அனைத்தும் மிகவும் ஆக்கப்பூர்வமான முறையிலும் நம்பிக்கை அளிக்கும் வகையிலும் இருந்ததாக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மகிழ்ச்சி தெரிவித்தார்.




பீகாரில் எதிர்க்கட்சிகள் தலைவர்கள் ஆலோசனை:

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த பிறகு, அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் பீகார் தலைநகர் பட்னாவில் நடைபெறும் என நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜகவுக்கு எதிராக உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் கலந்துகொள்ளும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

வரும் மக்களவைத் தேர்தல் குறித்தும் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை, ஓர் அணியில் திரள்வதன் அவசியம் ஆகியவை குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 

மம்தா பானர்ஜி அழைப்பு:

இந்நிலையில், நாட்டில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து பாஜகவை எதிர்த்துப் போராட வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். 

முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள சம்ஷர்கஞ்ச் என்ற இடத்தில் கடந்த 5-ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், எதிர்க்கட்சித் தலைவர்களை துன்புறத்த சி.பி.ஐ., அமலாகத்துறை போன்ற அமைப்புகளை பாஜக பயன்படுத்தி வருவதாக கண்டனம் தெரிவித்தார். 

வரும் பொதுத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்குகளைப் பெற சிபிஐ மற்றும் அமலாகத்துறை உள்ளிட்ட  அமைப்புகளின் நடவடிக்கைகள் எந்த பயனும் அளிக்காது என்றும் மம்தா பானர்ஜி கூறினார்.

பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு, மக்களுக்காக வேலை செய்வதை விட, அரசியல் செய்வதிலும், அட்டூழியங்கள் செய்வதிலும், குழப்பங்களை  பரப்புவதிலும் மும்முரமாக உள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

ஒவ்வொரு தொகுதியிலும் பொது வேட்பாளர்:

வரும் பொதுத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகளுக்கு மம்தா பானர்ஜி யோசனை கூறியுள்ளார்.

எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றுபட்டு பாஜவுக்கு எதிராக போராட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.  1:1 என்ற அடிப்படையில் பொது வேட்பாளர்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும்,  ஒரு தொகுதியில் எந்த அரசியல் கட்சி பலமாக இருக்கிறதோ, அந்த தொகுதியில் அக்கட்சியில் மக்கள் மத்தியில் நல்ல அறிமுகம் உள்ள வலுவான வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும் என்றும் மம்தா பானர்ஜி வலியுறுத்தினார்.  

பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற இது மிகவும் அவசியம் என்றும் அவர் தெரிவித்தார். மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட

11 மாநிலங்களின் உதாரணத்தை மேற்கோள் காட்டிய அவர்,  இந்த 11 மாநிலங்களில் 271 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளதாக குறிப்பிட்டார். 

இந்த 271 தொகுதிகளில்  வரும் தேர்தலில் பாஜக சிறப்பாக செயல்பட வாய்ப்பில்லை என்றும் மம்தா பானர்ஜி கூறினார். கர்நாடகாவில் இருந்து பாஜகவின் வீழ்ச்சி தொடங்குவதைக் கண்டு தாம் மகிழ்ச்சி அடைய இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை:

கடந்த மார்ச் மாதத்தில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பிஜேடி தலைவர் நவீன் பட்நாயக், ஜேடிஎஸ் தலைவர் எச்.டி. குமாரசாமி, ஜேடியு தலைவர் நிதிஷ் குமார் மற்றும் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோருடன் மம்தா பானர்ஜி தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார்.   அப்போது பாஜகவிற்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணைந்து செயல்படுவது காலத்தின் கட்டாயம் என்றும் மம்தா பானர்ஜி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

லாலு பிரசாத் யாதவ் எச்சரிக்கை:

வரும் மக்களவை தேர்தலில் ஒன்றிய பாஜக அரசை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓர் அணியில் இணைய மறுத்தால், நாடும் நாட்டின் எதிர்கால, புதிய தலைமுறை தலைவர்களை மன்னிக்காது என ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து இருந்தார். இது நாட்டு நலனில் உண்மையான அக்கறை கொண்ட அனைத்து எதிர்க்கட்சிகளையும்  தற்போது சிந்திக்க வைத்துள்ளது. ஈகோவை விட்டு கொடுக்க பல தலைவர்கள் முன்வந்துள்ளனர்.

பாஜக அதிர்ச்சி:

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓர் அணியில் திரள வேண்டும் என்றும், ஒவ்வொரு தொகுதியிலும் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளர் நிறத்தப்பட வேண்டும் என்றும் மம்தா பானர்ஜி கருத்து கூறியுள்ளது, புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

ஜாதி, மதம் என மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி அதன்மூலம் அரசியல் லாபம் பெற்றுவரும் பாஜக, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை கண்டு கலக்கமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளது.

எனவே கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அம்மாநிலத்தில் மட்டுமல்லாமல், தேசிய அரசியலிலும் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்றும் நாட்டு மக்கள் மத்தியிலும் பாஜக குறித்த சிந்தனையில் நல்ல மாற்றம் ஏற்படும் என்றும் அரசியல் நோக்கர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: