Tuesday, June 27, 2023

யுனானி மருத்துவம்...!

யுனானி மருத்துவம் - படிப்புகள் - வாய்ப்புகள்....!

இணை பேராசிரியர் மருத்துவர்  எஸ்.நிஜாமுத்தீன் சிறப்பு நேர்காணல்...

சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்தில் இயங்கிவரும் யுனானி மருத்துவக் கல்லூரியில் இணை பேராசிரியராக பணிபுரியும் மருத்துவர் எஸ்.நிஜாமுத்தீன், ஆம்பூரில் புகழ்பெற்ற மறைந்த ஹக்கீம் ஹாபிஸ் அப்துல் சலாமின் பேரர் ஆவார். மருத்துவத்துறையில் நல்ல அனுபவம் கொண்ட இவர் தற்போது, தொடங்கப்பட்டுள்ள யுனானி முதுகலை பட்டப் படிப்பு பிரிவின் ஐ.டி.பி. துறையில் உள்ளார். யுனானி மருத்துவம், படிப்புகள், அதில் உள்ள வாய்ப்புகள் குறித்து மணிச்சுடர் நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு நேர்காணலில் இருந்து சில பகுதிகள்:

யுனானி மருத்துவம்:

யுனானி மருத்துவம் என்பது கிரேக்க-அரேபிய வைத்திய முறையாகும். இந்தியாவில் யுனானி மருத்துவத்தை அறிமுகப்படுத்திய முன்னோடி ஹக்கிம் அஜ்மல் கான் ஆவார். மனித உடலில் இருக்கும் திரவங்களான கோழை, குருதி, மஞ்சள் பித்தம், கரும் பித்தம் ஆகியவற்றுக்கிடையே உள்ள சமநிலையின்மையை நோய்க்கான காரணமாக யுனானி வைத்தியமுறை உள்ளது. யுனானி மருத்துவமுறை, நோயை மட்டும் குணப்படுத்துவதில்லை, முழுமையாக மனித உடலையும் மனதையும் குணப்படுத்துகிறது. மூட்டு வலி, முதுகு வலி, கை கால் நடுக்கம், நரம்பு தளர்ச்சி உள்ளிட்ட பல நோய்களுக்கு யுனானி மருத்துவத்தில் நல்ல பலன் கிடைத்து வருகிறது. சர்க்கரை நோயை, யுனானி மருந்துகள் மூலமாகவும், உணவுக் கட்டுப்பாடுகள் மூலமாகவும், கட்டுக்குள் வைக்கலாம். பக்கவாதம், முடக்கு வாதம் உள்ளிட்ட பல நோய்களுக்கு யுனானி மருத்துவத்தில் நல்ல பயன்கள் உண்டு. இப்படி யுனானி மருத்துவத்தின் பலன்களை குறித்து அடுக்கிக் கொண்டே போகலாம். 

யுனானி மருத்துவப் படிப்புகள்:

தமிழகத்தில் கடந்த 1979ஆம் ஆண்டு சென்னையில் அரசு யுனானி மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்டது. சென்னையில் இயங்கி வரும் இந்த கல்லூரி, தமிழகத்தில் உள்ள ஒரே யுனானி கல்லூரியாக இருந்து வருகிறது. இங்கு பி.யு.எம்.எஸ். பட்டப்படிப்பு 16 மாணவர்களை கொண்டு தொடங்கப்பட்ட நிலையில், தற்போது 60 இருக்கைகளாக உயர்ந்துள்ளன. இந்நிலையில், எம்.டி. யுனானி பட்டமேற்படிப்பு 2022-23இல் தொடங்கப்பட்டுள்ளது. 

பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு ஆகிய இரண்டு படிப்புகளுக்கும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். எனவே, 12ஆம் வகுப்பு தேர்வு எழுதி முடித்தபிறகு, உடனடியாக நீட் தேர்வில் பங்கு பெற்று தேர்ச்சி பெறுவது அவசியம். இதற்கு முன்பு உர்தூ மொழி அவசியம் தெரிந்து இருக்க வேண்டும் என்ற நிலை இருந்துவந்தது. ஆனால், தற்போது உர்தூ மொழி கட்டாயம் இல்லை என்றும், கல்லூரியிலேயே உர்தூ மொழி கற்பித்து தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழ் மொழியில் படித்த மாணவர்கள் கூட யுனானி பட்டப்படிப்பு படிக்க விண்ணப்பம் செய்யலாம். 

யுனானி பட்டப்படிப்பு நான்கரை ஆண்டுகளும், அதற்குப் பிறகு ஓராண்டு பயிற்சி மருத்துவராகவும் மாணவர்கள் பணிபுரிய வேண்டும். இதேபோன்று, பட்டமேற்படிப்பு 3 ஆண்டுகள் படிக்க வேண்டும். தற்போது பட்ட மேற்படிப்பில் மொத்தம் 7 மாணவர்கள் படித்து வருகிறார்கள். 

தொழில் மற்றும் வேலைவாய்ப்புகள்:

பி.யு.எம்.எஸ். பட்டப்படிப்பு முடித்து மாணவர்கள், தமிழக அரசு மருத்துவமனைகளில் யுனானி மருத்துவர்களாக பணிபுரிய வாய்ப்பு உண்டு. மேலும் மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் யுனானி மருத்துவர்களாக பணிபுரியலாம். இதற்காக அரசு நடத்தும் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது அவசியம். மேலும் நாடு முழுவதும் உள்ள யுனானி ஹெல்த் சென்டர்களிலும் யுனானி மருத்துவர்களுக்கு பிரகாசமான வாய்ப்புகள் ஏராளமாக குவிந்து உள்ளன. 

அத்துடன் உலக சுகாதார அமைப்பு சார்பில் சீனா, ஈரான் உள்ளிட்ட பல நாடுகளில் ஹெல்த் சென்டர்கள் இயங்கி வருகின்றன. இந்த சென்டர்களில் யுனானி மருத்துவர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இதேபோன்று சவுதி அரேபியா உள்ளிட்ட பல முஸ்லிம் நாடுகளில், யுனானி மருத்துவம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. எனவே, இங்குள்ள மருத்துவமனைகளில் யுனானி மருத்துவத்திற்கு தனிப்பிரிவு உண்டு. இந்த தனிப்பிரிவில், இந்தியாவில் இருந்து படித்து வெளிவரும் யுனானி மருத்துவர்களுக்கு வேலைவாய்ப்புகள் நிறைய உள்ளன. அத்துடன் கைநிறைய சம்பளமும் கொடுக்கப்படுகிறது. கனடா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளிலும் யுனானி மருத்துவம் தற்போது புகழ்பெற்று வருகிறது. எனவே, அங்குள்ள தனியார் மருத்துவமனைகளில் யுனானி மருத்துவர்களுக்கு பணிவாய்ப்புகள் குறிந்து வருகின்றன. 

இது ஒருபுறம் இருக்க, தங்களது சொந்த ஊர்களில் தனியாக யுனானி மருத்துவமனையை திறந்து சுதந்திரமாக பணிபுரியவும் யுனானி மருத்துவர்களுக்கு வாய்ப்புகள் உண்டு. தமிழகத்தில் பல யுனானி மருத்துவர்கள் தனியாக தொழில் தொடங்கி, இன்று மிகச்சிறந்த முறையில் புகழுடன் வலம் வருவதை காணலாம்.

தமிழக அரசு ஒத்துழைப்பு:

தமிழகத்தில் யுனானி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மிகச் சிறப்பாக செயல்பட தமிழக அரசு நல்ல ஒத்துழைப்பு கொடுத்து வருகிறது. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள யுனானி மருத்துவமனைக்கு தேவையான ஏராளமாக மருந்துகள் அங்கேயே தயாரிக்கப்பட்டு நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. அத்துடன் 100 படுக்கைகள் கொண்டு மருத்துவமனையில் உட்பிரிவு நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு 24 மணி நேரமும் மருத்துவர்கள், நோயாளிகளை கண்காணித்து, அவர்களின் உடல்நலனில் மிகுந்த அக்கறை செலுத்தி கணிவுடன் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதனால், நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட பலர், சிகிச்சைக்குப் பிறகு நல்ல குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

சமூதாயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்:

யுனானி மருத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என கூறும் மருத்துவர் நிஜாமுத்தீன், யுனானி படிப்புகள் குறித்து முஸ்லிம் சமூகத்தில் எந்தவித விழிப்புணர்வும் இன்னும் இல்லாமல் இருப்பதாக வேதனை தெரிவித்தார். எனவே, பள்ளியில் படிக்கும்போது, யுனானி மருத்துவப் படிப்புகள் குறித்தும், அதில் எப்படி சேருவது, நீட் தேர்வை எப்படி எழுதி தேர்ச்சி பெறுவது, உள்ளிட்ட அம்சங்களை மாணவர்களுக்கு சமுதாயம் எடுத்துக் கூற வேண்டும் என்றும் நிஜாமுத்தீன் வலியுறுத்தினார். 

எம்.பி.பி.எஸ். படிப்புக்கு நிகரான  பி.யு.எம்.எஸ். படிப்பு குறித்து தமிழக மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினால், மிகக் குறைந்த கட்டணத்தில், நல்ல தரமான மருத்துவப் படிப்பை ஏழை எளிய மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த சமூதாய மாணவர்கள் பெற முடியும். பின்னர் நல்ல மருத்துவராக வந்து சமூதாயத்திற்கும் சேவை செய்ய முடியும். அத்துடன் விரும்பினால், நல்ல தொழில்முறை மருத்துவராக பணிபுரிந்து, நல்ல வருவாயையும் ஈட்ட முடியும் என மருத்துவர் நிஜாமுத்தீன் புன்முறுவலுடன் கூறுகிறார். 

சந்திப்பு - எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: