Thursday, June 29, 2023

உயர்கல்வி - ஆய்வில் தகவல்...!


உயர்கல்வியில் சேரும் முஸ்லிம் மாணவர்களின் 

எண்ணிக்கை தொடர்ந்து சரிவு....!

கடந்த 2006-ஆம் ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்ட சச்சார் கமிட்டி அறிக்கையில், கல்வியில் முஸ்லிம்களின் நிலை மிகவும் மோசகமாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் மிகவும் பின்தங்கிய சமூகங்களுடன் ஒப்பிடும்போது முஸ்லிம்கள், கல்வி, வேலைவாய்ப்புகளில் மிகவும் பின்தங்கியே உள்ளனர். ஆரம்பத்தில் கல்வி, வேலைவாய்ப்புகளை பெறுவதில் முஸ்லிம்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும்  சற்று அதிகமாகவே இருந்தனர். ஆனால் கடந்த 2017-18-ஆம் ஆண்டு முதல்  கல்வியில், தாழ்த்தப்பட்ட மக்கள் முஸ்லீம்களை முந்தி விட்டனர். இதேபோன்று  கடந்த 2020-21-ஆம் ஆண்டில் இருந்து ஆதிவாசிகள் முஸ்லிம்களை விட நல்ல கல்வி பெற்று வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் கல்வி, வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்கள் ஓரங்கட்டப்படுவது உறுதியாகிறது. 

ஆய்வில் அதிர்ச்சி தகவல்:

கடந்த 2019-20-ஆம் ஆண்டில் இருந்து உயர்கல்வியில் சேரும் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதாக, 2020-21-ஆம் ஆண்டுக்கான உயர்கல்வி குறித்த சமீபத்தில் வெளியிடப்பட்ட அகில இந்திய கணக்கெடுப்பு கூறுகிறது. இந்த அளவுக்கு முழுமையான சரிவு, சமீப காலங்களில் இந்தியாவில் மற்ற எந்த சமுதாய மக்களுக்கும் ஏற்பட்டதில்லை. 

உயர்கல்வியில் சேரும் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை நாட்டில் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் மிக குறைவாக உள்ளது. அங்கு உயர்கல்வியில் சேரும் முஸ்லிம் மாணவர்களின் சரிவு விகிதம் 36 சதவீதமாக உ்ளளது. அதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர், 26 சதவீதம், மகாராஷ்டிரா 8 புள்ளி 5 சதவீதம் தமிழ்நாடு 8 புள்ளி 1 சதவீதம், குஜராத் 6 புள்ளி 1 சதவீதம், பீகார் 5. புள்ளி 7 சதவீதம் மற்றும் கர்நாடகா 3 புள்ளி 7 சதவீதம் என்ற அளவுக்கு உள்ளது. 

முஸ்லீம் மக்கள்தொகையில் அதிகமாக கொண்ட மாநிலங்கள் வீழ்ச்சியின் அதிக பங்கைக் கொண்டாலும், சிறிய மாநிலங்களிலும் இதேபோன்ற நிலைமை நீடித்து வருகிறது.  உதாரணமாக, கடந்த 2019-20-2020-21-க்கு இடையில், டெல்லியில் முஸ்லீம் மாணவர்களில் 20 சதவீதம் பேர் உயர்கல்வியில் சேரவில்லை. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலும் சுமார் 36 சதவீத முஸ்லிம் மாணவர்கள் மேற்படிப்புகளில் சேரவில்லை.

உயர்கல்வியில் முஸ்லிம்களின் நிலை மோசம்:

உயர்கல்வி பெறும் தாழ்த்தப்பட்ட மற்றும் ஆதிவாசி மக்களை விட முஸ்லிம்கள் மிகவும் மோசமாக பின்தங்கியுள்ளனர். ஆய்வுகளில் கிடைத்த புள்ளி விவரங்களின்படி, ஆதிவாசிகளில் 21 சதவீத பேரும், தாழ்த்தப்பட்ட மக்களில்  26 சதவீத பேரும், இந்து ஓபிசிக்களில் 34 சதவீத பேரும், உயர்சாதி இந்துக்களில் 45 சதவீத பேரும் உயர்கல்வி  நிறுவனங்களில் படிக்கின்றனர். ஆனால், முஸ்லிம்களில் வெறும் 19 சதவீதம் பேர் மட்டுமே தற்போது உயர்கல்வி நிறுவனங்களில் படித்து வருகின்றனர். 

கடந்த 2020-21-ஆம் ஆண்டில் இருந்து தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் டெல்லியைத் தவிர, மற்ற எந்த மாநிலத்திலும் உயர்கல்வி பெறுவதில் முஸ்லிம்கள் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை.  ராஜஸ்தான், அசாம், குஜராத், மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் போன்ற பல மாநிலங்களில் முஸ்லிம்களை விட தாழ்த்தப்பட்ட மற்றும் ஆதிவாசி மாணவர்கள் அதிகளவு உயர்கல்வி பெற்று வருகிறார்கள். 

உத்தரப் பிரதேச மாநிலத்தின் மக்கள் தொகையில் 20 சதவீதத்தைக் கொண்ட முஸ்லிம்கள், மொத்த உயர்கல்வி சேர்க்கையில் வெறும்  4 புள்ளி 5 சதவீதம் அளவுக்கு மட்டுமே இருந்து வருகின்றனர். இதேபோன்று படிப்பை பாதியில் நிறுத்துவதும் அம்மாநிலத்தில் அதிகரித்து வருகிறது. 

கேரளா, தமிழ்நாடு சிறப்பு:

உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல வட மாநிலங்களில் உயர்கல்வியில் சேரும் முஸ்லீம்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வரும் அதேநேரத்தில்,  கேரளா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் உயர்கல்வி பெறும் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கேரளாவில் தற்போது உயர்கல்வி படிக்கும் முஸ்லிம் இளைஞர்களின் எண்ணிக்கை 43 சதவீதமாக உள்ளது. அம்மாநிலத்தில் கல்வி குறித்து முஸ்லிம்கள் இடையே தொடர்ந்து செய்யப்பட்ட விழிப்புணர்வு பிரச்சாரங்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எடுத்த தொடர் நடவடிக்கைகளே கேரள முஸ்லிம் மாணவர்கள் அதிகளவு உயர்கல்வி பெற முக்கிய காரணமாக அமைந்துள்ளது. 

கேரளாவில் முஸ்லிம்களுக்கு அரசு வேலைகளில் 10 சதவீத இடஒதுக்கீடும், கல்வி நிறுவனங்களில் 12 சதவீத இடஒதுக்கீடும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த இடஒதுக்கீடு முஸ்லிம் மாணவர்கள்  உயர்கல்வியில் சேர மிகவும் பலன் அளித்து வருகிறது. 

வேலையின்மை விகிதம் அதிகரிப்பு:

நாட்டில் உயர்கல்வியில் சேரும் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதுடன், முஸ்லிம்கள் மத்தியில் வேலையின்மை விகிதமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2018-19-ஆம் ஆண்டில் 1 புள்ளி 6 சதவீதமாக இருந்த முஸ்லிம்களின் வேலையின்மை சதவீதம், 2019-20-ஆம் ஆண்டில் 13 புள்ளி 2 சதவீதமாக உயர்ந்துள்ளது. பல்வேறு அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்புக்கான நேர்காணலுக்கு அழைக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

முஸ்லிம் குடும்பங்களின் பலவீனமான பொருளாதார நிலை காரணமாக வாழ்வாதாரத்திற்காக உடனடியாக ஏதாவது ஒரு வேலையில் சேர வேண்டிய நிலை உள்ளது. எனவே உயர்படிப்புக்கு போதுமான நிதி இல்லாத காரணத்தால், உயர்கல்வியில் சேர்ந்ததாலும் பல முஸ்லீம் இளைஞர்கள் கல்வியை பாதியில் நிறுத்துவது தொடர்கதையாக உள்ளது. 

பாஜக அரசுகள் நெருக்கடி:

இந்தியாவில் பாஜக ஆட்சியில் முஸ்லிம்களுக்கான ஆதரவு வெகுவாகக் குறைந்துள்ளது. உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. கர்நாடகாவில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 4 சதவீத ஒதுக்கீட்டை சமீபத்தில் பாஜக அரசால் ரத்து செய்யப்பட்டது. 2022-23 ஆண்டு முதல் சிறுபான்மை மாணவர்களுக்கான உயர்கல்வியைத் தொடர்வதற்காக வழங்கப்படும் மௌலானா ஆசாத் பெல்லோஷிப்பை சிறுபான்மை விவகார அமைச்சகம் நிறுத்தியுள்ளது.

ஒரே தீர்வு:

உயர்கல்வியில் முஸ்லீம் மாணவர்களின் சேர்க்கை குறைந்து வரும் போக்கை தடுத்து நிறுத்த ஒரே தீர்வு, இந்தியாவில் முஸ்லிம்களுக்கு சாதகமான பாகுபாடு கொள்கையை அரசு உருவாக்க வேண்டும். சச்சார் கமிட்டி அறிக்கை மற்றும் மிஸ்ரா அறிக்கை ஆகியவை முஸ்லிம்களுக்கு ஆதரவாக ஒரு நேர்மறையான பாகுபாடு கொள்கையை தொடங்க பரிந்துரை செய்துள்ளன. இதை சில தென் மாநிலங்கள் வெற்றிகரமாக செய்தன. ஆனால் அதிக முஸ்லீம் மக்கள் தொகை கொண்ட உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் அதை கண்டுக் கொள்ளவில்லை. எனவே இந்திய முஸ்லிம்களின் கல்வி நிலையில் ஏற்பட்டுள்ள தேக்கத்தை களைய ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும். அதன்மூலம் மட்டுமே, உண்மையான சமூக நீதி நாட்டில் மலரும். 

-  எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: