Wednesday, June 28, 2023

ஆன்லைன் கொள்முதல் - கவனம் மிகமிக அவசியம்...!


ஆன்லைன் வணிகம் - நுகர்வோர் மத்தியில் கவனம் தேவை....!

இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்கும் பழக்கம் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஏராளமான இளைஞர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே அனைத்துப் பொருட்களையும் வாங்குவதை பழக்கமாக கொண்டிருக்கிறார்கள். வணிக சந்தைக்குச் சென்று நல்ல கடைகளை தேர்வு செய்து அங்குள்ள பொருட்களை நேரில் பார்த்து வாங்கும் பழக்கம் தற்போது மக்களிடையே மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இணையதளம் மூலம் வரும் விளம்பரங்களை பார்க்கும் மக்கள், அதன் கவர்ச்சியில் மயங்கி, பொருட்களின் தரம் குறித்து சிறிதும் ஆராயாமல், சிந்திக்காமல், ஒரு குறுட்டு நம்பிக்கையுடன் ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்கி விடுகிறார்கள். 

ஆன்லைன் வணிகத்தின் இருண்ட வடிவங்கள்:

பேருந்து, ரயில், விமான டிக்கெட் முதல் சாதாரண ஆடைகள் வரை அனைத்தும் இப்போது ஆன்லைன் மூலம் கிடைத்து விடுகின்றன. ஆனால் ஆன்லைன் மூலம் கிடைக்கும் பொருட்களுக்கு நிர்ணயிக்கப்படும் உண்மையான விலை என்ன, எப்படி அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்பது குறித்து வாடிக்கையாளர்கள் அறிந்துக் கொள்வதில்லை. அதில் சிறிதும் அக்கறை காட்டுவதில்லை. 

வேகமான வாழ்க்கையில், கடுமையான உழைப்பின் மூலம் கிடைக்கும் பணத்தைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், ஆன்லைன் மூலம் அதிக விலைக்கு பொருட்களை வாங்கி மக்கள் தங்களுடைய பணத்தை இழந்து வருகிறார்கள். 

ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வாங்கப்படும் தோசை, இட்லி உள்ளிட்ட உணவுப்பொருட்கள் கூட மிகமிக அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இருந்தும், அதைப்பற்றி சிறிதும், கவலைக் கொள்ளாமல், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினர் ஆன்லைன் மூலம் உணவுப் பொருட்களை வாங்குவதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர். இப்படி ஆன்லைன் மூலம் வாங்கப்படும் உணவுப்பொருட்கள், தரமுடன் இருக்கிறதா என்ற கேள்விக்குறியும் இருந்தே வருகிறது. 

நுகர்வோர் பாதிப்பு:

ஆன்லைன் வணிக நிறுவனங்கள், தங்களது வணிக இலாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படுவதால், நுகர்வோரின் நலனை மிகப்பெரிய அளவுக்கு கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை. அத்துடன் பல்வேறு நடைமுறைகள் மூலம் நுகர்வோருக்கு தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. 

நுகர்வோரை கவரும் வகையில் விளம்பரம் செய்யும் ஆன்லைன் வணிக நிறுவனங்கள், ஒரு பொருள் குறித்தும், அதன் விலை குறித்தும், செய்யும் விளம்பரம், பின்னர் அதனை விற்பனை செய்யும்போது, கடைப்பிடிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள், ஆன்லைன் மூலம் வாங்கும்போது, மிகமிக கவனம் தேவை. பல நேரங்களில் தரம் குறைந்த சாதனங்கள், வீட்டுக்கு டெலவரி செய்யப்படுகிறது. இதுகுறித்து புகார் அளித்தாலும், ஆன்லைன் வணிக நிறுவனங்கள் சரியான விளக்கம் அளிப்பது இல்லை. இதனால், நுகர்வோர் தங்களுடைய பணத்தை இழந்து ஏமாற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. 

மிகமிக கவனம் தேவை:

ஒரு இணையதளம் சில பொருட்கள் அல்லது தயாரிப்புகளை ராக்-பாட்டம் விலையில் வழங்குகிறது. ஆனால் நீங்கள் அவற்றைத் தேர்வுசெய்தவுடன், அவற்றின் விலை திடீரென உயரும். அல்லது வேறு, அதிக விலை காட்டப்படும். முந்தைய விலைக் கோரிக்கையை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டீர்களா என்று நீங்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு இது விரைவாக நடக்கும். 

இதேபோல், நீங்கள் ஆன்லைனில் ஆடைகளை வாங்கும்போது, அதன் தரம், வடிவமைப்பு மற்றும் விலை ஆகியவற்றின் அடிப்படையில் நீங்கள் ஒரு ஆடையைத் தேர்வு செய்கிறீர்கள். ஆனால் உங்கள் அளவைக் குறிப்பிட்டவுடன், குறிப்பிட்ட அளவு மட்டுமே விலை உயர்ந்ததாக இருக்கும் என்பதைக் குறிக்கிறது. மற்றொரு பெயரில் இணையதளத்தில் உள்நுழைந்து மற்றொரு அளவை முயற்சிக்கும்போது நீங்கள் அதே பதிலைக் காண்பீர்கள்.

சில சமயங்களில், தகவலறிந்து முடிவெடுக்க முயற்சிக்கும்போது, அந்த விலையில் தயாரிப்பு மிகக் குறுகிய காலத்திற்கு மட்டுமே கிடைக்கும். மேலும் ஒரே ஒரு பொருள் மட்டுமே எஞ்சியிருக்கும் என்ற அறிவிப்பின் மூலம் நீங்கள் அவசரமாக வாங்குகிறீர்கள். இப்படி உங்கள் நலனுக்காக இல்லாத முடிவை எடுக்க உங்களை கட்டாயப்படுத்துகிறது. சரி, அதே தயாரிப்பு அடுத்த நாளும் அதே விலையில் கிடைத்தால் ஆச்சரியப்பட வேண்டாம். இப்படி பல்வேறு வகையில் வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். 

எனவே ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்கும்போது மிகமிக கவனமாக இருக்க வேண்டும். 

எந்தத் தவறும் செய்யாதீர்கள்:

தொழில்நுட்பத்தில் சில கவனக்குறைவான குறைபாடுகள் அல்ல இவை. ஆனால் நுகர்வோர் நடத்தை மற்றும் உளவியலைச் சுரண்டுவதை நோக்கமாகக் கொண்ட கவனமாக வடிவமைக்கப்பட்ட ஒரு ஏமாற்று வேலையாகும். எனவே,  ஒரு வலைத்தளம் அல்லது பயன்பாட்டுடன் தொடர்பு கொள்ளும்போது நுகர்வோர் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

கடந்த ஆண்டு விரிவான அறிக்கையை வெளியிட்ட இந்திய விளம்பரத் தரக் கவுன்சில், நுகர்வோர் மதிப்பை சமரசம் செய்வதன் மூலம் பங்குதாரர்களின் மதிப்பை உருவாக்க யுஎக்ஸ்  வடிவமைப்புகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று நிறுவனங்களை கடுமையாக வலியுறுத்தியுள்ளது. இந்த அறிவுரைக்கு செவிசாய்க்காதவர்கள் சட்டத்தை சந்திக்க நேரிடும். ஏற்கனவே, மத்திய நுகர்வோர் விவகார அமைச்சகம், இதுபோன்ற நடைமுறைகளைத் தடுப்பதற்கும், நுகர்வோரைப் பாதுகாப்பதற்கும் வழிகள் மற்றும் வழிமுறைகளை ஆராய்ந்து வருகிறது.  

சிறு வணிகர்களை ஊக்குவிக்கலாம்:

அனைத்துப் பொருட்களையும் ஆன்லைன் மூலம் வாங்கி பணத்தை இழப்பதை தவிர்க்க ஒரு நல்ல வழி, சொந்த ஊரில் உள்ள வணிக நிறுவனங்களில் பொருட்களை வாங்குவதுதான். இதன்மூலம் உள்ளூர் சிறு வணிக நிறுவன உரிமையாளர்கள், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் இடையே நல்ல அன்பு உருவாகும். அத்துடன் ஏராளமான பணத்தை செலவழித்து வணிகத்தை தொடங்கியுள்ள ஒருவருக்கு சிறப்பான வணிகம் கிடைப்பதன் மூலம், அவருடைய வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படும். அந்த கடையில் பணிபுரியும் ஏராளமான ஊழியர்களுக்கு வாழ்க்கை கிடைக்கும். எனவே, ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்கும் பழக்கத்தை நாம் மெல்லமெல்ல குறைத்துக் கொண்டு உள்ளூர் வணிகர்களை ஊக்குவிக்க வேண்டும். இதுவே, வீட்டிற்கும், நாட்டிற்கும் நல்லது. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: