Thursday, June 29, 2023

மண்ணின் மைந்தர்கள்....!

இந்திய முஸ்லிம்கள் இந்த மண்ணின் மைந்தர்கள்.....!    

இந்திய முஸ்லிம்களுக்கு  எதிராக குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் என்.ஆர்.சி. உள்ளிட்ட திட்டங்களை பாஜக கொண்டு வந்து  ஒருவித அச்சத்தில் வாழக்கூடிய  சூழ்நிலைகளில் முஸ்லிம்களை தள்ளியுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல போராட்டங்கள் நடைபெற்றன. இந்த போராட்டங்களில் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு பாஜகவிற்கு தங்களுடைய எதிர்ப்பை கடுமையாக வெளிப்படுத்தினர். ஆனால் இந்த விவகாரங்களுக்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை.

இந்திய முஸ்லிம்கள் யார்.?                                                                                                                                                                                                                   


இந்தியாவில் வாழும் அனைத்து முஸ்லீம்களும்  அரேபியா, மத்திய ஆசியா அல்லது பெர்சியாவில் இருந்து வந்தவர்கள் இல்லை. இந்துக்கள், பௌத்தர்கள், ஜைனர்கள், சீக்கியர்கள், தலித்துகள், கிறிஸ்தவர்கள், அல்லது சனாதன தர்மிகள் என அனைவரும் தங்களை இந்தியர்கள் எனக் கூறிக்கொள்வது போல, முஸ்லீம்களும் இந்த நாட்டின் பூர்வீகக் குடிமக்கள். அவர்கள் திராவிடத்திற்கு முந்தைய பழங்குடியினர்.  தற்போதைய பழங்குடியினர் அல்லது ஆதிவாசிகளின் முன்னோர்கள். 

ஆரியர்கள் வருகை:

ஆரியர்கள் சுமார் கி.மு. 2000-1500க்கு இடையே இந்தியாவிற்கு வந்தனர். சமஸ்கிருதம் பேசிய அவர்கள், வேதங்களை  தங்கள் பழமையான புத்தகமாக அடையாளப்படுத்தினார்கள்.  அவை வாய்வழி மரபாகத் தொடங்கி இந்திய துணைக்கண்டத்தின் பண்டைய இந்தோ-ஆரிய கலாச்சாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறது. 

ஆரியர்கள் தங்களது கருத்துகளை ஏற்றுக்கொள்ளும்படி இந்திய பூர்வீக மக்களை கட்டாயப்படுத்தினர். இதனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அதிகார உயரடுக்கால் ஊக்குவிக்கப்பட்ட போலி மதக் கதையின் கீழ் இந்திய பூர்வீகவாசிகள் ஏற்றத்தாழ்வுகளை அனுபவித்தனர்.

அதிகார மேட்டுக்குடிகளால் தொடரப்பட்ட கதைகளை புத்தர் உள்ளிட்டோர் எதிர்த்தனர். இதனால் பௌத்தம் தோன்றி பிராமணியத்திற்கு எதிர்வினையாக வளர்ந்தது.  எனினும் மக்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வுகள் குறையவில்லை. பழையப்படி அப்படியே தொடர்ந்தது.

இஸ்லாம் அறிமுகம்:

இந்த நேரத்தில்தான், அரேபிய வணிகர்களின் வருகை, விளிம்புநிலை பழங்குடியின மக்கள் மத்தியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அரேபிய வணிகர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட சமத்துவம், சகோதரத்துவம், ஓர் இறைக்கொள்கை, உள்ளிட்ட அம்சங்களை கொண்ட இஸ்லாம் பழங்குடியின மக்களை வெகுவாக கவர்ந்தது.  அத்துடன் அரேபிய முஸ்லிம்களின் சகோதரத்துவ பண்புகள், அவர்களின் அன்பு செலுத்தும் குணம் இந்திய பழங்குடியின மக்களை ஈர்த்தது. 

இதனால் ஏற்றத்தாழ்வுகள் குறைந்து, சகோதரத்துவம் தழைத்தால், நாளாடையில் அவர்களின் மதமாக  இஸ்லாம் மாறியது. இந்தோ-பாக்-பங்களாதேஷ் துணைக்கண்டத்தில் உள்ள பெரும்பாலான முஸ்லிம்கள் ஆரம்பகால புரட்சியாளர்கள் மற்றும் தொலைநோக்கு பார்வையாளர்களின் வழித்தோன்றல்கள் என்பது வரலாறு. 

சமத்துவத்திற்கான ஆரம்பகால இந்தியர்களின்  வேட்கை, அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பின்னரும் தொடர்ந்தது. 

எனினும் சிலர், புதிய உயர்சாதியினரின் மதத்திற்கு மாறினர். மற்றவர்கள் அரசியல் தேவைக்காக தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டனர்.

மேலும் முந்தைய முஸ்லீம் இந்தியர்களின் சந்ததியினர் தங்கள் முன்னோர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற முடியவில்லை என்பதால்,  அவர்களில் சிலர் பழையபடி தங்கள் நிலைகளுக்கு புத்துயிர் அளித்தனர். இதனால் பல்வேறு நெருக்கடிகளை அவர்கள் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. 

முஸ்லிம்கள் மண்ணின் மைந்தர்கள்:

அத்துடன் தொடர் நெருக்கடிகளால், முஸ்லிம்கள் ஓரங்கட்டப்பட்டதுடன், பிறப்பின் அடிப்படையிலான சமத்துவமின்மை உருவானது. இதனால் தவறாகப் பயன்படுத்திய ஒரு சித்தாந்தத்திற்கு எதிரான தேடல் மக்கள் மத்தியில் மீண்டும் ஏற்பட்டது. இதன் காரணமாக நாட்டின் பூர்வீகக் குடிமக்கள் இஸ்லாத்தின்பால் கவரப்பட்டு, அதனை தங்களுடைய வாழ்வியல் நெறியாக மாற்றிக் கொண்டனர்.  இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட அவர்கள் கவுரவமான, மரியாதையான, சகோதரத்துவமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். 

நீண்ட காலமாக ஒதுக்கப்பட்ட நாட்டின் பூர்வீகக் குடிமக்கள், கண்ணியமான வாழ்க்கையை தேடி அதற்கு இஸ்லாம் ஒரு நல்ல தீர்வு என்று கருதி, அந்த மார்க்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதன்மூலம், இந்தியாவில் வாழும் அனைத்து இஸ்லாமியர்களும் இந்த மண்ணின் மைந்தர்கள்  என்று உறுதியாக கூறலாம். 

அதேநேரத்தில், தற்போது இந்தியாவில் வாழும் முஸ்லீம்கள் அனைவரும் தங்கள் முன்னோர்கள் எடுத்த துணிச்சலான முடிவை பெருமையுடன்  எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். பல நெருக்கடிக்கு மத்தியிலும் கண்ணியமான வாழ்க்கையை வாழ்ந்து வரும் இந்திய முஸ்லிம்கள், தங்கள் முன்னோர்கள் சரியான முடிவை எடுத்தனர் என்றும், அவர்களின் புரட்சிகர மற்றும் துணிச்சலான செயலால் தற்போது இம்மை, மறுமை ஆகிய இரண்டடிற்கான வாழ்க்கையை தாங்கள் பெற்று இருப்பதை எண்ணி முன்னோர்களின் முடிவை பாராட்டி எப்போதும் பெருமை கொள்ள வேண்டும். 

உதவிக்கரம் நீட்ட முன்வர வேண்டும்:

இந்தியர்களில் 68 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்ட சாதியினர் (எஸ்சி) அல்லது பழங்குடியினர் (எஸ்டி) மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்  என அடையாளப்படுத்துகின்றனர். ஆனால் இவர்களின் நிலைமை இன்னும் உயர்வு அடையவில்லை. கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இவர்கள் இன்னும் பின்தங்கியே உள்ளனர். முஸ்லிம்களின் நிலைமையும் ஒருவகையில் இதுபோன்றுதான் உள்ளது. 

இந்நிலையில், துணிச்சலுடன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு தங்களின் வாழ்வை கண்ணியமிக்க வாழ்வாக மாற்றிய தங்களின் மூதாதையர்களுக்கு மரியாதை செலுத்த இந்திய முஸ்லிம்கள் முன்வர வேண்டும். அதற்கு ஒரு சிறந்த வழி, இன்னும் வாழ்க்கையில் எந்தவித உயர்வை பெறாமல் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கையை பல்வேறு வகையிலும் மேம்படுத்த முஸ்லிம்கள் முன்வர வேண்டும்.  இதன்மூலம் மட்டுமே இஸ்லாத்தைத் தழுவிய தங்கள் முன்னோர்களின் முடிவால் தாங்கள் பெருமை கொள்கிறோம் என்று இந்திய முஸ்லிம்கள் உறுதியாக கூற முடியும். 

- நன்றி: முஸ்லிம் மிரர்

- தமிழில் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: