Thursday, June 29, 2023

முஸ்லிம் சமுதாயம்.....!


என்ன செய்யப் போகிறது முஸ்லிம் சமுதாயம்….!

கர்நாடக தேர்தல்: உ.பி. முஸ்லிம்களுக்கு பாடம்

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 11 மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், ஆளும் பாஜக தன்னுடைய தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இணைந்து செயல்பட முடிவு செய்து இருந்தாலும் அதற்கான நடவடிக்கைகள் இன்னும் தீவிரப்படுத்தப்படவில்லை. 

அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் இறங்கியுள்ளார். முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து அவர் ஆலோசனைகளை நடத்தி வருகிறார். ஒரே அணியில் இணைந்து செயல்பட்டு, பாஜகவிற்கு கடும் நெருக்கடியை தர வேண்டும் என அவர் வலியுறுத்தி வருகிறார். இதற்கு மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் ஓரளவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 

கர்நாடக தேர்தல் முடிவுகள்:

இந்த பரபரப்பான சூழ்நிலையில்தான், கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மக்களின் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. பெங்களூருவில் நேற்று நடைபெற்ற பதவி ஏற்று விழாவில் முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் பதவி ஏற்றுக் கொண்டனர். மேலும் 8 பேர் அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டுள்ளனர். 

இந்த பதவி ஏற்பு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் கலந்துகொண்டனர். இந்த விழா, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் நிகழ்ச்சியாக கருதப்படுகிறது. அடுத்தக்கட்ட நகர்வுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது. 

முஸ்லிம்களின் ஒற்றுமை:

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்ற முஸ்லிம்களின் வாக்குகளே முக்கிய காரணமாகும். இந்த தேர்தலில் தங்களது வாக்குகள் சிதறி விடக்கூடாது என்பதில் முஸ்லிம் சமுதாயம் உறுதியாக இருந்தது. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு 88 சதவீத முஸ்லிம்கள் வாக்குகளை அளித்தனர். இதன்மூலம் கர்நாடகாவில் கடந்த 5 ஆண்டுகளாக முஸ்லிம் சமுதாயம் அனுபவித்து வந்த பல்வேறு பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹிஜாப் விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளை தற்போது ஆட்சிக்கு வந்துள்ள காங்கிரஸ் தீர்த்து வைக்கும் என நம்பப்படுகிறது. 

உத்தரப் பிரதேச முஸ்லிம்களின் நிலைமை:

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில், சுமார் 20 சதவீத முஸ்லிம்கள் வாழ்த்து வருகிறார்கள். அம்மாநிலத்தில் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பிரச்சினைகளில் முஸ்லிம்கள் புறக்கணிப்பட்டு வருகின்றனர். இருந்தும், ஒவ்வொரு தேர்தலிலும், முஸ்லிம்கள், தங்களது வாக்குகளை பல்வேறு கட்சிகளுக்கு பிரித்து அளித்தால், பாஜக தொடர்ந்து அதிக இடங்களை வெற்றி பெற்று வருகிறது. 

முஸ்லிம்கள் அதிகமாக வாழும் தொகுதிகளில் கூட பாஜக வெற்றி பெற காரணம் என்ன என ஆராய்ந்தால், முஸ்லிம் வாக்காளர்கள், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் நிறுத்தப்படும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாக்குகளை அளிப்பதால், முஸ்லிம்களின் வாக்குகள் சிதறி, பாஜக மிக எளிதாக வெற்றி பெற்று வருகிறது. 

உத்தரப் பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்கள் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வரும் நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு எடுக்க வேண்டும். அதற்கு ஒரே வழி தேர்தல் ஜனநாயக முறையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

கர்நாடக மாநில முஸ்லிம்களை பின்பற்றி, வரும் நாடாளுமன்ற தேர்தலில் உத்தரப் பிர‘தேச முஸ்லிம் வாக்காளர்கள் மட்டுமல்லாமல், பிற மாநில முஸ்லிம்களும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். இதன்மூலம் மட்டுமே, முஸ்லிம்களின் வாக்குகள் சிதறாமல் ஒரே கட்சிக்கு கிடைக்கும். வாக்குகள் சிதறினால், பாஜகவிற்கு சாதகமாக மாறிவிடும் என்பதை மறந்துவிடக் கூடாது. 

இ.யூ.முஸ்லிம் லீக் அழைப்பு:

டெல்லியில் நடந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய உயர்மட்ட அரசியல் ஆலோசனைக் குழு கூட்டத்தில் பேசிய கேரள மாநில இ.யூ.முஸ்லிம் லீக் தலைவரும், தேசிய பி.ஏ.சி. சேர்மனுமான செய்யது சாதிக் அலி சிகாப் தங்ஙள், பாஜகவை வீழ்த்த மதசார்பற்ற கொள்கைகளில் நம்பிக்கை கொண்ட காங்கிரஸ் உள்ளிட் கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தார். 

முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மையின மக்களுக்கு சம உரிமைகள் கிடைக்க மதசார்பற்ற அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் தற்போது நாடு சந்தித்து வரும் இக்கட்டான சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்க வேண்டும் என்றும் பாஜக மற்றும் பாசிச சக்திகளை எதிர்த்து போராடும் உண்மையான ஒரே கட்சியாக காங்கிரஸ் இருந்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். 

பாஜக வீழ்த்த முடியாத கட்சி இல்லை என்பதை கர்நாடக தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டி இருப்பதாக கூறிய தங்ஙள், . ஜனநாயக நெறிமுறைகளில் நம்பிக்கை கொண்ட மக்கள் ஒன்றாக இணைந்தால், பாஜகவை வெல்லலாம் என்றும் கூறினார். 

இந்துத்துவ கொள்கையை வீழ்த்த ஒற்றுமையாக செயல்பட்டு ஜனநாயக மற்றும் மதசார்பற்ற கொள்கைகளில் நம்பிக்கை கொண்ட கட்சிகளுடன் இணைந்து அனைத்துக் கட்சிகளும் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். 

என்ன செய்யப் போகிறது முஸ்லிம் சமுதாயம்:

இ.யூ.முஸ்லிம் லீகின் வேண்டுகோளின்படி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் வாழும் முஸ்லிம் சமுதாயம் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து, ஒரு வலுவான அணியை உருவாக்கினால், அந்த அணி சார்பில் நிறுத்தப்படும் கட்சியின் வேட்பாளருக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும். மாறாக, பல்வேறு கட்சிகளின் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்களுக்கு வாக்காளித்து தங்களது வாக்குகள் பிரிந்துவிட காரணமாக இருந்துவிடக் கூடாது. அப்படி சிதற வைத்தால், அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை மறந்துவிடக் கூடாது. முஸ்லிம்கள் அனைத்து சமுதாய மக்களுடன் இணைந்து ஒற்றுமையாக செயல்பட  தவறினால் நாம் மீண்டும் ஒரு நூற்றாண்டு காலம் பின்நோக்கி செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்பதை மறந்துவிடக் கூடாது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் என்ன செய்யப் போகிறது முஸ்லிம் சமுதாயம் என்ற கேள்விதான் தற்போது நம்முன் உள்ளது. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: