Tuesday, June 27, 2023

உர்தூ ஊடகங்கள்....!

 உர்தூ ஊடகங்கள் – ஓர் பார்வை.....!


இந்தியாவில் வாழும் 20 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்களில், உர்தூ மொழி பேசுபவர்கள் பெரும்பான்மை மக்களாக இருந்து வருகிறார்கள். டெல்லி, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், அரியானா, பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் முஸ்லிம்கள் மட்டுமல்லாமல், பிற மதத்தைச் சேர்ந்தவர்களும் உர்தூ மொழி மீது ஆர்வம் கொண்டு அதனை கற்று வருகிறார்கள். 

தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் முஸ்லிம்கள் மத்தியில் அதிகளவு உர்தூ மொழி பயன்பாட்டில் இருந்து வருகிறது. தமிழகத்தில். சென்னை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பதூர், ராணிப்பேட்டை, கடலூர், கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் உர்தூ மொழி பேசும் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. இப்படி, உர்தூ மொழி அதிக பயன்பாட்டில் உள்ள பகுதிகளில் உர்தூ ஊடகங்களின் மீதான பார்வையும் கூடுதலாக இருந்து வருகிறது. 

உர்தூ ஊடகங்கள்: 

தமிழகத்தில், சென்னையில் கடந்த 1927ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட முஸல்மான் என்ற உர்தூ நாளிதழ், இன்றும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நாளிதழக்கு உர்தூ மொழி பேசும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதேபோன்று, பெங்களூரு, ஐதராபாத், லக்னோ, பாட்னா, மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் இருந்து உர்தூ நாளிழ்கள், வார மற்றும் மாத இதழ்கள் வெளிவந்துக் கொண்டு இருக்கின்றன. 

இந்நிலையில், மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப இந்தியாவில், உர்தூ வாசகர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்ற பேச்சு பரவலாக இருந்து வருகிறது. ஆனால்,  இந்த நம்பிக்கைக்கு மாறாக, முஸ்லிம் சமூகத்தில் உர்தூ ஊடங்களுக்கு அளிக்கப்பட்டு வரும் ஆதரவு உயர்ந்துள்ளது. 

இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளில் முஸ்லீம் மக்கள்தொகை பல ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. இதேபோன்று,

இந்தியாவில் பல்வேறு நெருக்கடிக்கு மத்தியிலும் மதரஸாக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டின் அறிக்கையின்படி, உத்தரபிரதேசத்தில் மட்டும் 16 ஆயிரத்து 400-க்கும் மேற்பட்ட மதரஸாக்கள் உள்ளன, மேலும், இந்த எண்ணிக்கையில் மசூதிகள் மற்றும் முஸ்லீம் வட்டாரங்களில் நடத்தப்படும் தனியார் மதரஸாக்கள் சேர்க்கப்படவில்லை.

உர்தூ மீது மாணவர்கள் ஆர்வம்: 

டெல்லி, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், அரியானா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இயங்கி வரும் அரபி மத்ரஸாக்களில், உர்தூ மொழி கற்றுத்தரப்பட்டு வருகிறது. எனவே உர்தூ மொழியை படிக்கும் மாணவர்கள், உர்தூ செய்தித்தாள்களை வாசிப்பதில் அதிகளவு ஆர்வம் கொண்டுள்ளனர். இதன்மூலம் லட்சக்கணக்கான மாணவர்கள், உர்தூ ஊடகங்களை படித்து வருகின்றனர். இதனால் இந்த மாநிலங்களில், உர்தூ வாசகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  

இது தவிர, உலகமயமாதலின் காரணமாக பொருளாதார நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டதால், நடுத்தர மற்றும் மேல்தட்டு முஸ்லிம் குடும்பங்கள், தங்கள் குழந்தைகளை உர்தூ மற்றும் அரபு மொழிகளைக் கற்க தனியார் ஆசிரியர்களை நியமிக்கத் தொடங்கியுள்ளனர். அரேபிய எழுத்துக்களின் ஒற்றுமை மற்றும் மார்க்கத்துடனான தொடர்பு காரணமாக உர்தூ, இந்திய முஸ்லிம்களிடையே மிகவும் பிரபலமான மொழியாக இருந்து வருகிறது. 

உர்தூ செய்தித்தாள்கள்,  மார்க்கப் பிரச்சனைகள், முஸ்லீம் மக்களுக்கு கல்வியின் முக்கியத்துவம்,  கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனைகளை  நிகழ்த்திய பிரபலமான முஸ்லீம் ஆளுமைகளைப் பற்றிய செய்திகளை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றன. இதனால் உர்தூ பத்திரிக்கைகள் சமூகம் முழுமையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. முக்கிய ஊடகங்களால் அடிக்கடி புறக்கணிக்கப்படும் பல தகவல்களை உர்தூ ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. இதனால், அவற்றிற்கு அதிகளவு வரவேற்பு கிடைத்து வருகிறது. 

உர்தூ அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடகங்கள்: 

தற்போது, உர்தூ செய்தித்தாள்கள் (அச்சு மற்றும் டிஜிட்டல்) பல காரணங்களுக்காக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவில் வாழும் முஸ்லீம் சமூகம், மத்திய கிழக்கு நாடுகளைப் பற்றிய செய்திகளையும் மற்ற முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளைப் பற்றிய செய்திகளையும் அறிந்துக் கொண்டு படிப்பதில் எப்போதும் ஆர்வமாக உள்ளது. 

மெக்கா, மதீனா ஆகிய இரண்டு புனித மசூதிகளின் பூமியான சவூதி அரேபியாவில் நடக்கும் நிகழ்வுகளைப் பற்றி செய்திகளை அறிய அவர்கள் விரும்புகிறார்கள். இந்தச் செய்திகள் உர்தூ பத்திரிக்கையால் விரிவாக எடுத்துச் சொல்லப்படுகின்றன. ஆங்கிலம் மற்றும் இந்தி ஊடகங்கள் இத்தகையை செய்திகளை அவ்வளவு விரிவாக வெளியிடுவதில்லை. எனவே, முஸ்லிம் மக்கள் மற்ற ஊடகங்களை விட உர்தூ  ஊடகங்களை தேர்வு செய்து படிக்க இது ஒரு முக்கிய காரணமாக இருந்து வருகிறது.  அரபு லீக் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) போன்ற அமைப்புகளைப் பற்றிய செய்திகளையும் உர்தூ ஊடகங்கள் அதிகளவு பிரசுரம் செய்வதால், அவற்றின் மீது முஸ்லிம் சமூகத்திற்கு மிகவும் ஆர்வம் இருந்து வருகிறது. 

சர்வதேச சமூகமும் ஆர்வம்:

உர்தூ பத்திரிக்கைகள் சிறுபான்மை சமூகத்தால் மட்டுமல்லாது சர்வதேச சமூகத்தாலும் உன்னிப்பாக வாசிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் உள்ள பெரும்பாலான வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் துணை தூதரகங்கள் உர்தூ பத்திரிகைகளை கண்காணிக்கின்றன. இது மேற்கத்திய சக்திகள், மத்திய கிழக்கு மற்றும் முஸ்லீம் ஆதிக்கம் செலுத்தும் நாடுகளுக்கு சமமான ஆர்வமாக உள்ளது. அமெரிக்கா போன்ற சில தூதரகங்கள் தனியான உர்தூ பத்திரிகைப் பிரிவைக் கொண்டுள்ளன. வெளிநாட்டு தூதர்கள் எப்போதும் உர்தூ மொழியில் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்துவதில்  ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் உர்தூ ஊடகங்களுக்கு முஸ்லிம்களால் மட்டுமல்லாமல், சர்வதேச சமூகத்தாலும் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 

உர்தூ நாளிதழக்கு இணையான மணிச்சுடர்: 

இந்தியாவின் பல மாநிலங்களில் உர்தூ நாளிதழ்களுக்கு முஸ்லிம்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில், தமிழகம் உட்பட நாடு முழுவதும் முஸ்லிம் சமூகத்திற்காக நடத்தப்பட்டு வரும் ஒரே தமிழ் நாளிதழ் மணிச்சுடர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. மறைந்த சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமது சாஹிப் அவர்களால், ஆரம்பிக்கப்பட்டு, தற்போது பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களை ஆசிரியராக கொண்டு, மணிச்சுடர் நாளிதழ் கடந்த 39 ஆண்டுகளாக மிக சிறப்பான முறையில் வெளிவந்துக் கொண்டிருக்கிறது. திருக்குர்ஆன், ஹதீஸ், முஸ்லிம்களின் சமூக, அரசியல், பொருளாதாரம், வரலாறு உள்ளிட்ட செய்திகள், முஸ்லிம் ஆளுமைகள் குறித்து கட்டுரைகள், மத நல்லிணக்கம் தொடர்பான கட்டுரைகள், மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவை தொடர்பான பல தகவல்களை மணிச்சுடர் நாளிதழ் வெளியிட்டு வருகிறது. இதனால் தமிழக முஸ்லிம் மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல், அனைத்துத் தரப்பு மக்களிடையேயும், மணிச்சுடர் நாளிதழக்கு ஆதரவு இருந்து வருகிறது. வட மாநில முஸ்லிம் சமூகத்திற்கு உர்தூ ஊடகங்கள் எப்படி சேவை ஆற்றி வருகின்றனவோ, அப்படி, இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் உட்பட அனைத்து சமூதாய மக்களுக்கும் உண்மையான, தரமான செய்திகளையும், தகவல்களையும் தரும் ஒரே தமிழ் நாளிதழாக மணிச்சுடர் இருந்து வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: