Tuesday, June 27, 2023

பகல்நேர தூக்கம்....!

பகல்நேர தூக்கம் மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்…!

மருத்துவ ஆய்வில் தகவல்…..!!

மனிதனுக்கு ஏக இறைவன் கொடுத்த மிகப்பெரிய வரம் தூக்கம். தூக்கம் என்பது ஒவ்வொரு மனிதன் உடைய வாழ்வில் இன்றியமையாத ஒன்றாகும். மனிதனுக்கு உணவு, தண்ணீர், எந்த அளவுக்கு முக்கியமோ, அதேபோன்று உறக்கமும் முக்கியமான ஒன்றாகும். ஒருவர் தினமும் 8 மணி நேரம் நல்ல ஆழ்ந்த தூக்கத்தை தூங்கினால், அவருக்கு உடல் ரீதியான பல்வேறு பிரச்சினைகள் வர வாய்ப்பு இல்லை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதுவும், இரவு நேர உறக்கம் மிகமிக அவசியம் என்றும், குறிப்பிட்ட நேரத்திற்குள் தூங்கி, குறிப்பிட்ட நேரத்திற்குள் எழுந்துக் கொள்ளும் பழக்கம் கொண்டவர்கள், நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாய்ப்பு அதிகம் என்றும் அவர்கள் கூறுகின்றனர். அதேநேரத்தில், எந்த நேரமும் தூக்கத்திலேயே இருந்தால், அது ஒருவித நோய் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். 

பகல்நேர தூக்கம்:

உலகில், பகல் நேரத்தில் தூங்கும் பழக்கம் கொண்டவர்களாக பலர் இருந்து வருகிறார்கள். பகல் நேரத்தில் தூங்குவது சரியல்ல என்றும், அது கெட்ட பழக்கம் என்றும் பொதுவாக மக்களிடையே ஒரு கருத்து நிலவி வருகிறது. வீட்டில் கூட பிள்ளைகள் பகல் நேரத்தில் தூங்கினால், அவர்களை பெற்றோர் அதட்டி வசைப்படுவது உண்டு. பகல் நேரத்தில் தூங்குவது வீட்டிற்கு நல்லதல்ல என்று சொல்வதை நாம் கேட்டு இருக்கிறோம். 

ஆனால், பகல் நேரத்தில் ஒருவர் அரை மணி நேரம் தூங்கினால், அவரது மூளையின் ஆரோக்கியம் அதிகரிக்கும் என அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.  

மருத்துவ ஆய்வு:

பகல் நேர தூக்கம் குறித்து இங்கிலாந்தில் உள்ள யுனிவர்சிட்டி காலேஜ் மற்றும் உருகுவேயில் உள்ள குடியரசு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு ஒன்றை நடத்தினர். இந்த ஆய்வில் கிடைத்த சுவையான பல தகவல்கள், ஸ்லீப் ஹெல்த் என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. 

பகல் நேர தூக்கம் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், 40 முதல் 60 வயதுக்கு உட்பட்ட 4 லட்சம் பேரிடம் இருந்து தரவுகளை ஆராய்ச்சியாள்ர்கள் சேகரித்தனர். இப்படி சேகரிக்கப்பட்ட தரவுகளை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில், 2 புள்ளி 6 முதல்,  6 புள்ளி 5 வயது வரையிலான வயதிற்கு சமமான மூளையின் அளவு அல்லது உறுப்பின் அளவு ஆகியவற்றில் உள்ள சராசரி வித்தியாசம் இருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். 

ஒருவரின் குறுகிய பகல்நேர தூக்கம், அவர் வயதாகும்போது, மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும் என தாங்கள் கண்டுபிடித்ததாக மருத்துவ ஆராய்ச்சியாளர் டாக்டர் விக்டோரியா கார்பீல்ட் கூறியுள்ளார். 

மேலும் இந்த ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள், டிஎன்ஏவின் 97 துணுக்குகளையும் ஆராய்ந்தனர். அதை எம்ஆர்ஐ ஸ்கேன் செய்ததில், பகல் நேரத்தில் தூங்கியவர்களின் மூளையின் அளவு 15 புள்ளி 8 கியூபிக் சென்டிமீட்டர் அதிகமாக இருந்தது தெரிய வந்துள்ளது. 

அதேநேரத்தில், தூக்கத்திற்கும் ஹிப்போகாம்பஸின் அளவிற்கும் இடையே எந்த தொடர்பையும் காணப்படவில்லை என்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். 

மூளைக்கு ஆரோக்கியம்:

பகல்நேரத் தூக்கம் மற்றும் அறிவாற்றல், கட்டமைப்பு மூளை விளைவுகளுக்கு இடையே உள்ள காரண உறவை அவிழ்க்க நடத்தப்பட்ட முதல் ஆய்வு இது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  தங்களது ஆய்வு, பழக்கமான குட்டித் தூக்கத்திற்கும் மூளையின் மொத்த அளவுக்கும் இடையே ஒரு காரணமான தொடர்பைச் சுட்டிக் காட்டுகிறது என்றும் ஆராய்ச்சியாளர் வாலண்டினா பாஸ் கூறியுள்ளார்.  

ஒருவர் நாள்தோறும் பகல் நேரத்தில் சுமார் 30 நிமிடம் தூங்கினால், அவரது மூளையின் ஆரோக்கியம் அதிகரிக்கும் என்றும், எப்போதும் மூளை சுறுசுறுப்பாக இருக்க பகல்நேர தூக்கம் உதவி செய்யும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அத்துடன்,  பகல் நேரத்தில் 30 நிமிடம் தூங்கினால், அந்த பழக்கம் ஒருவரின் முதுமையை 7 ஆண்டுகள் தாமதப்படுத்தும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது, வயது கூடிக் கொண்டே போனாலும், பகல்நேர தூக்கப் பழக்கம், ஒருவரை இளமையாகவே வைக்கும் என்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். 

அத்துடன் பகல் நேரத்தில் சுமார் 30 நிமிடங்கள் தூங்குபவர்களுக்கு மூளையின் ஆரோக்கியம் மேம்படும் என்றும், அந்த பழக்கம் டிமென்ஷியா அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கும் என்றும் ஆய்வு தெரிவிக்கிறது. பகல்நேரத் தூக்கம் குறித்து இதுபோன்ற ஆய்வுகள் மேலும் மேற்கொள்ளப்படும் என கூறியுள்ள டாக்டர் கார்பீல்ட், இதன்மூலம் பகல்நேரத் தூக்கம் குறித்து மக்களிடையே உள்ள தவறான எண்ணங்களை குறைக்க இந்த ஆய்வுகள் உதவும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அவசியம் கடைப்பிடியுங்கள்:

பகல்நேரத் தூக்கம் குறித்து மருத்துவ ரீதியாக நல்ல தகவல்கள் கிடைத்து இருப்பதால், இனி, தினமும் 30 நிமிடங்கள் பகலில் தூங்கும் பழக்கதை அனைவரும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். உலகில் சாதனைகளை நிகழ்த்திய பல சாதனையாளர்கள், தங்களது வேலை பளூக்கு இடையே, பகலில் சிறிது நேரம் தூங்கும் பழக்கம் கொண்டவர்களாக இருந்ததை நாம் அறிய முடிகிறது.

உடலுக்கும், மூளைக்கும் புத்துணர்ச்சி அளிக்க பகல்நேரத் தூக்கம் மிகவும் அவசியம். பகல் கனவுதான் காணக் கூடாது. ஆனால், பகல் நேரத்தில், உடல் மற்றும் மூளையின் ஆரோக்கியத்திற்காக சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு தூங்குவது தவறல்ல. என்ன, இனி பகல் நேரத்தில் சுமார் 30 நிமிடங்கள் தூங்குவதை பழக்கமாக்கிக் கொண்டு, நல்ல ஆரோக்கியமான மூளையுடன் வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியாக வாழுங்கள்.  

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: