Thursday, June 29, 2023

இந்திய முஸ்லிம்கள்....!


இந்தியாவில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்பற்ற உணர்வு….!

சமூகத் தலைவர்கள் கவலை….!!

நாட்டின் மக்கள்தொகையில் 20 சதவிகிதத்திற்கும் அதிகமாக இந்தியாவில் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள். உலக நாடுகளில் அதிகமாக வாழும் முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட இரண்டாவது நாடாக இந்தியா உள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் இந்திய முஸ்லிம்கள் தொடர்ந்து தங்களது பங்களிப்பை அளித்துக் கொண்டே இருக்கிறார்கள். அறிவியல், பொருளாதாரம், தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மறைந்த டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் உட்பட பல முஸ்லிம் விஞ்ஞானிகள், பொருளாதார நிபுணர்கள், தொழில் அதிபர்கள் செய்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பணிகளை நாடு ஒருபோதும் மறக்காது. 

கடுமையான அழுத்தத்தில் முஸ்லிம் சமூகம்: 

இப்படி, நாட்டின் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் தொடர்ந்து தங்களது பங்களிப்பை அளித்துக் கொண்டிருக்கும் முஸ்லிம்கள், தற்போது நிம்மதியாக இருக்கிறார்களா என கேள்வி எழுப்பினால் அதற்கு பதில் இல்லை என்றே வருகிறது. முஸ்லிம்கள் தற்போது கடுமையான மன அழுத்தத்தில் இருந்து வருவதை பல்வேறு சம்பவங்கள் மூலம் அறிய முடிகிறது. 

கடந்த 9 ஆண்டு கால ஒன்றிய பிஜேபி ஆட்சியில் இந்துத்துவ அமைப்புகளின் கைகள் ஓங்கியுள்ளன. பீகார், ராஜஸ்தான், கர்நாடகா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைகள் முஸ்லிம்களை பீதி மற்றும் மனநோயின் விளிம்பில் கொண்டு வைத்துள்ளது. கடந்த 75 ஆண்டுகளில் முஸ்லீம்கள் இதுபோன்ற பாதுகாப்பற்ற உணர்வுகளுடன் ஒருபோதும் இருக்கவில்லை. 

சில இந்துத்துவ அமைப்பு சக்திகளால் உருவாக்கப்படும் பிரச்சினைகளே இதற்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. முஸ்லிம்களுக்கு எதிராக இந்துத்துவ அமைப்புகள் செய்யும் குழப்பங்களை ஒன்றிய மற்றும் பல மாநில அரசுகள் கண்டுக் கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. 

சமூக தலைவர்கள் கவலை:

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அண்மையில் ஒன்றுகூடி ஆலோசனை நடத்திய அபு அசிம் ஆஸ்மி, சையத் இம்தியாஸ் ஜலீல், சமூக ஆர்வலர் ஷப்னம் ஹஷ்மி, பேராசிரியர் ஜீனத் ஷௌகத் அலி போன்ற முக்கிய சிறுபான்மைத்  தலைவர்கள், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 9 ஆண்டு கால ஒன்றிய பிஜேபி ஆட்சி குறித்தும், இந்த ஆட்சியில் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மக்கள் சந்தித்த பிரச்சினைகள் குறித்தும் விவாதித்தனர்.

அப்போது பேசிய சமூக ஆர்வலர் ஷப்னம் ஹஷ்மி, நாட்டின் பல மாநிலங்களில் Politicians பொய் வழக்குகளில் சிக்க வைக்கப்படுவதாகவும், அதன்மூலம் அவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள் என்றும் வேதனை தெரிவித்தார். பல மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக அட்டூழியங்கள் நடைபெற்று வருவதாகவும், நாட்டிற்காக முஸ்லிம்களின் வரலாற்றுப் பங்களிப்புகள் அல்லது தியாகங்களை அழிக்கும் முறையான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன  என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

முஸ்லிம்களின் அடையாளங்களை அழித்து புதிய வரலாற்று உருவாக்கும் முயற்சிகளில் இந்துத்துவ அமைப்புகள் இறங்கியுள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்தார். 

அரசியல் லாபத்திற்காக முஸ்லிம் எதிர்ப்பு:

இதேபோன்று பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சையத் இம்தியாஸ் ஜலீல், பாஜகவும், பிரதமர் மோடியும் சிறுபான்மையினருக்கு முற்றிலும் எதிராகச் சென்றதற்கு ஒரே காரணம், அவர்களின் தேர்தல் அரசியல்தான் என குற்றம்சாட்டினார். இந்து வாக்குகளை ஒருங்கிணைப்பது, சிறுபான்மையினர் மற்றும் பிறரை பயமுறுத்துவது, குறிப்பாக, அவர்கள் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை என்றால் மிரட்டுவது உள்ளிட்ட போக்குகள் அதிகரித்து வருவதாக ஜலீல் கூறினார்.

முஸ்லிம்கள் எங்கு தாக்கப்பட்டாலும், பயமுறுத்தப்பட்டாலும் அல்லது கொல்லப்படும் போதும் பிரதமர் மோடி வாய் திறக்காமல் மவுனமாக இருக்கிறார் என்று கூறிய ஜலீல், பிரதமர் மோடி பாஜகவிற்கோ அல்லது பெரும்பான்மை சமூகத்திற்கோ மட்டுமின்றி முழு நாட்டிற்கும் பிரதமராக இருப்பார் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். 

பிரதமர் மோடியின் கீழ் இந்தியா ஏற்கனவே அரை பாசிச நாடாக மாறிவிட்டது என்றும் முஸ்லிம்கள் அல்லது கிறிஸ்தவர்களுக்கு எதிராக அப்பட்டமான வெறுப்பு, சாதாரண மக்களின் இதயங்களிலும் மனதிலும் பரப்பப்படுகிறது என்றும் சமூக ஆர்வலர் ஷப்னம் ஹஷ்மி வேதனை தெரிவித்தார்.

நாட்டில் அனைத்து ஜனநாயக மற்றும் அரசியலமைப்பு அமைப்புகளும் சீர்குலைக்கப்படுகின்றன என்றும், நாடாளுமன்றம் நகைச்சுவையாக மாறியுள்ளது என்றும் அவர் கூறினார். கொலைகள், முஸ்லிம் பெண்கள் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றில் தண்டனை பெற்றவர்களும், பாலியல் குற்றவாளிகளும் பாஜக ஆளும் அரசுகளால் விடுவிக்கப்படுகிறார்கள என்று புகார் தெரிவித்த ஹஷ்மி, இதனால் அனைத்து தரப்பு மக்களிடையேயும் அதிர்ச்சி அலைகள் ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார்.பல ஆண்டுகளாக சிறு வணிகங்களைச் செய்து வந்த முஸ்லிம்கள், தற்போது பல சந்தைகளில் இருந்து அப்புறப்படுத்தப்படுகிறார்கள் என்றும் ஹாஷ்மி தெரிவித்தார்.

முஸ்லிம்களுக்கான திட்டங்கள் நிறுத்தம்:

நாட்டின் பல மாநிலங்களில் முஸ்லிம்களுக்கான பல நலத்திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. நிதி பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களை கூறி, நியாயமாக வழங்க வேண்டிய பல சலுகைகள் முஸ்லிம்களுக்கு முறையாக அளிக்கப்படவில்லை. முஸ்லிம் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டதால், அந்த மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது. உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் புல்டோசர்கள் மூலம் முஸ்லிம்களின் வீடுகளைத் தேர்ந்தெடுத்து இடித்துத் தள்ளப்படுகிறது. 

ஹஜ் யாத்திரைக்கான மானியங்களை ரத்து செய்வது போன்ற  பல பிரச்சினைகள் இருந்தபோதும், முஸ்லிம்கள் அதை அமைதியாக ஏற்றுக்கொண்டனர். 

எந்தவொரு ஜனநாயகத்திலும், சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் சமமாக நடத்தப்பட வேண்டும், ஆனால் பிரதமர் மோடி ஆட்சியில் சிறுபான்மையினருக்கு எதிராக அந்த நுட்பமான சமநிலை சாய்ந்துள்ளது என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

2024ல் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அரசியலமைப்புச் சட்டத்தில் ‘இந்துராஷ்டிரா’ என்ற ஒரே ஒரு வார்த்தையை மட்டும் சேர்க்க வேண்டும் என்ற கொள்கையோடு இந்துத்துவ அமைப்புகள் செயல்பட்டு வருவதாகவும், அது நாட்டைச் சிதைக்கச் செய்யும் என்றும் பலரும் வேதனை தெரிவித்துள்ளனர். 

மதசார்பற்ற சக்திகளுடன் ஒருங்கிணைய வேண்டும்:

நாட்டில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட வேண்டிய நலதிட்டத்திற்கான நிலுவைத் தொகை மறுக்கப்படுகிறது. சில பெருநகரங்களில் முஸ்லிம்கள் வீடுகள் அல்லது சொத்துக்களை வாங்க அனுமதிக்கப்படுவதில்லை. கல்வி, வேலைவாய்ப்புகளில் முஸ்லிம் இளைஞர்கள் ஒதுக்கப்படுகிறார்கள். திறமைகள் இருந்தும், அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. மாறாக மறுக்கப்படுகிறது.

சிஏஏ மற்றும் பொது சிவில் சட்டம் உள்ளிட்ட பிரச்சினைகள் நாட்டின் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் நல்லதல்ல என்றும் குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் முன்னேற்றத்திற்கு மட்டுமே அக்கறை செலுத்தாமல், அனைத்து இந்தியர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதுவே, தற்போதைய வெறுப்புச் சூழலில் இருந்து வெளிவருவதற்கான சாத்தியமான வழியாகும் என்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். 

தற்போதைய சிக்கில் இருந்து விடுபட அனைத்து முஸ்லிம்களும், மற்ற சிறுபான்மையினரும் மதச்சார்பற்ற இந்து சகோதரர்கள் மற்றும் பிற சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் ஆகியோருடன் கைகோர்த்து, நாட்டின் ஜனநாயகத்தை காப்பாற்ற முன்வர வேண்டும். இதன்மூலம் நாட்டின் எதிர்கால  சந்ததியினருக்கு உரிய பாதுகாப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று முஸ்லிம் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: