Thursday, June 29, 2023

ஹிஜாப்...!

கர்நாடகாவில் ஹிஜாப் மீதான தடையை நீக்குவோம்....!

காங்கிரஸ் எம்எல்ஏ கனீஸ் பாத்திமா உறுதி....!!

கர்நாடகாவில் முந்தைய பாஜக அரசு முஸ்லிம் மாணவிகள் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வர தடை விதித்தது. இதையடுத்து ஹிஜாப் தடை தொடர்பான சர்ச்சை  கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பரில் இருந்து தொடங்கியது. 

பாஜக அரசின் உத்தரவுக்கு கர்நாடகா மாநிலம் முழுவதும் எதிர்ப்புகள் எழுந்தன.  இதுதொடர்பான வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், ஹிஜாப் அணிவது அவசியமில்லை என்று கூறி அரசின் தடையை உறுதி செய்தது. பின்னர் இந்த விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு சென்றது.  ஆனால் வழக்கை விசாரிக்க இன்னும் ஒரு பெஞ்ச் அமைக்கப்படவில்லை.

ஹிஜாப் விவகாரம் காரணமாக நூற்றுக்கணக்கான முஸ்லிம் மாணவிகள் தங்கள் படிப்பை பாதியில் நிறுத்தினர். இதனால் முஸ்லிம்கள் மத்தியில் கவலை பிறந்தது.

தேர்தலில் முஸ்லிம்கள் பாடம்:

இந்நிலையில், அண்மையில் நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில்  மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 135 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்றது. காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து, வாக்கு அளித்தது  ஒரு முக்கிய காரணமாகும்.

31 தொகுதிகளில் டெபாசிட் பறிகொடுத்த பாஜக:

கர்நாடகாவில் முஸ்லிம் மக்களின் வெறுப்பை சம்பாதித்த பாஜகவிற்கு பிற சமுதாய மக்களும் தங்களது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி, அதை தேர்தல் வாக்குரிமை மூலம் செய்து காட்டினர்.

இதனால் பாஜக 31 தொகுதிகளில் படுதோல்வி அடைந்து டெபாசிட் பறிகொடுத்தது.

அத்துடன், சில தொகுதிகளில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற முடிந்தது.

கனீஸ் பாத்திமா உறுதி:

இந்த தேர்தலில் குல்பார்கா உத்தர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட கனீஸ் பாத்திமா, பாஜக வேட்பாளர் சந்திரகாந்த் பாட்டீலை தோற்கடித்து மீண்டும் வெற்றி பெற்றார். இதேபோன்று காங்கிரஸ் கட்சி சார்பில் மேலும் 8 பேர் வெற்றி பெற்றனர். 

கடந்த 2017-ஆம் ஆண்டில் தனது கணவர் கமர்-உல்-இஸ்லாம் இறந்ததைத் தொடர்ந்து, கனீஸ் பாத்திமா இடைத்தேர்தலில் போட்டியிட்டு கடந்த 2018-ஆம் ஆண்டில் முதல் முறையாக கர்நாடக சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டார். அப்போது முதல் முஸ்லிம் பெண்களின் நலன் மற்றும் கல்வியில் மிகுந்த அக்கறை கொண்டு அவர் சேவை ஆற்றி வருகிறார். 

கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் வெடித்தபோது, பாஜக அரசின் தடைக்கு எதிராக   கல்புர்கியில் முஸ்லிம் பெண்களின் போராட்டத்தை ஏற்பாடு செய்ததோடு, ஒருங்கிணைந்து நடத்தி, பாஜகவிற்கு பெரும் எதிர்ப்பை கனீஸ் பாத்திமா வெளிப்படுத்தினார்.  இப்படி முஸ்லிம் பெண்களின் உரிமைகளை மீட்டு தருவதில்  அவர் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறார். 

தற்போது காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நேர்காணல் அளித்த கனீஸ் பாத்திமா, கர்நாடக மாநிலத்தில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கப்படும் என்று உறுதிப்பட கூறியுள்ளார். 

ஏக இறைவனின் கருணையால் வரும் நாட்களில் ஹிஜாப் தடையை நாங்கள் திரும்பப் பெறுவோம் என்றும்,  மேலும் ஹிஜாப் பிரச்சினையால் பள்ளி, கல்லூரிகளில் படிப்பை பாதியில் நிறுத்திய முஸ்லிம் மாணவிகளை மீண்டும் வகுப்பறைகளுக்கு அழைத்துச் சென்று கல்விக் கற்க வைப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முஸ்லிம் மாணவிகள் கல்வி கற்று மீண்டூம் தேர்வை எழுதி கல்வியில் சாதிப்பார்கள் என்றும் ஹிஜாப் விவகாரத்தால்,  இரண்டு மதிப்புமிக்க ஆண்டுகளை முஸ்லிம் மாணவிகள் இழந்துவிட்டனர் என்றும் கனீஸ் பாத்திமா வேதனை தெரிவித்துள்ளார். 

முஸ்லிம் மாணவிகள் வரவேற்பு:

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் ஹிஜாப் விவகாரம் குறித்து எந்த அறிவிப்பும் இல்லாவிட்டாலும், கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கப்படும் என கனீஸ் பாத்திமா தெரிவித்து இருப்பது, முஸ்லிம் மாணவிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அத்துடன், ஹிஜாப் பிரச்சினையால் தங்கள் பெண் பிள்ளைகளின் படிப்பை பாதியில்  நிறுத்திய முஸ்லிம் குடும்பங்களில்,  தற்போது மீண்டும், கல்வி நிறுவனங்களில் முஸ்லிம் மாணவிகளை சேர்த்து படிக்க வைக்கலாம் என்ற ஆர்வம் பிறந்துள்ளது. 

ஹிஜாப் தடை அமல்படுத்தியவர் தோல்வி:

காங்கிரஸ் கட்சியின் ஒரே முஸ்லிம் பெண் எம்.எல்.ஏ. என்ற பெருமையை பெற்ற கனீஸ் பாத்திமா, முஸ்லிம் உட்பட அனைத்துத் தரப்பு மக்களின் நலனுக்காக பணியாற்றி பாராட்டு பெற்றுவருகிறார். ஆனால் ,ஹிஜாப் தடையை அமல்படுத்திய பாஜகவைச் சேர்ந்த கர்நாடக கல்வி அமைச்சர் பிசி நாகேஷ், சட்டப்பேரவைத் தேர்தலில் திப்டூர் தொகுதியில் தோல்வியடைந்தார். அனைத்து தரப்பு மக்களின் வெறுப்பை சம்பாதித்து அதற்கான பலனை அடைந்துள்ளார். இதைத்தான் விதி வலியது என்று பெரியவர்கள் கூறுவார்களோ....!

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: