Thursday, June 29, 2023

நல்ல சமுதாயம்.....!


நல்ல சமுதாயத்தை உருவாக்க சிறந்த வழி என்ன....?

உலகம் முழுவதும் வேகமாக மாறிவரும் நவீன சூழ்நிலைகளின் தாக்கம் தற்போது அனைத்து தரப்பு மக்களையும் பாதித்து வருகிறது. இந்த பாதிப்புக்கு இஸ்லாமிய சமூகமும் விதிவிலக்காக இருக்கவில்லை. சமூக ஊடகங்களின் மீதான ஆர்வம் முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

முகநூல், டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களை தவிர்த்துவிட்டு, தற்போதைய நவீன வேகமான உலகில் யாரும் வாழ முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. சமூக ஊடங்கள் பல்வேறு வகைகளில்இளைஞர்கள் உட்பட அனைத்துத் தரப்பு மக்களுக்கும்  பலன் அளிக்கும் வகையில் இருந்தாலும், அவற்றின் மூலம் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படுவதையும் மறுக்க முடியாது. 

உளவியல் பாதிப்புகள்:

சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலியான தகவல்களை உண்மை என நம்பும்  இளைஞர்கள், பின்னர் உளவியல் ரீதியாக பாதிப்புக்கு ஆளாகிறார்கள். அண்மை காலமாக போலியாக பரப்பப்படும் தகவல்கள் காரணமாக குடும்பங்களில் அமைதி சீர்குலைகிறது. பல இளைஞர்கள் விபரீதமான முடிவுகளை எடுத்து தங்களது உயிர்களை மாய்த்துக் கொள்கிறார்கள்.  இத்தகைய போக்கு முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் அவ்வளவாக இல்லை என்றாலும், அங்காங்கே ஒருசில நிகழ்வுகள் நடந்துக் கொண்டே இருக்கின்றன. 

குடும்பங்களை நேசிக்க வேண்டும்:

தற்போது உலகம் முழுவதும் ராக்கெட் வேகத்தில் மக்கள் பயணித்துக் கொண்டு இருக்கிறார்கள். வசதியான வாழ்க்கைக்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும்,   குடும்பங்களை மறந்து அதிக நேரத்தை பணம் ஈட்டுவதில் செலவழித்துக் கொண்டு இருக்கிறார்கள்.  இதனால் வருவாய் கிடைத்தாலும் மனதில் அமைதி இருப்பது இல்லை. எப்போது ஒருவித படபடப்பு ஏற்பட்டு பதட்டம் உருவாகிறது.  குடும்ப உறுப்பினர்கள் உட்பட யார் மீதும் நம்பிக்கை கொள்ள மறுப்பது உள்ளிட்ட பழக்கங்களுக்கு ஆளாக வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு வருகிறார்கள். இத்தகைய நிலை, இஸ்லாமியர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

வேகமான உலகத்தில் குடும்பங்களையும் குழந்தைகளையும் நேசிக்க தவறியதால், அதன் பலனை சமூகம் இன்று அனுபவித்து வருகிறது. சிறந்த சமுதாயத்தை உருவாக்குவதற்கான முதல் படி, ஒவ்வொருவரும் தங்கள் குடும்பங்களை நேசிக்க வேண்டும் என உளவியல் நிபுணர்கள் ஆலோசனை தருகின்றனர். குழந்தைகளை நேசித்தல் மற்றும் அவர்களின் சுய மரியாதைக்கு மதிப்பளித்தல் உள்ளிட்ட பண்புகள் மூலம் சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பது உளவியல் நிபுணர்களின் கருத்து. 

உறவுகள் மூலம் மட்டுமே மகிழ்ச்சி கிடைக்கும்:

அமைதியான, மகிழ்ச்சியான வாழ்க்கையை விட சிறந்த வாழ்க்கை இருக்க முடியுமா என கேள்வி எழுப்பும் உளவியல் நிபுணர்கள், அதற்காக குடும்ப சொந்தங்களுடன் சிறிது நேரத்தை செலவழித்து, அவர்களின் இன்ப, துன்பங்களில் பங்கெடுத்துக் கொள்வது மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்றும் ஆலோசனைகளை தருகிறார்கள். 

உறவுகளை உதறி தள்ளிவிடாமல், அவர்களை நேசிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்றும், சின்ன சின்ன செயல்கள் மூலம் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டும் என்றும் யோசனைகள் தரப்படுகின்றன. 

இஸ்லாமிய வாழ்க்கை நெறி:

உற்றார், உறவினர்கள், அண்டை வீட்டார் என அனைத்து தரப்பு உறவுகளையும் சரியாக பேண வேண்டும் என இஸ்லாமிய மார்க்கம் அழகாக சொல்லி தருகிறது. ஏழ்மை நிலையில் உள்ள உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரை கண்டுகொள்ளாமல் இருப்பதை கைவிட்டு, அவர்களை நேசிப்பதுடன், அவர்கள் கேட்காமலேயே பல்வேறு நிலைகளிலும் அவர்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்று கூறும் இஸ்லாமிய மார்க்க நெறி,  உறவு முறைகளை சரியாக கடைப்பிடிக்காமல், உதறி தள்விவிட்டு  இருக்கும் ஒருவர் உண்மையான முஸ்லிமாக இருக்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவிக்கிறது. 

வேகமான உலகத்தின் நவீன காலத்திலும், தாய், தந்தை, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை உள்ளிட்ட உறவுகளை நாம் நேசிக்க வேண்டும். அவர்களின் நலனில் எப்போதும் அக்கறை செலுத்த வேண்டும். அவர்களிடம் கலந்து ஆலோசனை செய்ய வேண்டும். பெரியவர்களின் யோசனைகளை காது கொடுத்து கேட்க வேண்டும். இதன்மூலம் பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்து, குழந்தைகளிடமும் சரியாக நாம் மார்க்கத்தை கொண்டு செல்ல முடியும். அனைவரையும் நேசிக்கும் பண்பை அவர்களுக்கு கற்றுத்தர முடியும். 

உறவுகளை சிதைக்க நமது குழந்தைகளை எப்போதும் நாம் அனுமதிக்கக் கூடாது. தாயிடம் எப்படி நடந்துக் கொள்வது, உறவினர்களை எப்படி நேசிப்பது உள்ளிட்ட அழகிய வாழ்க்கை நெறிமுறைகளை நம்முடைய குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் இருந்தே நாம் சொல்லித்தர வேண்டும். அதற்காக நேரத்தை ஒதுக்கி உண்மையாக செயல்பட வேண்டும். 

அனைத்து தரப்பு மக்களையும் நேசித்தல்:

பெற்றோர்கள் அல்லது பெரியவர்களின் ஆலோசனைகளை பல நேரங்களில் இளைஞர்கள் கேட்க மறுக்கிறார்கள். தங்களுடைய பிரச்சினைகளை பெற்றோர்களிடம் எடுத்துக் கூற தயங்குகிறார்கள். அல்லது கலந்து ஆலோசிக்க மறுக்கிறார்கள். நாள்தோறும் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து வீட்டில் உள்ள மற்ற உறுப்பினர்களிடம் கூறி அதற்கு எத்தகையை தீர்வு காண முடியும் என கேட்க இன்றைய இளம் தலைமுறை தயங்குகிறது. இதனால், அவர்களின் பிரச்சினைகள் மேலும் அதிகரித்து, மன நிம்மதி பறிபோகிறது. 

தவறான கண்ணோட்டம் அல்லது சிந்தனை காரணமாக அனைத்து தரப்பு மக்களையும் நேசிக்க இன்றைய தலைமுறை மறுக்கிறது. பிற மக்களை சந்தேக பார்வையுடன் பார்ப்பதால், உறவுகள் சிதைந்து போகின்றன  என்பதை இளைஞர்கள் உணர்ந்துக் கொள்வதில்லை. இதனால் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும், பாதிப்புகள் ஏற்படுகின்றன. உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, மனநோய், உடல் பலவீனம் நரம்பு தளர்ச்சி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதுடன்,  சமூக பிரச்சனைகளும் உருவாகின்றன.  

பரபரப்பான வேகமான உலகில் இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு இளைஞர்கள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. கலகலப்பாக, மகிழ்ச்சியாக இருக்க பழகிக் கொள்ளாமல் எப்போதும் மன அழுத்தத்துடன் இருப்பதே  இதற்கு முக்கிய காரணம் என்பது மருத்துவர்களின் கருத்ததாக இருந்து வருகிறது. 

பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம் ஓர் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அது, குடும்பத்தை நேசித்து, உறவு முறைகளை நல்ல முறையில் பேணுவதன் மூலம் மட்டுமே வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் அதன்மூலம் மட்டுமே சிறந்த சமூதாயத்தை உருவாக்க முடியும் என்பதுதான். குழந்தைகளை நேசித்து, அவர்களின் சுயமரியாதைக்கு மதிப்பு அளித்தால், அந்த பண்புகள் குழந்தைகளிடம் வளரும். அதன்மூலம், அழகான, அமைதியான அனைவரையும் நேசிக்கும் நல்ல சமுதாயம் உருவாகும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: