Tuesday, June 27, 2023

நூல் மதிப்புரை....!

 நூல் மதிப்புரை.....!


நூல் பெயர்: சிராஜுல் மில்லத் ஒரு சகாப்தம்

நூலாசிரியர்: சேயன் இப்ராகிம்

வெளியிட்டாளர்: யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்,

2, வடக்கு உஸ்மான் சாலை,

(கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில்)

தியாகராயர் நகர் சென்னை - 600 017.

விலை: ரூ.300/-

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நிறுவன தலைவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அல்ஹாஜ் முஹம்மது இஸ்மாயில் சாஹிப் அவர்களின் நிழலாக இருந்து, கடந்த 23 ஆண்டுகளுக்கு  முன்பு மறைந்த சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமது சாஹிப் அவர்களின் அழகிய வாழ்க்கை குறித்த தொகுப்பை, பிறப்பும் இளமைக் காலமும் என தொடங்கி, சிராஜுல் மில்லத் போற்றதும் என மொத்தம் 37 தலைப்புகளில், "சிராஜுல் மில்லத் ஒரு சகாப்தம்" என்ற நூலாக, எழுத்தாளர் சேயன் இப்ராகிம் அழகிய எளிமையான  தமிழில் தொகுத்துள்ளார். 

தனது இளமைக்காலத்தில் வீட்டிலேயே சிராஜுல் மில்லத், இதழ்களையும், நூல்களையும் படிப்பதில் தனது நேரத்தைத் செலவிட்டார் என்று நூலாசிரியர் குறிப்பிட்டு இருப்பதை அறியும்போது, வியப்பும் ஆச்சரியமும் ஏற்படுகிறது. அத்துடன் சௌஹர் என்ற நூலகத்தைத் தொடங்கி, தமிழகத்தில் வந்து கொண்டிருந்த அனைத்துத் தினசரி இதழ்களையும், வார, மாத இதழ்களையும் நூலகத்தில் இடம் பெறச் செய்தார் என்ற தகவலும் இந்த நூலகத்தை அவரது நண்பர்களும், பாமர மக்களும் நன்கு பயன்படுத்திக் கொண்டனர் என்ற தகவலும், சிராஜுல் மில்லத்திற்கு இளமைக் காலத்திலேயே பத்திரிகை துறையில் இருந்த ஈடுபாட்டை எடுத்துக் காட்டும் வகையில் உள்ளது. 

திருக்குர்ஆனைத் தமிழில் மொழிபெயர்க்கும் பணியைத் தொடங்கிய அவரது தந்தை அல்லாமா ஆ.கா.அப்துல் ஹமீது ஆலிம் பாகவி அவர்களுக்கு, உதவியாக பிழை திருத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளில்  சிராஜுல் மில்லத் ஈடுபட்டது தொடர்பான பல சுவையான தகவல்கள் இந்த நூலில் அழகாக தரப்பட்டுள்ளன.

சிராஜுல் மில்லத்தின் அரசியல் வாழ்க்கை, சந்தித்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் சமுதாய பிரச்சினைகள் குறித்து ஆற்றிய உரைகள், அவரது எழுத்தாற்றல், மணிச்சுடர் நாளிதழ் மீது அவர் கொண்டிருந்த ஈடுபாடு, தமிழ் மொழி மீது சிராஜுல் மில்லத் கொண்டிருந்த மாறாப் பற்று, இஸ்லாம் எங்கள் வழி, இன்பத் தமிழ் எங்கள் மொழி என்ற அவரின் வசந்த வரிகள் போன்ற பல தகவல்கள், அனைத்து வாசகர்களையும் நிச்சயம் கவரும் வகையில் நூலில் இடம்பிடித்துள்ளன. 

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநிலத் தலைவராக கடந்த 1975ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டு, மரணிக்கும் வரை (11.04.99) அந்த பொறுப்பில் இருந்த சிராஜுல் மில்லத், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் நேசிக்கும் மற்றும் அன்பு பாராட்டும் தலைவராக பணியாற்றியது குறித்த அரிய தகவல்களையும் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். அவரது பதவிக் காலத்தில் நடைபெற்ற மாநாடுகள், குறிப்பாக, மாநில மாநாடு, பொன்விழா மாநாடு, ஷரீயத் பாதுகாப்பு மாநாடு, முஸ்லிம் லீக் கன்வென்ஷன், சமுதாய ஒற்றுமை மாநாடு உள்ளிட்ட பல செய்திகளையும் இந்த நூலில் அறிய முடிகிறது. 

திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடனான தேர்தல் கூட்டணி, நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் ஏற்பட்ட வெற்றி, தோல்விகள், அதன்மூலம் கட்சிக்கு ஏற்பட்ட நெருக்கடிகள், அந்த நெருக்கடிகளிலும் அல்லாஹ்வின் மீது உறுதியான நம்பிக்கையுடன் இருந்து இ.யூ.முஸ்லிம் லீகை வீரியத்தோடு நடத்திச் சென்ற பாங்கு உள்ளிட்ட பல தகவல்களை நூலாசிரியர் அழகாக தொகுத்துள்ளார். 

சிராஜூல் மில்லத்திற்கு மார்க்க அறிஞர்களுடன் இருந்த நட்பு, தேசிய, மாநில அரசியல் கட்சித் தலைவர்களுடன் நட்பு பாராட்டிய விதம், மாற்று மத தலைவர்களுடன் அவர் பாசத்துடன் பழகிய விதம், இ.யூ.முஸ்லிம் லீகின் தற்போதை தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுடன் இருந்த நட்பு, நம்பிக்கை, இ.யூ.முஸ்லிம் லீக் தொண்டர்கள் மீது அவர் காட்டிய அன்பு, பாசம் ஆகியவற்றை மிக எளிமையாக அனைவரும் புரிந்துக் கொள்ளும் வகையில் ஆசிரியர் சேயன் இப்ராகிம் எழுதியுள்ளார். 

அத்துடன், நெல்லை அப்துல் மஜீத்துடன் ஒரு நேர்காணலை நடத்தி, சிராஜுல் மில்லத்தின் அழகிய குணங்கள், இஸ்லாமிய மார்க்கம் மீது அவர் கொண்டிருந்த உறுதி, தொண்டர்களிடம் பழகிய விதம் உள்ளிட்ட பல தகவல்களை தமிழ் மக்களும் அறிந்துக் கொள்ளும் வகையில் ஆசிரியர் தனது நூலில் எடுத்துக் கூறியுள்ளார்.  

கடந்த 3.8.84-ல் நடந்த முஸ்லிம் லீக் -ஆர்.எஸ்.எஸ். சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, சிராஜுல் மில்லத் அவர்கள் இந்து-முஸ்லிம்கள் பிரச்சினைகள் குறித்து எடுத்து வைத்த கருத்துப் பரிமாற்ற வாதங்கள் படிக்க படிக்க சுவை தருகின்றன. அத்துடன் சிராஜுல் மில்லதின், ஆழ்ந்த அறிவாற்றல், மனித நேயம், அரசியல் பண்பு ஆகியவற்றையும் இதில் காண முடிகிறது. 

இந்த நூலில் சிராஜுல் மில்லத் குறித்து அரசியல் தலைவர்கள் பாராட்டி கூறியுள்ள கருத்துகள், நாளிதழ்கள், வார மாத இதழ்களில் சிராஜுல் மில்லத் குறித்து வந்துள்ள நல்ல பல தகவல்கள் என ஏராளமான செய்திகள் இடம்பிடித்துள்ளன. 

பல சுவையான, அரிய வரலாற்றுத் தகவல்கள் அடங்கிய சிராஜுல் மில்லத் ஒரு சகாப்தம் என்ற நூலை,  ஒவ்வொரு முஸ்லிம் லீக் தொண்டர்களும் படிப்பதுடன், நூலை அனைத்து தமிழர்களின் மத்தியிலும் கொண்டு சேர்க்க வேண்டும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: