Tuesday, June 27, 2023

முஸ்லிம் பெண் சாதனை...!


கல்வியில் அதீத ஆர்வம் – படிப்படியாக முன்னேறி 

பூஷன் புரஸ்கார் விருது பெற்று முஸ்லிம் பெண் சாதனை….!

மணிச்சுடர் நாளிதழக்கு அளித்த சிறப்பு நேர்காணல்…!!

சென்னையைச் சேர்ந்த டாக்டர் ரேஷ்மா சுல்தானா, ஆஸ்டியோபதி, உளவியல் மற்றும் பிசியோதெரபி ஆகியவற்றில் சிறந்த முறையில் சிகிச்சை அளித்து வருகிறார். இவரது சிறப்பான பணிக்காக பூஷன் புரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது. விருது பெற்ற சாதனை பெண் ரேஷ்மா சுல்தானா, மணிச்சுடர் நாளிதழுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் இருந்து சில பகுதிகள்:

நடுத்தர குடும்பம்:

சென்னை ஓட்டேரி தாதாஷா மக்கான் பகுதியில் ஏராளமான முஸ்லிம்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ள மஸ்ஜித்தே அக்பர் மசூதியில் எனது தந்தை செயலாளராக இருந்து வருகிறார். எங்கள் தந்தைக்கு நான் மற்றும் ஒரு மகன் என இரண்டு பிள்ளைகள். எங்கள் குடும்பம் சாதாரண நடுத்தரப் பிரிவைச் சேர்ந்தது. குடும்பத்தில் யாரும் மிகப்பெரிய அளவுக்கு படிக்கவில்லை. என் அண்ணன் 12வது வகுப்பு வரை படித்து, பட்டப்படிப்பு சேர்ந்தார். 

தாதாஷா மக்கான் பகுதியில் வசிக்கும் முஸ்லிம்கள் கடுமையான உழைப்பாளிகள். உழைப்பில் இருக்கும் ஆர்வம் அவர்களுக்கு கல்வியில் இல்லை. எனவே, இங்குள்ள முஸ்லிம் குடும்ப பிள்ளைகள் கல்வி பயின்று வாழ்க்கையில் முன்னேறவில்லை. குறிப்பாக, முஸ்லிம் பெண்கள், குடும்ப சூழ்நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கல்வியில் ஆர்வம் இல்லாமல் இருந்து வருகின்றனர். 

கல்வியில் அதீத ஆர்வம்:

எனக்கு இளம் வயதில் இருந்து கல்வியில் அதிக ஆர்வம் இருந்து வந்தது. பிற சமுதாயத்தைச் சேர்ந்த பெண் பிள்ளைகள், நன்கு படித்து வாழ்க்கையில் முன்னேறி வருவதைக் காணும்போது, அதைப் போன்று நானும் சாதிக்க வேண்டும் என ஆவல் எனக்குள் பிறந்தது. எனவே, நான் தொடர்ந்து கல்வியறிவு பெறுவதில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டேன். என்னுடைய ஆர்வத்தைக் கண்ட என்னுடைய தந்தையும், என்னை ஊக்குவித்து உற்சாகப்படுத்தினார். 

12ஆம் வகுப்பு முடித்தபிறகு, நான் மருத்துவத்துறையில் சாதிக்க வேண்டும் என விரும்பினேன். எனவே, ஆஸ்டியோபதி, உளவியல் மற்றும் பிசியோதெரபி ஆகிய படிப்புகளில் சேர்ந்து பட்டம் பெற்றேன். சென்னை ஆலிம் முஹம்மது சாலிஹ் பிசியோதெரபி கல்லூரியில் படித்தபோது, எனக்கு நன்கு பயிற்சி கிடைத்தது. இப்படி படித்துக் கொண்டு இருக்கும்போது, எனக்கு திருமணம் நடந்தது. 

திருமணம் முடிந்து புகுந்த வீட்டிற்கு சென்றபோது, என்னுடைய கல்வி ஆர்வத்துக் கண்டு, எனது கணவர் மற்றும் அவரது பெற்றோர் என்னை மேலும் ஊக்கம் அளித்தனர். இதனால் நான் தொடர்ந்து படித்து பிசியோதெரபியில் எம்.எஸ்.சி. பட்டம் பெற்றேன். மேலும் கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இணையதளம் மூலமும், நேரடியாகவும் கற்பிக்கப்படும் டிஓ-எம்பிடி படிப்பில் சேர்ந்து அதிலும் பட்டம் பெற்றேன். 

மருத்துவர் பணி:

கல்வியை நிறைவு செய்தபிறகு, பாடி மைண்ட் கிளினிக் கேர் ஃபார் எவரிபடி என்ற மருத்துவமனையை தொடங்கி ஆஸ்டியோபதி, உளவியல், மற்றும் பிசியோதெரபி சிகிச்சைகளை அளித்து வருகிறேன். எங்கள் பகுதியில் ஏழை மக்கள் அதிகம் என்பதால், அவர்களுக்கு மிகக் குறைந்த கட்டணம் அல்லது கட்டணம் இல்லாமலும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

ஆஸ்டியோபதி என்பது மூளை, நரம்பு உள்ளிட்ட பல நோய்கள் சம்பந்தமானது. கைரோபிராக்டிக்  என்பது எலும்பு சம்பந்தமானது. இந்த வகை நோய்களுக்கு மூன்று விதமாக பிரித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒரு மாதம், இரண்டு வருடம், 10 வருடம், சத பிடிப்பு, எலும்பு நோய், மனத்துத்துவம் என பிரித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

முட்டு வலி அதிகமாக வர காரணம், ஆரம்பத்தில் சரியாக கவனிக்காமல் விட்டு விடுவது என கூறும், ரேஷ்மா சுல்தானா,  கால், கழுத்து, இடுப்பு வலியை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டுவிட்டால் பின்னர் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கிறார்.  

அறுவைச் சிகிச்சை இல்லாமல் எலும்பு சம்பந்தமான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, அதற்கான சான்றிதழ் வழங்கப்படுகிறது என்றும்,  கடந்த 5 ஆண்டுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் சுல்தானா கூறுகிறார். . ஆஸ்டியோபதி மற்றும் உளவியல் சம்பந்தமான பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதால், சிகிச்சை பெற வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக அவர் தெரிவிக்கிறார்.  

பூஷன் புரஸ்கார் விருது:

ஆஸ்டியோபதி மற்றும் உளவியல் சிகிச்சை இணைத்து சிறந்த சமூக சேவையை செய்துவரும் ரேஷ்மா சுல்தானாவுக்கு புகழ்பெற்ற சிகிட்சா பூஷன் புரஸ்கார் விருது குளோபல் ஸ்காலர்ஸ் பவுண்டேஷன் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. குளோபல் ஸ்காலர்ஸ் பவுண்டேஷன் உலகில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், நிறுவனங்களுக்கு உரிய அங்கீகாரம் அளித்து அவர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவிக்கிறது. அந்த வகையில் தமிழகத்தைச் சேர்ந்த ரேஷ்மா சுல்தானாவுக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, பெல்ஜியத்தில் உள்ள குளோபல் சிரியாக்ஸ் இன்ஸ்டிடியூட் ஆர்த்தோபெடிக் மெடிசின் என்ற அமைப்பின் மூலம் இந்தியாவில் இருந்து சிரியாக்ஸ் பயிற்சியாளர் என்ற சான்றிதழ் பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமையை ரேஷ்மா சுல்தானா பெற்றுளார். 

பேராசிரியர் கே.எம்.கே.வாழ்த்து:

பூஷன் புரஸ்கார் விருது பெற்றபிறகு, சென்னையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனை சந்தித்து வாழ்த்து பெற்றது மகிழ்ச்சி அளித்ததாக கூறும் ரேஷ்மா சுல்தானா, முஸ்லிம் சமூகத்தில் இருந்து பெண்கள் நன்கு கல்வி பயின்றி சாதிக்க வேண்டும் என்று தன்னை பேராசிரியர் கே.எம்.கே. வாழ்த்தியதாகவும் பெருமையும் தெரிவித்தார். 

இஸ்லாத்தில் கல்விக்கு மிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆண், பெண் இருவரும் நல்ல கல்வியை பெற வேண்டும் என இஸ்லாம் ஊக்குவிக்கிறது. இதன் அடிப்படையில் நடுத்தரக் குடும்பத்தைச் ரேஷ்மா சுல்தானா, பல்வேறு தடைகளையும் தாண்டி இன்று கல்வியில் சாதித்து, சிறப்பான சேவைக்காக விருதும் பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இவரை போன்று, மற்ற பெண்களும் கல்வியில் ஆர்வம் செலுத்தினால், அறிவார்ந்த சமுதாயம் மலரும் என்பது உறுதி. 

- சந்திப்பு: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: