Thursday, June 29, 2023

நவீன சாவல்கள்....!

முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் நவீன சவால்கள்.....!

முஸ்லிம் சமூகம் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு நவீன சவால்களை தற்போது  எதிர்கொண்டுள்ளது. இந்த சவால்கள் வெவ்வேறு அளவுகளில், வடிவங்களில் உள்ளன. தற்போதைய நவீன காலத்தில்  சமூக ஊடகங்கள், சமூக பிரச்சனைகளை முன்னிறுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

பெரும்பாலான சமூக ஊடகங்களில்


கட்டமைக்கப்பட்ட கதைகள் பரப்பட்டுகின்றன.  

சில சமயங்களில் இந்த கதைகள் முஸ்லிம் விரோத சக்திகளால் கட்டமைக்கப்படுகின்றன.  தெரிந்தோ தெரியாமலோ ஒட்டுமொத்த சமூகமும் அதில் விழுகிறது. சில நேரங்களில் சமூக ஊடகங்களில் இந்த போக்குகள் சமூகத்தின்  துடிப்பை பிரதிபலிக்கின்றன.

சமூக ஊடகங்களில் சுறுசுறுப்பாக இருப்பவர்களுக்கு சில அடிப்படை உண்மைகள் பற்றிய அறிவு இருப்பது இல்லை.  பிரச்சினையை எழுதுபவர்கள் அல்லது பேசுபவர்களில் பெரும்பாலானவர்கள் சமூகத்திற்கு சரியான வழிகாட்டுதலை வழங்குவதில் குறைபாடுடையவர்கள். மேலும் சரியான எண்ணிக்கையிலான தரவுகளை வழங்க உண்மை கண்டறியும் குழு எதுவும் இல்லை. 

பன்முகத்தன்மை கொண்ட நாடு:

அண்டை வீட்டாராகவும், வகுப்புத் தோழர்களாகவும் அல்லது சக ஊழியர்களாகவும் முஸ்லிம் அல்லாதவர்களைக் கொண்ட பன்முகத்தன்மை கொண்ட மிகவும் அழகான நாட்டில் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த சூழலில் தற்போது கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சி, பெண்களின் உரிமைகள் மற்றும் பாலின நீதி என்ற முழக்கங்கள் இன்றைய தலைமுறையில் பெரும் தாக்கத்தை உருவாக்கியுள்ளன.

இத்தகைய நேரங்களில் வெறும் உணர்ச்சிகளால் பிரச்சினையை கையாள முடியாது. எனவே விழிப்புணர்வை உருவாக்குவதில் சமூகம் செயல் வடிவங்களை உருவாக்கி வழிகாட்ட வேண்டும். தீர்வுகள் இல்லாத விழிப்புணர்வு மிகவும் கடினமான சூழ்நிலையை உருவாக்கும். 

தங்கள் பெண் குழந்தைகளை பாதுகாப்புடன் காப்பாற்றுவது முஸ்லிம் பெற்றோரின் கடமை.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில்  சமூக ஊடக கருவிகளில் பெண் பிள்ளைகள்  சிக்கிக் கொள்வது பெற்றோருக்குத் தெரியாமல் போய் விடுகிறது.  

தயக்கம் காட்டக் கூடாது:

முஸ்லிம் அமைப்புகளும் மஸ்ஜித் கமிட்டிகளும் பெண்களை மசூதி மற்றும் ஜும்மா குத்பா பிரசங்கங்களுக்கு அருகில் கொண்டு வருவதில் இன்னமும் தயக்கம் காட்டுகின்றன. பெற்றோர்களும் இதில் கவனம் செலுத்துவதில்லை.  எனவே இதில் தனிக் கவனம் செலுத்தி இஸ்லாமிய பெண்களிடம் உள்ள திறமைகள் மற்றும்  தலைமைத்துவத்தை வெளிப்படுத்த சமூகம் முன்வர வேண்டும். 

2017-18 ஆம் ஆண்டு ஹாதியா வழக்கு முதல் ‘தி கேரளா ஸ்டோரி’ வரை பெண்களை குறிவைத்து மிகப்பெரிய பிரச்சார இயந்திரங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் இஸ்லாம் மீதான வெறுப்பும் விஷமும் நிறைந்த சூழல் நிலவுகிறது. 

இதனால் முஸ்லீம் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் பல நிலைகளில் போராட வேண்டிய கட்டாயம் உள்ளது. 

எனினும், மார்க்கத்தின் மீதான அவர்களின் அர்ப்பணிப்பு ஈடு இணையற்றது. ஹிஜாப் அணிந்த பெண்கள் மற்ற பெண்களை சந்தேகத்துடன் பார்க்கக் கூடாது. ஹிஜாப் பிரச்சினை பெண்களின் கல்விக்கு ஒருபோதும் தடையாக இருக்கக்கூடாது. அதேநேரத்தில் அவர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். ஆனால் கல்வி மறுக்கப்படக்கூடாது. 

திருமணத்துடன் வலுவான குடும்ப பிணைப்புகளும் இருக்க வேண்டும். கல்வி என்பது அறிவுசார் செயல்முறை மற்றும் திருமணம், குடும்பம் என்பது வாழ்வியல் செயல்முறை என கல்வி, தொழில் மற்றும் குடும்பம் ஒன்றாக செல்ல வேண்டும்.

குடும்பத்தையும் தொழிலையும் மிகவும் புத்திசாலித்தனமாக சமன் செய்த இஸ்லாமிய அறிவுஜீவிப் பெண்களுக்கு எண்ணற்ற உதாரணங்கள் உண்டு.

 ஐந்து அம்சத் திட்டம்:

சமூக ஊடகங்கள் மூலம் முஸ்லிம் சமூகம் சந்திக்கும் சவால்களை குறித்து உலமாக்கள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள்,  பள்ளிவாசல் கமிட்டிகள் கவனம் செலுத்தி, இந்த பிரச்சினையை கையில் எடுக்க வேண்டும். தரவு, ஆவணங்கள், ஆலோசனை, வழிகாட்டுதல், சட்ட உதவி, ஆகியவற்றின் மூலம் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்தால், பெண்களைக் காப்பாற்றுவதில் பயனுள்ளதாக இருக்கும்.

இஸ்லாமிய  பெண்கள் வெள்ளிக்கிழமை ஜும்மா பிரசங்கங்களை கேட்க ஆர்வம் செலுத்த வேண்டும். மத்ரஸாக்களின் மூலம் முஸ்லிம் பெண் குழந்தைகளுக்கு தீனி தர்பியாத்துக்கான (மார்க்கக் கல்விக்கான) ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

பள்ளிக் கல்வி முடித்து உயர்கல்வி பெறும் முஸ்லிம் பெண்களுக்கு சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்.  இதற்கு அறிவுசார் பெண் ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், மருத்துவர்கள் தங்கள் மதிப்புமிக்க நேரத்தை செலவிட முன்வர வேண்டும்.

இஸ்லாமிய முறைப்படி நடக்கும் திருமணம் ஊக்குவிக்கப்பட வேண்டும். சமூகக் கொடுமைகள் ஒழிக்கப்பட வேண்டும்.  ஷரியத்  நடைமுறைப்படி பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். பல்வேறு வகைகளில் பாதிக்கப்படும் பெண்களுக்கு   உதவ ஆலோசனை மையங்கள் மற்றும் ஹெல்ப்லைன்கள் உருவாக்கப்பட வேண்டும்.

 ஆண், பெண் என பாகுப்பாடு காட்டாமல், தொழில்முறை ஆலோசனைகளை இருவருக்கும் வழங்க இஸ்லாமிய அமைப்புகள் முன்வர வேண்டும். 

மார்க்கக் கல்வி மாற்றத்தை ஏற்படுத்தும்:

பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் ஆண் குழந்தைகளுக்கும் தீனியாத் தர்பியத் (மார்க்கக் கல்வி) செய்வது நிச்சயமாக சமூகத்திற்கு மிகப்பெரிய சொத்தாக அமையும். இதன்மூலம், குழந்தைகளிடம் ஒழுக்க மாண்புகள் வளரும். மற்றவர்கள் மீதான புரிந்துணர்வு அதிகரிக்கும். இஸ்லாம் குறித்து பிற சகோதர சமுதாய மக்களிடையே நல்ல எண்ணங்கள் உருவாகும். 

இதனால் அனைவரிடமும் அன்பு, சகோதரத்துவம் தழைத்தோங்கும். எதிர்காலத்தில் பிரச்சினை ஏற்படாத வகையில் நல்ல இதமான சூழ்நிலை உருவாகும். 

இந்த விவகாரங்களில் ஏற்கனவே, முஸ்லிம் சமூகம் தாமதம் செய்துவிட்டது. மேலும் தாமதமாகிவிடும் முன், சவாலை ஏற்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. எனவே, பிரச்சினைக்கு விகிதாசாரமான தொழில்முறை அணுகுமுறையின் தேவையை முன்னிலைப்படுத்துவது மிகவும் முக்கியமானது என்பதை முஸ்லிம் சமூகம் புரிந்துகொள்ள வேண்டும்.

- நன்றி முஸ்லிம் மிரர்

- தமிழில்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: