Sunday, March 2, 2025

மகன்களை மருத்துவராக்கி அழகு பார்த்த ஏழை முஸ்லிம் தந்தை....!

"வறுமையிலும் மூன்று மகன்களை மருத்துவராக்கி  அழகு பார்த்த ஏழை முஸ்லிம் தந்தை ரபீக் படேல்"

உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்களில் சிலர், கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வாழ்க்கையில் சாதித்து வருகிறார்கள். கல்வியின் அவசியம் குறித்து இஸ்லாம் மிகத் தெளிவாக கூறியிருப்பதே அதற்கு முக்கிய காரணம் என கூறலாம். "கல்வியைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிம்களின் மீதும் கடமையாகும்" என ஏக இறைவனின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், மிக அழகாகக் கூறியிருப்பதன் மூலம், கல்விக்கு இஸ்லாம் எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. 

"கல்வியை தேடும் வழியில் ஒருவன் நடந்தால் அவனுக்கு அல்லாஹ் சுவர்க்கத்திற்கு செல்லும் வழியாக அதை ஆக்குகின்றான். மலக்குகள், கல்வியை தேடுபவனை திருப்தியுற்று தங்களின் இறக்கைகளை தாழ்த்துகின்றனர். ஒருவர் கல்வியை எடுத்துக்கொண்டால் அவர் மாபெரும் பாக்கியத்தை எடுத்துக்கொண்டவராவார் "என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். எனவே தான், வறுமையிலும் இஸ்லாமியர்கள் நல்ல கல்வி பெற வேண்டும் என ஆர்வம் கொள்கிறார்கள். ஊக்குவிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த ஆர்வம் மற்றும் ஊக்குவிப்பு,  முஸ்லிம் இளைஞர்களுக்கு ஒரு நல்ல வழியை, பாதையை காண்பித்து விடுகிறது என்றே கூறலாம். 

கல்வி இல்லாமல் இஸ்லாம் இல்லை:

கல்விக்கு இஸ்லாமிய மார்க்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவம் போல, பிற சமயங்களில் கூறப்பட்டுள்ளதா, கொடுக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி இருந்து வருகிறது. கல்வி இல்லாமல் இஸ்லாம் இல்லை என்று கூறும் அளவுக்கு, கல்விக்கு அதிக முக்கியத்துவம் இஸ்லாத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு இறங்கிய முதல் வசனமே  "இக்ரா" ஓதுவீராக என்பதாகும். இஸ்லாத்தில் கல்வியின் மூல ஆதாரம் திருக்குர்ஆன்தான். "அளவிலாக் கருணையுள்ள இறைவன் இந்தக் குர்ஆனை கற்றுத் தந்தான்" (55:1-2) என்று திருக்குர்ஆன் கூறுகிறது. 

வாழ்க்கையின் நோக்கமும், அதனை அடையும் வழிமுறைகளுக்கான அடிப்படை, கல்வியை பெறுவதில் தான் உள்ளது. எனவே தான் இஸ்லாத்தில் கல்வி பெறுவது ஒவ்வொரு ஆண், பெண் மீது கட்டாய கடமையாக இருந்து வருகிறது.  இறைவன் நமக்களித்த அருட்கொடைகளில் மிகப்பெரும் அருட்கொடை கல்வியாகும்.  இத்தகைய அருட்கொடையை ஒவ்வொரு முஸ்லிமும் கட்டாயம் பெற வேண்டும். நம்மிடம் இருக்கும் செல்வம் அழிந்துபோனாலும், கல்வி ஒருபோதும் அழியாது என்பதை ஒவ்வொரு முஸ்லிம் இளைஞர்களும் உணர்ந்துகொள்ள வேண்டும். 

தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை சொல்லித்தர வேண்டியது அனைத்துப் பெற்றோர்களின் முக்கிய கடமையாகும். தற்போதைய சூழ்நிலையில், இந்திய முஸ்லிம்கள் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறார்கள். குறிப்பாக, பொருளாதார சூழ்நிலை காரணமாக பல இந்திய முஸ்லிம் குடும்பங்களில் உள்ள இளைஞர்கள், நல்ல கல்வியைப் பெற முடியாமல் வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள். பின்னர், வாழ்க்கை தரும் அனுபவங்கள் மூலம், நாம் கல்வி பெற்று இருந்தால், மற்றவர்களைப் போல சிறப்புடன், மதிப்புடன் வாழ்ந்து இருக்கலாமே என பின்நாட்களில் அவர்கள் சிந்தித்து மன வேதனை அடையும் நிலை உருவாகி விடுகிறது. இதேபோன்று, சில பெற்றோர்கள், பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை பெற்றுதர வாய்ப்புகளை உருவாக்காமல் போனதற்காக வருத்தம் அடைகிறார்கள். 

முஸ்லிம் தொழிலாளியின் வைராக்கியம:


இத்தகைய சூழ்நிலையில் தான், மகாராஷ்டிராவைச் சேர்ந்த சர்க்கரை ஆலைத் தொழிலாளியான  ரபீக் படேல், தனது வறுமை மற்றும் நிதி நெருக்கடிக்கு மத்தியிலும், தனது மூன்று மகன்களும் நல்ல கல்வி பெற கடுமையாக உழைத்து, வாழ்க்கையில் சாதித்துள்ளார். கடுமையான  நிதி நெருக்கடி இருந்தாலும், அனைத்தையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு, சவால்களை முறியடித்து மூன்று மகன்களையும் மருத்துவர்களாக மாற்றி, ரபீக் படேல் அழகு பார்த்துள்ளார் 

ரபீக் படேல் மற்றும் அவரது மனைவி ரெஹானின் உடைக்க முடியாத இந்த மனப்பான்மை, இடைவிடாத தன்னலமற்ற தன்மை, அசைக்க முடியாத ஆர்வத்தால், அவர்களின் மூன்று மகன்களான அசாருதீன், மொஹ்சின் மற்றும் ரமீஸ் ஆகியோர் நல்ல கல்விபெற்று இப்போது மருத்துவர்களாக மாறியுள்ளனர். இது எப்படி சாத்தியமானது என்று பலர் வியந்துவரும் நிலையில், வறுமையை வென்று, வாழ்க்கையில் ஒரு அற்புதமான சாதனையை ரபீக் படேல் செய்துள்ளார். இந்த சாதனை அவருக்கு மட்டும் பெருமை அளிக்கவில்லை. மாறாக, அவரது மூன்று பிள்ளைகளுக்கும் நல்ல ஒரு வாழ்க்கையை உருவாக்கி தந்துள்ளது. நல்ல கல்வியை வழங்கியதன் மூலம், இஸ்லாம் கல்விக்கு அளிக்கும் முக்கியத்துவம் குறித்து நன்கு அறிந்து அதை தம்முடைய வாழ்வில் கிடைக்காமல் போன நிலையில், தனது மூன்று பிள்ளைகளுக்கு உருவாக்கி தந்த ஏழை தொழிலாளி ரபீக் படேல், தற்போது அனைவரின் கவனத்தை ஈர்த்து வருகிறார். 

சவாலான சூழ்நிலைகளுக்கு மத்தியில் படிப்பு:

ரபீக் படேலின் மூன்று மகன்களும் மகாராஷ்டிரா மாநிலம் மூல்கானின் ஜில்லா பரிஷத்திலும், பின்னர் ஔரங்காபாத்தில் உள்ள மௌலானா ஆசாத் கல்லூரியிலும் ஆரம்பக் கல்வியைப் பெற்றனர். பின்னர் மூன்று மகன்களும் ஒதுக்கீட்டு இடங்களைப் பெற்று மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து நன்கு படித்து பட்டம் பெற்றனர். மூன்று சகோதரர்களும் சவாலான சூழ்நிலைகளுக்கு மத்தியில் படித்ததால் மற்றவர்களுக்கு அது ஊக்கம் அளிக்கும் வகையில் இருந்து வருகிறது. 

உள்ளூர் சேவை அமைப்பிலிருந்து பரிசளிக்கப்பட்ட பாடப்புத்தகங்களை சகோதரர்கள் மூன்று பேரும் நல்லமுறையில் பயன்படுத்தினர். படிப்பில் சாதித்து மருத்துவர்களாக மாறிவியுள்ள இந்த சகோதரர்கள், தங்கள் வெற்றிக்கு தங்கள் பெற்றோருக்கும், தங்கள் படிப்பில் வழிகாட்டிய ஒரு ஆசிரியரான அவர்களின் தாய் மாமா ஷேக் ஹாஜுவுக்கும் நன்றி தெரிவிக்கின்றனர்.

மருத்துவர்களாக மாற காரணம் என்ன?

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் சில இலட்சியங்கள் இருந்து வருகின்றன. சிலர் உயர்ந்த பதவிகளில் அமர வேண்டும் என கனவு காண்பார்கள். சிலர் மிகப்பெரிய தொழில் அதிபராக மாற வேண்டும் என விரும்புவார்கள். சிலர், பொருளாதார வல்லுநராக மாற வேண்டும். அறிவியல் துறையில் சாதிக்க வேண்டும் என ஆசை கொள்வார்கள். அத்துடன் சிலர் மாவட்ட ஆட்சியராக வந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றும் மருத்துவராக மாறி ஏழை, எளிய மக்களுக்கு நல்ல மருத்துவம் பார்க்க வேண்டும் என்றும் விரும்புவார்கள். இத்தகைய ஆசைகளுக்கு பின்னால் முக்கிய காரணம் ஏதாவது ஒன்று நிச்சயம் இருக்கும். 

அப்படி தான் ரபீக் படேலின் மூன்று மகன்களும் தங்கள் வாழ்க்கையில் சந்தித்த ஒரு சம்பவம், அவர்களை மருத்துவராக மாற்ற வழியை உருவாக்கி தந்தது. மருத்துவத் துறையைத் தொடர்வதற்கான உத்வேகம் குறித்துப் பேசிய ரபீக் படேலில், மகன் மருத்துவர் மொஹ்சின், “எங்கள் அம்மாவுக்கு 2006-ல் ஏற்பட்ட விபத்து, என் மூத்த சகோதரரை இந்தத் துறையைத் தொடரத் தூண்டியது, ஏனெனில் அவர் சிகிச்சைக்காக 42 நாட்கள் மருத்துவமனையில் தங்க வேண்டியிருந்தது. அப்போதுதான் நாங்கள் மூவரும் மற்றவர்களுக்கு உதவ விரும்புகிறோம் என்பதை உணர்ந்தோம்” என்று கூறியுள்ளார். 

இதேபோன்று மூத்த மகனான அசாருதீன், “நாம் கவனம் செலுத்தி முயற்சி செய்தால், வெற்றி எப்போதும் எட்டக்கூடியது” என்று தங்களுக்கு வாழ்க்கை மிக அழகாகச் சொல்லி தந்து இருக்கிறது என  தனது மற்றும் அவரது சகோதரர்களின் ஊக்கமளிக்கும் பயணத்தைப் பற்றிச் சொல்லி மகிழ்ச்சி அடைகிறார். 

துன்பத்திலிருந்து சாதனை வரை: 

முஸ்லிம் ஏழை தொழிலாளி ரபீக் படேலின் 'துன்பத்தில் இருந்து சாதனை வரை' என்ற இந்த வாழ்க்கைப் பயணம், இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு நல்ல ஒரு அழகியப் படிப்பினையைச் சொல்லித் தருகிறது. கல்வி இல்லாமல் இஸ்லாம் இல்லை என்பது மட்டுமல்ல, கல்வி இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்று கூறும் அளவுக்கு கல்வியின் முக்கியத்துவம் இருந்து வருகிறது. அதை நன்கு அறிந்துகொண்டதால், ரபீக் படேல், தனது வறுமையான சூழ்நிலையில் கூட, தனது மூன்று மகன்களுக்கு நல்ல கல்வியைப் பெற்று தர முயற்சி செய்து, அதில் வெற்றிபெற்று அற்புதமான சாதனையை நிகழ்ச்சிதயுள்ளார். 

துன்பத்தில் இருந்து தான் சாதனைகளை நிகழ்த்த முடியும் என்பதை, ஏழை தொழிலாளி ரபீக் படேல், மற்றும் அவரது மூன்று மகன்களான  அசாருதீன், மொஹ்சின் மற்றும் ரமீஸ் ஆகியோர் சாதித்து காட்டியுள்ளனர். கல்வி குறித்து குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் பலர் இருக்க, அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல், கல்வி, கல்வி, கல்வி, இதுவே வாழ்க்கையை வளமாக்கும் ஒரே முழக்கம் என மனதில் உறுதியாக நிலை நிறுத்திக் கொண்டு, இன்று பலரும் வியக்கும் வகையில் ரபீக் படேலின் குடும்பம் வாழ்க்கையில் சாதித்துள்ளது. இதன்மூலம் ஒரு நல்ல முன்மாதிரியான குடும்பமாக முஸ்லிம் சமுதாயத்திற்கு மட்டுமல்ல, இந்திய சமுதாயத்திற்கும், ரபீக் படேலின் குடும்பம் மாறியுள்ளது என்றே கூறலாம். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: