"ரமளானில் உலகம் முழுவதும் நடக்கும் அழகிய இப்தார் நிகழ்ச்சிகள்"
உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்கள் இந்தாண்டு புனித ரமளானை வரவேற்றுத் தொடங்கி மன உறுதியுடன் நோன்பை கடைப்பிடித்து வருகின்றனர். உலக மக்கள் தொகை தற்போது 800 கோடி என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கும் நிலையில், அதில் முஸ்லிம் மக்கள் தொகை மட்டும் 200 கோடியை தாண்டியுள்ளது. இந்த 200 கோடி முஸ்லிம்களும், ஒவ்வொரு ஆண்டு புனித ரமளான் மாதத்தை ஆர்வத்துடன் எதிர்பார்த்து அதை வரவேற்று, ஏக இறைவனின் கட்டளையை நிறைவேற்றும் வகையில், ஈமானுடன் நோன்பை கடைப்பிடித்து வருகிறார்கள். இந்தாண்டு சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் கடந்த சனிக்கிழமை (மார்ச் 1, 2025) அன்று நோன்பு தொடங்கியுள்ளது. இதேபோன்று இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் மார்ச் 2ஆம் தேதி நோன்பு தொடங்கியதைத் தொடர்ந்து இந்த நாடுகளில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் நோன்பை அழகிய முறையில் கடைப்பிடித்து வருகிறார்கள்.
இப்தார் எனும் அழகிய செயல்:
ரமளானில் புகல் முழுவதும் நோன்பு நோற்கும் முஸ்லிம்கள் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு நோன்பைத் திறப்பதை வழக்கமாக கொண்டு இருக்கிறார்கள். "இப்தார்" எனப்படும் இந்த நோன்பு துறக்கும் நிகழ்ச்சியில், அனைத்து முஸ்லிம்களும் ஆர்வத்துடன் பங்கேற்று, தங்களுடைய இம்மை, மறுமை வாழ்விற்காகவும், முன்னோர்களின் சிறப்பான மறுமைக்காகவும், உலக அமைதிக்காகவும் துஆ (பிரார்த்தனை) செய்வதை வழக்கமாக கொண்டு இருக்கிறார்கள். இப்தார் எனும் ஒரு அழகிய செயல் மூலம் ஏக இறைவனின் நெருக்கத்தை பெற முடியும் என்பது முஸ்லிம்களின் உறுதியான நம்பிக்கையாக இருந்து வருகிறது. இப்தார் நேரத்தில் கேட்கப்படும் துஆ (பிரார்த்தனை) நிச்சயம் ஏக இறைவனால் அங்கீகரிக்கப்படும் என்றும் இஸ்லாமியர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.
அதனால் தான் பகல் முழுவதும் நோன்பு வைத்து, இறை வணக்கங்களில் ஈடுபடும் முஸ்லிம்கள், இப்தார் நேரம் வந்துவிட்டால், பெரும் மகிழ்ச்சி அடைகிறார்கள். இந்த இப்தார் நேரத்தின்போது, அறிந்தவர்கள், அறியாதவர்கள், நண்பர்கள், உற்றார் உறவினர்கள், அண்டை வீட்டார்கள், பயணிகள் என அனைத்துத் தரப்பு மக்களும், ஒன்றாக அமர்ந்து நோன்பை துறக்கிறார்கள். இப்படிப்பட்ட இப்தார் நேரத்தில், யாரும் வசதி, வாய்ப்புகள், ஏழை, பணக்காரன் என்ற பாகுப்பாடுகளை ஒருபோதும் பார்ப்பதே இல்லை. தம்மிடம் வேலை செய்யும் பணியாளருடன் ஒன்றாக அமர்ந்து ஒரு தொழில் அதிபர் நோன்பு திறக்கிறார். இதேபோது, தனக்கு கீழ் வேலை செய்யும் பணியாளருடன் ஒன்றாக அமர்ந்து அதிகாரி நோன்பு திறந்து மகிழ்ச்சி அடைக்கிறார்.
இப்தார் நேரத்தின்போது, ஒருவருக்கு ஒருவர் உணவுகளை பரிமாறி மகிழ்ச்சி அடைவதைக் காணும் போது உண்மையில், உள்ளம் பூரிப்பு அடையும். இப்தார் நேரத்தின்போது, வீட்டில் இருந்து கொண்டு வரப்படும் உணவு வகைகளில் மஸ்ஜித்தில் உள்ள அனைவருக்கும் கொடுத்து பலர் ரமளானின் நன்மைகளை தேடிக் கொள்கிறார்கள். பண வசதி இல்லாதவர்கள், இப்தார் நேரத்தில், நோன்பு திறக்க வரும் அனைவருக்கும் தேவையான உதவிகளைச் செய்து அதன்மூலம் ஆனந்தம் அடைகிறார்கள். இப்படி, இப்தார் பல நன்மைகளை கொண்டு வருவதுடன், உலகில் வாழும் மக்கள் அனைவரும் ஏக இறைவனின் படைப்புகள் என்ற உயர்ந்த எண்ணத்தை முஸ்லிம்களின் மனதில் ஆழமாகப் பதிய வைக்கிறது. அத்துடன், இப்தார் நேரத்தில் அனைவரையும் ஒன்றாக சேர்ந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்து, ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிடும் உயர்ந்து நோக்கமும் நிறைவேறுகிறது. இதேபோன்று, வீட்டில் உள்ள பெண்கள் அனைவரும் ரமளான் நோன்பு இருந்து மாலையில் அதை துறக்கும்போது, ஒன்றாக அமர்ந்து, அழகிய முறையில் துஆ கேட்டு, குடும்பம், உறவினர்கள், உலக அமைதி என அனைத்துக்கும் ஏக இறைவனிடம் மனம் உருகி பிரார்த்தனை செய்கிறார்கள். இதன்மூலம் பெண்கள் மத்தியிலும் மிகப்பெரிய அளவுக்கு ஒற்றுமை உணர்வு மேலோங்கி நிற்கிறது.
உலக நாடுகளில் இப்தார்:
உலகில் உள்ள முஸ்லிம் நாடுகளில் மட்டுமல்ல, முஸ்லிம்கள் சிறுபான்மையின மக்களாக வாழும் நாடுகளிலும் இப்தார் எப்போதும் உற்சாகத்துடன் நிறைவேற்றப்படுகிறது. சவுதி அரேபியாவில் உள்ள மக்கா மற்றும் மதீனா ஆகிய நகரங்களில் புனித மஸ்ஜித்துகளில், ரமளான் இப்தார்கள் எப்போதும் களைகட்டியே இருக்கும். இங்கு உலகம் முழுவதும் இருந்து வரும் நோன்பாளிகளுக்கு, தேவையான அனைத்து உதவிகளையும் செய்யப்பட்டு வருகிறது. எனவே, மக்கா மற்றும் மதீனா உள்ள புனித மஸ்ஜித்துக்களில் ரமளான் காலத்தை செலவழிக்க வேண்டும் என முஸ்லிம்கள் விரும்புகிறார்கள். அதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும், ரமளான் மாதத்தில், இங்கு வரும் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இந்த புனித மஸ்ஜித்துகளில் நடக்கும் இப்தார் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதன் மூலம் முஸ்லிம்களின் உள்ளம் பிரகாசம் அடைகிறது. மனதில் ஒருவித புதிய மகிழ்ச்சி பிறக்கிறது. வாழ்க்கையில் சரியான திசையை நோக்கி, இஸ்லாமிய ஒளியுடன் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் பிறக்கிறது. அனைத்து மக்களுடன் ஒருங்கிணைந்து வாழ வேண்டும் என்று மனம் விரும்புகிறது. இந்த புனித மஸ்ஜித்துக்களில் தராவிஹ் தொழுகையை நிறைவேற்றும்போது கிடைக்கும் ஆனந்தம் வேறு எங்கும் கிடைக்காது என்றே கூறலாம். பல லட்சம் ஒன்றாக கூடி தொழுகையை நிறைவேற்றும்போது, அதில் தாமும் ஒருவராக கலந்துகொள்வதை முஸ்லிம்கள் பெருமையாக நினைக்கிறார்கள். அதன் காரணமாக தான், மக்கா மற்றும் மதீனா புனித மஸ்ஜித்துகளில் ரமளான் நாட்களை கழிக்க உலகம் முழுவதும் இருந்து முஸ்லிம் ஓடோடி வருகிறார்கள்.
அல்ஜீரியா, எகிப்து, ஜோர்டான், லிபியா, பாலஸ்தீன பிரதேசங்கள், சூடான் மற்றும் துனிசியா ஆகிய நாடுகளிலும், ரமளான் நோன்பு மிகச் சிறப்பான முறையில் முஸ்லிம்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாடுகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான மஸ்ஜித்துகளிலும், இப்தார் நிகழ்ச்சிகளில் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு மஸ்ஜித்துகளிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு இப்தார் நிகழ்ச்சியை சிறப்பிக்கிறார்கள்.
ஆசிய நாடுகளில் ரமளான் இப்தார்:
ஆசிய நாடுகளான இந்தோனேசியா, இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், சீனா உள்ளிட்ட நாடுகளிலும், ரமளான் நோன்பு தொடங்கி இன்று (06.03.2025) 5வது நாளை எட்டியுள்ளது. ரமளானின் போது, பகல் நேரங்களில் சாப்பிடுவது, குடிப்பது, புகைபிடித்தல் மற்றும் உடலுறவு கொள்வதைத் தவிர்க்க விசுவாசிகள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். ஏழைகளுக்கு நன்கொடை அளிப்பதும் ஊக்குவிக்கப்படுகிறது. இந்த மாதத்தில் வதந்திகள், சண்டைகள் அல்லது சபித்தல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் முஸ்லிம்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
இப்படி ரமளான் நோன்பு மிகச் சிறப்பான முறையில் கடைப்பிடிக்கப்பட்டு, இப்தார் நேரத்தின்போது, மிக அழகிய முறையில், ஏக இறைவனிடம் மனம் உருகி, துஆ (பிரார்த்தனை) செய்துவிட்டு, ஆசியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்கள், நோன்பை துறக்கிறார்கள். எனவே தான் ரமளான் மாதம் வந்துவிட்டால், முஸ்லிம்கள் அனைவரும் ஆனந்தம் அடைகிறார்கள். இது ஒரு பரக்கத் மாதம் என்று சொல்வது உண்மையே ஆகும். மனத்திற்கு பரக்கத், உடலுக்கு பரக்கத், செலவில் பரக்கத், உதவி செய்வதில் பரக்கத், உறவுகளை மேம்படுத்துவதில் பரக்கத் என அனைத்திலும், பரக்கத் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. ரமளான் மாதத்தில், இததை முஸ்லிம்கள் அனைவரும் அனுபவப்பூர்வாக நன்கு உணர்கிறார்கள் என்றே கூறலாம்.
மேலை நாடுகளில் இப்தார்:
உலகில் தற்போது வேகமாக வளர்ந்துவரும் மார்க்கமாக இஸ்லாம் இருந்துவரும் நிலையில், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷியா, பிரேசில், கனடா என பல மேலைநாடுகளில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் ஒவ்வொரு ஆண்டும் ரமளான் மாதத்தை மிகவும் உற்சாகத்துடன் வரவேற்று, அழகிய முறையில் நோன்பைக் கடைப்பிடிக்கிறார்கள். இந்த நாடுகளில் உள்ள பல மஸ்ஜித்துக்களில் நடக்கும் இப்தார் நிகழ்ச்சிகள், உலக மக்களின் கவனத்தை கவர்ந்து வருகின்றன என்றே கூறலாம்.
இதன்மூலம் இஸ்லாமிய நெறிமுறைகள் குறித்து சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் நன்கு அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பு உருவாகிறது. இஸ்லாமியர்கள் எதற்காக நோன்பு வைக்கிறார்கள்? இப்தார் நிகழ்ச்சியை ஏன் நடத்துகிறார்கள் என்ற கேள்விகள் அவர்களுக்கு ஏற்படுகிறது. இதற்கு விடை தேடி அலையும்போது, இஸ்லாமிய மார்க்கத்தின் அழகிய போதனைகள், அழகிய வாழ்க்கை முறை ஆகியவற்றை அவர்கள் அறிந்துகொள்ள முடிகிறது. இது அவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. நேர்வழியில் செல்லவும், ஏக இறைக் கொள்கையை கடைப்பிடிக்கவும் மனம் விரும்புகிறது. எனவே ரமளான் காலத்தில் முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் செய்யும் பணிகள், கடமைகள், செயல்கள், உதவிகள், ஆகிய அனைத்தும், மற்றவர்களால் கவரப்பட்டு, இஸ்லாமிய வாழ்க்கை முறை குறித்து ஒரு அழகிய தெளிவு கிடைக்கிறது. இது, சகோதர சமுதாய மக்களின் வாழ்க்கையில் ஒரு புதிய ஒளியை ஏற்படுகிறது.
ஜெருசலேம், பாலஸ்தீனம், காசா ஆகிய பகுதியில் வாழும் இஸ்லாமியர்கள், ஈமானில் உறுதியாக இருந்து, ரமளான் நோன்பு கடைப்பிடித்து ஒற்றுமையுடன் இப்தார் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை உலக மக்கள் காணும்போது, ஓர் இறைக் கொள்கையில் இந்த பகுதிகள் எப்படி இவ்வளவு உறுதியுடன் இருக்கிறார்கள் என்ற கேள்வி அவர்களுக்குப் பிறந்து, அதற்கு விடை தேடும்போது, இஸ்லாமிய வாழ்க்கை நெறிமுறைகள் குறித்து தெளிவு கிடைக்கிறது. காசாவில் கட்டடங்கள் இடிந்துவிழுந்த நிலையில் கூட, ரமளான் காலத்தை எப்படி, இவ்வளவு உறுதியாக முஸ்லிம்கள் கடைப்பிடிக்கிறார்கள் என்ற உலகில் வாழும் மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகள் எழுந்து வருகின்றன. இந்த கேள்விகளுக்கு பதில் தேடும்போது, மிக அழகிய முறையில் இஸ்லாமிய மார்க்கம் குறித்து தெளிவு அவர்களுக்கு கிடைக்கிறது. இப்தார் என்பது ஒரு சாதாரண நிகழ்ச்சி இல்லை. அது மக்களின் உள்ளங்களை இணைக்கும் ஒரு அற்புதமான நிகழ்ச்சியாகும். அதன் காரணமாக தான் சென்னை உள்ளிட்ட தென்னிந்தியாவில் உள்ள பல மஸ்ஜித்துக்களில் சகோதர சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், முஸ்லிம்கள் இப்தார் திறக்க தேவையான உணவுப் பொருட்களை கொண்டு வந்து ஆர்வத்துடன் கொடுத்து மகிழ்ச்சி அடைகிறார்கள். இப்தாரின் போது மனம் உருகி கேட்கும் துஆ ஏற்றுக் கொள்ளப்பட்டு, உலகில் அமைதி ஏற்பட அனைத்து மக்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்ற சிந்தனை உருவாகிறது.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்












No comments:
Post a Comment